ஈழத்தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் நாடு கடந்த அரசின் இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் உடன் ஒரு சிறப்பு உரையாடல்


பெண்ணிய – உளவியல் ஆய்வாளரான பரணி கிருஸ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு கொண்ட ஆய்வாளர் குழு, நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் உடன் நடாத்திய சிறப்பு உரையாடல் கேள்வி பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

திரு வி. உருத்திரகுமாரனுடனான உரையாடல்:

கேள்வி : முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் பொறுப்பை கையிலெடுத்த செ. பத்மநாதன் அவர்கள் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்ததோடு அடுத்த கட்டமாக உங்கள் தலைமையில் நாடு கடந்த அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தார். பின்பு அவர் கைது செய்யப்பட்டததாகக் – கடத்தப்பட்டதாகப் பல கதைகள் சொல்லப்பட்டன. அவரைப் பற்றி வரும் செய்திகள் உண்மைதானா?

பதில்: திரு செ. பத்மநாதன் தலைவர் அவர்களால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 01.01.2009 அன்று முதல் நியமிக்கப்பட்டவர். இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம். இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிலங்கா ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது சிறிலங்காவின் ஓரு அரசியல் கைதி. சிறிலங்கா தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.

எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து விமர்சிப்பது சுலபம்.

திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப பொறுத்த வரையில், நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து விடுத்த முன்மொழிவில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயகவழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை (transparancey) முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கேபியோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.

இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி: தற்போதைய ஈழத்தமிழ் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முன்மொழிகிறார்கள். தனிமனிதர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாக அவை இருக்கின்றன. பேரழிவைச் சந்தித்து வாழ்விழந்து நடைப் பிணங்களாகியிருக்கும் எமது மக்கள் இவற்றைக் கண்டு மேலும் பீதியுற்றுருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்புற யதார்த்தத்தின் அடிப்படையில் உங்கள் நாடு கடந்த அரசின் முக்கியத்துவம் என்ன?

பதில்: புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புக்களும் குழுக்களும் உருவாகி செயற்பட்டாலும் அவற்றிலிருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கீழ்க்குறிப்பிட்ட பலபரிமாணங்களில் சிறப்புத்தன்மையும் வேறுபாடும் கொண்டதாகவே அமையும்.

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேசங்களின் ஆள்புல எல்லைகளினைக் கடந்த நிலையில் பொது தேசியஅடையாளத்தினை கொண்டிருக்கும் மக்கள் நேரடியாகவே சனநாயக பங்களிப்பினை நிகழ்த்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றது.

2. இது தேசங்களின் ஆள்புல புவியியல் எல்லைக்குள் உருவாக்கப்படும் அரசாங்கங்களுக்கு சமாந்தரமாக செயற்படும் நிறுவனமாக இருக்கும்.

3. ஈழத் தமிழர் தேசத்தினை ஒருங்கிணைத்து ஒரு வலுமையமாக உருப்பெற்று தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்பாக, நமது தேசத்தின் அரசியல்குரலாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வடிவம் பெறும்.

இதே வேளை, என்னைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் குறிக்கோள் ஒன்றுதான். இவை மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. ஆனால் அவற்றை அடையும்; மூலோபாயங்களில் தான் வித்தியாசம். வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே.

இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் (agree to disagree) இருந்தாலே போதுமானது.

ஆயினும் இத்தகைய ஒரு ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக இன்று தனிநபர் அவதூறு, அச்சுறுத்தல் போன்றவை இடம் பெற்று வருவது வருந்தத்தக்கதும் கண்டிக்கப்படவேண்டியதுமாகும். ஒரு உன்னத இலட்சியத்துக்காகப் போராடும் நாங்கள் அரசியல் நாகரிகம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லாதவர்களை மக்கள் புறம் தள்ள வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஏன் புலத்தில் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் – குறிப்பாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு செலுத்தும் அரசியற் செயற்பாட்டாளர்கள்- செயற்குழுக்களுடன் பேசவில்லை அல்லது பேசி ஒரு தீர்மானத்தை எட்ட முடியவில்லையா?

பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியைப் பொறுத்த வரையில் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசை தமிழீழத் தனியரசுதான் என்பதனை அடித்தளமாகக் கொண்டியங்குவதனால் நாம் தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பினை இதன் உருவாக்கக் காலத்தில் எமது செயற்திட்டத்தில் கொண்டிருக்கவில்லை. ஆயினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் உரிய நேரத்தில்,

அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறக்கூடிய வகையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை சுதந்திரத் தமிழீழம் தான் என்பதை நிறுவக்கூடிய வகையிலான சர்வதேச கண்காணிப்பிலான வாக்கெடுப்பினை நடத்தும் திட்டம் எம்மிடம் இருந்தது. இது 16.06.2009 அன்று வெளியிடப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தை அறிமுகப்படுத்தும் திட்ட முன்மொழிவிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்ட ஒரு சூழலில், ஈழத் தமிழர் தேசத்தின் ஒருமைப்பாடு கருதியும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடனும் இம் முயற்சிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இயங்கும் நாடுகளில் தமிழீழ வாக்கெடுப்பு நடத்தும் குழுக்களுடன் நாம் பேசிக் கதைத்து அவர்களது முயற்சி வெற்றிபெற எமது ஆதரவை வழங்குகிறோம். பிரித்தானியாவில் நாம் இதனைச் செய்துள்ளோம்.

கேள்வி: வட்டுக்கோட்டை தீர்மானம், நாடுகடந்த அரசு இரண்டுமே தமிழ் மக்களின் அரசியல் கட்டுமானம் சார்ந்தது என்று அவதானிகள் கருதுகிறார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கள் பல நாடுகளில் நடைபெற்று வெற்றியடைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளிலும் அதனை மேற்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனச் சொல்லப்படுகிறது. ஆனால் நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதான ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. நீங்கள் அவ்வாறு உணர்கின்றீர்களா?

பதில்: நாடு கடந்த தழிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியில் தேக்கநிலை எதுவும் ஏற்படவில்லை. இம் முயற்சி அதற்கேயுரிய படிமுறையில் வளர்ச்சியடைந்து செல்கிறது. நாடு கடந்த அரசாங்கம் என்பது ஒரு புதுமையான எண்ணக்கரு. இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்குச் சிறிது காலம் எடுக்கும்.

மக்களுக்கு இம் முயற்சி தொடர்பான விளக்கங்களை நாம் அளித்து வருகிறோம். மேலும் நாடு கடந்த அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என ஆராய்ந்து அதற்குரிய வழிமுறைகளை மதியுரைக்குழு தைத்திருநாளன்று பரிந்துரைத்துள்ளது.

இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துப்பரிமாற்றத்தினையும், அதற்குரிய கலந்துரையாடல்களையும் நாம் தற்போது நடத்தி வருகிறோம்.

மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் அறிக்கை முழுமையாக்கப்படும். அதன் பின்னர் இவ் அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும். நாடு கடந்த அரசாங்கத்தினை அமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களை நாம் சில நாடுகளில் உருவாக்கியுள்ளோம்.

ஏனைய நாடுகளிலும் இக் குழுக்கள் விரைவில் உருவாக்கப்பட்டுவிடும். இவ் உருவாக்கப்பணியில் தொண்டர்களாக இணைய விரும்புவர்கள் தமது பெயர்களைத் தற்போது பதிவு செய்து வருகிறார்கள். தம்மையும் இப் பணியில் இணைத்துக் கொள்ளக் கோரி நாளாந்தம் பலரிடமிருந்து எமக்கு மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ் வேலைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தையும் உருவாக்கியுள்ளோம்.

நாடு கடந்த தழிழீழ அரசாங்க உருவாக்கத்தை செயற்படுத்துவதற்கு நாம் வகுத்துள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை காலத்துக்கு காலம் மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நாம் ஆவன செய்வோம்.

கேள்வி: தமிழீழ தனியரசிற்கான மக்களாணை, நாடுதோறும் ஜனநாயக வாக்கெடுப்பின் மூலம் உருவாக்கப்படும் மக்கள் பேரவைகள், இவற்றின் தொடர்ச்சியாக இப்பேரவைகள் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசொன்றை உருவாக்குவது, கீழ் இருந்து மேல் நோக்கி நகரும் சரியான அரசியல் வழிமுறையென ஒருசாரார் கருதுகின்றனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள நடைமுறையுடன் நாம் உடன்படவில்லை. இத்தகைய முறையில் உருவாக்கப்படும் நிறுவனம் நாடு கடந்த நிலையில் ஒரு சம்மேளனமாக (federation) இருக்க முடியுமே தவிர ஒரு அரசாங்கத்திற்குரிய ஏற்புடமையைக் கொண்டிருக்க முடியாது.

நாங்கள் நாடு கடந்த அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் மக்களுக்கிடையேயிருந்து நேரடியாக, இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுவரென ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். ஏனெனில் இவ்வழிமுறை தான் மக்களுக்கு நாடு கடந்த அரசாங்கத்தில் கூடுதல் உரித்துரிமையைக் கொடுக்கும்.

அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் கூடுதல் ஏற்புடைமையைத் தரும். மேலும் எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றதோ அந்த நோக்கை நிறைவேற்றப் பொருத்தமானவர்கள் யார் என்பதை மக்கள் ஆராய்ந்து, அதற்குரியவர்களை மக்களே நேரடியாகத் தெரிவு செய்ய வாய்ப்பளித்தலே மக்களை மதிக்கும் ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்.

மக்கள் நேரடியாகத் தமது பிரதிநிதிகளை குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தாமே தெரிவு செய்தலை விடவும் கூடியதகுதி வாய்ந்த அடிமட்டப்பிரதிநித்துவம் (Grass root representation) வேறெதுவும் இருக்க முடியாது. ஆதலால் நாம் தற்போது முன்மொழிந்துள்ள திட்டம் சிறந்த அடிமட்டப்பிரதிநிதித்துவம் உடையது. சிலர் கூறுவது போல இது மேலிருந்து கீழே திணிக்கப்படுவதல்ல.

நீங்கள் கூறிய கருத்தைக் கொண்டவர்கள் கூட நேரடியாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தான் உத்தமமானது (ideal) என்றும் ஆயினும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் எழுதியுள்ளனர். எம்மைப் பொறுத்தவரையில் தற்போது நாம் செய்து வரும் வேலைகளின் அடிப்படையில் அது நடைமுறைச்சாத்தியமானது என நாம் கருதுகிறோம்.

கேள்வி: உலகில் எங்குமே பரீட்சித்துப்பார்க்கப்படாத புதிய அரசியல் வடிவம் இது என்று கூறுகிறார்கள், அந்நிலையில் அரசு குறித்த மக்களின் பொதுவான கருத்தியலோடு இது முரண்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லையா? யதாத்தத்திற்கும் அப்பால் தமிழீழம் உருவாக்கப்பட்டது என்ற மாயையை இது மக்கள் மனதில் உருவாக்காதா?

பதில்: புதுமையும், சாத்தியப்பாடுகள் நிறைந்ததும் இதுவரை எவரும் முன்வைக்காததுமான கோட்பாடுதான் நாடு கடந்த அரசாங்கம். நமது மக்கள் அரசியல் கூர் உணர்வு உள்ளவர்கள். பல்வேறு அரசியல் அமைப்புச் சட்டங்கள், யாப்புகள், விகிதாசாரப் பிரதிநிதித்துவம், சர்வசன வாக்கெடுப்பு போன்றனவற்றிற்கெல்லாம் இலங்கையிலே பழக்கப்பட்டவர்கள். ஒற்றை அரசு, கூட்டரசு, போன்றவையும் அவர்கள் கேள்விப்பட்டதுதான். மக்களைக் குறைத்து மதிப்பிடல் தவறானது.

நாடு கடந்த அரசாங்கம் என்ற எண்ணக்கரு புதியது என்றாலும் நாடு கடந்த வாழ்வு எமது மக்களுக்குப் புதிதல்ல. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மட்டும் உள்ளடங்கிவிடவில்லை. ஒரு நாட்டினைக் கடந்து பன்னாடுகளில் அவர்களது வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது.

அவர்களுடைய சமூக உறவும் ஒரு நாட்டில் மட்டும் இருக்கவில்லை. அவை நாடுகள் கடந்தளவில் இருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகள் ஒரு நாட்டுக்குள் மட்டும் இருக்கவில்லை. நாடுகள் கடந்தளவில் அவை ஒழுங்கமைக்கப்படுகின்றன. எமது அரசியல் எழுச்சி (political mobilization) ஒரு நாட்டில் மட்டும் அடங்கி இல்லாமல் நாடுகள் கடந்தளவில் இருக்கின்றன. நாடுகடந்த அரசாங்கம் இந்த அரசியல் எழுச்சியின் உச்சமாக அமையக்கூடியது (culmination of that political mobilization).

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இரண்டு தளங்களில் பணியாற்றும் என்று தெளிவாகத் தெரிவித்துள்ளோம். ஒரு தளம் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தளம். மற்றையது தமிழீழத்தில் வாழும் மக்கள் தளம். அந்தத் தளத்தில் அவர்களது சிந்தனை, செயல்பாடுகளோடு உணர்வொருமைப்பாட்டுடன் (solidarity) நாம் இயங்குவோம்.

நாடு கடந்த அரசாங்கம் எந்தவொரு மாயையையும் உருவாக்கப் போவதில்லை. சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதற்காக ஈழத் தமிழர் தேசம் உருவாக்கும் அரசியல், இராஜதந்திரப் பொறிமுறை இது என்பதை எமது மக்கள் நன்கு உணர்வார்கள். அதனை எவ்வாறு உருவாக்குவது என்பதை திட்ட வட்டமாக, யதார்த்தமாக, நெறிமுறைப்படி எமது அறிக்கையில் விளக்கியுள்ளோம்.

அரசியல் கோட்பாட்டுக்கு (Political theory) தமிழர்களாகிய நாம் வழங்கும் உயரிய பங்களிப்பு இது. இந்த வழிமுறையில் போராடுகின்ற வேறு பல தேசிய இனங்களுக்கும் இது முன்னுதாரணமாக அமையுமென நாம் நம்புகிறோம். வெற்றிகரமாக இதனைச் செயல்படுத்துவதில்தான் நமது எதிர்காலம் தங்கியுள்ளது.

கேள்வி: புதிய உலக ஒழுங்கில் புகலிட அரசு என்ற விடயம் வல்லரசுளின் பிராந்திய ஆதிக்க நிலைநிறுத்தலுக்கான துருப்புச்சீட்டாக (உதாரணம்-திபெத்து) மாறியுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற புதிய செயற்பாட்டு வடிவம் எத்தகைய தாக்கங்களை இலங்கை அரசியலில் உருவாக்க முடியும்?

பதில்: இக் கேள்விக்குரிய பதிலை நோக்குவதற்குமுன் நாம் புகலிட அரசாங்கத்திற்கும் (Government in exile) நாடு கடந்த அரசாங்கத்திற்குமிடையே ( Transnational Government) உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டை விட்டு தப்பி ஓடி வரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம்.

நாடு கடந்த அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் மக்களால் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுவது. இதற்குக் குறிப்பிடக்கூடிய முன்னுதாரணம் இது வரை அமையவில்லை. ஈழத் தமிழர் தேசம் இவ்விடயத்தில் உலக முன்னோடியாக அமைகிறது. மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ் அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது.

புகலிட அரசாங்கம் ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் ஆதரவுடன் இயங்குவதால் இவ்வாறு ஆதரவு வழங்கும் நாடுளின் நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டாக வேண்டிய நிலை புகலிட அரசாங்கத்தை அமைப்பவர்களுக்கு ஏற்படலாம். நாடு கடந்த அரசாங்கம் மக்களில் தங்கியிருக்கும் அமைப்பாக இருப்பதனால் எந்த ஒரு நாட்டினதும் துருப்புச்சீட்டாக இயங்க வேண்டிய நிலை ஏற்படாது.

இதே வேளை, சில புகலிட அரசாங்கங்கள் சுதந்திர நாட்டினை அமைக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாக பால்டிக் நாடுகள் அமைகின்றன. வல்லரசு நாடுகளின் நலன்களையும் தமது நலன்களையும் இணைய வைக்கமுடியுமென்ற சூழல் இந்த நாடுகளுக்கு ஏற்பட்டமை இதற்கு முக்கியமான காரணமாகும்.

நாமும் கூட சுதந்திரத் தமிழீழம் அமைப்பதென்ற எமது தேச நலன்களும் அனைத்துலக சமூகத்தின் அதிலும் குறிப்பாக பிராந்திய வல்லரசின் நலன்களும் என்றைக்குமே முரண்பட்டவையாக இருக்கும் எனக் கருத வேண்டியதில்லை. இவ் இரு நலன்களையும் ஒரே கோட்டில் இணைய வைக்கக்கூடிய சூழல் புவிசார் அரசியல் மாற்றங்களின் ஊடாக ஏற்படலாம்.

இவ்வாறு புவிசார் அரசியலில் ஏற்படும் மாற்றங்களை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் ஈழத் தமிழர் தேசத்திடம் இருக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வலுமையமாக வளர்ச்சியடையும் போது ஈழத் தமிழர் தேசம் இத் தகமையைப் பெற்றுக் கொண்டு விடும். சிறிலங்காவின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமையினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுவிடும்.

கேள்வி: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் சூழலில் விஞ்ஞான பூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் எந்தத் தரப்பாலும் ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படாத அவரது மரணம் குறித்த உங்கள் நிலையை விளக்க முடியுமா?

பதில்: சில விடயங்களில் எது உண்மை என்பது சரச்சைக்குள்ளாக்கப்படும் போது அதற்குரிய பதிலை காலம் தான் வரலாற்றில் பதிவு செய்கிறது. தலைவர் விடயத்திற்கும் இது பொருந்தும். எம்மைப் பொறுத்தவரை தலைவர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு சுதுமலைக் கூட்டத்தில் குறிப்பிட்டவாறு ”போராட்ட வடிவங்கள் மாறாலாம்; ஆனால் இலட்சியம் மாறாது” என்பதனை எங்கள் நெஞ்சங்களில் உறுதியாகப் பற்றிக் கொண்டு எமது பணியினைத் தொடர்கிறோம்.

மேலும், 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் தலைவர் அவர்கள் சுட்டிக் காட்டியது போன்று ’வரலாறு விட்ட வழியில் காலம் இடுகின்ற கட்டளைப்படி’ என்கின்ற சிந்தனையையும் உள்வாங்கிச் செயற்பட்டு வருகிறோம்.

கேள்வி: முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து சிங்கள மற்றும் தமிழ்த்தேசியத்திற்கெதிரான பல தீய சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கும்- ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளின் இருப்பை இல்லாமல் செய்யும் அரசியல் சொல்லாடல்களான Post conflict அல்லது Post LTTE என்ற கருத்துருவாக்கத்தை ஏற்றுக்கொண்ட அல்லது அதனை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் ஒரு செயல்வடிவம் தான் உங்கள் நாடுகடந்த அரசு என்ற விமர்சனம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் post-conflict அல்லது Post LTTE முயற்சி என ஒருபோதும் கூறவில்லை. எம்மைப் பொறுத்தவரை இம் முயற்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியே.

கேள்வி: வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வாக்கெடுப்புக்கள் சில நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மற்றைய நாடுகளிலும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து அந்தந்த நாட்டு தமிழர்களுக்கான தேசிய அவையை அமைக்கும் தேர்தலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவை மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருப்பதாகத் தெரியவருகிறது. நீங்களும் நாடு கடந்த அரசுக்கான தேர்தலை ஏப்ரலில் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறீர்கள்.

எமக்கு தெரிந்த வரையில் மக்களுக்கு இந்த இரு கட்டுமானங்களும் வேறு வேறானவை என்பது தெரியாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். கருத்தொற்றுமைக்கு வர முடியாமல் முரண்பட்டு கொண்டிருக்கம் உங்கள் மேல்மட்ட சிக்கல்களையும் முரண்பாடுகளையும் இந்த தேர்தல் அறிவிப்புக்களினூடாக மக்களுக்குள் இறக்க முற்படுவதாக நாங்கள் கருதுகிறோம். இரண்டு தேர்தல்களையும் ஒரு அமைப்பு வரையறைக்குள் ஏன் நடத்த முடியாது?

பதில்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவையும் தமிழீழ விடுதலை இலட்சியத்தினை வென்றடையும் நோக்குடன் ஒருங்கிணைந்து இயங்குவது அவசியம் என்றே நான் கருதுகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் இரு தனித்தனி அரசியல் அமைப்புக்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்தரீதியில் தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்கான நிறுவனமாக, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. நாமறிந்த வரையில் மக்கள் அவைகள், இதே இலக்கினைக் கொண்டவையாக, சில நாடுகளில்; நாடு சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, இவற்றுக்கான பிரதிநிதிகளை அந்தந்த நாட்டு மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உருவாக்கப் படுகின்றன.

இதனால் இவ்விரு அமைப்புக்களை உருவாக்குவதற்கென சில நாடுகளில் இரு நேரடித் தேர்தல்களை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. நாம் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து தெரிவித்து வருவது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை இவ் வருடம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே நாம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவெனில் இவ் இரு தேர்தல்களையும நடத்த வேண்டியுள்ள நாடுகளில் இவற்றை ஒரே நாளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்துவது நன்மையானது என்பதே. இது நடைமுறைச் சாத்தியமானதும் கூட.

தேர்தல் இவ்வாறு ஒழுங்கு செய்யப்படுமாயின் மக்கள் தங்கள் நாடுகளில் தேர்தல் நடைபெறும் நாளில் இவ் இரு அமைப்புக்களுக்குமான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கென ஒரு வாக்குச்சீட்டும் மக்கள் அவைக்கென இன்னுமொரு வாக்குச்சீட்டுமாக இரு வேறுபட்ட வாக்குச்சீட்டுகளில் மக்கள் வாக்களித்து, இரு வேறுபட்ட வாக்குப்பெட்டிகளில் அவற்றை இடக்கூடிய வகையில் இதனை ஒழுங்கு செய்யலாம்.

நோர்வேயில் மக்கள் அவைக்குத் தேர்தல் ஒழுங்கமைக்கப்பட்டபோதும் நாம் இதனை முன்மொழிந்தோம். இவ்வாறு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவோமாயின் கூடுதலான மக்கள் இதில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். மக்களிடையேயும் குழப்பங்கள் ஏற்படாது. தேர்தல்களில் செலவிடப்படும் மக்கள் பணத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

இரு தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் திட்டத்தினை நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம். இருந்தும் கனடாவில் மக்கள் அவைக்கான தேர்தல் மார்ச் 27 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரு வேறுபட்ட நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் மக்கள் அவைக்கும் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகிறது. தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. அவ்விரு தேர்தல்களையும் ஒரேநாளில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வாய்ப்புக்கள் இன்னும் உண்டு.

இதே வேளை, வெளிப்படையான அரசியல் முன்முயற்சிகளை முன்னெடுக்கும் நாம் மக்களை இருட்டினுள் வைத்திருக்க முடியாது. வைத்திருக்கவும் கூடாது. அவர்களே எமது முயற்சிகள் அனைத்திற்கும் உரிமையாளர்கள். எம்மைத் தட்டிக் கேட்டு எமது தவறுகளைச் சுட்டிக் காட்டி வழிநடத்த வேண்டியவர்கள் அவர்களே.

கேள்வி: சில தமிழ்த் தேசிய ஊடகங்கள் தமது ஊடக அறத்தை கடைப்பிடிக்காமல் பக்கச்சார்புடன் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் நீங்கள் அறிக்கை ஒன்றை விட்டிருந்தீர்கள். மே 19 இற்கு பிறகு நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்த்தேசிய ஊடக உலகத்தை இரண்டாகப் பிளவு படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: ஜனவரி மாதம் 20ம் திகதி ”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுக்க முன் வருக! அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் வேண்டாம்” என்ற தலைப்பில் நான் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தேன். இவ் அறிக்கையில் பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமெனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுமிடங்களில் இரு தரப்பினரது கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தேன்.

நான் இந்த அறிக்கையினை வெளியிட்டமைக்கு காரணம் உண்டு. ஒரு சில ஊடகங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியினை, அது தொடர்பான அறிக்கைகளை ஆரம்பம் முதல் இருட்டடிப்பு செய்து, இம் முயற்சி தொடர்பான தகவல்கள் மக்களிடம் சென்றடைவதனை தடுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்து விட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தைத்திருநாளன்று வெளியாகியவுடன் சில அபாண்டமான, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடத் தொடங்கியமையால் மக்களுக்கு உண்மைநிலையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டது.

எம்மைப் பொறுத்த வரையில் எமது உத்தியோகபூர்வ அறிக்கைகளை எமது ஊடகத் தொடர்புப்பட்டியலில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வருகிறோம். தமக்கும் எமது அறிக்கைகளை அனுப்பும்படி கோரும் எல்லா ஊடகங்களையும் எமது தொடர்புப்பட்டியலில் இணைத்தும் வருகிறோம். ஒரு சில ஊடகங்களைத் தவிர பெரும்பான்மையான ஊடகங்கள் எமது அறிக்கைகளைப் பிரசுரித்து வருகின்றன. பிரசுரிக்காது விடும் ஊடகங்களுக்கு நாம் அறிக்கைகளை அனுப்புவதை நிறுத்தி விடவில்லை.

தமிழ் ஊடக உலகம் தற்போது இரண்டாகப் பிளவுபட்டுளதா என்ற முடிவு நன்கு ஆராயந்து மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். புலம் பெயர் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் ஊடகங்கள் வெறுமனே செய்திகளை வெளியிடும் ஊடகங்களாக மட்டும் இல்லாமல் தேசியத்தையும் சுதந்திர உணர்வையும் பேணிக்காக்கும் தார்மீகக் கடப்பாட்டையும் இதற்குரிய நல்லெண்ணத்தையும் தம்மகத்தே கொண்டிருக்க வேண்டியவை.

இன்றைய காலகட்டத்தில், தமிழ்த் தேசியத்திற்கான ஊடகங்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் ஊடகங்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். என் போன்ற தமிழத்தேசிய சக்திகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் இருக்க வேண்டும். தமக்கு ஏதாவது கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை நேரடியாகவே கேட்டு அவர்களது கருத்தைப் பெற்றுத் தமது கேள்விகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஈழத் தமிழர் தேசத்தைப் பலப்படுத்தும் வகையில் இயங்க வேண்டும்.

இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு விடயம் யாதெனில் எமது அரசியல் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை, அரசியல் வழிமுறைகளை கொண்டிருப்பவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்காமல், அவர்களுக்குப் பட்டங்கள் சூட்டாமல் அவற்றை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளும்; அரசியல் நாகரீகத்தை நாம் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். மற்றும் தற்போதுள்ள சூழ்நிலையில் உண்மை ஒருவருடைய ஏகபோகம் அல்ல. மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு வேண்டும்.

கேள்வி: இந்த புதிய வருடத்தில்; அரசியல் மற்றும் இரஜதந்திர செயற்பாடுகளை தமிழ் மக்கள் முழுவேகத்துடன் மேற்கொள்ள வேணடும் என்ற கடமை எம்முன் உள்ளது. இந்த சமயத்தில் நாடுகடந்த அரசியல் கட்டமைப்பின் செயற்பாடுகள் எந்த கட்டத்தில் உள்ளது. அதன் அடுத்த நகர்வு என்ன?

பதில்: நான் முன்னர் குறிப்பிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கை மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் முழுமையாக்கப்பட்டு அதன்பின்னர் இவ் அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும்.

இதன் முதற் கட்டமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் நேரடித் தேர்தல்கள் மூலமாகத் தெரிவு செய்யப்படுவர். இதற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்காக நாடு தழுவியரீதியில் செயற்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. சிறிலங்கா பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அதே ஏப்ரல் மாதத்தில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடத்துவதே உலகிற்குத் தெளிவான ஒரு அரசியல் செய்தியைக் கூறும்.

இத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்பட்சத்தில் மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பேரவையின் முதலாவது கூட்டத்தைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதபை; போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

அடுத்த கட்டமாக இவ்வாறு கூட்டப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பைத் தயாரிக்கும். தயாரிக்கப்படும் யாப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தான் செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுக்கும். யாப்புத் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரையிலான காலப்பகுதியில் ஒரு இடைக்கால நிர்வாக ஏற்பாட்டின் ஊடாக உடனடியாகச் செய்யப்படவேண்டிய பணிகள் ஆரம்பிக்கப்படும்.

கேள்வி: எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகத்தின் வலுவான ஆதரவுகள் எமக்கு இன்றியமையாதது. சிறீலங்கா அரசிற்கு இணையாக நாமும் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், இந்த விடயத்தில் நாடுகடந்த அரசியற் குழுவின் நிலைப்பாடும் செயற்பாடுகளும் என்ன?

பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும் முதன்மை நோக்கங்களில் ஒன்று அனைத்துலக சமூகத்தினை எமது பக்கம் வென்றெடுத்தலாகும். நலன்கள் என்ற அச்சில் இயங்கும் உலக ஒழுங்கில் இது ஒரு இலகுவான விடயமாக இருக்க மாட்டாது. இன்றைய உலக ஒழுங்கு அரசுகளுக்குச் சார்பானது.

இதனால் அரசு ஒன்று அற்ற தேசிய இனமாக இருக்கும் ஈழத் தமிழர் தேசம் தனக்குச் சார்பாக அனைத்துலக சமூகத்தினை வென்றெடுப்பது மிகவும் சவால் மிகுந்த பணியாகவே இருக்கும. எமது நலன்களையும் அனைத்துலக சமூகத்தின் நலன்களையும் ஒரே கோட்டில் இணைய வைக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கண்டறிந்து நாம் செயற்படவேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக மாற்றுவது இதற்கு அவசியமானது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இராசதந்திர அலகாக செயற்படுவதற்கென வெளிநாட்டுறவுகள் பிரிவு ஒன்றினை உருவாக்கி அதனூடாக பொருத்தமான பணிகள் யாவற்றினையும் ஒருங்கிணைக்கவேண்டும்.

இவ் வெளிநாட்டுறவுகள் பிரிவு பொருத்தமாக வழிமுறைகளுடாக சர்வதேச கட்டமைப்புக்களுடனும் நாடுகளின் அரசாங்கங்களுடனும் உறவுகளை ஏற்படுத்துவதுடன் அவர்களின் ஆதரவினை – ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையினை சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் ஊடாக வென்றெடுப்பதற்கான சூழலினையும் கட்டியெழுப்பவேண்டும். நாம் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்கும் போது, ஜனநாயக வழிமுறைக்கூடாக ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசையான சுதந்திரத் தமிழீழம் என்ற தெரிவினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்களுக்கு வழிபிறக்கும்.

மேலும் தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை (Genocide) இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ளது. எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிருபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு (Self defence) தற்காப்பு (Self preservation) ஆகியவற்றின் அடிப்படையிலும் சுதந்நிர தமிழீழத்தை ஈடுசெய் நடவடிக்கையாக (remedial measure) ஆக அமைக்க வாய்ப்புண்டு.

கேள்வி: தற்போதைய உலக ஒழுங்கில் பூகோள அரசியல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலையை தமிழ் சமூகம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்புக்கள் உள்ளனவா?

பதில்: நிச்சயமாக. சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்பதற்கு இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் எழுந்துள்ள, எதிர்காலத்தில் மேலும் வலுவடையக்கூடிய புவிசார் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கும் என்றே நாம் கருதுகிறோம். இது குறித்து எமது அறிக்கையின் 6.6 பகுதியில் எடுத்துக் கூறியுள்ளோம்.

கேள்வி: அரசியல் நடவடிக்கைகள் தவிர்ந்து மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் நாடுகடந்த அரசின் பங்களிப்பும், திட்டங்களும் என்ன?

பதில்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கக்கூடிய மனிதாபிமான மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பான சில விடயங்கள் எமது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பாக எமது அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது. ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மற்றுமோர் முக்கிய பணியாக ஈழத்தமிழரின் தாயகத்தில் வாழுகின்ற மக்களின் அடிப்படை மனித உரிமைகளினைப் பாதுகாப்பதும் இன, மத, பண்பாட்டு அடையாளங்களுக்கு அப்பால் நின்று அவற்றினை உத்தரவாதப்படுத்தி செழுமைப்படுத்துவதுமாகும்.

தேசங்களின் ஆள்புல எல்லைகளினைக் கடந்ததாக கட்டியெழுப்பப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்குரிய எல்லைகள் கடந்த சிறப்புநிலையினைப் பயன்படுத்தி சர்வதேச பரப்பளவிலும் தேசியங்களினைக் கடந்தநிலையிலும் மனிதஉரிமைகள் பாதுகாக்கப்படுவதனை உறுதிசெய்வதற்காக செயற்படும்.

இப்பணிகளில் உலகந்தழுவிய அளவில் செயற்படுவதற்காக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக்கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் செயற்படும் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளினை குறிப்பாக இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளினைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைக்கும்.”

இவ் விடயம் தொடர்பான விரிவான திட்டங்களை நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் உருவாக்கிச் செயற்படவேண்டும். ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவுக்குரிய மதியுரைக்குழுவும் திட்ட அறிக்கையினைத் தயார் செய்த காலத்தில் மனிதாபிமான மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிறீலங்கா அரசால் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் – குறிப்பாக சிறுவர்களின் நலன் பேணும் திட்டங்களை தனது விசேட செயற்பாடாக மதியுரைக்குழு கொண்டிருந்தது. வதைமுகாம்களுக்கு நிகராகக் கருதப்படக்;கூடிய முறையில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 280,000 மேற்பட்ட மக்களின் நலன் மதியுரைக்குழுவின் விசேட கவனத்திற்குட்பட்டிருந்தது.

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களது பெயர், வயது, பால் விபரங்கள், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களின் விபரங்கள் போன்றவற்றைத் திரட்டிச் சேகரித்து மதியுரைக்குழு ஆவணப்படுத்தியது. இவ் விபரங்கள் முகாம்களில் இச் சிறுவர்கள் நலன் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு அவர்களின் நலன் பேணப்படுவதற்கும், பட்டினி மூலமும் புறக்கணிப்பாலும் இச் சிறுவர்கள் சிறிலங்கா அரசால் துன்பப்படுத்தப்படாமல் கண்காணிக்கப்படவும் உதவும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட சிறுவர்களின் பெயர்ப்பட்டியல் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் விடயம் தொடர்பாக ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனும் போராளிகளுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும் காலம்வரை மேற்கொள்வதற்கும் மதியுரைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் குடும்பத்தினர் அவர்களைப் போய்ப்பார்க்கவும் சட்டவாளர்களின் உதவி பெறவும் வசதியேற்படும். தடுத்து வைக்கப்பட்டுள்ளோரினது விடுதலைக்காக செயற்படுவதற்கும் மதியுரைக்குழு தமக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் இக் காலப்பகுதியில் பயன்படுத்தும்.

கேள்வி: சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலகத்தின் அழுத்தங்களை கொண்டுவர நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

பதில்: ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்குரிய உலகந்தழுவிய செயற்பாட்டுத் தளத்தினைப் பயன்படுத்தி இலங்கைத்தீவினுள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தினுள் சிறீலங்காவின் ஆட்சியாளரால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்களினையும் யுத்தக்குற்றங்களினையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களினையும், இனப் படுகொலைக்கான குற்றங்களையும் வெளிக்கொணருவதோடு அதற்குப்பொறுப்பானவர்களினை நீதியின்முன் நிறுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அத்தகைய துன்பியல் நிகழ்வுகளும் கொடுமைகளும் நிகழாமல் இருப்பதனையும் அது தொடர்பில் சட்டமுறையான அரசுக்கு இருக்கக்கூடிய கடப்பாட்டினுள் சிறீலங்கா அரசு கட்டுப்படுத்தப்படுவதனையும் உறுதிசெய்யும்.” என எமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

சிங்களத்தின் இனஅழிப்பு நடவடிக்கைகளை, போர்க்குற்றங்களை, மனிதத்துக்கு எதிரான குற்றங்களை பன்னாட்டு நிறுவனங்களிலும்; நாம் வாழும் நாடுகளில் உள்ள உள்நாட்டு நீதிமன்றங்களிலும் பொதுமையான நியாயாதிக்க (universal jurisdiction) அடிப்படையில் விசாரணைகள், வழக்குகளைக் கொண்டுவர நாம் அந் நாட்டு அரசியல் தலைமைகளுடனும் சட்ட மா திணைக்களங்களுடனும் முயற்சிகளை அழுத்தங்களைக் மேற்கொள்ள வேண்டும். மேலும் இக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது ஈடுபட்டவர்களது சொத்துக்கள் அந் நாடுகளில் இருக்கும் பட்சத்தில் நாம் குடிசார் (civil) வழக்குகளை கொண்டுவரலாம்.

இதற்கு அந்நாட்டு சட்ட மா திணைக்களங்களின் அனுமதி தேவையில்லை. ஒரு இராஜதந்திரியுடன் பேசும் போது ”போர்க்குற்ற விசாரணைகளும், அது தொடர்பான சட்ட விளைவுகளும் தமிழத் தேசியப் பிரச்சனை தொடர்பாக சர்வதேச நிலைப்பாட்டை மாற்றும் தகமையைக் கொண்டவை” எனக் கூறியிருந்தார்.

எனினும் அனைத்துலக அரங்கில் சக்தி வாய்ந்த அரசுகளின் நலன்களும் விருப்பங்களும் இத்தகைய போர்க்குற்ற விசாரணை முயற்சிகளைத் தீர்மானிப்பதில் நடைமுறையில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன என்பதனையும் இங்கு நாம் கவனத்திற் கொண்டு தானாகவேண்டும்.

உருவாக்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ் விடயம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களை வகுத்து உலகத் தமிழர் சமூக மற்றும் அனைத்துலக சமூக நிறுவனங்களுடன் இணைந்து சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டினுள் நிறுத்த முயல வேண்டும்.

Comments