முக்கோணப் போட்டிக்குள் சிக்கியதால் கூட்டமைப்பிற்குள் தோன்றியுள்ள குழப்பங்கள்

இலங்கையில் பொதுத்தேர்தல் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களினால் பெரும்பான்மைக் கட்சிகளும், சிறுபான்மை தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளை சந்தித்துள்ளன.

தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் போது உருவான எதிர்க்கட்சிக் கூட்டணி பிரிந்து போட்டியிட திட்டமிட்டுள்ள போதும் ஜே.வி.பியும், ஜெனரல் பொன்சேகாவும் இணைந்து போட்டியிடுவது என திட்டமிட்டுள்ளனர். அரசின் தடுப்புக்காவலில் இருந்தவாறே போட்டியிடவுள்ளார் ஜெனரல் பொன்சேகா. அரச தரப்பைப் பொறுத்தவரை எப்படியாவது 150 ஆசனங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் போன்ற வன்முறைகள் தென்னிலங்கையில் ஏற்படலாம் என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.

மறுபுறமாக தமிழர் தரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் கடந்த வாரம் பல வாதங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 2004 ஆம் ஆண்டு போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 11 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், பல புதிய உறுப்பினர்களை அவர்கள் தற்போதைய தேர்தலில் நிறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியம், தமிழ் மக்களின் உரிமைகளை அதிகம் நேசித்ததால் தாம் வெளியற்றப்பட்டுள்ளதாக வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூற்றுகளில் உண்மை இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துகளும் பிரதிபலிக்கின்றன. அதாவது, தமிழர் தாயகம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடும்போக்கை கொண்டுள்ளதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சினைக்கான தீர்வை காணமுடியாது என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமாக உள்ளதாகவும் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் நிலையும் அதுதான்.எனவே கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக தீவிரமாக உள்ளவர்களுக்கும், அதனை எதிர்ப்பவர்களுக்குமான மோதல்களின் வெளிப்பாடுகள் என்றால் அது மிகையõகாது.இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குள் மேற்கொண்ட மறுசீரமைப்புகள் போல அதன் கொள்கைகளையும் மறுசீரமைத்துள்ளதாகவே தகவல்கள் வெளிவருகின்றன. தமிழீழத்தை தாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என அதன் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்துகள் ஒருபுறம் இருக்க, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமாக அவர்கள் எதனை முன்வைக்கின்றனர் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவான திட்டத்தை இதுவரை முன்வைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தில் உள்ள சில மூத்த உறுப்பினர்கள் இந்தியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் ஆலோசனைகளுடன் சில திட்டங்களை வரைந்திருந்த போதும் அதனை கட்சி உறுப்பினர்களுக்கு கூட அவர்கள் காண்பிக்கவில்லை. அதனை அவர்கள் வெளியிடுவார்கள் என ஓராண்டுக்கு மேலாக பல உறுப்பினர்கள் காத்திருந்த போதும் அவர்கள் அதனை வெளியிடவில்லை. இலங்கை அரசின் அனைத்துக்கட்சிக் குழுவின் தீர்வுத்திட்டம் போலவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டமும் மறைக்கப்பட்டு வருவது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட யாழ். மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு காரணம் இந்தியாவின் நடவடிக்கைகள் தான் என்பது தெளிவானது. இந்திய அரசைப் பொறுத்தவரை யில் ஈழத்தமிழ் மக்களின் பேரம்பேசும் அரசியலை மழுங்கடித்து, அவர்களிடம் ஒரு அடிபணிவு அரசியலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கமைவாகவே தேசியத்திற்கு ஆதரவானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற வாதத்தை புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வைத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த இரு உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.அதாவது, தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவுகளை முற்றாக இல்லாது செய்துவிடவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் சமூகம் வலுவாக நம்புகின்றது. ஆனால், புலம்பெயர் தமிழ் சமூகம் என்பது 500 வருடங்களுக்கு முன்னர் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அல்லர், அவர்களில் பெரும்பாலானோர் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையை விட்டு வெளியேறியவர்கள்.

எனவே,தாயகத்து மக்களுடன் அவர்களின் உறவுகள் என்பது மிகவும் பலமான நிலையில் உள்ளன என்பதே யதார்த்தமானது. அவர்களை புறம்தள்ளுவதன் மூலம் தாயகத்து உறவுகளை அரசியல் ரீதியாக பிரித்துவிடலாம் என்பது நடைமுறையில் சாத்தியப்படப் போவதில்லை.மேலும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும், மேற்குலகத்திற்கும் இடையிலான உறவுகள் புதிய ஒரு நம்பிக்கையை தோற்றுவித்து வருகின்றது.

கடந்த புதன்கிழமை (24) பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைக்கர் டேவிட் மிலிபான்ட் உட்பட பெருமளவான பிரித்தானியாவின் தொழிற்கட்சி மற்றும் கொன்சேவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒரு புதிய திருப்பமாகவே கருதப்படுகின்றது. நான் முன்னர் குறிப்பிட்டது போல மேற்குலகம் சீனா இந்தியா என பிரிவடைந்துள்ள இந்துசமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கான போட்டியில் இலங்கையை சீனா முற்றாக தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் ஆளுமையை செலுத்துவதற்கு அடுத்த தெரிவாக உள்ள பலமான சக்தி, சிறுபான்மை தமிழ் சமூகம் தான்.

இந்த சமூகத்திற்குள் தமது ஆளுமைகளை செலுத்த மேற்குலம், இந்தியா என்ற சக்திகள் போட்டியிடுகின்றன. மேற்குலகம் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை வலுவாக பற்றிப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், நடுத்தெருவுக்கு வந்துள்ள இந்தியா தாயகத்து அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது. எனினும் தமிழ் சமூகம் இரண்டாக பிளவுபடும் நிலையை ஏற்படுத்த அனுமதிப்பது ஆபத்தானது. எனவே தாயகத்து அரசியலை புலம்பெயர் தமிழ் சமூகம் தனது நகர்வுகளுடன் இணைத்துக்கொள்வதே நீண்டகாலத்திற்கு அனுகூலமானது.

மறுவலமாக நோக்கினால் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தனது உறவுகளை பலப்படுத்திவரும் மேற்குலகம் இலங்கை மீதான அழுத்தங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான தனது ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அனைத்துலக நாணயநிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.6 பில்லியன் கடன் தொகையின் மூன்றாவது கொடுப்பனவை தாமதப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் வழங்கப்பட்ட இந்த கடன் தொகையை அனைத்துலக நாணயநிதியம் 8 தொகுதிகளான பிரித்து வழங்கத் திட்டமிட்டிருந்தது. அதற்கு பல நிபந்தனைகளையும் விதித்திருந்தது. இரண்டு தொகுதிகளை (650 மில்லியன் டொலர்கள்) வழங்கிய நிலையில் தற்போது அது தனது மூன்றாவது கொடுப்பனவை நிறுத்தியுள்ளது.இலங்கையில் அமைக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றம் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னரே அடுத்த கட்ட நிதி வழங்கப்படும் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்குலகத்தின் இந்த தொடர் நகர்வுகள் இலங்கையின் 40 பில்லியன் டொலர் பொருளாதரத்தை மட்டுமல்லாது, தென்னிலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த அழுத்தங்கள் இலங்கையில் இன நல்லிணக்க நிலையை கொண்டுவந்து, தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வுத் தீõவுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க உதவும் என மேற்குலகம் நம்புகின்றது.எனவே தான் இலங்கை அரசின் மீதான அழுத்தங்களுடன் மேற்குலகம் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஏற்படுத்திவரும் வலுவான உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

எனவேதான், தாயகத்து அரசியலை பொறுத்தவரையில், தேசியத்திற்கான ஆதரவை உறுதிப்படுத்துதல், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவுகளை ஒருங்கிணைத்தல், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான தீர்வை முன்வைத்தல், உலகின் முன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மிகவும் செயல்திறன் உள்ள முறையில் கொண்டு செல்லுதல் போன்றன தொடர்பில் தெளிவான கொள்கைகளை உடையவர்களை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் அரசியல் குறியீடாக ஆரம்பிக்கப் பட்ட கட்சி தான் எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் அதில் உள்ளவøரயிலும் தான் அது கூட்டமைப்பின் முன்னைய கொள்கைகளை பிரதிபலிக்க முடியும். ஆனால் தற்போது பல பிரி வினைகளை சந்தித்துள்ள நிலையில் அது முன்னைய கூட்டமைப்பின் கொள்கைகளை பிரதிபலிக்க முடியாது. கூட்டமைப்பு எவ்வாறு தன்னை மறுசீரமைத்துள்ளதோ அதனைப் போலவே தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஆதரவு என்ற தமது முன்னைய கொள்கைகளை மறுசீரமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது தொடர்பான விவாதங்களும், விமர்சனங்களுமே எதிர்வரும் 38 நாட்களும் சூடுபிடிக்கப் போகின்றன.

-வேல்ஸிலிருந்து அருஷ்-

Comments