தமிழராகிய நாம் எமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம்


அன்பான டென்மார்க் வாழ் தமிழ் மக்களே!

கடந்த 62 வருட அடிமை வாழ்வில் தமிழர்களாகிய நாம் சனநாயக ரீதியிலான போராட்டத்தினை மேற்கொண்ட வேளையில், அந்த வழியினை சிங்கள பௌத்த இனவாதம் வன்முறை மூலம் நசுக்கியதன் காரணமாக வேறு மாற்றுவழிகள் இல்லாததால் அடிமை விலங்கை உடைக்கவென முப்பது வருட கால ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் நடைமுறை தமிழீழ அரசொன்று உருவாக்கப்பட்டு நீதியானவொரு ஆட்சி நடைபெற்று வந்தது யாவருமறிந்ததே. அனைத்துலகத்தின் ஆசீர்வாதத்துடன் தமிழர்களின் தன்னாட்சியினை அழித்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உயிருடன் புதைகுழியில் மூடி தம் பலியெடுப்பினை முடித்ததோடு, பல இலட்சம் தமிழர்களை சிறைப்பிடித்தும் வைத்துள்ளார்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகள்.

தமிழ் சிங்கள தேசங்களிற்குள் மாத்திரம் அடக்கி வைக்கப்பட்டிருந்த எமது போராட்டம், குறிப்பாக ஆயுதப்போராட்டத்தின் பின்னர் படிப்படியாக அனைத்துலகமயப்படுத்தப்பட்டு இப்போது ஜ.நா வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. எமது ஆயுதப்போராட்ட காலத்தில் சனநாயக முறையில் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமே தமிழர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்றது அனைத்துலகம்.

அந்த சனநாயகத்தன்மையினையே முன்னிலைப்படுத்தி எமது மக்கள் 1977 இல் கொடுத்த ஆணையினை நாங்கள் மீணடுமொருமுறை சுதந்திரமாக நாம் வாழும் தேசத்திற்கு எடுத்துச்சொல்லும் நோக்குடன் 28.02.2010 அன்று மக்கள் வாக்கெடுப்பு டென்மார்க்கில் நடைபெறவுள்ளது.

இதில் எந்தக்கட்சி சார்பான அரசியலும் கலக்கப்படவில்லை. தமிழ் மக்களின் கருத்துகளிற்கே முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளது. தமிழராகிய நாம் எமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம் என்ற கருத்தினை நாம் அனைத்துலகிற்கு எடுத்துச்சொல்லும் நாளே 28.02.2010.தமிழர்கள் தமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றார்கள் என்பதை எடுத்துரைக்க இந்நாளில் அனைத்து டென்மார்க் வாழ் தமிழ் மக்களும் தமது வாக்குகளைப் பதிவு செய்வேண்டியது வரலாற்றின் தேவை என்பதை உணர்ந்து செயற்படுமாறு டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

இவ்வண்ணம்

பொன்.மகேஸ்வரன்

தலைவர்
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

Comments