எமது தொன்மையான கலைச் சொத்துக்களை பாதுகாக்கவேண்டிய காலத்தின் தேவையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோர் கைகளிலேயே..!

மகிழ்வூட்டுதல், ஆற்றுகைப்படுத்தல் எனபதற்கு அப்பால் மனித மனங்களைத் தொட்டுத் தூக்கி தாக்கத்தை, வலிமையை, நம்பிக்கையைத் தரக்கூடியது நாடகக்கலை. 1500களில் போர்த்துக்கேயர் எமது தாயகத்தில் கால்பதித்தபோது, தமிழின் மூத்த கலைவடிவமான கூத்துக்கலையைக் கையிலெடுத்தே எம்மவர்களின் மனங்களை ஊடுருவி தமது மதத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி, ஆட்சியையும் நிலை நிறுத்த முயன்றனர்.உலக அரங்கிலே தமிழை உயர்த்திக் காட்டக்கூடிய உயர்வான கலையும்,

எமது தேசியச் சொத்தான கூத்திசையை இன்றுவரை பாரம்பரியமாகவும், பரம்பரை பரம்பரையாகவும் பாடி ஆடிக்காத்துவரும் முத்தான கலைஞர்களுள் ஒருவரான குழந்தை செபமாலை அண்மையில் பாரிஸ் நகரம் வந்திருந்தார். கவிஞர், நாடக ஆசிரியர், நெறியாளர் கூத்திசைப் பாடகர் - ஆசிரியர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.கலாபூசணம், ஆளுநர், மற்றும் சாகித்திய விருது உட்பட்ட பல்வேறு விருதுகளையும், மேன்மைமிக்கோரினால் பாராட்டுக்களையும் ஈழத்தில் பெற்றுக்கொண்டவர்.அனுபவம் மிக்க கலைஞரின் எண்ணங்களை ‘ஈழுமுரசு' வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அவரைச் சந்தித்தோம்.இனி அவரோடு....

ஈழமுரசு:- சிறு பராயத்திலேயே நாடகக் கலையில் கால்பதித்த உங்கள் பின்புலம் பற்றி.... நீங்கள் கூத்திசையில் ஆழமாக வேரூன்றக் காரணமாக இருந்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

குழந்தை செபமாலை:- ஐயா! ஏழை என்மேல் மனம் இரங்காதா? என்ற பழைய பாடல் ஒன்றுடன் எனது ஐந்தாவது வயதில் நான் நாடகத்தில் நடிக்கத் தொடங்கியிருந்தாலும் கூத்திசை நடிப்பில் பங்கேற்றது எனது பதினைந்தாவது வயதில். மன்னார் மாதோட்டத்தில் முகம் தெரியாமல் மறைந்து போன எண்ணற்ற புலவர்கள், அண்ணாவிமார்கள் கூத்துக்கலையை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் எனது தகப்பனார் மரியான் செபஸ்ரியான், பெரியப்பா செபஸ்ரியன் சீமான் இருவரும் கூத்திசையில் தேர்ந்த அண்ணாவிமார்கள். எனது தாயாரும் பாடும் திறமை உள்ளவர். இவர்களோடு எனது துணைவியும், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் எனது பின்புலம்...

ஈழ:- 1960 களிலிருந்து இன்றுவரை கலைத்துறையில் அயராது செயலாற்றி வருகிறீர்கள். இது ஒரு கடினமான பணி. எப்படி உங்களால்...?

குழ:- நான் ஏற்கனவே கூறியபடி எனது குடும்ப உறவினர்கள் கலைத்திறனையும், ஊக்குவிப்பையும் தந்திருந்தாலும், தொடர்ந்து செயல்பட முருங்கன் மக்கள் தரும் ஒத்துழைப்பே மிக்க பலமாக இருந்து வருகிறது. 1964ல் தமிழையும், தமிழ்க்கலைகளையும் வளர்க்கும் நோக்கோடு ‘முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இந்த மன்றத்தினூடாக வெவ்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் கலை நிகழ்வுகளை நடாத்திவிட்டு திரும்பும்போது மக்கள் தந்த வரவேற்பும், மலர்ச்சியும் - மகிழ்ச்சியும் எங்களுக்குள் ஏற்படும் எல்லாக் களைப்புகளையும் நீக்கிவிடும். மேலும், நிரந்தர வருமானம் உள்ள பள்ளிக்கூட ஆசிரியனாக இருந்தமையும் ஒரு தந்தைக்குரிய பணியில் என்னைச் சோர்வடையாமல் பாதுகாத்தது. எனது பிள்ளைகள் இன்பன், ஆனந்தன் பிரான்சு நாட்டிற்கு வந்தபின்னர், எனது நாடகப்பணிக்கு, குறிப்பாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்திற்கு அவ்வப்போது தம்மால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர். இவைதான் இந்தக் கடினப் பணியில் என்னால் காலூன்றி நிற்க முடிகிறது. ஆனால் இன்று எல்லாமே...! (கண்களை மூடிக்கொள்கிறார்)

ஈழ:- கலைகள் யாவுமே அனுபவ உணர்வுகளின் தொகுப்பு. ‘மனித உழைப்பிலிருந்தே கலைகள் தோன்றுகின்றன' என்பது மார்க்கீசிய அறிஞர் ஜோர்ஜ் தொம்சனின் சிந்தனை வெளிப்பாடு. உங்களுடைய அனுபவங்களிலிருந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்...?

குழ:- நான் ஒரு நாடக ஆய்வாளனாக இல்லாவிட்டாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியன் என்ற வகையில், என்னுடைய கலை சார்ந்த உழைப்பை பரிசோதனைக்குட்படுத்தி, சிந்திப்பதுண்டு. அதன் வெளிப்பாடுதான் காலத்துக்குக் காலம் புதிய மாற்றங்களோடும், சிந்தனைகளோடும் பல்வேறு நெருக்கடிகள் மத்தியிலும் கலைப்படைப்புக்களை என்னால் கொண்டுவர முடிகிறது. எல்லோருக்கும் பொதுவான முறையில் இக்கூற்றினைப் பார்ப்பதென்றால் - போர்த்துக்கேயர் எமது தாயகத்தின் கரையோரப் பகுதிகளில்தான் முதலில் காலூன்றினார்கள். வந்தவர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதற்காகவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும் எமது கூத்துக் கலையை கையிலெடுத்தார்கள். அப்போது கரையோரங்களையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழ்ந்த உழைக்கும் மக்களைத்தான் அவர்களால் இலகுவாகக் கவர முடிந்தது. இன்றுவரை இந்த உழைக்கும் மக்களினால்தான் இக்கலைவடிவம் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனியும் அவர்களால் தொடர்ந்து இதனைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் இன்று எழுந்திருக்கிறது. எனவே பல வேறு கடமைப்பாடுகளுடன், புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களும் இளையோரும் இதனை கையிலெடுக்கவேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது என்பதே யதார்த்தம். இதனை இங்கே சொல்லியே ஆகவேண்டிய கடமைப்பாடு எனக்குமுள்ளது.

ஈழ:- உங்களுடைய பரிசோதனை முயற்சிகளில் கவனத்திற்குரியதாக எதனைக் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்?

குழ:- உங்களுக்குத் தெரியும் 70 கள் வரை ஏன் இன்றும் கூட நாடகங்களில் பெண்வேடமேற்று ஆண்களே நடிப்பார்கள். அதுவும் நாட்டுக் கூத்துக்களில்... வயதான ஆண்கள், பெண்கள் வேடம்போட்டு ஆடி நடிப்பதும், தடித்த குரலால் பாடுவதும்... ஒரு உயர்வான கலைக்கு பெரும் தடையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. 1964ல் அதில் மாற்றத்தைக் கொண்டுவந்தேன். முதல் முதலாக எனது சகோதரி எலிசபெத்தை நடிக்கவைத்தேன். அவரைத் தொடர்ந்து எனது உறவுமுறையில் செபஸ்ரியம்மா நடிக்க முன்வந்தார். அதன்பிறகு பெண்கள் தாமாகவே நடிக்க முன்வந்தார்கள். பெண்கள் நடிக்க வந்ததில் சிலரின் பிசுபிசுத்தல் இருந்தாலும் வெகுவான வரவேற்பிருந்தது. இந்த முன்னெடுப்பு கிராமங்களில் பெண்களைச் சுற்றிப் போடப்பட்டிருந்த பல தடைகளை அவர்கள் உடைத்துக்கொண்டு வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தது.

ஈழ:- தாயகத்தில் ஒவ்வொரு பிரதேசத்தினரும் தமக்கென்ற ஒரு தனித்துவமான கூத்துக்களை ஆடிவருகிறார்கள். மன்னார் மாதோட்டத்தில் எந்த வகையான கூத்துக்களை ஆடிவருகிறார்கள்?

குழ:- எமது தொன்மையான கூத்துக்களில் பல்வேறு வடிவங்கள் பற்றி இலக்கியங்களில் காணமுடிகிறது. ஈழத்தில் வடமோடி, தென்மோடி, காத்தான்கூத்து, வசந்தன் கூத்து இப்படிச் சிலவகையான கூத்துக்களே பலராலும் பேசப்பட்டும், பாடப்பட்டும் வருகின்றன. பொதுவாகப் பெரும்பாலும் யாழ்ப்பாணக்கரையோரப் பகுதிகளில் பாடப்பட்டு வருவது தென்மோடி என்றும், மட்டக்களப்பு பகுதிகளில் பாடப்பட்டு வருவது வடமோடி என்றுமெ கருதப்படுகிறது. வடமோடி, தென்மோடி பற்றிய சர்ச்சையும் இன்னமும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மன்னார்க் கூத்துக்களில் இந்த இரண்டு வகையான கூத்துக்களிலிருந்தும் சிறந்த ராகங்களை எடுத்துப் பயன்படுத்தினாலும் ஆட்டவகை உள்ள வடமோடி கூத்து முறைமையையே கூடுதலாகப் பாடி வருகிறோம். வங்காலைப் பகுதிகளில் சபை வரவுப் பாடல்களும் வேறு சில பாடல்களும் இவை இரண்டிலுமிருந்து வேறுபட்டதாய் இருக்கும். (பாடிக்காட்டுகிறார்) அதுபோல அண்மித்த சில கிராமங்களில் வேறுபட்ட ராகங்களையும் அசைவுகளையும் பார்த்திருக்கிறேன். 70 களில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் வடமோடி தென்மோடி உட்பட வேறு சில ராகங்களையும் பயன்படுத்தி நாட்டுக்கூத்தினை வேறொரு வடிவத்திற்கு பல்கலைக்கழக மட்டத்திற்கு எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் பாரம்பரிய வழிமுறையில் வந்த அண்ணாவிமார்களுக்கு அதில் பெரிய உடன்பாடு இருந்ததில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தை ஏற்கனவே எமது மன்னார் கூத்துக்களில் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

ஈழ:- கூத்துக்களில் மாற்றங்கள் தேவை என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறதே...?

குழ:- (சிரிக்கிறார்) கூத்துக்கலைகளில் மட்டுமல்ல,எல்லாக் கலைவடிவங்களிலும் காலத்துக்கேற்ப மாற்றங்கள் தேவையோ! தேவையில்லையோ அது விஞ்ஞான வளர்ச்சிக் கேற்ப மாற்றமடைந்துகொண்டுதானிருக்கும். இது தவிர்க்க முடியாதது. கூத்திசை வரையறுத்துச் சொல்ல முடியாத காலத்துக்கு முற்பட்டது. எனவே அந்தப் பழமையை அதனுடைய தனித்துவம் மாறாதபடி தேவைக்கேற்ப மாற்றங்களுடன் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதே எனது தாழ்மையான கருத்து.

ஈழ:- அத்தியாவசிய மாற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவது...?

குழ:- தொடர்ந்து இரண்டு இரவு அரங்கேற்றப்பட்ட கூத்துக்கள், பின்னர் ஒரு இரவுக்கூத்தாக மாற்றம் பெற்றது. 70 களுக்குப் பின்னர் இரண்டு மணி, ஒரு மணி நேரத்துக்கு சுருக்கப்பட்டு மக்கள் ரசனையை வெகுவாகப் பெற்றது. ஒலிவாங்கி வருவதற்கு முன்னர் பிற்பாட்டுப் பாடுவோர் பத்துப்பேருக்குக் குறையாமல் தேவைப்பட்டது. இப்போது ஓரிருவரே போதுமாகி உள்ளது. இப்படி அதன் தனித்துவம் குறையாத அவசியமான மாற்றங்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஈழ:- கால தேவைகளை ஒட்டிய சமகாலப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கலை, இலக்கியமே மக்களை இலகுவில் சென்றடையும்! ஆனால் இன்னமும் மிகப்பழமையான மதம் சார்ந்த கூத்துக்கள்தானே ஆடப்பட்டு வருகின்றன.!?

குழ:- பொதுவாக இன்றுவரை கரைஓரப்பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் வருடாந்த விழாக்களில் கூத்துக்களை அரங்கேற்றுவார்கள். அந்தத் தேவாலயத்தின் பெயர்கொண்ட புனிதரின் வரலாறாக இருக்கும். அந்தக் கூத்துக்களை அவர்கள் தமக்குரிய உரிமைச் சொத்தாகப் பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் கூத்தினுடைய பழமை மாறாமல் இருப்பதற்கு ஒரு வகையில் இது உதவுகிறது என்று ஏற்றுக்கொண்டாலும் அவற்றில் மாற்றம் தேவைதான். இந்தக் குறைபாடும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆயினும் அவ்வப்போது சில மாற்றங்கள் புதிய நாடக முயற்சிகளில் ஏற்பட்டிருக்கின்றன. 80 களில் இரண்டு, மூன்றுமணி நாடகங்களாக, சமகால பிரச்சனைகளைக்கொண்ட வரலாறுகளைப் பின்புலமாகக்கொண்ட நாடகங்கள் மேடையேறியுள்ளன. நவீன நாடக முயற்சிகளில் கூத்திசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் போர்க்காலச் சூழலில் பல எழுச்சி மிக்க நாடகங்களுக்கு கூத்திசையைப் பயன்படுத்தியுள்ளார்கள். எங்கள் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றமும் சமகாலப் பிரச்சனைகளைக்கொண்ட நாடகங்களில் கூத்திசையைப் பயன்படுத்தியிருக்கிறோம்... (ஒரு பாடலைப் பாடிக்காட்டுகிறார்)

ஈழ:- நீங்கள் குறிப்பிட்டது போல நாடகம் ஆற்றும் சமூகப் பணியில் மனித ஒருமைப்பாடு, குழு மனப்பாங்கு என்று அதனுடைய தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. உங்கள் அனுபவங்களினூடாக இதனைத் தெளிவுபடுத்துவீர்களா ?

குழ:- பெரிய நாடகங்கள், கலைவிழாக்கள் ஓரிரவுக் கூத்துக்கள் என்றால் முருங்கனைச் சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்போம். இதனால் அவர்களிடையே சந்திப்புக்கள் நட்பாக மாறி உறவு முறைகளாக விரிவடையும். இளையோரிடையே காதல் ஏற்பட்டு அவை திருமணங்கள் வரைபோய், சில கட்டுப்பாடுகள் தகர்ந்து போகும். குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைக் கூறுவதென்றால் முருங்கன் - ஆவணம், தேருடையான் இந்த மூன்று ஊர்களுக்கிடையே சிலகாலமாக ஒரு பகைமை இருந்து வந்தது. ஒரு நாடகத்தின் மூலம் அந்தப் பகைமை மறந்து உறவுகள் விரிந்தது, நான் கண்ட அனுபவ உண்மை. கலைஞர்கள் நினைத்தால் நாடகங்கள் மூலம் இப்போதுள்ள மனச்சோர்வுகளையும் களைய முடியும்.

ஈழ:- உங்கள் கலைப்பாதையில் மனதைப் பாதித்த விடயங்கள் என்று...?

குழ:- எந்தப் பாதையிலும் அவ்வப்போது சில நெருடல்கள் ஏற்படத்தான் செய்யும். ஒரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. மன்னார் மாதோட்டத்தில் குறிப்பாக வங்காலையை அண்மித்த கிராமங்களில் மிகச் சிறந்த புலவர்கள் அண்ணாவிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களால் எழுதப்பட்ட பல கூத்துக்கள் ஏட்டுச் சுவடிகளாய் இன்னமும் அவர்கள் வழிவந்த குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கூத்துக்கள் வெவ்வேறு வடிவங்களையும் கொண்டன. அவற்றினைப் பெற்று அச்சேற்றி நூல் வடிவமாக்குவதற்கு எமது மன்றம் எவ்வளவோ முயன்றும் அவர்களிடமிருந்து அவற்றினைப் பெறமுடியவில்லை. அவற்றினை அவர்கள் தமது பரம்பரைச் சொத்தாகக் கருதி தர மறுக்கிறார்கள். இப்படியாக பல அரிய கலைச் சொத்துக்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளது என்பது பெரும் வேதனைக்குரியது.

ஈழ:- நன்றி கலாபூசணம் குழந்தை செபமாலை அவர்களே! இதுவரை நேரமும் உடல் களைப்பையும் பாராமல் மிகுந்த உற்சாகத்துடன் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டீர்கள். புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்கள், இளையோர் கலை ஆர்வலர்கள் ஆகியோருக்கு நீங்கள் கூறவிரும்புவது...?

குழ:- இதுவரை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டவை அதிக பட்சமாக 90களுக்கு முற்பட்டவை என்பது உங்களுக்குப் புரியும். பின்னர் போர்ச் சூழலில் மக்களின் இடப்பெயர்வுகளும், துன்பங்களும், மன உளைச்சல்களும் பாதிப்புக்களும்... இந்தச் சுழ் நிலையிலும் கலைஞர்கள் மக்களை ஆற்றுகைப்படுத்தியிருக்கிறார்கள், மனங்களை வலுப்படுத்தியிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகள், இழப்புக்கள் இன்று எல்லோருக்கும் பொதுவாகிவிட்டன. எமது தொன்மையான கலைச் சொத்துக்களும் வெளிப்பாடுகள் இன்றி மங்கி மறைந்தவண்ணமாக மனங்களைச் சோர்வடையச் செய்கின்றன. எனவே பல்வேறு பணிகளுக்குமிடையில் எமது கலைச் சொத்துக்களையும் பாதுகாக்கவேண்டிய கடமை புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களிடமும், இளையோரிடமுமே தங்கியுள்ளது. இங்கு வந்து நான் பார்த்த போது அதனை அவர்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள் - செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சி ஊர் திரும்பியதும் எங்கள் உறவுகளோடு நிட்சயம் பகிர்ந்துகொள்வேன்.

(கண்களை ஒரு கணம் மூடித்திறந்து, என்னை நோக்கிய அந்தக் கலைஞரின் முகத்தில் மெல்லிதாய் ஒரு புன்னகை. ஆனால் அந்தச் சிரிப்பில் அவர் உள்ளத்தை வருடிக்கொண்டிருக்கும் ‘எல்லாவற்றையும் இழந்து விடுவோமா?' என்ற இனம் புரியாத வேதனையின் பதிவையே காணமுடிந்தது)

நன்றி: ஈழமுரசு

Comments