ஊடகத் தர்மமும் தமிழீழக் கொள்கையும்

பிரித்தானியாவில் 2010, சனவரித் திங்கள், 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்திய வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையிலான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு, “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!” என்று மகிழும் அளவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது. இத்தேர்தலில், பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் (18 வயதிற்கு மேற்பட்ட வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில்), 64,692 பேர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் 64,256 பேர்கள், அதாவது 99.33% சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 185 பேர்கள் மட்டுமே (0.29% ) எதிராக வாக்களித்து இருந்தார்கள். செல்லாத வாக்குகள் 251 (0.39% ) மட்டுமே.

பிரித்தானியா தமிழ் தேசிய சபை , தமிழ் இளையோர் அமைப்பு , பிரித்தானியா தமிழர் பேரவை , தமிழீழ செயற்பாட்டாளர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்ததன் விளைவாக மகத்தானதொரு வெற்றியைப் பிரித்தானியாவில் சாதித்துக் காட்டியுள்ளனர்.

இலங்கையில் தந்தை செல்வா அவர்களால் அரசியல் தீர்மானமாக வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட போது பிறந்திருக்காத இளையோர்கூட, இன்றைக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி நன்கு அறிந்து கொண்டதோடு தனித்தாயக தமிழீழ தனியரசு அமைப்பதுதான் தங்களுக்கும் ஏற்றதொரு இலட்சியம் என்பதைப் பிரித்தானியா கருத்துக்கணிப்பு மூலம் உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். எள் என்று சொல்லும் முன்னே, எண்ணெய் ஆக நின்ற இளையோரின் துடிப்பும், அவர்களைத் திசை திருப்பாமல் தேசியத் தலைவரின் இலட்சியத்திற்கு ஏற்ப சரியாக வழிநடத்திச் சென்ற மூத்தோரின் பக்குவமும், இன்றைக்கு இலங்கை அதிபர் இராசபக்சேவிற்கு பெரும் சவாலாகவும், இருப்பதுடன், சர்வதேச நாடுகளுக்குச் சனநாயகக் குரலின் வலிமையையும் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.

30-8-1999-ல் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெற்ற கிழக்கு திமூர் நாட்டின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில்கூட, சுயாட்சிக்கு ஆதரவாக, 21 % மக்களும், எதிர்ப்பாக 78.5 % மக்களும், அதாவது எங்களுக்கு இந்தோனேசியாவுடன் இணைந்த சுயாட்சி வேண்டாம்: கிழக்கு திமூர் தனித்தாயகம் தான் வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்களித்தனர். ஆகவேதான், 2002ல் கிழக்கு திமூர் தனிநாடாக உருவானது என்பது வரலாறு. தனித்தாயகத்திற்காக போராடிய புலம் பெயர்ந்த யூத மக்களில் கூட, 20 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.

ஆனால், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் அந்தந்த நாடுகளின், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் மேற்பார்வையில், அரும்பாடுபட்டு நடத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் அனைத்து நாடுகளிலுமே 99% க்கும் மேலாக அமைந்திருப்பது தமிழீழம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியுள்ளது.

நார்வே (10-05-09) – 99%, பிரான்சு (11-12-09): 99%, கனடா (19-12-09): 99.8%,
ஜெர்மனி (24-01-2010): 99%, சுவிட்சர்லாந்து (25-11-2010): 99%, நெதர்லாந்து (25-11-2010):99%

மேற்கண்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் அனைத்துமே, ஈழத்தமிழர்களின் பெருவிருப்பமும் ஒரே இலட்சியமும் தமிழீழ தனித்தாயகம் அமைப்பதற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன. உண்மை இவ்வாறிருக்க, ஊடகங்களும் பத்திரிகைகளும் என்னதான் இருட்டடிப்பு செய்தாலும் அவையெல்லாம் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என நினைத்து, ஏமாந்தவர்களின் செயலுக்கு ஒப்பானதாகவே இருக்கும்.

“தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும்” என்பார்கள். பிரித்தானியர்களால், அவர்களின் நிர்வாக வசதிக்காக, இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் அன்று 1833-ல் தொலைந்து போனது. இன்றைக்கு அதே பிரித்தானியர்கள் மூலம் இழந்து போன பாரம்பரியத் தாயகம் மீண்டும் சுதந்திரத் தமிழீழமாகக் கிடைத்திட இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உதவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமன்றி, பிரித்தானியா உட்பட, ஐரோப்பிய நாடுகளில், வெற்றிகரமாக நடைபெற்ற இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இலங்கையிலும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்பின்கீழ், எதிர்காலத்தில், கருத்துக்ணிப்பு வாக்கெடுப்பு (சுநகநசநனெரஅ) நடத்தவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரித்தானியா தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பை வரவேற்றுள்ள அக்ட் நௌ (Act Now) எனும் பிரித்தானிய அமைப்பு, தமிழ் மக்கள் ஐ.நா மேற்பார்வையின்கீழ், இலங்கையில் தமிழ் மக்களிடமும் இதே மாதிரியொரு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. டைம்ஸ் ஆன் லைன் (Times (On Line) வெளியிட்ட கட்டுரையில், புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சர்வதேச அரசியலில், உலகத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்றும், வேறெவரும் செய்யத்துணியாத கருமங்களைத் துணிந்து (கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு) செய்து காட்டிவிட்டார்கள் எனவும் பாராட்டியுள்ளது. பி.பி.சி (BBC) தனது செய்தியில், இராசபக்சே, இலங்கையில் அதிபராக வெற்றி பெற்ற போதிலும், போர் நடைபெற்ற தமிழ்ப் பிரதேசங்களில் தோல்வியுற்று இருக்கிறார் எனக் கூறியுள்ளது. தி கார்டியன் (The Guardian) எனும் இலண்டன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளை, ஒடுக்கிவிட்டதாகக் கூறி, இலங்கையில் இரண்டாம் முறையாக மகிந்த இராசபக்சே வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த சில தினங்களில், பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், இலங்கையில் சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் வாக்களித்துள்ளனர் எனக்கூறியுள்ளது. இந்தியாவிலும், தினமணி, மக்கள் தொலைக்காட்சி போன்ற பல ஊடகங்கள் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகளை வரவேற்று செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால், தமிழீழத் தேசியத்தில் உறுதியாக இருக்கும் பிரித்தானியா தமிழ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று, இலங்கை அதிபர் தேர்தல் பற்றி, ஒரு மாதமாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இயலாத நிலையில் உள்ள, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கருத்துக்கணிப்பு போல நடத்தியது. இதைக் கூர்மையாக நோக்கும்போது, கலிவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver’s Travels) என்னும் பிரபல ஆங்கில நகைச்சுவை நாவலில், இரு நாட்டு மன்னர்கள், ஓரு முட்டையை அடிப்பக்கத்தில் உடைப்பதா? அல்லது நுனிப் பக்கத்தில் உடைப்பதா? என்ற சர்ச்சையில் சண்டை செய்த கதைதான் நினைவிற்கு வந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இராசபக்சேவா அல்லது சரத்பொன்சேகாவா என்னும் வாதமும் இதே போன்றதுதான் என்பது கண்கூடு.

பிரித்தானியா கருத்துக்கணிப்பு முடிவு வெளியான பின்பும், 12 மணிநேரம்வரை, ஒரு செய்திகூட வெளியிடாமல் இருந்துவிட்டு, பிறகு “பிரித்தானியாவில் வாழும் வாக்களிக்கத் தகுந்த 2 இலட்சம் ஈழத்தமிழர்களில், 30 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள்” என்று செய்தி வெளியிட்டது புலம் பெயர்ந்த தமிழர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவில் எப்போது வாக்களிப்பதற்கு தகுதியான மக்கள் (18 வயதிற்கு மேற்பட்டோர்) இரண்டு இலட்சத்திற்கு மேல் வந்தார்கள் என்பதை அறியும் ஆவலுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். தங்களின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் தராமல், இலங்கையில்; இனப்படுகொலை செய்த இருபோர்க் குற்றவாளிகளுக்கு இடையில் நடந்த அதிபர் தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால், தமிழ் உறவுகள் கோபப்படுகிறார்கள். கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கு, ஆங்கில ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் கூட தமிழ் ஊடகங்கள் தராத போது மக்கள் கோபப்படுவதில் தவறேதுமில்லை.

ஒரு முறை தவறான செய்தி வெளியிட்டதற்காக மட்டும் மக்கள் எந்த ஊடகத்தின்மீதும் வெறுப்பு கொள்ள மாட்டார்கள். நார்வே மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, அங்கு தமிழ் முரசம் என்ற வானொலி நடத்தும் உமைபாலன் என்ற ஊடகவியாலரை, அத்தேர்தல் பற்றிய நேரடிச் சிறப்புப் பேட்டி காண, தங்கள் இலண்டன் நிலையத்திற்கு அழைத்துவிட்டு, அவரை பேட்டியெடுக்காமல் அவமானப்படுத்தி திருப்பியனுப்பியது, பிரான்சு நாட்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கு தங்களது ஊடகத்தில், முக்கியத்துவம் தராதது மட்டுமல்லாமல், அதற்கு எதிரானவர்களை வரவழைத்து சிறப்புப் பேட்டி தரவைத்தது, பிரித்தானியாவில் நடந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கு கடைசி 5 நாட்கள், பெரும்பாலான நேரத்தை ஒதுக்குவதாக உறுதியளித்துவிட்டு, அதிலிருந்து பின்வாங்கியது என இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை, நான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கும்போது, என்னிடம் தமிழ் உறவுகள் சொல்லி வருத்தப்பட்டார்கள். அதே சமயம், முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த ஊடகம் ஆற்றிய அரும்பணியையும் அவர்கள் பாராட்டத் தவறவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், வட்டுக்கோட்டைத் தீர்மான அடிப்படையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்துதல், மக்களவை அமைத்தல், நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தல் ஆகிய மூன்று பணிகளையும் முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்றியமையாச் சனநாயகக் கடமைகளாக உள்ளன. இவையனைத்திற்கும் பாரபட்சம் காட்டாது செய்திகள் வெளியிடும் ஊடகங்களை மக்கள் வரவேற்கவே செய்வார்கள். எனவே, தமிழீழத் தேசியத்திற்காக உழைக்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, நடுநிலையோடு நடந்துகொள்வதுதான் தமிழீழ ஆதரவு ஊடகவியலாளர்களின் தர்மம் ஆகும் என்பதைத் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் ஊடகங்கள், தங்கள் நிலையில் மாற்றங்கள் செய்து கொள்ளத் தவறினால், ஈழத்தமிழர்கள், தம் கொள்கையைப் பாதுகாப்பதற்கு ஊசலாட்ட ஊடகங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்கள் இலட்சியத்திற்கேற்ற, புதிய ஊடகமொன்றை நிறுவுவதே ஏற்ற வழியாகும் எனத் துணிந்து விடுவர். வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதை நிலை நிறுத்தி வெல்வதற்காக வழங்கப்பட்ட தேசியத் தலைவரின் ஆணையும் இருக்கும் வரை, ஈழத்தமிழர்களை, எவ்வகையிலும் யாரும், குழப்பி திசைதிருப்ப முடியாது என்பது உறுதியிலும் உறுதியாகும்.

- பேராசிரியர் தீரன்-

(இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்ப்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்)

Comments