இழவு விழுந்த எம் தமிழர் வீட்டில் வாக்குக் கேட்கவருகின்றார்கள் !

அரசியல் ‘யாருடையவோ' இறுதிப் புகலிடமாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இறுதிப் புகலிடமாக அதுவும் குறிப்பாக ஈழத்தில் இருப்போருக்கு இன்று இருக்க முடியாது.

சரத் பொன்சகாவும் மகிந்த ராச பக்சவும் இழவு விழுந்த எம் தமிழர் வீட்டில் வாக்குக் கேட்கவருகின்றார்கள் ! அரசியல் வித்தகர்கள் சிந்தனை செய்து மகிந்த வரக்கூடாது என்கிறோம். மகிந்த தோற்கடிக்கப்படவேண்டும் என்கிறோம். வழிவழியாய் இருந்து வந்த அளவை முறைச் சிந்தனைகூட அற்றவர்களாக தமிழ்ச் சமூகம் இருக்கும் நிலை இது. இழவு வீட்டுக்கு காரணமான இரண்டு கொலைகாரரில் எந்தக் கொலைகாரன் வரக்கூடாது என்று அரசியலுக்கு உள்ளாக நின்று சிந்திக்கும் ராசதந்திரத் திறனில் நாங்கள் நிற்கிறோம். எனது தமிழ் உறவுகளைக் கொன்றொழித்த, எனது உடன்பிறப்புக்களைக் கொன்றொழித்த இருவரில் யாருக்கையா வாக்கு போடலாம் என்று சிந்திப்பதுதான் அரசியல் என்பீர்களாயின் என் சொல்ல? உலகத்தின் முன் எழுப்பப் போகின்றோம் என்கின்ற "இனப்படுகொலை வாதத்தை" ஏதுமற்று மழுங்கடிக்கச் செய்ய என்ன செய்யமுடியுமோ அதையே செய்யப் போகின்றோம்.

கொலைகாரர் இருவரில் ஒருவருக்கு ஆதரவாக இந்தத் தமிழ்ச் சமூகம் இருக்குமாயின் பின்னர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு உலகத்தின் முன் சொல்வீர்கள் எங்களை இனப்படுகொலை செய்தார்கள்... என்று? கொலையைச் செய்தவனைவிடவும் கொலையைத் திட்டமிட்டவனுக்கு அதிகபட்ச தண்டனை என்கிறது எனக்கு தெரிந்த இந்திச் சட்டம். சட்டமேதை அம்பேத்கார் சிந்தித்து எழுதியது. அது உலகுக்கும் பொருந்தும். எனது தமிழ் உறவுகளைக் கொலை செய்ய ஆட்சித்ட்டமிட்ட மகிந்த ராசபக்சவா, ராணுவத் திட்டமிட்ட சரத் பொன்சகாவா இன்று தமிழர் வாக்களித்துக் கைதூக்கிவிடத் தகுதியானவன். இதில் யாருக்கு அதிஅளவு தண்டனை வாங்கித் தரமுடியும் என்பதையிட்டு வாதங்கள் நடத்துவதை விட்டுவிட்டு தமிழர்களை இழிச்சவாயர்களாக்கச் சில உளவு நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைக்கு துணைபோகும் எமது அரசியல் சிந்தனையை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.

எனது சமூகத்தினை இனைப்படுகொலை செய்த சரத் பொன்சகாவும் மகிந்த ராச பக்சவும்தான் முன்னால் இருக்கும் தெரிவு என்றால் இதைத் தரும் உலகையே வேண்டாம் என்று சொல்லும் திடம் வேண்டும் இப்போது... தமிழ்ச் சமூகத்துக்கு! இதன்மூலமே நாம், உலகத்தின் கண்களுக்கு இழந்த எம் உறவுகளை கொன்றொழித்த படுகொலையாளர்களை அடையாளம் கண்டுகொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளமுடியும். இரண்டு பேரில் ஒருவ"ன்"தான் வரப்போகின்றா"ன்" (இந்த "இழவுபட்ட" தமிழ் மொழி தடையாக இருப்பதைப் பாருங்கள் - இதை ஆங்கிலத்தின் "ஹீ" என்பதாக வாசிக்க வேண்டும். ) அதனால் யாரை வரவைப்பது என்ற கேள்விதான் எங்கள் முன் இருக்கிறது என்றால்... யாரை நோவது? எங்களுக்கு பாடம் பள்ளியில் சொல்லித்தந்த மூத்தோரையா? அரசியல் தந்திரம் என்றோம்.

தற்போது நடைபெறும் மகிந்த ராசபக்சவின் ஆட்சியைக்கூட தமிழர்தான் கொண்டுவந்தோம் என்று சாணக்கியம் பேசியிருக்கிறோம். மறுபக்கத்தில், கொலைக்குறி வைக்கப்ட்டு குற்றுயிரும் குலை உயிரும் ஆக்கப்பட்ட சரத் பொன்சகா எவ்வாறு தமிழருக்கு கருணையுடன் இருப்பார்? அவரும் கருணாக்களுடன்தான் இருப்பார். திடமாக நம்புங்கள். ஒருநாய் இல்லாவிட்டால் மறுநாய், கடிநாய் இல்லாவிட்டால் சொறிநாய்...எதுதான் தமிழருக்கு நல்விளைவு தரும் என்கிறீர்கள்? செய்தி இதுதான்!: கண்ணுக்கு முன்னால் ஓர் இனப்படுகொலை நடந்தது உறுதியாகிவிட்டது. அதற்கான ஆதாரங்கள் அனைத்துப் பெரிய நாடுகளின் கையில் இருக்கின்றன. பல வகைகளிலும் இருக்கின்றன.

அமெரிக்காவிடம், இந்தியாவிடம், சீனாவிடம், பிரித்தானியாவிடம், பிரான்சினிடம், ரசியாவிடம்...பட்டியல் தேவையில்லை. நடந்துவிட்ட படுகொலையை விசாரணைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மற்றொருமுறை அய்நாவின் தோல்வியும் உலகத்தின் பாராமுகமும் வெளிவரப்போகின்றது. இதன் விளைவைக் குறகைக என்ன செய்யலாம் என்பதன் விளைவுதான் தமிழருக்கு இரண்டு தெரிவுகைளத் தந்திருப்பது... இது சிங்கள மக்களுக்கும் சேர்த்ததுதான்....ஒரு ஊரில் ஒரேயொரு நீதிமான் இருப்பினும் அந்த ஊரை அழிக்கமாட்டேன் என்று சொன்ன தெய்வ வாக்குகள் உண்டு. அவ்வளவு மோசமாக இல்லாவிட்டாலும் சிங்கள மக்களிடமிருந்தும் நீதிமான்கள் தலையெடுக்கச் செய்யவிடாமல் கொண்டு வந்த திட்டம்தான் இது! உண்மையில் இந்தத் தேர்தலின் மூலமாக தற்போது சிங்களவர், தமிழர், முசுலிம்கள் என்று அனைத்து மக்களும் இலங்கையில் ஓர் கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் மறைமுகமாகப் பங்கேற்கிறார்கள்.

அவர்கள் கருத்துக்கு இரண்டு கொலைகாரர்களில் யார் சரியானவர் என்று தெரிவு தரப்பட்டிருக்கிறது. இதன் வாக்கெடுப்பின் முடிவில் உலகம் கொண்டு வந்து நிறுத்தப்போகும் பலியாடு எமது மக்களைப் படுகொலை செய்த வரலாற்றை, அதன் ரத்தக் கறையை உலகின் தற்போதைய நவ முகத்திலிருந்து நீக்குவதற்கான தந்திரம்தான். உலகம் பார்த்துக் கொண்டிருந்தது படுகொலை அல்ல என்பதை இதனால் நாம் நிரூபித்துக் கொடுக்கப்போகின்றோம். நம்முன் இருக்கும் தெரிவு மகிந்த ராசபக்சவா, சரத் பொன்சகாவா என்பதல்ல. வேடனா நாகமா என்பதல்ல. மானுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதுதான்! தற்போது இருக்கும் இலங்கையின் தமிழ் மக்கள்தான் மேற் சொன்ன மான் என்றால் அது தவறு! படுகொலையில் கொல்லப்பட்ட லட்சம் தமிழ் மக்கள்தான் ... அந்தப் படுகொலைச் செயலுக்காக நாங்கள் கேட்கக்கூடிய நியாயத்துக்கான உரிமைதான்...

வாழும் உண்மையான உலகத்துத் தமிழரின் கண்ணீரின் நிறம்தான்... வன்னி மண்ணில் பாய்ந்து கறுப்பாகிக் கருகிப்போன எம் மக்களின் குருதிதான்... மரத்துப்போகவேண்டும் என்று பிறர் நினைக்கின்ற எம் மனம்தான்... மழுங்கிப்போகவேண்டும் என்று உலகம் நினைக்கின்ற எம் இனத்தின் மூளைதான்... நாம் படுகொலையுண்ட தமிழுருக்கு என்ன நியாயம் வாங்கிக் கொடுக்கப்போகின்றோம்? முதலில் அதைப் படுகொலை என்கிறோமா இல்லயா என்துதான் எம்முன் உள்ள தற்போதைய தெரிவு. இருவரில் யாருக்கு வாக்களித்தாலும்... நடந்தது படுகொலை அல்ல என்பதையே தமிழர் சாற்றுகிறவர்களாவோம். வெளியில் இருந்து கொண்டு இப்படித்தான் வாக்களியுங்கள் என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை. ஆனால் பலரும் அதையே செய்துகொண்டிருக்கையில் எனது குரைலையும் ஒலிக்காமல் விடுவது மறுபகத்தில் தவறு... அந்தவகையில் ஈழத்தின் தமிழ் மக்களின் வாக்கு இருவருக்கும் விழக்கூடாது! அது எமது இறந்துபட்ட பல்லாயிரம் மக்களுக்கு நாம் செய்யும் வஞ்சகம்! அவர்களை நாமே நஞ்சுகொடுத்து கொன்றதற்கு ஒப்பானது!

-மாமூலன்

Comments