தனது புதிய பாடலில் நியூயோர்க் டைம்ஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார் M.I.A.-காணொளி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 2010 ஆம் ஆண்டில் தமது விடுமுறையைக் கழிக்க விரும்புபவர்களுக்கு இலங்கைதான் சிறந்த சுற்றுலாத் தலம் என எழுதியிருந்தது. சிங்கள் பெரும்பான்மையினருக்கும், தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் நடந்த கொடூர போரால் சீரழிந்த இலங்கையில், கடந்த மே மாதத்திற்கு பின்னர் அமைதியான யுகம் தொடங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி கூறியிருந்தது.
இவ்வாறு எழுதியமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரபல பாடகி M.I.A க்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணியது. தனது ட்விட்டர் இடுகைகள் பலவற்றிலும் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை மூடிமறைத்து எழுதிய நியூயோர்க் டைம்ஸுக்கு பல கண்டனங்களை வெளியிட்டிருந்தார்.

இப்போது தனது புதிய பாடலிலும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். "நியூயோர்க் டைம்ஸ்! விடுமுறையைக் கழிக்க இலங்கைக்கு செல்லலாம் என நினைக்கிறாயா?" என்று தனது பாடலில் எழுதியுள்ளதோடு இலங்கையில் சிறார்கள் கொல்லப்பட்டு அனாதைகளாக்கப்பட்ட படத்தையும் வலைத்தளத்தில் இணைத்துள்ளார். அதோடு கடந்த வியாழக்கிழமை டைம்ஸ் பத்திரிகையில் வெளியான 'இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் சனல் 4 வீடியோ உண்மையானது என ஐ.நாகூறுகிறது என்ற தலைப்பையுடைய கட்டுரையையும் இணைத்துள்ளார்.

மேலும் இலங்கைக் கடற்கரையைப் பற்றியும் எழுதியுள்ள M.I.A. கடற்கரையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சிதறிக்கிடக்கும் படத்தை அதனுடன் இணைத்துள்ளார். அவரின் இந்தக் கோபம் வெகுவிரைவில் ஒரு பாடலைப் பதிவுசெய்து அதன் வீடியோவை வெளியிடுவதற்கு தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Comments