குப்பைமேடாக மாறும் யாழ்ப்பாணம்......



A 9 பாதை முழுவதுமாக திறந்தாகிவிட்டது,ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதுஇரவு நேரப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. பொருட்கள் மலிவு விலைக்கு (கொழும்பிலும் பார்க்க ) கிடைக்கின்றன. மூவின மக்களும் (தமிழர் ,சிங்களவர், முஸ்லிம் )யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகிறார்கள், இதனால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுக்கலாம். சோதனை சாவடிகள் குறைக்கப்படுகின்றன, எதிர்காலத்தில் இல்லாமல் கூடப் போகலாம். இராணுவத்தினரின் கால்களுக்குள் வெடியை கொளுத்துமளவிற்கு (பொங்கலன்று) இராணுவத்தின் மீதான பயம் குறைவடைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திருபிக்கொண்டிருக்கின்றார்கள். போராட்டம், சுய நிர்ணயம் என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் 30 வருடமாக காய்ந்து கிடந்த எம் மக்களுக்கு இது உண்மையில் பெரியவிடயம்தான்.

ஆனால் சில விடயங்கள் மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது அவற்றில் முக்கியமான மூன்று விடயங்களாக நான் கருதுவது .


1 ) ரௌடிகளின் அடாவடி

2 ) வியாபாரிகளின் சுரண்டல்

3 ) சூழல் மாசடைதல்

[1] ரௌடிகளின் அடாவடி

ஒரு வாரத்திற்கு முன்னர் நானுன் இன்னும் மூன்றுபேரும் கம்பனி வாகனமொன்றில் இருபாலை இராசவீதி வழியாக வடமராட்சி சென்று கொண்டிருந்தோம், அப்போது கோப்பையை தாண்டி சிறிது தூரத்தில் இரண்டு மாணவிகள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். பின்னால் ஒரு முச்சக்கர வண்டி (ஆட்டோ ) சென்று கொண்டிருந்தது, அது அந்த மாணவிகளை கடக்கும்போது அதனுள்ளிருந்த ஒருவன் ஒரு மாணவியின் 'இடுப்பை கிள்ள' அந்த ஆட்டோ வேகமாக சென்றது, பின்னர் அதனுள்ளிருந்த அந்த 'பரதேசி' எட்டிப்பார்த்து எதோ விமானநிலையத்தில் வழியனுப்பும்போது கையசைப்பது போல் கையசைத்தது. ஆனால் சைக்கிளில் வந்த மாணவி தடுமாறி வீதியில் விழும் நிலையில் ஓரளவு சுதாகரித்ததால் காயங்கள் இன்றி தப்பித்து கொன்றாரயினும் அவரது கண்கள் நனைந்திருந்தன. ஒருவேளை அவர் வீதியில் விழுந்திருந்தால் அதேநேரம் பின்னால் வந்துகொண்டிருந்த எமது வாகனம் அவர் மீது ஏறியிருந்தால் அவரது நிலைமை என்ன?




வாகனத்தில் இருந்த ஒரு நண்பரும் நானும் ஓட்டுனரிடம் வேகமாக வண்டியை ஓட்டி அவர்களை மடக்கிபிடித்து அந்த மாணவி கையாலே செருப்படி வாங்கிக்கொடுப்போம் என்று கூறியதற்கு அவர் கூறினார் பாருங்கள் ஒரு பதில் "அவங்கள் என்ன கற்பையா அழிச்சிட்டாங்க? சும்மா ஆசையில கிள்ளீற்றுப் போறாங்க இதெல்லாம் கண்டுக்ககூடாது " என்பதுதான் அந்த 39 வயது வாலிபரின் (திருமணமாகவில்லை ) பதில். இப்போது அந்த ஆட்டோக்கரரிலும் பார்க்க எமக்கு அதிக கோபம் வந்தது எமது ஓட்டுனரில்தான் . ஆனால் அந்த ஓட்டோவை அடுத்த காவலரணில் எம்மால் சந்திக்க முடிந்தது, அவர்கள் எதோ ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் , கையில் தேர்தல் விஞ்ஞாபனம் வைத்திருந்தார்கள், இராணுவத்தினருடன் நன்கு சிரித்து கதைத்துக்கொண்டிருந்தார்கள், இதற்க்கு பின்னர் எங்களால் அவர்களை என்ன செய்துவிட முடியும்?

இது உதாரணத்திற்கு நான் பார்த்த ஒரு சம்பவம்தான், ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இதேபோல பல சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளது. தட்டிக்கேட்க அவர்களும் இல்லாததால் இனிவரும் காலங்களில் இவர்களின் அட்டகாசம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைத்தடுக்காவிட்டால் பெண்களை காமப்பொருளாக பார்க்கும் நிலைக்கு யாழ் இளைஞர்கள் தள்ளுப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு கிராம மக்களும் திருட்டுக்கு 'விழிப்பு குழு' அமைத்தது போன்று இதற்கும் ஒரு 'குழுவை' அவரவர் கிராமங்களுக்கு உருவாக்கினாலன்றி இதனை கட்டுப்படுத்துவது கடினமாகவே இருக்கும்.

[2] வியாபாரிகளின் சுரண்டல்


பாதை திறக்கப்பட்டதால் கொழும்பிலிருந்து தமிழ் , சிங்கள , முஸ்லிம் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அங்கு விற்க முடியாத தரமற்ற போடுட்களையே இவர்கள் அதிகளவில் எடுத்து வருகின்றனர், அவற்றை நடைபாதை கடைகளில் போட்டு குறைந்த விலையில் விற்பதால் 'காணாததை கண்ட' யாழ்ப்பான மக்கள் வேண்டி விடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.





இவர்களும் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள், குறைந்த விலையில் கிடைப்பதால் தரத்தை பார்க்காமல் பொருட்களை அள்ளிச்செல்கிறார்கள். இதில் அதிகமாக துணிகளும், பிளாஸ்டிக் பொருட்களுமே விற்பனையாகின்றன. இதனால் யுத்த காலத்திலும் தொடர்ந்தும் மக்களோடு இருந்த கடைகளும் வியாபாரிகளும் மிகுந்த வாட்டத்தில் காணப்படுகின்றனர். இது நகர்ப்புரமேன்றில்லை யாழ்ப்பாணத்தில் எங்கு சிறிது சன நடமாட்டம் உள்ளதோ அங்கெல்லாம் நடை பாதைக்கடைகள்தான். குறிப்பாக புகழ்பெற்ற 'நல்லூர்' ஆலயத்தை சுற்றி ஒரு மினி மாக்கற்ரையே இவர்கள் உருவாக்கி விட்டார்கள்.




இவர்கள்தான் இப்படி என்றால் 'குச்சி முட்டாய்' விற்கும் கம்பனிகள் முதல் மோட்டார் சைக்கிள் விற்கும் பெரிய கம்பனிகள் வரை அனைவரும் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இங்குதான் அதிக வெளிநாட்டு காசு இருக்கிறதல்லவா? விடுவார்களா இவர்கள், பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு விலை குறைப்பு செய்து விற்றுத்தள்ளுகிறார்கள்.ஒரு சந்தையில் அல்லது ஒரு டவுனில் கழுத்தில் டையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் sales representative கள்தான் இப்போது அதிகம். முன்பெல்லாம் உடன் காசென்றாலே பொருட்களை வழங்க பந்தா பண்ணும் பேர்வழிகள் எல்லாம் இப்போது 45 நாள் தவணையில்(cheque payment)பணத்தை தாருங்கள் என்றுகூறி பொருட்களை கொடுத்துவிட்டு போகிறார்கள், இவர்களின் ஆசைவார்த்தையில் மயங்கி 'கடனாளியாகும்' சிறிய கடைக்காரர்கள் பின்னர் பொருட்கள் விற்கப்படாமல் குறித்த தவணையில் பணத்தை வங்கியில் வைப்புசெய்ய படாத பாடுபடுகிறார்கள்.




அடுத்து முக்கியமான விடயம் யாழ்ப்பாணத்திலிருக்கும் பழைய இரும்புகளை எல்லாம் கிலோவுக்கு பத்து ரூபா ( இலங்கை காசு ) வீதம் வாங்கி அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்கிறார்கள். பெரிய பாரிய தலைகள் கொழும்பிலிருந்து இங்கு சிறிய சிறிய ஏஜண்டுகள் மூலம் இரும்புகளை கொள்வனவு செய்கின்றன. எவ்வளவு பெறுமதியான பொருட்களை கொடுக்கிறோம் என்பது தெரியாமலேயே இவர்கள் கொடுப்பதால் இழக்கப்படுவது நமது வளங்கள் என்பதை பத்திரிகைகளும் உணர்த்தாதது ஆச்சரியமே. இதைவிட நமது வளங்களை வியாபாரிகள் கொள்ளையடிப்பதற்கு வேறு சான்று வேண்டுமா ?

[3] சூழல் மாசடைதல்


இதற்கும் முன்னைய வியாபாரிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சுத்தமான காற்றை சுவாசித்த மக்களுக்கு இப்போது ஒரே வாகனப் புகைகல்தான் , ஒவ்வொரு நிறுவனமும் தமது பொருட்களை இங்குள்ள பிரபலமான ஒரு முதலாளியிடம் ( 5,000,000 ரூபா வங்கியில் வைப்பிருந்தால் போதும் ) விற்பனை அனுமதியை (agent ) கொடுத்து விடுகிறார்கள். அவர்களும் இத்துப் போன ஒரு வாகனத்தில் பொருட்களை ஏற்றி அனுப்பி விடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மோசமான நிலையில் இருப்பவை. அவற்றினால் கிளப்பப்படும் புகை வீதியை மறைக்குமளவிற்க்கும் வருவதுண்டு ( உவமை அல்ல ). அதிகமான மக்கள் சைக்கிளையே பயன்படுத்தி வருகின்றன காரணத்தால் பிரதான வீதிகளில் பயணிப்பது மிகுந்த கடினமாக உள்ளது, சிறிதாக இருக்கும் யாழ் வீதிகளில் வாகன நெரிசல் பலமடங்குஅதிகிரத்துள்ளது.



டெங்கு காய்ச்சலால் தினம் தினம் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் வேலையில் பத்திரிகைகளில் எவ்வளவோ வலியுறுத்தியும் கொழும்பிலிருந்து கண்டு வரப்படும் நாட்கள் கழிந்த (பழைய) 'பச்சை சோளம்' அதிகளவு அனைத்து இடங்களிலும் நடை பாதைகளில் போட்டு பச்சையாகவும் ,அவித்தும் விற்கப்படுகிறது. ஒரு சோளம் பொத்தி இலங்கை காசுக்கு 10 ரூபாவுக்கு அவித்து விற்கப்படுவதால் மக்கள் அதைவாங்கி சாப்பிடுகிறார்கள். சோளம் மேல்த்தொல் வாடினாலும் உள்ளே பதடைந்திருப்பது தெரியாது என்பதை பயன்படுத்தி கொழும்பில் விற்க முடியாத சோழனை இங்கு வீதிகளில் கொட்டிவிற்கிறார்கள்.மக்களும் இது தெரியாமல் வாங்கி உட்கொள்கிறார்கள், சுகாதார பிரிவும் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள்.அது தவிர சோளம் விற்ற பின்னர் வரும் அவற்றின் தோள்கள், மற்றும் நடைபாதை வியாபாரிகளின் கழிவுகள் நகரெங்கும் கொட்டிக்கிடக்கிறது.

இது தவிர வயல்வெளிகளில் விளம்பர பலகைகளை வைத்தல், கடைகளுக்கு விளம்பர பலகை வழங்குதல் என்பவற்றிற்காக வயல்களிலும் , உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளிலும் வைத்து 'இரும்பு ஓட்டும்' வேலைகள் இடம் பெறுவதால் உணவுப்பொருட்கள் மாசடையும் அபாயமுள்ளது.



இதனால் யாழ் மக்களுக்கு எம்மாலான சிறிய வேண்டுகோள்

1 ) தயவுசெய்து விலை குறைவென்று தரம் குறைந்த 'நடை பாதை' பொருட்களை வாங்காதீர்கள்.

2 ) வீதிகளில் போட்டு விற்கும் உணவுப்பொருட்களை குறிப்பாக சோளத்தை வேண்டி உண்ணாதீர்கள்.

3 ) நகர்ப்புறங்களை பல மக்களும் வந்து போவதால் முடிந்தவரை கடைகளிலும் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது.

4 ) வீதிகளில் பயணிக்கும் போது கவனமாக பயணியுங்கள், நீங்கள் சரியான வழியில் போனாலும் எதிரில் வருபவனை நம்ப முடியாது.


5 ) முடிந்தவரை உங்களுக்கு சொந்தமான இடங்களில் வியாபாரிகள் தரும் சிறிய தொகை பணத்திற்காக அவர்களது மிகப்பெரும் விளம்பர பலகைகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

6 ) முடிந்தவரை சுட்டாறிய நீரை பருகுங்கள்

http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_17.html

Comments