தமிழ் வாக்காளர்கள் முன் கட்டவிழும் அரிய வாய்ப்பு

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகிவிட்டது. இனி, அடுத்த வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இத் தேர்தல் மிகமிக முக்கியமான ஒன்று. அதனைத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறையுள்ள வர்த்தக முக்கியஸ் தர்கள் போன்ற தமிழர்களின் மேம்பாட்டில் சிரத்தையும் பிரக்ஞையும் கொண்ட உயர்மட்டக் குழுவினர் ஒரு மித்த குரலில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் எனச் செய்தி கள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கையில் தமிழ்ப்பேசும் சமூகத்தின் இருப்பை யும், எதிர்காலத்தையும், தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கிய பொதுத் தேர்தலாக இதனை அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றமை அதிக கவனம் கொண்டு நோக்க வேண்டியதாகின்றது.

யதார்த்தப் புறநிலை உண்மையை அவர்கள் புட்டு வைத்திருக்கின்றார்கள். அவர்கள் வெளிப்படையாகச் சுட்டிக்காண்பித்துள்ள விடயம் இரு பிரதான அம்சங் களைக் கொண்டது.

முதலாவது முப்பது வருடங்களாக அஹிம்சை வழி யிலும், பின்னர் அடுத்த முப்பது வருடங்கள் ஆயுத வழி மற்றும் அறநெறி முறையிலுமாகச் சேர்ந்தும் தங்களின் நீதி, நியாயமான உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காகத் தமிழர்கள் முன்னெடுத்த போராட் டங்கள் பெரும்பாலும் பயன்தரா நிலையில் முடங்கிப் போய்விட்டன. இந்த நிலைமையில் இலங்கைத் தமிழர் தரப்பில் அவர்களை சரியான வழியில் நெறிப்படுத்தும் வலிமையான தலைமைத்துவம் இல்லாத பெரும் அரசியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.

அடுத்தது தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வு ஒன்றை வழங்கும் மனப்பக்குவமோ, தாராண்மையோ, தமிழர்களின் உரிமைக்கான கௌரவமான வாழ்விய லுக்கான போராட்டங்களை ஆயுதமுனையில் அடக்கி, ஒடுக்கி அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்து நிற்கும் சிங்களத் தலைமைகளிடம் கிடையா.

இந்த இரு விடயங்களையும் வெளிப்படையாகச் சுட் டிக்காட்டியுள்ள தமிழ்ப் புத்திஜீவிகள் இந்தப் பின்னணி யிலேயே இந்தப் பொதுத் தேர்தல் தமிழர்களின் தலை விதியை நிர்ணயிக்கப் போகும் நிகழ்வாக வந்து அமைந் திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

ஆக, இந்தப் பொதுத் தேர்தல் மூலம் வலிமையான தலைமைத்துவம் ஒன்று தமிழர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.
அசைய மறுக்கும் சிங்கள அரசுத் தலைமையை மசிய வைத்து, தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு இசையச் செய்விக்க வேண்டிய தகைமை யையும், இயலுமையையும் கொண்டதாக அந்தத் தலைமை அமையவேண்டும்.

அப்படி அமைந்தால் மட்டுமே இந்த இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு ஏதேனும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும், நியாயமும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதே தமிழ்ப் புத்திஜீவிகள் சிரத்தையுடன் சுட்டிக்காட்டும் பிரதான அம்சமாகின்றது.

இத்தகைய தகைமையும், வலிமையும் கொண்ட தமி ழர் தலைமையை இத் தேர்தல் மூலம் எப்படித் தேர்ந் தெடுக்க முடியும் என்பதையும் அவர்கள் கோடிகாட்டியி ருக்கின்றமை இங்கு அவதானிக்கத் தக்கதாகும்.

அதற்கு துணிச்சலான முடிவைத் தமிழர்கள் ஐக்கியப்பட்டு எடுக்கவேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.
தங்களுக்கான கட்டுறுதியான அரசியல் சமுதாய மொன்றை மீண்டும் உருவாக்குவதற்கான இந்த வாய்ப்பைத் தமிழர்கள் சரியாகப் பயன்படுத்தியேயாக வேண்டும். அரசியல் ரீதியாகத் தங்களை முனைப் புறுத்து வதற்கு உறுதியான நாடாளுமன்றப் பிரதிநிதித் துவத்தைக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்கு இப்போது வேறு மார்க்கம் ஏதுமில்லை. வேறு அனைத்து வழிகளும் பாதைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரே மார்க்கத்தைச் சரிவரப் பயன்படுத்தி, உரிய முயற்சி களை எடுத்து, கடைத்தேறுவது மட்டுமே தமிழர்களின் தலைவிதியை மேம்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்.

சகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற் பட வேண்டும் எனப் பிதற்றும் அரசியல்வாதிகளும் நம் மத்தியில் உள்ளனர். அவர்கள் தற்போது புதிதாகத் தோன் றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங் களைக் காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றமையையும் தமிழ்ப் புத்திஜீவிகள் அம்பலப்படுத்தி, தமிழ் மக்கள் முன் ஓர் எச் சரிக்கையாக அதை வெளிப்படுத்தியுமிருக்கின்றார்கள்.

ஆக, புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றமைபோல இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு முதல்படியாக இந்தப் பொதுத் தேர்தலைத் தமிழ் வாக் காளர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

வரலாறு தற்சமயம் தம்மீது சுமத்துகின்ற பொறுப்பை அரசியல் துணிச்சலுடனும், நேர்மையுடனும், கொள்கை உறுதிப்பாட்டுடனும், விலை போகாத குணாதிசயத்துட னும் எதிர்கொள்ளக்கூடிய கற்றறிந்த வேட்பாளர்களை நிறுத்தும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ் வாக்கா ளர்கள் இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்த முடியும்.

நன்றி: உதயன்

Comments