தமிழர்கள் தங்களுக்கென சொந்தமாக வீடுகட்டி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என வடபகுதியில் வாழ்கின்ற மக்களும் சரி, கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு சரி தமது சொந்த உடல் உழைப்பால் முன்னேறியவர்கள். தமது சொந்த மண்ணில் உடல் உழைப்பால் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுத்தான் தமது வருமானத்தைப் பெற்று வாழ்ந்தார்கள் இந்த மக்கள். எனினும், 1990ம் ஆண்டிற்கு சற்று முன்னைய காலப்பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தொழில் புரிந்து வருமானத்தை ஈட்டிக்கொண்டார்கள்.
அதாவது குறைந்த செலவில் சென்று உழைக்கக் கூடியதாக இருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றார்கள். இவ்வாறு சென்று அங்கு எப்படி உழைத்தார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. துன்பான வாழ்வை அனுபவித்துக்கொண்டும் அங்கிருந்து தமது குடும்பங்களுக்கு மாதச் செலவிற்கும், சொந்தங்களின் செலவுகளுக்கும் என உழைத்து உழைத்து பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போர் தொடங்கியதன் பின்னர்தான் ஐரோப்பிய நாடுகளுக்கான தமிழர்களின் பயணம் அதிகரித்தது. இதனை இந்திய இராணுவத்தினருடனான போரின் காலப்பகுதிதான் ஆரம்பித்து வைத்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் யாழ்ப்பாண மக்கள்தான் ஜரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு செல்லத் தொடங்கினார்கள்.
ஆனால், 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்ததன் பின்னர் இந்தத் தாக்கம் வன்னியையும் பற்றிக்கொண்டது. வன்னியில் இருந்துகொண்டு யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றார்கள். இவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் வன்னி மக்களையும் ஈர்க்கத் தொடங்கியது. அதன் பின்னர் வன்னி மக்கள் பலரும் வெளிநாட்டுப் பயணங்களை தொடங்கினார்கள். இந்த மாற்றத்தை சமாதானக் காலப்பகுதியில்தான் உணரக்கூடியதாக இருந்தது. சமாதான காலப்பகுதியில் வன்னியில் பெரும்பாலானவர்களை வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களாக மாற்றியிருந்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்து உறவுகள் உழைத்து அனுப்பிய பணத்தினை வைத்து வணிகம் நடத்தினார்கள், ஊர்திகள் எடுத்தார்கள், வீடுகள் கட்டினார்கள், காணிகள் வாங்கினார்கள். அன்றாட வாழ்க்கையினை முழுமைப்படுத்தி கொண்டு செல்பவர்களாக வன்னி மக்கள் மாறியிருந்தார்கள். 1997 தொடக்கம் 2001ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வன்னி மத்திய பொருளாதாரத்தை கொண்ட ஒரு பகுதியாகக் காணப்பட்டது. இதன்பின்னான 2002ம் ஆண்டின் தொடக்க காலத்தில் இருந்து வன்னியில் திறந்த பொருளாதார கொள்கை சிறீலங்கா அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அங்கு மக்களின் அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பர பொருட்கள் தேவை அதிகரித்தன.
அத்துடன், ஏனைய மாவட்ங்களில் அதாவது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, வவுனியா, மன்னார், கண்டி, நுவரேலியா மாவட்டங்களில் உள்ள உறவுகள் தொடர்புகளை கொண்டு அவர்களின் பிள்ளைகள் உறவினர்களை பார்க்க வருகை தந்தார்கள். உலக நாடுகளிலுள்ள நண்பர்கள், உறவினர்களுடன் தொர்புகளை எடுத்து உதவிகளைப் பெற்றார்கள். அத்துடன், இந்த சமாதான காலப்பகுதியில்தான் வன்னியில் மக்களுக்கான தொலைத்தொடர்பும் முழுமையாக்கப்பட்டது. அன்று விடுதலைப் புலிகளின் சர்வதேச தொலைத்தொடர்பான ‘வன்னியன் தொலைத்தொடர்பு' நிலையங்கள் பிரதேசங்கள் தோறும் அமைக்கப்பட்டு மக்களுக்கான தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தப்பட்டன.
ஆனால், சமாதானத்தின் பின்னான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீலங்கா அரசின் ரெலிக்கொம் தொலைத்தொடர்பு வசதிகளை செய்து கொடுத்தது. இவற்றினூடாகத்தான் வன்னிக்கும் வெளியிடங்களுக்குமான தொடர்புகள் மிகப் பெருமளவில் அதிகரித்தன. நண்பர்கள், உறவுகள் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பினார்கள். அத்துடன், பெண்கள் பலர் வெளிநாட்டு மணமகன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். வெளிநாடுகளில் உள்ள மாப்பிள்ளைகள் வன்னியில் உள்ள பெரும்பாலான பெண்களை விரும்பி திருமணம் முடித்தார்கள். எதுவித சீதனங்களும் வாங்காமல் சீதனம் கொடுத்தே பெண்களை மணந்து கொண்டு தாங்கள் வாழும் நாடுகளுக்கு கூட்டிக்கொண்டு சென்ற மணமகன்களும் உண்டு.
இவ்வாறுதான் வன்னியில் வாழ்ந்த மக்களின் பொருளாதாரம் பன்னாடுகளில் உள்ள உறவுகளின் பணத்தில் உயர்நிலையை கண்டுகொண்டது. இந்தப் பணங்கள் பின்னர் சிங்களவர்களையே சென்றடைந்தது. வீடுகட்ட தேவையான கட்டடப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றை சிங்கள தேசத்தில் இருந்தே கொள்வனவு செய்தார்கள். வவுனியாவில் பல முஸ்லீம், சிங்கள வர்த்தகர்கள் வன்னி மக்களுக்கு பொருள் விற்பதற்கென்றே வவுனியாவில் தளம் அமைத்துக் குவிந்திருந்தார்கள். அவ்வாறு பொருள் விற்பனையில் அவர்கள் கோடீஸ்வரர்களும் ஆனார்கள். குறிப்பாக மோட்டார் சைக்கிள், மற்றும் வாகனங்கள் கொள்வனவு என்றால் தென்பகுதியில் உள்ள சிங்களவர்கள் தமிழர்களுக்கு நல்ல விலையில் விற்பார்கள்.
ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் என்பதால் மக்கள் அதன் உண்மையான விலையை அறிந்துகொள்ள முனையவில்லை என்பதுடன், பேரம் பேச்சின்றி பொருட்களை கொள்வனவு செய்வதும் அவர்களை வன்னி மக்களுக்கு வியாபாரம் செய்வதற்கு விருப்பத்தையும் தூண்டுதலையும் ஏற்படுத்தியது. வீடு கட்டினார்கள், உழவு இயந்திரம் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டார்கள், கோயில் விழா நிகழ்வுகளை பெரும் செலவில் நடத்தினார்கள், கோவில்களை புனரமைத்தார்கள்... இவ்வாறு சீரும் சிறப்புமாக இருந்த மக்கள் மீது சிங்களப் படையினர் குண்டள்ளிக் கொட்டினார்கள். கட்டிய வீடுகள் உடைந்து நொருங்கின. வாங்கிய வாகனங்கள் சிதறிப்போயின. இவை நீங்கள் அறிந்த கதை.
இவர்கள் மட்டுமல்ல சிறீலங்காவின் போரினால் தங்கள் உடல் உழைப்பினால் அதாவது நீண்ட கடல் சென்று மீன்பிடித்து உழைத்தபணம், தலைமுடிவெட்டி உழைத்த பணம், ஆட்டோ ஓடி உழைத்த பணம், கூலி வேலை செய்து உழைத்தபணம், பனை ஏறி உழைத்த பணம், சேற்றில் கால்வைத்து உழைத்த பணம், வியாபாரம் செய்து உழைத்த பணம் என்று எல்லா வகையிலும் சிறுகச்சிறுக உழைத்துச் சேமித்து கட்டிய வீடுகளையும், வாங்கிய வாகனங்களையும் இழந்தார்கள் பலர். எல்லாம் இழந்து கட்டியிருந்த துணியும் கிழிந்துபோன நிலையில்தான் செட்டிகுளம் முகாமிற்கு வந்து சேர்ந்தார்கள் இந்த மக்கள்.
அவர்களின் எஞ்சியிருந்த சொத்துக்களையும் தேடித்தேடி கொள்ளையடித்தது சிறீலங்கா இராணுவம். அவர்கள் வாழ்ந்த வீடுகளில் கற்களைத் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவிற்கு இப்போது அவர்களின் சொத்து அங்கு எஞ்சியிருக்கின்றது. இவ்வாறு தமிழர்களின் சொத்துக்கள் சிங்களவர்களை கோடீஸ்வராக்கியது. இத்துடன் முடியவில்லை. மே மாதம் 18 ஆம் நாள் அனைத்து மக்களும் முட்கம்பிவேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். வவுனியாவில் பல்வேறுபட்ட முகாம்களில் இந்த மக்கள் அடைக்கப்பட்டார்கள். இதில் இருந்து மீள்வது எவ்வாறு என்று தெரியாமல் திணறிய மக்களில் பலருக்கு வழி திறந்தது இந்தப் பணம்தான். இது சிங்களவர்கள் பலரைக் கோடீஸ்வரர்களாக்கியது. எவ்வாறு...?
அடுத்தவாரம் தொடரும்...
-சுபன்
நன்றி:ஈழமுரசு
Comments