சிறிலங்கா அரசு என்ற மாயையும், தமிழர் தலைமையின் வரலாற்றுக் கடமையும்


தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்ட, வரலாற்று அடிப்படைகள் எவை? - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில், அரசியல்வாதிகளாயினும் சரி, சாமான்யராயினும் சரி, ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவை, என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர்.

சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும், இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்கைகளுக்கு ஊடாகவே நிகழ்ந்திருந்தன. சிங்களவர்களைப் போல தமிழர்கள் இறைமையை மீளப் பெறவில்லையாயினும், அண்மைக்காலத்தில் ஒரு மெய்நடப்பு அரசு மூலம் அதை நிரூபித்திருக்கிறார்கள். நேர்மையற்ற ஒரு யுத்தத்திற்குப் பிறகு தமிழர் இறைமையைச் சரணாகதி செய்வது மட்டுமல்ல, அச் சரணாகதியை வாக்குகளாலும் உறுதிப்படுத்தமுயலும் வரலாற்றுத் தவறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வேறெந்த தமிழர் அரசியற் தலைமையோ செய்துவிடக்கூடாது, என்று அவர் மேலும் எழுதுகிறார்.

மேற்கொண்டு தமிழ்நெற் அரசியற் கருத்தாய்வாளர் கூறுபவை:

கோட்டை அரசு, 1598 மல்வானை உடன்படிக்கை மூலம் தனது இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்தது போலவும், கண்டி அரசு 1815 உடன்படிக்கை மூலம் இறைமையை பிரித்தானியரிடம் இழந்தது போலவுமே, 1616 இல் யாழ்ப்பாண அரசு தனது இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தது. இதை பெப்ரவரி 15ம் நாளன்று டெய்லி மிரர் பத்திரிகையில் புத்துணர்வுதரும் வரலாற்று அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார் அந்தோனி ஹென்ஸ்மன்.

"நல்லூர் உடன்படிக்கையின்போது, அப்போது போர்த்துக்கலின் அரசராக இருந்த ஸ்பானிய அரசர் ஒரு பக்கமாகவும், மறுபக்கம் யாழ்ப்பாண அரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரமுகர்களும் இருந்திருந்தார்கள் என்பது இங்கு அவதானிக்கப்படவேண்டியது. யாழ்ப்பாண அரசானது, சுதந்திரத்துடன் இருந்த, சட்டபூர்வமான, அரசியற் செயலாட்சியில் வேற்று நாட்டால் அங்கீகிரிக்கப்பட்ட - இறைமையுள்ள ஓர் அரசாக இருந்திருந்தது என்பது இவ் உடன்படிக்கையால் தெரியவருகிறது.

யாழ்ப்பாண அரசுடனான இவ் உடன்படிக்கையில் 'சிலோன்' என்ற பதமோ, 'லங்கா' என்ற பதமோ அல்லது வேறெந்தப் பதங்களோ இந்த அரசை விவரிப்பதற்கு இருந்திருக்கவில்லை" என்கிறார் ஹென்ஸ்மன். தமிழர்களின் இராணுவ வலிமையை நசுக்கிய பிறகு, தூக்கிப்பிடிக்கப்படக்கூடிய தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்றை அச்சுறுத்தி, மறுபடியும் தமிழர் இறைமையை சட்டபூர்வமாகச் சரணாகதியடையச் செய்வது - இப்பொழுது இதை கொழும்பு நிர்வாகத்திடம் சரணடையச்செய்வதுதான்- கொழும்பும் புதுடெல்லியும் வேறு சில ஆதிக்கசக்திகளும் தற்போது மேற்கொண்டுவரும் கொடிய முயற்சி. தமது தன்னலத்தேட்ட நலன்களை மேலும் வளர்ப்பதற்கு இதுவே வசதியானது என்று அணிதிரண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள். இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறெந்த ஈழத்தமிழ்த் தலைமையோ இறைமையைத் தாரைவார்த்து அதை வாக்கெடுப்பிலும் நிரூபிக்கும் வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது.

இன்றுள்ள நிலையில், உள்ளதற்குள் நல்லதென்று நினைக்கும் அரசியற்கட்சிக்கு வாக்களிக்கும்போது, அந்த வாக்கு உண்மையில் இறைமையின் நிரந்தரச் சரணாகதியை உறுதிப்படுத்துகிறது என்பதை அப்பாவிப் பொதுமக்கள் அறிந்திருக்கப்போவதில்லை. மக்கள் சிறைப்பட்டு, அவர்களது நிலங்கள் ஆயுதப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்லமுடியாமல் சட்டயாப்பால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவசரத்துடன் திணிக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தலின் இரகசியம் என்ன என்பது கவனமாக விளங்கிக்கொள்ளப்படவேண்டியது.

சாதாரண மக்களுக்கு விளங்காமற்போனாலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழர் மத்தியிலிருக்கும் 'உயர்குழாத்தோருக்குமாவது' விளங்கியிருக்கவேண்டும். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தியதென்பதை சிலர் பழித்துக்கூறுவதுபோல 'வெற்றுக்கோசம்' என்றோ அல்லது ஏதோ ஒரு 'குழுவினர்' அதிகாரத்தைத் திரும்பப் பிடிக்கும், பணவசூல் செய்யும் முயற்சிகள்தான் என்றோ கொச்சைப்படுத்திவிடமுடியாது. பிரபாகரனின் விடுதலைப்புலிகளிடம் இருந்து பறித்தெடுக்க முடியாததை, இன்று களத்தில் இறங்கியிருக்கும் தமிழர் அரசியற் தலைமைகளிடமிருந்து பறித்தெடுத்துவிடுவதே ஆதிக்கக்குழுவினரின் இப்போதைய முயற்சி.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் இராணுவபல தன்னம்பிக்கையுடன் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்திருக்கக்கூடிய இறைமை குறித்த அரசியற் பரிசோதனைகளை தற்பொழுது செய்வது தமிழர்களுக்கும் அவர்களது அரசியற்தலைமைகளுக்கும் கட்டுபடியாகாதது. இறைமையை நிலைநிறுத்தும் முயற்சியால் சிங்களவர்களைக் கோபப்படுத்துவது உசிதமல்ல என்றும் இன - இணக்கப்பாட்டைக் குழப்பக்கூடாது என்றும் உலகியலறியாத சில தமிழர்கள் நினைக்கிறார்கள்.

இப்போதைக்கு இறைமையைத் தாரைவார்ப்பது அரசியல் மதிநுட்பம் என்றும், பின்னால் அதைப் 'படிப்படியாகப்' பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள் - அவ்வாறு நினைக்கும்படி உள்நோக்கம் கொண்ட சர்வதேச அரசியல் முகவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டும் இருக்கிறார்கள். சிங்களவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதன் மூலம் இவர்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக்கொள்கிறார்கள். பின்னால் இறைமையைக் கேட்பதற்கான எந்தச் சுவட்டையும் சிங்கள அரசு விட்டுவைத்திருக்கப்போவதில்லை.

மேற்குலகின் ஆதரவைப் பெறவேண்டுமானால் இறைமையைக் கைவிட்டுவிட்டு பிற அரசியற் சலுகைகளைக் கேளுங்கள் என்று எளிதில் நம்பிவிடும் சில தமிழர்களுக்கு மேற்குலகின் இராஜதந்திரிகளும் உளவுநிறுவனங்களின் முகவர்களும் இப்போது எடுப்புக்கதை சொல்லிவருகிறார்கள். பறித்த தமிழர் இறைமையை அதற்கு உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்காதவர்களின் பரம்பரையினர் இவர்கள்.

தமிழர்களுக்கு எதையும் கொடுக்க நினைப்பவர்கள் ஒருபொழுதும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தீவில், எந்தத் தீர்வையாவது நடைமுறைப்படுத்தும் ஆற்றலை முதலில் நிரூபித்துவிட்டு எங்களிடம் உங்கள் ஆலோசனைகளை சொல்லவாருங்கள் என்று இவர்களிடம் தமிழர்கள் எந்த நயநுணுக்கமும் பாராமல் முகத்துக்கு நேரே சொல்லவேண்டும். கவலைதரும் நெருக்கடி உருவாகாமல் எந்த விவகாரமும் சர்வதேசத் தீர்ப்பைக் கோரி வரப்போவதில்லை.

காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த பல நாடுகளின் சிக்கல்கள் நெருக்கடி நிலைக்குப் போகாததால் வெளியுலக நடுவத்திற்கு வரும் தேவை இருக்கவில்லை. ஆனால், இலங்கைத் தீவின் நெருக்கடியானது இங்கு தேச உருவாக்கத்தின் மிக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி, இனவழிப்புவரை போயிருக்கும் விடயம். இனவழிப்பை உறுதிப்படுத்தும் அறிகுறிகளையே இப்பொழுதும் காண்கின்றோம். இதற்கு சர்வதேசக் கட்டமைப்பின் பதில்தான் என்ன? முழு உலகும் தனது கடமையில் மிக மோசமாகத் தோற்றுப்போன பின்னர் இறைமையை மீளக்கேட்பது ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமை.

கோட்டை அரசையும் யாழ்ப்பாண அரசையும் போர்த்துக்கேயர் தனித்தனியாகவே ஆண்டார்கள். 1618 இற்கும் 1658 இற்கும் இடையில் இந்த ஆள்புலங்களுக்கான வரவுசெலவுத் திட்டம், வரவுசெலவு அறிக்கைகள் போன்றவை தனித்தனியான அறிக்கைகளாகவே லிஸ்பனின் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுவந்தன, என்று எழுதுகிறார் அந்தோனி ஹென்ஸ்மன். 1658 இல் ஆள்புலங்கள் போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தரிடம் கையளிக்கப்பட்டபோது, இந்த இரண்டு ஆள்புலங்களும் தனித்தனியாக விவரிக்கப்பட்டு இரண்டு தனிவேறான ஆவணங்களின் மூலமே கைமாறியிருந்தன.

1803 ஆம் ஆண்டு ஏமியன்ஸ் உடன்படிக்கையின் படி ஒல்லாந்தரிடமிருந்து சட்டபூர்வமாக இந்த ஆள்புலங்களை பிரித்தானியர் பெற்றபோதும் அவை தனித்தனியாக விவரிக்கப்பட்டு தனிவேறான ஆவணங்களின் ஊடாகத்தான் கைமாறியிருந்தன. இந்தக் கையளிப்புகளில் ஆள்புலங்களைக் குறிப்பிடுவதற்கு 'சிலோன்', 'லங்கா' போன்ற சொற்களோ அல்லது வேறு பொதுவான சொற்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான சொற்கள் வெறும் புவியியல் அடிப்படையிலேயே உபயோகிக்கப்பட்டிருந்தன - இவை ஹென்ஸ்மன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள்.

வரலாற்றின் திருப்புமுனை 1832 ஆக இருந்தது என்கிறார் ஹென்ஸ்மன். இந்த ஆண்டிலேயே தமது காலனித்துவ நலன்களுக்காக பிரித்தானியர் இலங்கைத் தீவிற்கான ஒரு சட்டநிரூபண சபையை அறிமுகப்படுத்தி, கொழும்பைத் தலைநகராக்கி, 'ஒற்றையாட்சி' அரசையும் நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். இந்தக் கட்டமைப்பு அவர்களுடைய வழிவந்த 'பழுப்புநிறத் துரைகளிடம்' 1947 இல் கையளிக்கப்பட்டது. தாம் உருவாக்கிய கட்டமைப்பு நீடிக்கவேண்டும் என்பதும் அதற்கூடாக இந்தத் தீவில் தமது பாரிய மூலதன முதலீடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்களாக இருந்தன என்று கூறி, சிக்கலின் அடியாழத்தைத் தொட்டுக்காட்டுகிறார் ஹென்ஸ்மன்.

மல்வானை, நல்லூர், கண்டி உடன்படிக்கைகளின் மூல ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில் இருந்துதான் நேர்மையான அறிஞர்களின் வரலாற்று, அரசியல் ஆய்வுகள் ஆரம்பமாகவேண்டும். இவற்றின் பிரதிகள் கொழும்பு ஆவணசாலையில் இல்லாவிட்டால் லிஸ்பனிலும், ஹேக்கிலும், இலண்டனிலும் உள்ள ஆவணசாலைகளிலாவது இருக்கக்கூடும் என்கிறார் ஹென்ஸ்மன்.

பல தசாப்தங்களாகவே கொழும்பு ஆவணக்காப்பகத்தில் தமிழ் அதிகாரிகள் எவரும் இல்லை. கோவாவில் இருக்கும் போர்த்துக்கேய ஆவணக்காப்பகத்தில் யாழ்ப்பாணப் பிரதானிகளுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலான உடன்படிக்கை ஆவணம் ஒன்று இருப்பதாக ஆவணக்காப்பகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி ஷிரோட்கர் சொல்லக் கேட்டிருக்கிறார் ஒரு தமிழ்க் கல்வியாளர். ஐரோப்பிய தலைநகரங்களின் ஆவணக்காப்பகங்களில் ஆய்வுசெய்வதற்கு வழிவகையுள்ள தமிழ் அறிஞர்கள் இத்தகைய ஆவணங்களின் மூலங்களைப் பிரசுரித்து வெளிக்கொண்டுவருவதற்கு முன்வரவேண்டும்.

நன்றி: தமிழ்நெற்

Comments