ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்


கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள்ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிகளையும் விட்டு சென்றுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலமாக போர்க்கொடி தூக்கி வருகின்றன. கடந்த புதன்கிழமை கொழும்பில் அவர் கள் பேரணி ஒன்றை மேற்கொண்டதுடன், கண்டியில் நடைபெற்ற இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க புறக்கணித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எங்கு முறையிடுவது என்பது தொடர்பில் எதிர்க்கட் சிகளிடம் ஒரே தெரிவு மட்டும் தான் உள்ளது. அதாவது உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஏனெனில் இலங்கையின் அரசியல் யாப்பு முறையில் உயர் நீதிமன்றம்தான் சுயாதீனமானது.

ஏனையவை அரசாங் கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. மேற்குலகத்தின் நிர்வாகம் வேறுபட்டது, அங்கு காவல்துறை, நீதித்துறை, தேர்தல் திணைக்களம், ஊடகத் துறை உட்பட பல்வேறு முக்கிய துறைகள் சுயாதீன மானவை. இலங்கையின் காவல்துறை, நீதித்துறை கட்டமைப்புக்கள் சுயாதீனமானதாக மாற்றப் பட வேண்டும் என மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வருவதும் நாம் அறிந்ததே. உயர் நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலம் உடனடியான பலன்கள் எதுவும் ஏற்பட்டு விடும் என கூறுவது கடினமானதாக இருந்தாலும், அதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சில அழுத்தங்களை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றன.

அதாவது பொதுத்தேர்தலை வன்முறையற்ற தேர்தலாக நடத்த வேண்டும் அல்லது நாடா ளுமன்றத்தை தற்போதைக்கு கலைத்து விடாமல் தடை உத்தரவுகள் வாங்கவேண்டும் இது தான் எதிர்க்கட்சிகளின் திட்டம். ஒருபுறம் அவர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் மாவட்ட ரீதியாக கிடைக்கப்பெற்ற வாக்குகளை அடிப்படையாக வைத்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள்வகுக்கப்படுகின்றன. அதாவது சிறுபான்மை இன மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தக்கவைத்துள்ளது அரச தலைவர் தேர்தலில் உணரப்பட்டதனால் அவர்களை தனியாக போட்டியிடவைப்பது எனவும், தென்னிலங்கை பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி என்பன தமது வாக்கு பலத்தை மீண்டும் கைப்பற்றுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவும் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
பொன்சேகா தனியாக போட்டியிட்டால் தென்னிலங்கையின் அரசியல் நெருக்கடிகளை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. அதாவது ஸ்ரீலங்கா சுதந்தி ரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி என மூன்று பிரதான கட்சிகளுக்கு இடையில் பிரிவை சந்தித்த தென்னிலங்கை மக்களின் வாக்கு பலத்தை அன்னப்பறவையும் பிரிக்கப்போகின்றது.
மாவட்ட ரீதியாக தமது பலத்தின் அடிப் படையில் வாக்குகளை பெறுவதற்கான திட்ட மாகவே அதனை கொள்ள முடியும்.

இருந்த போதும் வருங்காலத்தில் தென்னிலங்கையில் நான்கு பலமான கட்சிகள் உருவாகுமானால் அங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் தக்கவைக்க முடியாத நிலையே ஏற்படலாம். அதாவது கூட்டு ஆட்சி முறைக்கான சந்தர்ப்பங்களே ஏற்படலாம்.
அதேவேளை, தேர்தல் முடிந்த ஒரு வாரத்திற்குள் இராணுவக்கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்களை நிகழ்ந்துள்ளன. ஏறத் தாழ 40 உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 14 உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை கட்டமைப்பிலும் 150 இற்கு மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள 14 இராணுவ அதிகாரிகளில் ஐந்து மேஜர் ஜெனரல்கள், ஐந்து பிரிகேடியர்கள், ஒரு கேணல், ஒரு லெப். கேணல், இரண்டு கப்டன் தர அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளனர். ஒரு நாளிலேயே அவர்களுக்கான விலகல் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் டி லியனகே, மேஜர் ஜெனரல் ஜெயநாத் பெரேரா, மேஜர் ஜெனரல் ராஜித சில்வா, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, மேஜர் ஜெனரல் சூரியபண்டார, பிரிகேடியர் டி டி டயஸ், பிரிகேடியர் கெப் பிட்டிவலன, பிரிகேடியர் மகோத்தி, பிரிகே டியர் ஹென்னெடிகே, பிரிகேடியர் குமார பெரும, கேணல் திலக் உபயவர்த்தன, லெப். கேணல் ஜெயசூரிய, கப்டன் ரணவீர, கப்டன் கிரிசாந்த ஆகியோரே இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள்.

1962 ஆம் ஆண்டு அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தை கைப்பற்று வதற்கு முனைந்தனர் என்று கூறப்பட்டு சில இராணுவ உயர் அதிகாரிகள் படையில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். அதற்கு பின்னர் இலங்கையின் வரலாற்றில் பெருமளவான படை அதிகாரிகள் இராணுவத்தை விட்டு விலக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
தென்னிலங்கையில் ஏற்பட்ட முன்னைய கிளர்ச்சிகளை நோக்கினால், 1972 ஆம் ஆண்டிலும், 1988 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் ஜே.வி.பியினர் கிளர்ச்சிகளை மேற்கொண்ட போதும் இலங்கை இராணுவக் கட்டமைப்பு உறுதியாகவே இருந்தது. அவர்களால் இராணுவத்தின் கட்டமைப்புக்குள்ளும், அதன் கட்டளை பீடங்களுக்குள்ளும் அதிகம் ஊடுருவ முடியவில்லை. அன்றைய காலத்தில் பெருமளவான இராணுவ உயர் அதிகாரிகள் படையில் இருந்து நீக்கப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை.

எனவே தற்போதைய நிலை மிகவும் உணர்திறன் மிக்கதாகவே நோக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதும் தென்னிலங்கையின் அரசியல் உறுதித்தன்மையை அடையவில்லை என்பதையே தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் என மேற்குலகம் அழுத்தங்களை மேற்கொண்டு வருகையில் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் அவர்களுக்கு மேலும் ஒரு பாதைக்கான வழியை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் இந்தியாவை ஆட்கொண்டுள்ளது போலும். அதன் பிரதிபலிப்பதைப் போன்றே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் தமிழக பயணமும், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்களும் அமைந்திருந்தன.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஜனவரி 31 ஆம் நாளுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயக்திற்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை ஐ.நா மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றது. எனவே அதனை காரணமாக வைத்து ஐ.நா அல்லது மேற்குலகம் தமது அழுத்தங்களை இலங்கை மீது மேற்கொண்டு விடக்கூடாது, அவ்வாறு மேற்கொண்டால் தற்போது தேர்தலுக்கு பின்னாக தோன்றியுள்ள நெருக்கடிகளை அது மேலும் அதிகரித்து விடும் என்பது இந்தியாவின் அச்சமாக இருக்கக்கூடும். ஆனால் இந்தியாவும், இலங்கையும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து கடைபிடிக்கும் போக்குகள் இலங்கைத் தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்திய அரசியல்வாதிகளைக் கூட பொறுமையிழக்க வைத்துவிட்டது.

தென்னிந்திய பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ள கருத்தும் அதனை தான் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் செயற்படப்போவதில்லை, எனவே ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, கனடா போன்ற மேற்குலக நாடுகள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். அது தொடர்பாக அவர்கள் இலங்கை அரசுடன் பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இந்த கருத்தானது தென்னிந்திய தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு கருத்து மாற்றமாகும். இந்த கருத்து மாற்றம் என்பது புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதுடன் கொள்கை ரீதியான கருத்துக்களை மீண்டும் மீண்டும் முன்வைப்பதை தவிர்த்து அவர்கள் செயல்திறன்மிக்க நிலைக்கு நகர்ந்துள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி்:வீரகேசரி

Comments