பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தும் தகைமையை தக்கவைத்திருக்கும் மேற்குலகம்

நாலாவது ஈழப்போர் உக்கிரம் பெற்றதில் இருந்து இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுவந்த மேற்குலகம் கடந்த வாரம் அழுத்தமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கடந்த 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு நிறுத்தியுள்ளது. இந்த ஆறு மாதங்களிலும் இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்பட்டால் வரிச்சலுகையின் நிறுத்தம் தொடர்பான முடிவுகள் மீளாய்வு செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகை நீடிப்புக்காக 2008 ஆம் ஆண்டு இலங்கை விண்ணப்பித்தபோது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசு அதற்கு தகுதியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது.

இலங்கையில் மனித உரிமைகளும், அரசியல் உரிமைகளும் அனைத்துலக தரத்திற்கு இணையாக உள்ளதா எனவும், தொழிலாளர் உரிமைகள் பேணப்படுகின்றதா எனவும் ஆய்வு செய்த இந்தக் குழுவினர் இலங்கை அரசு இந்த விதிகளை மீறிவிட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கை கடந்த நவம்பர் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கான வரிச்சலுகையை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரை செய்திருந்தபோதும் அதனை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் அன்று மேற்கொள்ளவில்லை.

எனினும் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அதன்போது ஏற்பட்ட வன்முறைகள், தேர்தலுக்குப் பின்னர் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தமான நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டது, ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் போன்றவற்றை, தென்னிலங்கையில் அரசியல் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையாகவே தாம் கருதுவதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை என்பது 14 வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள வரிச்சலுகையாகும். 7,200 பொருட்களுக்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் அதனைப் பெறும் நாடுகளில் ஒரு நல்ல ஆட்சியையும், ஜனநாயக பண்புகளையும் உருவாக்குவதே மேற்குலகத்தின் நோக்கம்.

அதாவது, பொருளாதார மேம்பாடுகளில் தமது ஆதரவை சார்ந்து நிற்கும் ஒரு நிலையை மேற்குலகம் இந்த நாடுகளில் ஏற்படுத்தியிருந்தது. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கை அரசு அதனை பெற்றுவருவதுடன், அதன் மூலம் வருடம் ஒன்றிற்கு 140 மில்லியன் டொலர்களையும் அது பெற்றுவருகின்றது.

தற்போது இந்த வரிச்சலுகையை இலங்கை அரசு இழப்பதன் மூலம் இந்த வருமானத்தை இழப்பதுடன், பல இலட்சம் மக்களும் தென்னிலங்கையில் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 200,000 மக்கள் நேரிடையாகவும், ஒரு மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புகளை இழக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் அதன் ஏற்றுமதித்துறையில் தங்கியுள்ளது. அதில் 76 சதவீதம் உற்பத்திபொருட்களின் ஏற்றுமதியும், 23 சதவீதம் விவசாயப்பொருட்களின் ஏற்றுமதியும் அடங்கியுள்ளன. உற்பத்திப்பொருட்களின் ஏற்றுமதியில் 43 சதவீதம் ஆடை ஏற்றுமதியையும், மிகுதி ஏனைய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டவை.

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 60 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுபவை. அது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீதமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை தமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இலங்கை மீது கொண்டுவரப்பட்டுள்ள இந்த அழுத்தம் தமது ஆடை வர்த்தகத்தை போட்டி குறைந்த நிலைக்கு தள்ளும் எனவும், இலங்கையின் ஆடைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும் இணைந்த ஆடைக் கைத்தொழில் சபையின் செயலாளர் ரொஹான் மசகொரலா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை இலங்கையின் பங்குச்சந்தை வர்த்தகத்தை பாதிக்காத போதும், அதன் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, இலங்கையின் கடன்சுமை அதிகரிப்பதுடன், முதலீட்டாளர்களையும் விலகி நிற்கச்செய்யும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நிறுத்தம் இலங்கையின் ஆடை உற்பத்தி நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என ஆடை ஏற்றுமதியாளர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆடை ஏற்றுமதித்துறையைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு போட்டியான நாடுகள் அதிகம். இந்தியா, சீனா, தாய்லாந்து, பங்களாதேஷ் என அதன் பட்டியல் நீளம். எனவே இலங்கை அரசு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அதனை கொள்வனவு செய்யும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட வேறு நாடுகளை நாடலாம்.

இவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளை இலங்கை இழந்தால் அதனை மீண்டும் பெறுவது கடினமான விடயமாகவே இருக்கும். மேலும் வேறுநாடுகளில் கொள்வனவு செய்து பழக்கப்பட்ட நாடுகள் மீண்டும் இலங்கையை நோக்கி திரும்புவதும் கடினமானது.

இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சீனா, இந்தியா போன்ற நாடுகள் உதவலாம். ஆனால் ஏற்றுமதித்துறை என்பது இந்த உதவிகளில் இருந்து வேறுபட்டது. அது பொதுமக்களின் வேலைவாய்ப்பையும் நாட்டின் அடிமட்ட பொருளாதார அபிவிருத்தியையும் சார்ந்தது.

தமது இந்த முடிவுகள் பொதுமக்களை பாதிக்கும் என்ற போதும் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளில் இருந்து விலகமுடியாது எனவும் அவ்வாறு செய்தால் எமது விதிமுறைகளை நாமே மீறிவிட்டதாக ஏனைய நாடுகள் குற்றம் சுமத்தும் எனவும் இலங்கைக்கான வரிச்சலுகையை நிறுத்தும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவோஜ் தெரிவித்திருந்தார்.

மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், அது மேலும் தொடர்ந்தால் இலங்கை மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம் என்பது உறுதியானது ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்காவும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் அமெரிக்கா 23 சதவீதத்தைப் பெற்று வருகின்றது. இலங்கையின் ஆடைகளில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையும், அமெரிக்காவும் வர்த்தக முதலீட்டு உடன்பாடு தொடர்பான ஏழாவது வருடாந்த மாநாட்டை மேற்கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு 40 இற்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.

ஏனைய ஆசிய நாடுகளைப் போலல்லாது அமெரிக்கா இலங்கையில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது. பல நிறுவனங்களின் பிரதம உற்பத்தியாளராக இலங்கைஉள்ளது.

உதாரணமாக 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அமெரிக்கா 1.9 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் இறக்குமதி செய்திருந்தது. ஆனால், அமெரிக்கா 227 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளையே இலங்கைக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கும், அமெரிக்காவின் வரிச்சலுகைக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம் ஆடைப் பொருட்களுக்கே வரிவிலக்கு அளித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் வரிச்சலுகை ஏனைய பொருட்களுக்கு வழங்கப்படுகின்றன.

அதன் நிபந்தனைகளும் அனைத்துலக தொழிலாளர் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் ஆடைப் பொருட்களின் ஏற்றுமதியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என கூறப்படுகின்ற போதும் இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும் வல்லமை மேற்குலகத்திற்கு உண்டு என்பது தெளிவானது.

அதாவது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருமாக இருந்தால் அது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றாக செயலிழந்துபோகும் நிலைக்கு தள்ளலாம்.

ஏற்கெனவே புலம்பெயர் தமிழ் மக்கள் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுக்கு முன்பாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதும், உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதிகளை வீழ்ச்சி காண வைத்துள்ளதும் நாம் அறிந்தவையே.

எனவே, நிதி உதவிகள், கடன் உதவிகள் போன்ற விடயங்களில் சீனா, இந்தியா, ஈரான், லிபியா, பர்மா போன்றவை இலங்கை அரசின் புதிய நண்பர்கள் மேற்குலகத்தை பின்தள்ளியுள்ள போதும், இலங்கையின் வர்த்தக முக்கியத்துவத்தை மேற்குலகம் தற்போதும் கொண்டுள்ளது. அதன் ஊடாக அவர்கள் அரசின் மீது காத்திரமான அழுத்தங்களை மேற்கொள்ளும் நிலையை தற்போதும் தக்கவைத்துள்ளனர் என்பதை இலங்கை அரசும் மக்களும் மறுக்க முடியாது.

-வேல்ஸிலிருந்து அருஷ்
நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Comments