நாடு கடந்த அரசாங்கத்திற்கான மதியுரையில் முக்கிய திருத்தங்கள் தேவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும் நடைமுறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும், கட்டமைப்பு ரீதியாகவும், யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடு இல்லாதிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழர் அவை, அதைத் திருத்துவதற்கான வழிமுறைகளையும் கோடி காட்டி, மேலதிக ஆய்வைக் கோரியுள்ளது.

முழு அறிக்கையின் பிரதியை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
NCET_TGTE Need correction

புலம் பெயர் சூழலில் முதன் முதலாக நாடளாவிய ரீதியில் தேர்தல் மூலம் கடந்த நவம்பர் மாதம் தெரிவாகியுள்ள நோர்வே ஈழத்தமிழர் அவையின் அரசியல் விவகாரக்குழு தனது அமர்வொன்றில் நாடு கடந்த அரசாங்கத்திற்கான மதியுரைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து இந்தத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

பரிந்துரைகளின் வெளிப்படைத்தன்மை கருதி அவற்றை பகிரங்கமான ஊடக அறிக்கையாகவும் நோர்வே ஈழத்தமிழர் அவையின் அரசியல் விவகாரக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் ஒன்றிணைந்த பூகோள அரசியல் நடைமுறையை (geo poliltical de-facto situation) உருவாக்க வேண்டும் எனக்குறிப்பிடும் நோர்வே அவையின் அறிக்கை தாயகத்தில் நடைமுறை அரசு (de-facto state) அழிக்கப்பட்ட பின் அதற்கான தற்காலிக அரசியல் மாற்றீடாக உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்த பூகோள அரசியல் பலத்தைக் குறிப்பிடுகிறது. இதற்கு உலகெங்கும் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து நிற்பது முக்கியமானது என்றும், தாயகத்தில் நிலப்பரப்புக்களை இழந்து உலகத்தமிழர்களின் மனங்கள் வெல்லப்பட்டுள்ள சூழலைப் பாதுகாத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

இதை விடுத்து, ஆதிக்க வலுச்சக்திகளின் அனுசரணையில் தங்கியிருக்கவேண்டும் என்ற நோக்கில் நாடு கடந்த அரசாங்கம் அமைவது என்ற கோட்பாட்டுரீதியான நிலைப்பாடு ஆழமான விமர்சனத்திற்குரியது என்று நோர்வே ஈழத்தமிழர் அவை குறிப்பிடுகிறது.

‘ஆதிக்க வலுச் சக்திகளுடனான இணைவுத் தன்மை’ குறித்து நாடு கடந்த அரசாங்க உருவாக்கத்திற்கான மதியுரைக்குழுவின் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலைப்பாடு குறித்த சில அடிப்படைக் கேள்விகளை தமிழர் அவை எழுப்பி அதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

சமூக ஆதார மட்டத்தில் (grass root level) சரியான முறையில் பற்றுக்கோடாக தேசிய நிலைப்பாடுடைய மக்களால் இறுகப் பற்றப்பட்டிருக்கும் தன்மை இல்லாதுவிடின் நாடுகடந்த அரசாங்கம் தவறான வழிநடத்தலுக்கும், பலவீனப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் அபாயம் உண்டென்பதைக் குறிப்பிடும் தமிழர் அவை, கட்டமைப்பு ரீதியாக சமூக ஆதார மட்டத்திற்கும் நாடுகடந்த அரசு என்ற நாடு கடந்த மட்டத்திற்கும் இடையேயான கட்டமைப்புகளுக்கிடையே, அதாவது மக்களவைகளுக்கும் நாடு கடந்த அரசாங்கத்திற்கும் இடையே இடைப் ப+ட்டுத் தன்மை (inter-locking mechanism) யாப்புரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் இருப்பது அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ஒருமைத்தன்மை (monolithic) அற்றதாக கட்டமைப்பு அமைக்கப்படுவதே நல்லது. உதாரணமாக, சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் போது அவை குறித்த அளவு பெரும்பான்மையான நாடளாவிய மக்களவைகளின் ஜனநாயக ரீதியான அங்கீகாரம் (ratification) பெறவேண்டும் என்பது போன்றதாக அமையலாம். அல்லது, சம்ஸ்டி முறையில் தேசிய மட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு சமஸ்டி அரசாங்கம் போல நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையலாம். இதைவிடவும், ஐரோப்பிய சமுகம் (EU) போல தலைமைத்துவம் (presidency) சுழற்சிமுறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் கையளிக்கப்படுவது போலவும் அமையலாம். இதற்கான பல வடிவங்களும் பரிமாணங்களும் உண்டு. இது குறித்த முறையான கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டு ஒரு சிறந்த கட்டமைப்புக்கான வடிவமைப்பு மேற்கொள்ளப்படுவது நாடு கடந்த அரசாங்கம் என்ற கோட்பாட்டை மேலும் வலுப்படுத்துவதோடு ஒற்றுமையையும் ஈழத்தமிழர் மத்தியில் வலுப்பட்டு பல நாடுகளிலும் எம்மவர் மத்தியில் திறமையுருவாக்கம் ஏற்படவும் வழிவகுக்கும்.

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பதோடு நின்றுவிடும் வழிகாட்டிக்கோட்பாடு, இலக்குக்கான மக்களாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதை சுயநிர்ணய உரிமை என்பதாக மட்டும் வெளிப்படுத்த முயல்கிறது, என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

அது மட்டுமன்றி தமிழ் இறைமையை சரணாகதியாக்காமல் 60 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கூர்ப்புரீதியாக எத்தனையோ படிகளைத் தாண்டி வந்த நிலையில், ஒரு பாரிய இன அழிப்புப் போரின் உச்சக்கட்டத்தைத் தாண்டிய நிலையில் மீண்டும் முதற்படி, அடுத்தபடி என்று ஒரு படிமுறை அணுகுமுறை பற்றி கொள்கை வகுப்பது குறைந்த பட்சத் தீர்வுகளை நாம் அங்கீகரிப்பது போலாகிவிடும் என்றும் குறிப்பிடுகிறது நோர்வே ஈழத்தமிழர் அவையின் அரசியல் விவகாரக் குழு.

“எமது தேசிய இலக்குக் குறித்து தமிழீழ மக்கள் ஜனநாயக ரீதியாக 33 வருடங்களுக்கு முன்னரே தமது பூரண சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தெளிவான முடிவொன்றை வகுத்துள்ளார்கள். சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதற்கே மக்களாணை வழங்கப்பட்டுள்ளது. அதை இன்று பல புலம் பெயர் நாடுகளில் எமது மக்கள் மீளுறுதிப் படுத்தியுள்ளார்கள். இந்தச் செயற்பாடானாது நாடு கடந்த அரசியலின் அடிப்படை.”

சுருங்கக்கூறின் நாடு கடந்த அரசாங்கத்திற்கான முதற்கட்டச் செயற்பாடு கடந்த வருடம் மே மாதம் 10ம் நாள் நோர்வேயில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீளுறுதிப்படுத்தலை முழுமையான ஜனநாயக முறையில் செய்த பொழுதே ஆரம்பமாகிவிட்டது. ஆனால், இந்த அடிப்படைகள் அறிக்கையில் சரியான முறையில் அங்கீகரிக்கப்படாதமை மிகுந்த கவலைக்குரியது என்றும் ஈழத்தமிழர் அவை குறிப்பிட்டுள்ளது.

“தமிழ்த் தேசிய இனம் என்பதன் வரையறை என்ன, ப+ரணமான சுயநிர்ணய உரிமை எந்த வகையில் அவர்களுக்கு உண்டு, தமிழ்த் தேசிய இனம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணத்துக்கு உபபிரிவான ஒரு மக்கள் குழுவுக்கு (தனிவேறான) சுயநிர்ணய உரிமை இருக்கிறதென்றால், அது எந்த வகையானது, அது எந்தவிதமான அடிப்படைகளில் சொல்லப்படுகிறது என்பது போன்ற விடயங்கள் வரைவிலக்கண ரீதியாகத் தெளிவுபடுத்தப்படவேண்டும்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன அழிப்பின் (genocide) 60 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறும், அதன் ஆழமான பரிமாணங்களும் சொல்லப்பட்டு, இன அழிப்பின் உச்சத்தில் இன்று நாம் நிற்பதைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய இன மேலாதிக்கமும் படிமுறையிலான சிங்களமயமாக்கலும் தமிழ் இன அழிப்பும் குறித்த தமிழ்த் தேசிய இனத்தின் பயம் எடுத்துக்காட்டப்படுவது அவசியம். தமிழ் இன அழிப்பு என்று நாம் எதை வரைவிலக்கணம் செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

குழுவாதப் போக்கு (sectarian politics) இல்லாமல் ஒற்றுமையைக் கொண்டுவரவேண்டுமாயின், அடிமட்ட சமூக ஆதார நிலையில் (grass root level) இருந்து எல்லாச் செயற்பாடுகளிலும் அனைத்து தரப்புகளும் சேர்ந்து இயங்கும் நிலையைத் தோற்றுவிக்கவேண்டும். இதற்கு கொள்கைரீதியான தேசிய நிலைப்பாடு அவசியம். இதையே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தியதன் மூலம் புகலிடத்தமிழர்கள் செய்திருக்கிறார்கள் என்ற கருத்தை ஈழத்தமிழர் அவை முன்வைக்கிறது.

இதுவரைகாலமும் ஈழத்தமிழரின் பெரும்பான்மையினர் ஒரு புகலிடச் சமுகமாக (diaspora) ஒன்றிணைந்து இயங்கியமைக்குத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த சக்தியின் ஒன்றிணைப்பு காரணமாயிருந்தது. இந்தச் சக்தியை குழுவாத அரசியலுக்குள் பிரித்துச் சிதைக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மனரீதியான தெளிவுநிலைக்குப் பக்குவப்படுத்தப்படவேண்டும். இதற்கான வேலைத் திட்டம் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னர் அவசியமாகிறது.

தேர்தலில் தெரிவாகும் பிரதிநிதிகள் ஒரு சேர ஓரிடத்தில் கூடி, முழுமையான ஜனநாயக ரீதியில் விவாதிக்கக்கூடிய சூழலை எவ்வகையில் உருவாக்கலாம் என்பது குறித்த வேலைத்திட்டமும் ஆலோசனைகளும் மிகவும் அடிப்படையானவை. தேர்தலை விரைவில் நடாத்துவதில் காட்டும் நாட்டத்தை விடவும் இந்த ஏற்பாட்டை ஒழுங்கு செய்வதிலேயே உடனடியான நடவடிக்கை அவசியம். ஏனெனில், தெரிவாகும் பிரதிநிதிகள் தொலைபேசி மூலமோ, அல்லது வேறு விதமான வகையில் ‘நியமிக்கப்பட்ட’ குழுக்கள் மூலமோ ‘நிர்வகிக்கப்படும்’ நிலைக்கு உள்ளாகாமல் சுதந்திரமான அமர்வுகளில் கருத்துப்பரிமாற்றம் செய்து, சகல விதமான வாதப் பிரதிவாதங்களையும் செவிமடுத்து, தீர்மானங்களை மேற்கொள்ளுவற்குத் தேவையான ஜனநாயகச் சூழல் கட்டமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படவேண்டும். அது சாத்தியமில்லையாயின் கையாளப்படக்கூடிய நிலைமைக்குத் தக்கதாக பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும். வளர்ச்சிப்போக்குக்கு ஏற்ப எதிர்வரும் காலங்களில் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வேறு சக்திகளில் தங்கியிராத வகையில் கட்டமைப்பை நடாத்துவதற்கான ‘நிதி மூலம்’ குறித்த நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவேண்டும். கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான நிதித்தேவைக்கு வேறு சக்திகளில் தங்கியிருக்கும் நிலையில் ஒரு ஜனநாயக மக்கள் கட்டமைப்பை நடாத்துவது உகந்ததல்ல. எனவே, இதற்கான வரையறையும் அவசியமாகிறது.

“சரியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவசரமான முன்னெடுப்புகள் இல்லாமல், நிதானமான முறையில், ஒற்றுமைக்கான அடித்தளம் இடப்படும் முறையில் நாடு கடந்த அரசின் ஆலோசனைக்குழுவின் இறுதி அறிக்கை அமையவேண்டும். அவ்வாறான நிலையிலேயே எமது ஆதரவை அதற்கு வழங்கமுடியும்,” என்று நோர்வே ஈழத்தமிழர் அவையின் அரசியல் விவகாரக்குழுவின் நிலைப்பாட்டை அதன் பிரதிநிதிகள் விளக்கியுள்ளனர்.

குறைபாடுகளும் சிபாரிசுகளுமே இங்கு அவசிய தேவை கருதி விபரிக்கப்பட்டாலும் நல்ல கருத்துக்களும் சிந்தனைகளும் மதியுரைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம், என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நோர்வே ஈழத்தமிழர் அவை-

Comments