இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசரமாக அல்ஸ்ரன் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அதன் தாக்கம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர விதிமுறைகளை அல்ஸ்ரன் மீறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் இந்த விவகாரத்தை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னர் எம்மை தொடர்பு கொண்டு நடைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். சுயாதீன நிபுணர்களின் முடிவுகள் தொடர்பாக பிலிப் அல்ஸ்ரன் எம்முடன்தான் முதலில் தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால், அல்ஸ்ரனின் அறிக்கை தெளிவானது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு அவர்களை மண்டியிட வைத்து பின்தலையில் ரி56 ரக துப்பாக்கியால் சீருடையினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகளும், அதனை சுற்றி நிற்போர் பார்த்து ரசிக்கும் காட்சிகளும் உலகில் பரந்து வாழும் தமிழ் இனத்தை மட்டுமல்லாது உலகின் மனித சமுதாயத்தின் இதயங்களை உலுக்கியிருந்தது.
இந்த வீடியோ தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தது. விசாரணைகளின் முடிவில் வீடியோ பொய்யானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்த போதும் அதனை ஐ.நா. ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஐ.நா. சில காரணங்களையும் முன்வைத்துள்ளது. அதாவது, விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த மூன்று பேரில் இருவர் படை அதிகாரிகள் என்பதே அதுவாகும். அதனைத் தொடர்ந்து ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் தனது மேற்பார்வையில் மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார்.
காயங்கள் மற்றும் நோய்கள் தொடர்பான குற்றப்பிரிவு அதிகாரி கலாநிதி டானியல் ஸ்பிற்ஸ், காணொளி பகுப்பாய்வாளர் ஸ்பைவக், துப்பாக்கி பிரயோக தடயவியல் நிபுணர் பீற்றர் டியக்சு ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வீடியோ உண்மையானது என்பதை உறுதி செய்துள்ளனர். துப்பாக்கியின் பின்உதைப்பு, அதன் அசைவு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரின் அசைவு, துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட வாயு என்பவற்றை ஆராய்ந்ததில் உயிர்க்கொல்லி சன்னங்கள் மூலம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தமுடியும் என பீற்றர் டியக்சு தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல் அசைவுகள், எதிர்த்தாக்கம், குருதி வெளியேறிய முறைகளை ஆய்வு செய்ததில் மேற்படி வீடியோ உண்மையானது என்ற முடிவுக்கு தான் வருவதாக கலாநிதி டானியல் ஸ்பிற்ஸ் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனை பொறுத்த வரையில் அவர் நியூயோர்க் பல்கலைக்கழ கத்தின் சட்டத்துறை கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றியதுடன், அவுஸ்திரேலியா உட்பட பல பல்கலைக்கழகங்களில் சட்டவியல் பேராசிரியராக கடமையாற்றியவர். அனைத்துலக சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பல சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப்புறம்பான மற்றும் எழுந்தமானமான படுகொலைகளுக்கு எதிரான சிறப்பு பிரதிநிதியாக 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பின்னர் ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் படுகொலைகள் தொடர்பில் அவர் அதிக அக்கறை காட்டி வந்துள்ளார்.
நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பில் சட்டவிதிகளையும் அவர் வரைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் மனித உரிமைகள் மற்றும் உலக நீதி மையத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களின் தலைவராகவும் அவர் சாரா கினுக்கி என்பவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். எனவே பிலிப் அல்ஸ்ரன் மீது சேறு பூசு வதோ அல்லது அவரை புலியாக்குவதோ எதிர்மறையான விளைவுகளைத்தான் கொண்டுவரும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கும். மேலும் அண்மையில் ஐ.நா.வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டதும் நாம் அறிந்ததே. இலங்கை தொடர்பான மேற்குலக மற்றும் ஐ.நா.வின் நடவடிக்கைகளை பொறுத்தவரையில் சாண் இறங்குவது முழம் ஏறுவது என்ற கொள்கையைத் தான் பின்பற்றி வருகின்றன.
(முன்னர் அவை சாண் ஏறுவது முழம் இறங்குவதையே பின்பற்றியிருந்தன). இது அவர்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமாகவே நோக்கப்படுகின்றது. எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஐ.நா.வும், மேற்குலகமும் சில விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு பணிந்து போவது போலவும், உதவிகளை மேற்கொள்ளப்போவது போலவும் தோன்றலாம். ஆனால், அவர்களின் பிடிகள் மெல்ல மெல்ல இறுகி வருவதைத்தான் அண்மைய சம்பவங்கள் மூலம் உணர முடிந்துள்ளது. பொருளாதார மற்றும் படைத்துறை உதவிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆளுமையை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் முனைந்து வரும்போது மனித உரிமைகள் என்ற அஸ்திரத்துடன் மேற்குலகம் ஆசியப் பிராந்தியத்திற்குள் நுழையப்போகின்றது.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முதன் முதலாக இணைந்து கொண்டதன் பின்னணியும் அதுதான். இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை புறந்தள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் அதனை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற வட்டத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் வலுவான ஆதாரம் ஒன்றை அல்ஸ்ரன் முன்வைத்துள்ளதாகவும், எனவே இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 11 நீதிபதிகள் தலைமையில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரில் ஆரம்பமாகவுள்ள இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் என்பது ஒரு ஆரம்பமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குலகத்தினதும், ஐ.நா.வினதும் இந்த நகர்வுகளின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகள் அதிகரித்து வருவதும் தமிழ் மக்களுக்கு அனுகூலமானதாகவே அமைந்துள்ளது. இதனிடையே அல்ஸ்ரன் மேற்கொண்ட அறிவித்தலும், ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையும் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு பாதகமான நிலையை உருவாக்கும் எனக் கருதப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தென்னிலங்கை மக்களின் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பாக பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயம் அல்ஸ்ரனின் அறிவித்தல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பல அச்சங்களை ஏற்படுத்தலாம். மெல்ல மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் அரசாங்கத்தின் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவுகள் அதிகரித்து வருவதும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்களை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.
அரசியல் தீர்வு மனிதாபிமான நெருக்கடிகளுக்கான தீர்வு என பல விடயங்களை முன்நிறுத்தி இந்த ஆதரவுகளை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. கூட்டமைபின் இந்த முடிவானது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிக நல்ல முடிவு. அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஒரு முக்கிய திருப்பமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான செயற்படும் சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆவல். இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆட்சிமாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான சூழ்நிலையையும், அதன் அடுத்த நகர்வாக அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க முடியும்.
பூகோள அரசியல் முனைவாக்கத்தில் சிக்கிப்போயுள்ள இலங்கை அரசியலில் தமிழ் மக்கள் தமக்கான இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் தோற்றம்பெற்றுள்ள முனைவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும். மேற்குலகம், ஐக்கிய நாடுகள் இவற்றின் பிரவேசம் பிராந்திய வல்லரசுகளின் ஒருபக்க சார்புநிலை அரசியலின் மாற்றத்திற்கு மிகச்சிறந்த மருந்தாக அமையும். அதன் முதல் படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே அமையப்போகின்றது. தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இலங்கையில் ஒரு முழுமையான ஜனநாயகத்தை செயற்படுத்துவதற்கு அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும், மேற்குலகமும் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றன.
-வேல்ஸிலிருந்து அருஷ்
நன்றி:வீரகேசரி
Comments