அண்மையில் கோத்தபாய ராஜபக்ச ஆனந்தாக் கல்லூரியில் ஆற்றிய உரையில், இந்தியாவே இறுதிக்கட்டப் போரை முற்றுமுழுதாக நடாத்தி முடிக்க உதவியதாகவும், சர்வதேச நாடுகளின் தலையீடுகளும் சர்வதேசப் படைகளின் பிரவேசமும் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்து விடாதிருக்கவும் இந்தியாவே உதவியதாகக் கூறியுள்ளார். இதனை டெய்லி மிரர் சுட்டிக்காட்டியுள்ளது. சரத்தின் வாக்குமூலம் இந்திய அரசை ஆட்டங்காண வைத்துள்ளது. டெய்லி மிரரின் இந்தியா நோக்கிய பார்வையில், போரின் இறுதிக்கட்டம் இந்தியாவாலேயே தீர்மானிக்கப்பட்டு, இந்தியாவின் முழுமையான அழுத்தங்களின் பெயரிலேயே முடித்துவைக்கப்பட்டது. இந்தியாவின் ஆணையின்படியே சிறீலங்கா பல படு கொலைகளையும், போர்க்குற்றங்களையும் புரிந்துள்ளது.
இந்தியாவின் கவசமும் ஆணையுமே சரணடைந்த முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கூட சுட்டுக்கொல்ல வைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. டெல்லியின் நிர்வாக அலகு எந்த விலைகொடுத்தாவது எந்தவிதமான செயல்களில் ஈடுபட்டாவது மகிந்தவை மீண்டும் ஜனாதிபதி ஆக்க முழு முயற்சியில் இறங்கியுள்ளது. மகிந்தவால் மட்டுமே மீண்டும் சர்வதேசத்தையும் எதிர்த்து, இந்தப் போர்க்குற்றச்சாட்டுக்களை முறியடித்து, சிறீலங்காவையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியுமென்று டெல்லி அரசியல் பீடம் எண்ணுகின்றது. ஜ.நா மனித உரிமையகம் ஆணையம் கூட சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டு இந்தியாவை ஏன் அமைதி இழக்க வைக்கின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்படியானால் சிறீலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் இந்தியாவின் மடியில்தான் கனமுள்ளதோ என்று வினவுகின்றது. சிறீலங்காவின் போர்க் குற்றத்தில் இந்தியாவின் கூட்டு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுமானால், இந்தியாவின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். சரத்பொன்சேகாவின் கூற்று இந்தியவை அமைதி இழக்க வைப்பதைப் பார்க்கும்போது, சரணடைந்த முக்கிய உறுப்பினர்களினதும், குடும்பங்களினதும் படுகொலையில் இந்தியாவின் கரங்களே இரத்தம் தோய்ந்துள்ளதை நிரூபிக்கும் காலம் நெருங்குவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. இவற்றையயல்லாம் மறைக்க இந்திய அரசு தன் ஆதிக்கத்திலிலுள்ள, தங்களால் விலை பேசப்பட்ட ஊடகங்களைக் கொண்டு ஒரு மாயமான கானல் நீர் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றது.
இந்திய அரசும், மகிந்தவும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் மாபெரும் மனிதாபிமான உதவிகளைச் செய்வதுபோலும், எதிர்காலத்தில் இந்திய மகிந்த கூட்டணியினரால் இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும் காட்டப்படுகின்றது. உண்மைகளுக்குப் புறம்பாக ஒரு கனவுத் தோற்ற்ததை உருவாக்குவதில் இந்த ஊடகங்கள் தம் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டுள்ளன. சர்வதேச சமூகம் எட்ட இயலாத இடம்பெயர்ந்தோர் விவகாரங்கள் கூட இந்தியப் பின்ணனியால் எட்டமுடியுமென்று அமெரிக்க செனற் குழு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. போரும் போரின் பின்னான அரசியலும், இன்றைய தேர்தலும் நிகழ்ச்சி நிரலிடப்பட்டு இந்தியாவின் கைகளில் ஆடும் பொம்மையாக சிறீலங்கா இயக்கப்படுகிறது.
இதையே சரத்தின் வாக்குமூலங்களும், கோத்தபாயவின் இந்தியா நோக்கிய கைகாட்டல்களும் நிரூபித்துள்ளது. இந்தியாவையும் கோத்தபாயவையும் காட்டிக்கொடுத்துவிட்டாலும் கூட, இனவெறி கொண்ட இராணுவ வெறிகொண்ட, காடைத்தனமிக்க தனது சிறுபான்மையினருக் கெதிரான வெறுப்புக்களை வெளிப்படையாகக் கூறியவரும் அமெரிக்காவினதும், ஜரோப்பாவினதும், பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற ஆயுதத்தை தமிழினத்தை அழிக்க ஏவிய சரத் பொன்சேக்கா இழைத்த போர்க் குற்றங்களும் படுகொலைகளும் மன்னிக்கப்படமாட்டாது. அவரால் கைகாட்டப்பட்டவர்களும், அவர்களின் பின்னே அவரும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன் சென்றேயாகவேண்டும். தமிழர்கள் மீது பயங்கரவாத்திற்கெதிரான போர் என்று சர்வதேசத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புக்களில் கூட தமிழினம் தளர்ந்துபோய்விடவில்லை.
ஆனால் இதே புலம்பெயர் மக்களிடையே அவர்களின் உயிர்நாதமான தனித் தமிழீழ அரசு எனும் அடிப்படையையே உடைத்தெறியும் ஆணையுடன் சிறீலங்காவாலும், இந்தியாவாலும் அவிழ்த்துவிடப்பட்டிருப்போரும் அவர்களின் சார்பில் இயங்கும் தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழர் விருப்பைப் புறந்தள்ளி உடைக்க முற்படும்போதுதான் தமிழினம் கவலைகொள்ளத் தொடங்கியுள்ளது. தமிழரின் ஒரு பிரிவினர் இவர்களின் கைகைளில் விழுந்து செயற்படத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தம் சுய இலபத்திற்காக தமிழரின் தேசிய விடுதலையை விலை பேசத் தொடங்கியுள்ளனர். தனித்தமிழீழ அரசே தவறானதென்றும், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வென்றும், அடித்தளமற்ற தீர்மானங்களை எடுக்கின்றனர்.
மாவீரர்களினதும், எம் தானைத்தலைவரின் இலக்குமாகன தனித்தமிழீழ அரசை மறுதலிக்க முயலும் இவர்கள், கட்டியயழுப்பப்போவது என்ன?. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வுகாண முயலும் இவர்கள் எந்த அடிப்படையில் இன்னும் ஓர் அரசை வெளியில் நிறுவ முயல்கின்றனர்?. பிரிவினை வேண்டாம் என்போர், தமிழீழ ஆணை வேண்டாம் என்போர் யார் திட்டங்கள் பயன்பெற வேண்டும் என்பதிற்காக நாடுகடந்த அரசு அமைக்க முயல்கின்றனர்?. மாபெரும் தமிழர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முயலும் இவர்கள் தமிழர் பலத்தை உடைத்தெறியவே செயல்படுகின்றார்களா?. தமிழின அழிப்பாளர்களின் திட்டங்கள்தான் இவர்களின் கொள்கைப் பிரகடணங்கள் ஆகப்போகின்றனவா?. இவர்கள் தமது சொந்த மக்களின் மன உறுதியை நம்பாது, அடுத்தவர்களின் திட்டங்களிற்கு வடிவம் கொடுக்க முயல்கின்றனர்.
இவர்களின் புத்திஜீவித்தனங்கள் மக்கள் மன உறுதியையும் சுதந்திர தாகத்தையும் மழுங்கடிக்கத்தான் பயன்படப்போகின்றன. மக்களின் பக்கம்சாராது மேதாவித்தனமாக வேறுசக்திகளின் ஆணையில் இயங்கமுயலும் பொய்க்கால் குதிரைகளான இவர்களும், இவர்கள் பரப்புரைக்காக பயன்படுத்தும் ஊடகங்களும் மக்களால் புறக்கணித்து தூக்கியயறியப்படப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை. இன்று தமிழர்களில் தனித்தமிழீத்தை மறுதலிப்போரும், உள்ளக சுய நிர்ணயத்தில் இந்திய மாதிரித் திட்டத்தை வழிமொழிவோரும், தமிழர் அரசியலை விலைபேசுவதற்காக சூரிச்சில் கூடிமுடிவெடுக்க முடியாததால், மீண்டும் வியன்னாவில் கூடியுள்ளனர். தமிழரின் வாக்குகளை சிறீலங்காத் தேர்தலில் எப்படிப் பங்குபோடலாமென்று பேரம்பேசவே வந்துள்ளனர்.
இந்திய நிகழ்ச்சி நிரலின்படி தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்கள் கவனமாகவே செயற்படுகின்றனர். 1931ஆம் ஆண்டிலேயே முற்றுமுழுதாக இலங்கை யாப்பை எதிர்த்து தேர்தலைப் புறக்கணத்த அரசியல் தெளிவுள்ள இனம் எம் தமிழினம். அரசியல் வியாபாரிகளின் வலைகளில் வீழாது தேர்தலில் பாடம் புகட்டும் புத்திசாலித்தனம் மக்களிடம் நிறையவே உள்ளது. மாநகர சபைத்தேர்தலில் அண்மையில் இதே தெளிவை மக்கள் காட்டியுள்ளார்கள். புலம்பெயர் தமிழர்களின் சக்தியானது இப்படியானதிசை திருப்பப்படும் பிரச்சாரங்களில் பலவீனப்பட்டுவிடாது, எமக்கான அரசியலை, எமது சொந்த வேலைத்திட்டங்களை, எமது சொந்த அரசியல் அமைப்பைக் கட்டியயழுப்புவதில் முழு முனைப்புடன் ஒன்றிணைக்க வேண்டும். இங்கு கட்டியயழுப்பப்படும் அடித்தளப் பலம் எம்மை மறுதலிப்போரை செயலிழக்கச் செய்யும். மக்கள் என்னும் அடித்தளமற்ற எந்த அரசியல் வடிவங்களும் தன்னாலேயே கலைக்கப்படும்.
-சோழ.கரிகாலன்
நன்றி:ஈழமுரசு
Comments