புலம்பெயர் தமிழீழ மக்கள் மீது சதிவலைப் பின்னல்


தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமையாக ஆக்கிரமித்து, படைவழியில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதன் ஊடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் பிராந்திய - உலக வல்லாதிக்க சக்திகளும் போட்ட கணக்குகளை தவிடு பொடியாக்கிவிடக்கூடிய மிகப்பெரும் சக்தியாக இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திகழ்கின்றார்கள் எனக்கூறின் அது மிகையில்லை.

இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு மக்களாணை கோரி மேற்குலக தேசங்கள் தோறும் முன்னெடுக்கப்படும் பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை இலட்சிய உறுதியுடன் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்தி வருவது இதற்கு சான்றுபகர்கின்றது.

இவ்வாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகப் புகலிடத் தமிழீழ மக்கள் பரிணமித்து நிற்பதையிட்டு நாம் பெருமிதம் கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறிவைத்து மிகவும் நுண்ணியமான சதிவலைப் பின்னலை சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் வல்லாதிக்க சக்திகளும் வனையத் தொடங்கியிருப்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது.

2002ஆம் ஆண்டில் நோர்வே அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மறுகணமே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காகக் களமிறக்கப்பட்ட பன்னாட்டு வலைப்பின்னலை ஒத்தவடிவில் இரண்டாவது சதிவலைப் பின்னல் வனையப்படுகின்றது. இதில் காட்சிகளும், பாத்திரங்களும் மட்டும் மாறியுள்ளனவே தவிர, இதன் இலக்கு என்பது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

தர்மத்தின்பால் நின்று நாம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பொழுதும், எம்மை ஏன் உலகம் புறக்கணித்தது?

நீதியின்பால் நின்று போராடிய எமக்குத் துணைநிற்பதை விடுத்து எதற்காக அநீதியின்பால் நிற்கும் சிங்கள தேசத்திற்கு உலகம் துணைபோனது?

எமது உறவுகள் வகைதொகையின்றி கொன்றுகுவிக்கப்பட்ட பொழுது ஏன் உலகம் பாராமுகம் காட்டியது?

என்ற கேள்விகள் இன்றும்கூட எம்மவரிடையே விடைதெரியாத வினாக்களாகத் தொக்கிநிற்கின்றன.
உலக ஒழுங்கிற்கு இசைவாகத் தமது போராட்ட வடிவத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றியமைக்கத் தவறியமையே இவ்வாறான நிலைக்குக் காரணம் என்று கற்பிதம்செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்திக் குளிர்காய முற்படும் சிறுகூட்டம் ஒருபுறம் கதையளந்து கொண்டிருக்க,

தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதிகட்டி,

இராசதந்திரப் போராட்டம் என்ற புதிய மாயமானை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மீது ஏவிவிடுவதற்கான முனைப்புக்களில் மற்றுமொரு கும்பல் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.
சிங்கள - இந்திய அரசுகளின் திரைமறைவு அனுசரணையுடன் செயற்படும் இக்கும்பல், மே 18இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கிளைகளை மையப்படுத்தி இயங்கிய புகலிடத் தமிழீழ சமூக அமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட காட்சி ஊடகங்கள் வாயிலாக புகலிடத் தமிழீழ மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்தல் போன்ற நாசகார நடவடிக்கைகளை கனக்கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

http://tamiljugend.ch/ta/images/stories/wkr.jpgதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும், இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானம் திகழ்வதோடு, அதனை நகர்த்திச் செல்வதற்காக வலுவான அச்சாணியாகத் தமிழீழ தாயகம், தமிழீழ தேசியம், தமிழீழ தன்னாட்சியுரிமை ஆகிய முப்பரிமாணங்களைக் கொண்ட திம்புக் கோட்பாடு விளங்குகின்றது.

இந்த வகையில், பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்ட பிளவுபடாத – ஒன்றுபட்ட தமிழீழ தாயகம், மதபேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழீழ தேசியம், இறையாண்மையை நிலைநாட்டும் தன்னாட்சியுரிமை என்ற மூன்று வலுவான தளங்களில் அர்த்தபரிமாணம் கொண்டுள்ள தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தி, கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றது.

ஒருபுறம், முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக சிங்களம் மார்தட்டிக்கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் பலத்துடன் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம்பெற்றுவிடக் கூடும் என்ற அச்சவுணர்வில் இருந்து அது நீங்கிவிடவில்லை.

இவ்வாறான அச்சவுணர்வு சிங்கள அரசை மட்டுமன்றி இந்தியப் பேரரசையும் பீடித்திருப்பதை நாம் மறந்துவிட முடியாது.

இவ்வாறான பின்புலத்தில் இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணையை மேற்குலக சனநாயகப் பொறிமுறைகள் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்துவது சிங்கள - இந்திய அரசுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக மாறியிருப்பதே மெய்யுண்மையாகும்.
இதுவே தமிழீழத் தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களை சிறுமைப்படுத்தியும், அதற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைத்தும் தமது நாசகார நடவடிக்கை இயந்திரங்களை சிங்கள - இந்திய அரசுகள் இயக்கி வருவதற்காக நதிமூலமாகத் திகழ்கின்றது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்ற காலநதியை நகர்த்திச் செல்லும் சாரதிகளாக வகிபாகமெடுத்துள்ள புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைப் பலவீனப்படுத்தி,

தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்களுக்கு மாற்றீடான மிதவாதக் கட்டமைப்பு ஒன்றை நிறுவி,

அதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிப்பதே சிங்கள - இந்திய அரசுகள் வனையும் சதிவலைப் பின்னலின் மைய இலக்காகத் திகழ்கின்றது.

இதன் முதற்கட்டமாக தமிழீழ தாயக பூமியை மத அடிப்படையில் கூறுபோட்டுத் துண்டாடுவதற்காக கருத்துக்களை விதைத்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் - பரப்புரைப் பணிகளை மேற்குலக சட்டவரையறைகளுக்குள் முடக்குதல், ஆயுதப் போராட்டத்தை அருவருக்கத் தக்க விடயமாக சிறுமைப்படுத்தும் கருத்துக்களைப பரப்புதல் போன்ற செயற்பாடுகளை சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று தமக்குத் தாமே பட்டமளிப்புச் செய்துகொள்ளும் இவர்கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இலட்சியங்களையும் சிதறடிப்பதை குறியாகக் கொண்டு செயற்படுவதை இவர்களின் அண்மைக்கால அறிக்கைகளும், நடவடிக்கைகளும் புலப்படுத்துகின்றன.

பிராந்திய – உலக வல்லாதிக்க சக்திகளின் கவசப் பாதுகாப்பில் இருந்து எழுந்த படைவலிமையின் ஊடாக இன்று தமிழீழ தாயக பூமியை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ள பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இக்கணம் வரை அழிக்கப்பட முடியாத சக்தியாகவே தொடர்ந்தும் விளங்குகின்றது.

நிலங்களையும், தனது இயங்கு தளத்தையும் ஒரு விடுதலை இயக்கம் இழந்தாலும், அதன் அரசியல் இலட்சியங்களும், போராட்ட வடிவமும், மக்களின் உறுதுணையும் அழிக்கப்படாத வரைக்கும் அது தனது பலத்தை இழந்துவிடுவதில்லை.

இந்தப் பண்பியல்பே இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான அடித்தளமாகவும் திகழ்கின்றது.

இதேபோன்று, தமிழீழ தேசியத் தலைமையை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிக் கொள்கின்ற பொழுதும், உலகத் தமிழர்களை இயக்கும் மாபெரும் இயங்கு சக்தியாகத் தொடர்ந்தும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்வதை நிகழ்கால சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன.

அந்த மாபெரும் சக்தி மீது அசையாத நம்பிக்கை கொண்ட தேசமாகத் தமிழீழ தேசம் திகழ்வதை நிதர்சனப்படுத்தும் சம்பவங்களாகத் தமிழீழத்தில் நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் மீதான புறக்கணிப்பும், புகலிட தேசங்களில் நிகழ்ந்தேறிய தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் ஏகமனதாக வழங்கப்பட்ட மக்களாணையும் விளங்குகின்றன.

இவ்வாறாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறியைப் பாதுகாப்பது இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் முதன்மைக் கடப்பாடாகத் திகழ்கின்றது.

இதன் முதற்கட்டமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அரசியற்களத்தைக் கூறுபோட்டு சிதறடிப்பதை இலக்காகக் கொண்டு இயங்கும் கும்பல்களை விழிப்புணர்வுடன் அடையாளம்கண்டு, இவர்களை அந்நியப்படுத்தி, நிரந்தரமாக ஓரங்கட்டுவதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் முன்னுள்ள மிகச்சிறந்த தெரிவாகும்.

இதனைவிடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம்பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத்தன்மையைக் கொண்டுள்ளது.

இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்!

-சேரமான்-

(தொடரும்)

Comments