சர்வதேச மட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை முடக்குவதற்கு வழி அவர்களது சர்வதேச பலத்தை நிரூபிப்பதே ஆகும்.
இந்திய அதிகாரத்தின் சுற்றுவட்டாரங்களிலிருந்து புலப்படுவது யாதெனில், எத்தனை வழிகளில் தமிழ் மக்கள் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்தினாலும், இந்தியாவும் இராஜபக்சே அரசும் தாங்கள் தமக்குத் தெரிந்த “சமாதானத்” திட்டத்தின்படியே இரகசியமாக நகர்வர்.
தமிழர்களின் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கு மேல்மட்ட சர்வதேசிய அரசியல் அமைப்புகளிடையே ஓர் புரிந்துணர்வு இருப்பதாக, அறிந்த தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தில் எல்லோரும் எதிர்த்த போதிலும், எப்படி எமது இலக்கை எட்டுவது என்றும் மக்கள் உள்ளே அடைபட்டுக் கிடக்கும்போதும் சுதந்திரத்தைக் கோருவதில் என்ன பயன் என்றும் கேள்விகள் எழலாம். சர்வதேச அரசியல் அமைப்புகளால் தமிழ் மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரியப்பட்டால், தமிழர் எழுச்சி ஒன்றே அவர்களது சர்வதேச மேலாண்மையை நிரூபிப்பதாகும். இந்தப் பொறுப்பு தமிழ் நாட்டையே சாரும்.
ஒரு குற்றம் புரிவதிலும் பார்க்க, அப்படிப் புரிந்ததை மறுப்பதும், அதனால் பாதிக்கப்பட்டவர்களை நீதி கோருவதிலிருந்து தடுப்பதும் பாரதூரமான விடயங்களாகும். இதனால்தான், வௌ;வேறு பரிமாணத்தில் குற்றங்களைப் புரிந்த நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டி அதற்கூடாக முழு உலகுக்கும் தமது புதிய “உலக அமைப்பையும்” வெளிக்கொணர முயல்கின்றன.
இந்த முயற்சியில் முதற்படியானது, தமிழரின் தேசியத்தை மறுப்பதும், அவர்களின் தேசிய உணர்ச்சியை மழுங்கடிப்பதும் ஆகும். இலங்கைத் தீவில், இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதுடன், அத்தோடு ஆயிரக்கணக்கான அடிப்படையற்ற நியாயங்களையும் “வளர்ச்சி” எனக் கூறப்படும் சூழ்ச்சிகரமான திட்டங்களையும் பயமுறுத்தலுடனும் சிறைப்பிடித்தலுடனும் திணிக்கப்பட்ட அதே நேரத்தில், வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளைச் செயலிழக்க வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இனஅழிப்பு, ஒரு சரீர சம்பந்தமான குற்ற நடவடிக்கையாக இருந்து அரசியல் குற்றமாக மாறிவரும் வேளையில், புற அமைப்புகள் இலங்கையின் உள்ளும் வெளியேயும் உள்ள தமிழ் மக்களை ஓர் தொட்டும் தொடாத போக்கில் இழுத்துச்செல்ல முனைகின்றன.
இரு தசாப்தங்களாக இலங்கையில் போர்க்குற்றங்களைப் புரிந்தும், கடந்த வருடம் அவற்றை ஊக்குவித்தும் வந்த இந்தியாவானது, தற்போது தமிழருடைய தேசிய பிரச்சனையை அங்கீகரிக்காது, தமிழ் அரசியலில் பாலம் அமைக்க முயல்வது, ஒரு கர்வத்தின் வெளிப்பாடு எனத் தமிழ் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது.
“பாதுகாப்பு” என்ற போர்வையில் இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் அமைப்புகளுக்குச் செலவிடப்பட்ட பணத்தொகை பற்றியும், முன்னும் பின்னுமாகக் கொண்டு செல்லப்பட்ட நாடுகடந்த பிரமுகர்களைப் பற்றியும் ஈழத்தமிழ் வட்டாரங்கள் அறியாமல் இல்லை. இந்தியா செய்த அத்தனை பிழைகளுக்கும், இந்தியாவின் எதிரிகளையும் போட்டியாளர்களையும் அதன் வாசட்படிக்குக் கொண்டு வந்தது ஈழத்தமிழர்கள் அல்ல என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும்.
1935 டொனமூர் அரசியலமைப்பின் ஆசியாவிலேயே நீண்ட இரட்டைவேட ஜனநாயகத்தின்கீழ் இனஅழிப்புவரை அனுபவித்த ஈழத்தமிழர்கள் கேட்டது, பிரித்தானியா அவர்களிடமிருந்து 1948-ல் பறித்துக் கொடுத்த இறையாண்மை ஒன்றே ஆகும். இந்தப் பிரச்சனையை நோக்குவதற்குள், இன்று இப்பிரதேசத்தில் மூக்கை நுழைக்கும் எல்லா சக்திகளும் கொழும்பு அரசாலும் இந்தியாவில் உள்ள சாணக்கியர்களின் தவறான கொள்கைகளாலும் கொண்டு வரப்பட்டவை எனலாம்.
இந்தியா தமிழ் மக்களின் தேசியத்தையும் இறையாண்மையையும் ஏற்க மறுக்கும்வரை, இந்திய அரசால் கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் ஈழத்தமிழர்களால் ஏற்கப்பட மாட்டாது, இந்தியாவிற்கு உள்நாட்டிலும் வெளியிலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்பது சொல்லாமலே தெளிவாகும் விடயமாகும்.
தமிழ் அரசியலைத் தீர்க்க முற்படும் இந்திய மகிந்தக் கூட்டணியால் உடணடியாகப் பாதிக்கப்படுபவர்கள், மகிந்தாவிற்குப் போரில் உதவிய கூட்டணியினராகத்தான் இருக்கும். தமது சொந்த மக்களுக்குத் தமது சுதந்திரமான அடிப்படையில் தீர்வு காணாத எல்லோருக்கும் இது நடைபெறும் ஒரு விடயமாகும். ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க யார் தயார்?
கொழும்பு அரசுக்கும் டெல்லிக்கும் எதிரான தமிழ் உணர்வுகளைப்பற்றிக் கூறியதால் மற்றவையாவும் புறந்தள்ளப்பட்டுவிட்டன எனக்கூற முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வெறுப்பூட்டத்தக்க நுழைவுகளிலும் மேலாகத் தமிழ் மக்கள் முக்கியமாகக் கவலைப்படுவது, மேற்கு நாடுகளின் நிலைப்பாடே ஆகும்.
இலங்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குக் கடுமையான தண்டனை விதித்த அமெரிக்கா, அதன் அதிகாரத்தில் உள்ளவர்கள் உட்பட எவரும் தமிழ் மக்கள் மீது நடத்திய போர்க்குற்றங்கள் மீது அத்தகைய அக்கறை காட்டவில்லை. மேற்கு நாடுகள் இலங்கையில் நடைபெறும் போர்க் குற்றங்களுக்கும் இனஅழிப்பிற்கும் தீர்வு கண்டு நீதியான அரசியத் தீர்வு காண்பதற்கு எத்தகைய ஆர்வம் காட்டப்போகின்றார்கள் என்பதுதான் தமிழ் வட்டாரங்களின் மனதில் எழும் கேள்வியாகும்.
தமிழ் மக்கள், தமது சொந்த சுதந்திரமான போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதன் மூலம் சரித்திரப் பூர்வமான பதிவுகளைச் சரிப்படுத்தக்கூடும்.
தமிழ்த் தேசியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், அதை இல்லாதொழிக்கும் வரையில், ஓர் மேல்மட்ட தரப்பில் எல்லாச் சக்திகளுக்குமிடையில் ஓர் புரிந்துணர்வு இருக்கிறது எனத் தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் சேர்ந்து மேல்வாரியான கொள்கையை அவர்களும் கடைப்பிடிப்பதில் கடுமையாக உழைப்பது, ஓர் இரகசிய விடயமல்ல.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், போர்க்காலத்தில் அது திணிக்கப்பட்டது என்று கூறிய ஒரு தமிழர், தற்போதும் “யதார்த்த நிலைமை! என்ற போர்வையில் “தமிழர்களுக்குச் சுயாட்சி கிடைப்பதென்பது யதார்த்தத்தால் திணிக்கப்படுவது” எனக் கூறியுள்ளார்.
முன்பு, தமிழ்த் தேசியம் என ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை எனவும், நடைபெற்றது பயங்கரவாதம் மட்டுமே என்றும் கூறிய சில சர்வதேச ஊடகங்கள், தற்போது தமிழ்த் தேசியம் பலவீனமடைந்துள்ளது எனக்கூற முற்படுகின்றன.
இன்று, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தமது முழுமையான சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் போராடும் உறுதிப்பாட்டைக் கண்டு, மேற்குநாடுகள் திகைப்படைந்துள்ளன.
சிங்கள அறிவாளிகள் இனப்போர் முடிவடைந்து விட்டது எனவும், தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல எனவும் - ஆனால் நிரந்தரச் சிறுபான்மையினர் மாத்திரமே என்றும் எண்ணுகின்றனர். அவர்களின் கவலை பிரதான அரசியல் வர்க்கங்களிடையே இருக்கும் பிரிவினையாகும்.
இலங்கையில், தமிழர்களின் எதிர்காலம் பற்றிக் கூறுகையில், ஜெயதேவா உயங்கொட “இராணுவ வெற்றி இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திவிட்டது. சிறுபான்மையினரின் போராட்டங்களுக்குத் தற்போது, முன்புபோல் அல்லாது பிரதேசவாரியாகவோ உலகளவிலோ நம்பகமான நண்பர்கள் இல்லை. அரசியல் இருப்புக்குச் சிங்கள அரசியல் கட்சிகளுடன், அரசுகளுடன் யதார்த்தமான ஒத்துழைப்புத் தேவையென எதிர்காலத்தில் அவர்கள் கவனத்தில் எடுப்பார்கள்” எனக் கூறினார். ஒரு வருடத்திற்குமுன் தமிழ் மக்கள் சிங்களவரின் “தாராள மனப்பான்மை” யிலேயே தங்கியிருக்க வேண்டும் எனக்;கூறினார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்பின் இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழரின் விடயங்களில் எவரும் பெருந்தன்மையாக நடக்க முடியாது என்பது வெளிப்படை.
தமிழரின் சுதந்திரத்திற்கு எதிரான சிங்கள அரசும், கொழும்பில் பணம் திரட்ட முயலும் தமிழர்களை ஊக்குவிக்கும் சக்திகளும், தமிழர்களுடைய விடுதலையைத் திட்டமிடப்பட்ட மனோவியல் யுத்தத்தைப் பாவித்து அதைரியப்படுத்த முனைகின்றார்கள்.
தமிழரின் சில ஊடகங்கள், தமிழரின் சுதந்திரத்திற்கு அடித்தளம் வகுப்தற்குப் பதிலாக, மகிந்தா-பொன்சேகா இழுபறியில் எவ்வளவு நேரத்தை விரயமாக்கினார்கள் என்பதைத் தமிழ் வட்டாரங்கள் நன்கு அறியும். இனிமேலும், அவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் (செவ்வாயன்று பிரகடனப்பட்டதன் பேரில்) மீண்டும் நேரத்தை வீணடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சிங்கள முக்கிய அரசியல் வர்க்கங்களிடையே பிரிவினை ஏற்படுவதும் அவர்கள் அநீதியான முறையில் மற்றவர்களில் தங்கி அடைந்த வெற்றிக்கு ஈடாக தொடர்ந்தும் விலைகொடுக்க வேண்டிவரும் என்பதும் இயற்கையானதொன்றே.
தமிழ் மக்களை நிர்வாணமாகக் கொன்றபின், நல்லூர் கந்தசாமி கோவிலில் அரைநிர்வாணமாக வணங்குவதில் பலன் ஏற்படாது. மேலோங்கிய வர்க்கங்கள் தமிழர்க்கு ஒன்றும் கொடுக்கப்; போவதில்லை என்பதால், இலங்கை அரசுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனக் கூப்பாடு போடும் மேலாதிக்கவாதிகளின் கூக்குரலை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்கள் தமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்காது பாவிக்க வேண்டும்.
எல்லாரும் எதிர்த்து நிற்கும்போது, எப்படி விடுதலையை அடையமுடியும் எனப் பல தமிழர்கள் குழப்பமடையலாம். ஆனால் ஏன் எல்லோரும் அவர்களை எதிர்க்கின்றார்கள்? சுpங்களவர்களில் விருப்பமும் தமிழரில் வெறுப்பும் அடைந்துள்ளார்களா? என்ற கேள்விகளை நோக்க வேண்டும்.
முன்பு, “பயங்கரவாதம்” எனும் அப்பட்டமான பொய் எமக்குக் கூறப்பட்டது. ஆனால், இப்போது உண்மை வேறு, என எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர்.
வெளிப்படையான காரணமென்னவெனில், தமிழ் மக்கள் தங்கள் பிரதேசங்களில் சிங்களவரிலும் ஆறு மடங்குக்கும் மேலான தொகையைக் கொண்டிருந்தபோதும், தமது பிரதேச வலுவைப் பாவிக்காதவிடத்து, சிங்களவர்கள் அவர்களது பிரதேசத்திலிருந்த பூகோள அரசியல் வலுவை நீண்ட காலமாகப் பாவித்து வந்தனர். இனிமேல், சுதந்திரம் தமிழர்களுக்கு வேண்டுமானால், அதனை இந்தியக் கடலின் இருபுறமும் இருக்கும் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இணைந்துதான் பெற முடியும்.
தமிழ்நாட்டின் அரசுகள் டெல்லியின் கோணலான அரசியல் கொள்கைகளைத் தட்டிக்கேட்காது, விட்டமையால் இந்தப் பூகோள அரசியலை நிலைநாட்டாத பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். ஆனால், இவ்விடயத்தில் சரித்திரத்தில் பதியப்பட வேண்டிய பெருந்தவறை இழைத்த பொறுப்பு முற்றாகக் கருணாநிதியையே சாரும். கருணாநிதி ஒரு முக்கிய தருணத்தில் இப்பூகோள அரசியல் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தத் தவறியதோடு, தமிழீழக் கொள்கையைச் சட்டசபையில் எதிர்த்ததன் மூலம், தமிழர் விடுதலையையும் அதன் சர்வதேச அங்கீகாரத்தையும் நாசம் செய்தார். அவர் தமிழ் மக்கள் தமிழீழ அங்கீகாரத்தைக் கோரும் வேளை அமைதி காத்துவிட்டு, ஆயுதப்போர் தோல்வியடைந்த வேளையில் அதை மறுத்ததன் மூலம் தமிழரின் பூகோள அரசியல் வலிமையை முற்றாக ஒழித்தார்.
இலங்கையில், தமிழ் மக்கள் விடுதலை பெறும் சூழ்நிலையில் தற்போது இல்லாதபோது, தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழீழம் பற்றிப் பேசுவதில் என்ன பயன் எனச் சில தமிழ்வட்டாரங்கள் சிந்திக்கின்றன. இதில் அவர்கள் தவறிழைக்கின்றார்கள். பூகோள அரசின் நிலையால்தான் இக்கதி ஏற்பட்டதால் அதை மாற்ற வெளிநாட்டிலிருந்தே அழுத்தம் கொடுத்து இந்தப் பூகோள அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்.
புலம் பெயர் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழத்தை அங்கீகரிக்கும் மீள்வாக்கெடுப்பினை நடாத்தியுள்ளார்கள். இத்தகைய ஜனநாயக முயற்சியினால் பூகோள அரசியலை நிலை நிறுத்துவதிலும் அரசியல் அமைப்புக்கு அத்திவாரம் இடுதலிலும் ஏற்படும் விளைவுகள் பல தரப்பட்டவையாகும். இத்தகைய குரலும், பூகோள அரசியலுக்குக் கொடுக்கப்படும் உறுதிப்பாடும் உலகளாவிய எல்லாத் தமிழர்களாலும் திடமாகப் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
உலக அரசியல் எனும் பெயரில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்புக் குற்றங்கள் நடைபெற்று இருப்பதால், தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழகத்தின் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து தங்களது முழு ஆற்றலைத் திரட்டி ஜனநாயக வழியில் போராடுவதற்கு இதுவே தக்க தருணம் ஆகும். வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளா உட்பட தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து இத்தகையப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லும் தலையாயப் பொறுப்பு தமிழகத்திடம் உள்ளது.
அடக்குமுறையின் கீழ் இருந்தபோதும், இலங்கைத் தீவில் இருக்கும் அரசியல்வாதிகள் கூட்டாச்சிச் சதிகளிடமிருந்து விலகித் தமது அரசியலமைப்பை வழிநடாத்தும் ஒரு சரித்திர முக்கியத்துவம் பெறும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
சில அடிப்படைவாதிகளும் உணர்வாளர்களும் எல்லாத் தமிழ் பேசும் மக்களை ஓருமைப்படுத்தவும், தமிழ் தலைநகரத்தைக் கொழும்பிலிருந்து அகற்றவும், எமது சமூக நலன் கருதி, குடியேற்றம் புரிபவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் எதிர்த்து நம்பகமான ஜனநாயகக் கட்டுமானங்களை வளர்க்கவும் முன் வருகின்றனர்.
இன்று, தெற்கில் யதேச்சதிகாரம் நிலவும் நிலையில், சிங்களர்கள் தமிழர்களால் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும், எமது அரசியல் அத்திவாரங்கள், “யாதும் ஊரே: யாவரும் கேளிர்” என்ற அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும்.
(10-02-10 அன்று Tamilnet இணையதளத்தில் Proving geopolitical strength, antidote to international injustice to Tamils என்ற கட்டுரையைத் தழுவிய மொழியாக்கம்)
Comments