ஆக மகிந்த 6,015,934 (57.88 சத வீதம்) வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.தமிழீழ தேசத்திலோ மிகக்குறைந்தளவானவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். அதிலும் அவர்கள் பொன்சேகாவிற்கே அதிகப்படியாக வாக்களித்துள்ளார்கள். மகிந்த தமிழ் ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் நின்றார்.
அதிலும் டக்லஸ் தேவானந்தா, சித்தார்த்தன், கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களின் ஆதரவோடு களத்தில் நின்றார். இக்குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த வடகிழக்கு பகுதிகளில் மகிந்தாவிற்கு கிடைத்த வாக்குகள் மிகக் குறைவானதே. இதிலிருந்து தெரிகிறது தமிழர் ஒரு போதும் மகிந்த அரசாங்கத்தின் கடந்த கால தமிழர் விரோத நடவடிக்கைகளை விரும்பவில்லையென. அத்துடன் தமிழர் ஒரு போதும் இந்த தமிழ் ஒட்டுக்குளுக்களையும் ஒரு போதும் நம்பவில்லை.
தமிழ் மக்கள் தெளிவாக இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். தமிழ் தேசியம் புலிகளின் பின்னால் நின்று 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை புறக்கணித்தார்கள் என்றால் அது உண்மை. ஆனால் இந்த தேர்தலை தமிழர் தரப்பினர் புறக்கணிக்காமல் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொன்னார்கள் காரணம் இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களை கொன்ற கொலைகாரர்களாய் இருப்பினும் களத்தில் நின்ற தளபதியை விட ஆணையிட்ட ஜனாதிபதியே தமிழின படுகொலையின் முதலாவது குற்றவாளியாக தமிழர் தரப்பு பார்ப்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆக தமிழர் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை. இருப்பினும் மகிந்த சிங்கள தேசத்தின் ஆசியோடு மீண்டும் அரியாசனம் ஏறியுள்ளார்.
சிங்களத் தேசத்தின் பிரதிநிதி மகிந்த
இன்னும் ஒரு வருடம் ஜனாதிபதியாக இருக்க சட்டம் இருந்தும் மகிந்த தேர்தலை கடந்த வருட இறுதியிலோ அல்லது இந்த வருட முதற்பகுதியிலோ நடத்திவிட வேண்டுமென்ற முனைப்புடன் கடந்த வருடம் இருந்தார். காரணம் தான் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்து விட்டதாகவும் தான் ஒரு அசைக்கமுடியாத முடிசூடா மன்னனாக சிங்கள மக்கள் முன் வலம்வந்து அவர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஐந்தோ அல்லது ஆறு வருடங்கள் தொடந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் தனது காய் நகர்த்தலை மேற்கொண்டார். அதில் முதலாவதாக சிங்களத் தேசத்தின் நாடித் துடிப்பை நன்கறிந்து தேர்தலை நடத்த தேர்தல் திணைக்கள அதிகாரியை வற்புறுத்தினார். அதன்படி ஜனவரி 26, 2010 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தார்கள்.
பாவம் ரணில். தான் நிச்சயம் மகிந்தாவை தேர்தலில் வெற்றியீட்ட முடியாதென்றெண்ணி தமிழர் மீது படையெடுத்த இராணுவத் தளபதி பொன்சேகாவை தனது மற்றும் தோழமைக் கட்சிகளின் துணையுடன் களம் இறக்கினார். பொன்சேகாவும் மகிந்தாவும் நேரடிச்சமர் புரிந்தார்கள். ஏன் பொன்சேகா நேரடியாகவே மகிந்தாவின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழர் மீது கொலைக்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதாகவும், மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அறிவித்தார். குறிப்பாக பத்திரிகையாளர்களைக் கொன்ற கொலைகாரர்களையும் அவர்களைத் தூண்டிய அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டுவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
தமிழ் மக்கள் ஏகோபித்த தமது ஆதரவை பொன்சேகாவிற்கு வழங்க சிங்கள தேசமோ மகிந்தாவின் இனவெறிப்பேச்சுக்கும் தமிழ் இனச்சுத்திகரிப்பின் வெற்றிக்கு ஆதரவு அளித்து வாக்களித்து அதன்மூலம் மகிந்தாவை அரியணை ஏற்றியிருப்பதானது சிங்கள தேசமே மொத்தமாக எப்படி தமிழின விரோதவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. அத்தோடு மகிந்தாவின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களெல்லாம் தமிழர் மீது தான் ஒன்றும் அக்கறையில்லாது போன்றதொரு தொனியில் தான் பேசிவந்தார். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு சிங்கள புத்த மதவாதி என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா ஒரு சிங்கள புத்த நாடென்றும் அங்கு மற்ற இனத்தினர் பெருன்பான்மை சிங்களவரை அரவணைக்கவேண்டும் என்ற தொனியுடன் மகிந்த சிந்தன என்ற கோட்பாட்டுடன் சிங்கள மக்கள் முன் வந்து சிங்கள இனத்துவேச கட்சிகளுடனும் புத்த பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை தான் தனது கொள்கைகளில் இருந்து சிறு கடுகளவேனும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்று சொல்லி வந்தார். அதுமட்டுமில்லாமல் அனைத்து இனத்தினரும் ஒரு இறையாண்மையின் கீழ் அதாவது ஒன்றிணைந்த சிறி லங்காவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ வழிவகுத்து தருவதாக கூறினார்.
எது எப்படியும் ஈழத்தமிழ் தேசம் ஒரு போதும் மகிந்த மீதோ அவரின் சகோதர்கள் மீதோ ஒரு கடுகளவேனும் நம்பிக்கை வைக்க தயாராகவில்லை என்பது தான் அசைக்கமுடியாத உண்மை. அத்துடன் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மகிந்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தான் யதார்த்தமான உண்மை. அவரின் அடுத்த அரை தசாப்த கால ஆட்சியில் பல வேலைத்திட்டங்களை தனது பிறந்த ஊரான அம்பாந்தோட்டையிலும் மற்றும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தனது கட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிங்கள தேசத்தின் ஆசியை பெற எத்தனிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இவரால் தமிழ் தேசம் எதனையும் பெற முடியாதென்பது மட்டும் திண்ணம். இந்தியாவையும் ஏமாற்றியும் பல உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கும் அவர்களின் அழுத்தங்களை சமாளிப்பதற்கும் சில நல்ல திட்டங்களை தமிழர் பிரதேசங்களில் செய்வதாக அறிவிப்பார். ஆனாலும் இவைகளினால் தமிழர்களின் இருண்ட வாழ்க்கை ஒருபொழுதும் விடியலைத்தராது என்பது தான் உண்மை.
எப்படி தமிழர் சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைப்பது?
தமிழர்களின் குணாதிசயங்களில் ஒன்று மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து பரிவு காட்டுவது. அதைப் போன்றே சிங்கள ஆட்சியாளர்கள் பல தசாப்த்தங்களாக இன வெறித்தாகுதல்களை தமிழர் தேசம் மீது கட்டவீழ்த்திவிட்டார்கள். சிங்களவர்களை தங்களின் அயலவராகவும் ஏன் ஒன்றுமறியாத அப்பாவி மக்களாகவே அவர்களை பார்த்தார்கள்? ஆனால் அவர்களோ வன்முறையைக் கட்டவிழ்த்தி விட்டு அராயக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள ஆச்சியாளர்களை வாராது வந்த வரப்பிரசாதங்களாகவே அவர்களைப் பார்த்தார்கள்.
ஒரு சிங்கள இராணுவ வீரன் மாண்டால் பத்து தமிழனையாவது கொல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் அலையும் சிங்களவரின் மனப்பான்மையைத்தான் நாம் இன்று காணக்கூடியதாயிருக்கின்றது. என்ன செய்வது. பாவம் இந்த சிங்கள தேசம். அறியாமைக்கு விலை போய்க்கொண்டு இருந்கின்றார்கள் என்பது தான் நியம். பல சிங்கள மக்கள் இன்றும் ஒரு வேளைக்கு உணவு உண்ண பொருளாதார வசதியற்று உள்ளார்கள். சிங்கள அரசியல்வாதிகளின் நடவடிக்களினால் நாட்டின் பொருளாதாரம் இன்று பல தசாப்தங்களாக பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றது. இன்று ஒரு வளர்ந்ததொரு நாடாக இருக்க வேண்டிய இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தவறான கொள்கைவகுப்புகளினால் இன்று பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றது.
பொருட்களின் விலைகள் பல மடங்காக ஏறிவிட்டது. ஆக அன்றாடம் கஞ்சிக்காக உழைக்கும் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றார்கள். இருந்தும் அரசியல்வாதிகள் இவர்கள் முன் இனத்துவேசப் பேச்சுக்களின் மூலம் தமிழின விரோத சிந்தனைகளை முன் வைக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு சில தினங்களில் பல ஆயிரம் தமிழர் கொலை செய்யப்பட பல உலக நாடுகள் முதலைக்கண்ணீர் வடிக்க அருகிலிருந்த சிங்களத் தேசமோ வன்முறையில் ஈடுபட்ட இராணுவத்திற்காகவும் அரசியல்வாதிகளுக்காவும் புத்த கோயில்களில் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். ஏன் பல தமிழ் வயோதிபர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சிங்கள அரக்க இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொண்டும் மற்றும் பல மனித குலமே கண்டிராத துன்புறுத்தல்களையும் கொலைகளையும் அரங்கேற்றும் போது சிங்கள தேசம் மௌனியாக இருந்தது என்பது தான் உண்மை.
சிங்கள மக்கள் கொதித்து எழுந்து தமிழர்கள் ஒரு போதும் சிங்களவர் மீது எந்த காழ்புணர்ச்சியை காட்டவில்லை என்றும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுபவர்கள் மற்றும் தமது பூர்வீக நிலங்களில் வாழ அனுமதி கேட்கின்றார்கள் ஆகவே அவர்களின் நியாயமான கோரிக்கையை அங்கீகரிக்கும் படி சிங்கள தேசம் வீதிகளில் இறங்கி போராடி இருந்திருந்தால் நிச்சயம் தமிழர் அவர்களை மிக மெச்சியிருப்பார்கள்.ஆனால் நடப்பது என்ன? மகிந்தாவிற்கு நன்றாகவே தெரியும் தமிழின விரோத செயல்களினால்; மீண்டும் தான் அரியணை ஏறலாம் என்று. பாவம் பொன்சேகாவோ ரணிலின் வழிகாட்டுதலில் தோல்வியைத் தழுவிக்கொண்டார்.
சிங்கள தேசமோ தாம் ஒருபோதும் தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கும் அவர்களின் தார்மீக போராட்டங்களுக்கும் ஆதரவு இல்லையென்று இத்தேர்தல் மூலம் நிருபித்துக் காட்டியிருகின்றார்கள். பாவப்பட்ட தமிழினமோ அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஓன்று மட்டும் உண்மை இனிமேலும் தமிழர் சிங்களத் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்கவோ அவர்கள் தமது அபிலாசைகளை நிவர்த்திசெய்வார்கள் என்றோ ஒரு போதும் நம்பத்தயாரில்லை.
உலகம் பதில் சொல்ல வேண்டிய தருணம் இது
ஈழத்தமிழரின் இவ்வளவு இன்னல்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் உலக ஆதிக்க சக்திகள். இதில் இந்தியாவின் பங்கு மிக அதிகமானது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு இணங்க ஈழத்தமிழரின் விடுதலை கைவசம் வரும் தருணத்தில் பல நாடுகளின் அழுத்தத்தினால் கை நழுவ வேண்டிய சூழ்நிலை. பாவம் பல ஆயிரம் உயிர்கள் மண்ணுக்கும் குண்டுக்கும் இரையாகிப் போய்விட்டன. ஏன் சிங்கள இராணுவத்தின் தாகத்தை தீர்க்க தமிழனின் இரத்தமும் தண்ணீர் போன்று ஆறாக ஓட அதை சிங்களச் சிப்பாய்கள் குடித்து மகிழ்ந்ததாக ஒரு கேள்வி.
இதன் உண்மை பொய் நிச்சயம் எமக்கு தெரியாது காரணம் சிறி லங்கா அரசு பத்திரிக்கை தணிக்கையை செயல்படுத்தி யாரையும் களமுனைகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. காரணம் அவர்களின் அராயகம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் என்ற பயத்தில். ஓன்று மட்டும் உண்மை என்னவென்றால் மாண்ட உயிர்கள் நிச்சயம் ஆவிகளாக வந்து சூத்திரதாரிகளை அழித்து அவர் தம் கனவுகளை நிறைவேற்றும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது தான் தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மகிந்தாவின் வெற்றிச் செய்தியை கேட்டவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்துச் செய்தியை மகிந்தாவிற்கு அனுப்பினார்கள். தமிழரையும் தமது அரசியல் இராஜதந்திர இலாபத்திற்காக சந்தோசப்படுத்துவதற்கு ஒரு சில வரிகள் ஏனும் அவர்களின் வாழ்த்தறிக்கைகளில் குறிப்பிட்டு இருந்தார்கள். முக்கியமானது என்னவென்றார்கள் அவர்கள் தங்கள் அறிக்கைகளில் மகிந்தாவை வேண்டிக்கொள்வது என்னவென்றால் அதாவது ஐக்கிய இலங்கைக்குள் எல்லா இனங்களும் சேர்ந்து வாழ வழிவகுக்குமாறும் தமிழரின் அரசியல் கோரிக்கையை தீர்த்து வைக்கும் படியும் மற்றும் தமிழரின் இன்றைய அவல நிலைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து அவர்களை தமது ஊர்களில் நிம்மதியாகவும் சமாதானத்துடன் வாழ வழியமைத்துக் கொடுக்கும்படி வேண்டுகின்றார்கள்.
மேலும் நிச்சயம் மகிந்த அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவாரென்றும் அறிக்கைகள் விடுகின்றார்கள் இதனை பத்திரிகையாளர்களுக்கு கூறுகின்றார்கள். அதனையும் பெரிதுபடுத்தி பத்திரிகைகள் முன்பக்கத்தில் போடுகின்றார்கள். இவ் அறிக்கைகளினால் நிச்சயம் தமிழர் தமது அதிகாரங்களையோ அவர்கள் இன்று சந்தித்திருக்கும் அவல நிலையையோ கவலையடையப் போகின்றவர்களல்ல. ஆனால் மகிந்த இந்தியா மற்றும் பல ஆதிக்க சக்திகள் இவைகள் மூலம் பலனடைவார்கள் என்பது தான் உண்மை. எதுவாயினும் ஈழத்தமிழரின் சோகம் ஒரு தொடர்கதையே அன்றி ஒரு முடிவேயில்லாதது.
மகிந்தாவின் வெற்றி சிங்களத் தேசத்தின் அவரின் தமிழின சுத்திகரிப்பிற்கு கிடைத்த பரிசு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதாவது உலகத்தமிழினம் தமக்கிடையேயுள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒரு குடையின் கீழ் அணிவகுத்து ஈழத் தமிழரின் விடுதலையை முன்னிறுத்தி ஒரு இலட்சத்திற்கு மேலான உயிரினில் மேலான உடன்பிறப்புகளுக்கு அவர்தம் ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தோடு மகிந்தாவின் ஆட்சிக்காலத்திற்க்குள்ளயே ஈழத்தமிழரின் அணையாத தாகமான ‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம’; வெகு விரைவிலே கிடைக்க வேண்டுமென்பது தான் அனைவரினதும் அவா. ஆக ஈழத்தமிழரின் விடுதலை எந்த முனையில் இருந்து, எந்த வடிவில் பூகம்பமாய் வெடிக்குமா அல்லது சில காலம் மௌனமாய் அக்கினி வளர்த்து ஆர்ப்பரித்து சுனாமியாய் கிளந்தெழும்புவார்களா என்பது தான் இப்போது உள்ள கேள்வி. கேள்விக்கான பதிலை நாம் நிச்சயம் சிங்கள தேசத்திடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது. ஆனால் காலம் இதற்கு விடைதரும் என்பது தான் மறைக்க முடியாத உண்மை.
Comments