பிரித்தானிய மண்ணில் வரலாற்றை எழுதுவோம்!


சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன் விளைவாக தமிழர் மீது பாரிய இனப் படுகொலை நிகழ்த்தப் பட்டது.

எம் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழரது அபிலாசை என்ன என்பதனை சனநாயக வழிமுறையில் உலகிற்கு எடுத்தியம்புவது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கிய அரசியல் அபிலாசை என்ன என்பதனை நாடு நாடாக எடுத்தியம்பி வருகின்றனர்.

பிரித்தானியா சனநாயக விழுமியங்களின் தாய்நாடாக பார்க்கப்படுவதால் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் ஒன்று பட்டு ஒரே குரலில் ஏகோபித்த அபிப்பிராயமாக சனநாயக வழிமுறையில் முன்வைக்கப் போகும் சுதந்திர தமிழீழ தனி அரசுக்கான தமது விருப்பத்தை பிரித்தானிய ஆட்சிபீடத்தில் உள்ளோரும் கருத்துருவாக்கம் செய்வோரும் ஊடகங்களும் புறந்தள்ளிவிட முடியாது.

அண்மைக்காலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் ஒன்றிணைந்து வீதிகளில் திரண்டு இலண்டன் மாநகரில் நடாத்திய மாபெரும் பேரணிகள் பிரித்தானிய அரசையும் ஊடகங்களையும் ஏனைய மக்களையும் தமிழர்களின் போராட்டத்தின்பால் ஈர்த்தது. ஆட்சியாளர்கள் ஊடகங்களின் பார்வையில் ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் சிந்தனை மாற்றத்தையும் கொள்கை மாற்றத்தின் அவசியத்தையும் தூண்டியது.

முள்ளிவாய்க்கால் வரை தமிழர் தேச மக்களை பேரவலங்களுக்குள் உட்படுத்தி மனித வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை எழுதிய சிங்கள தேசத்தின் தலைவரையே மீண்டும் சிங்கள தேசம் பெரும்பாலான வாக்குகளால் தேர்வு செய்து தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி சிங்கள தேசத்தின் சுதந்திர தினம் நெருங்குகின்ற நிலையில் சுதந்திரத்தை ஒருதலைப் பட்சமாக சிங்கள தேசத்திடம் கையளித்த பிரித்தானிய மண்ணில் நின்றுகொண்டு ஒடுக்கப்பட்ட தமிழர் தேசத்து மக்கள் இவ் வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு சுதந்திர தமிழீழ தனியரசுக்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பிரித்தானியாவிற்கும் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் சிங்கள தேசத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை கொடுக்கப்போகின்றோம்.

பிரித்தானிய தமிழ் மக்களே!

* பிரித்தானியாவில் பகுதிவாரியாக இடப்படும் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவ்வப் பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள பிரித்தானிய வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் பலத்தினை உணர்த்த முடியும். இதன்மூலம் அவர்களது தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகளில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

* தாயக மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரைகுறையான தீர்வு ஒன்றினை திணிக்கும் முயற்சிகள் தற்போது அரங்கேறி வருகின்றன. அவ்வாறான அரைகுறை தீர்வு திட்டத்தை புலத்தில் வாழும் தமிழர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று சிறிலங்கா அரசு முயற்சிக்கின்றது. எங்களது சுதந்திர தனியரசுக்கான வாக்குகளால் சிங்கள தேசத்தினதும் அதனுடன் இணைந்து செயற்படும் சக்திகளினதும் தந்திரங்களை முறியடிப்போம்.

* தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதாக இறுமாந்திருக்கும் சிங்கள பேரின வாத சக்திகளுக்கு பிரித்தானிய தமிழர்கள் கூறப்போகும் செய்தி பெரும் சவாலாக அமையும். இதன் மூலம் தாயக விடுதலைக்கான புது விதமான களம் ஒன்றினை திறந்து வைப்போம்.

* தாயக மக்களுக்கு இத் தேர்தலின் மூலம் நாங்கள் கொடுக்க உள்ள மனோபலம் மிகப் பெரிய சக்தியாக இருக்கும் . இனிவரும் காலங்களில் அவர்கள் சந்திக்க இருக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு போராடும் ஆத்ம பலத்தினை நாங்கள் வழங்குவோம்.

இளையோர்களே!

* உங்கள் பூர்வீக மண் மீது தலைமுறை வழியாக வந்த உரிமையைக் கையில் எடுத்து அந்த மண்ணில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் ஏற்படுத்தக் கூடிய தீர்மானத்திற்கு பலம் சேருங்கள்.

* முள்ளிவாய்க்காலில் முறித்தெறியப் பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் பயணம் அதன் இறுதி இலக்கு வரை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ற தீர்மானத்தினை உலகிற்கு அறிவிப்போம்.

பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியாக நின்றே போராட்டத்தை நகர்த்துகிறார்கள் என்ற செய்தி எங்கள் பங்களிப்பின் மூலம் வெளிப்படட்டும். ஒன்று பட்ட மக்கள் சக்தியே தாயக விடுதலையை வென்று தரும். புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற இவ்வாக்கெடுப்பு முடிவுகள் எல்லாம் புலம்பெயர் மக்கள் சுதந்திர தமிழீழ தனி அரசு அமைப்பதையே விரும்புவதை புலப்படுத்தி வருகிறது.

அதனை பிரித்தானிய தமிழ் மக்களாகிய நாங்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு உறுதிப்படுத்துவோம். இதன் மூலம் உலக நாடுகளின் அமைப்புக்களை தாயக மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி இராணுவ அச்சுறுத்தல் அற்ற நிலையில் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஒரு வாக்கெடுப்பை நடத்துமாறு கோருவோம்.

சுதந்திர தமிழீழ தனி அரசுக்கான பிரித்தானிய தமிழ் மக்களின் விருப்பத்தை இவ்வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதன் மூலம் எங்கள் விடுதலை வேட்கையை முரசறைவோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
பிரித்தானிய தமிழர் பேரவை

பிரித்தானிய கருத்துக்கணிப்பு வாக்களிப்பு நிலையங்களின் விபரம்

Comments