விடுதலைக்கான உணர்வு வீச்சாகி இருக்கிறது


இலங்கை நெருக்கடி உலக அரங்கின் பார்வையாளர்களை தம் பக்கம் திருப்பியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் தமது இடைவிடாது கேவலமான எண்ணத்தை சொந்த இனத்தின் மீதே பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். எந்த நாட்டு மக்களுக்கு நலம் சேர்ப்பதற்காக அல்லது எந்த தேசியத்தை கட்டி காப்பதாக காரணங்களைக்கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்களோ அவர்கள் இன்று தமது சொந்த நாட்டு மக்களுக்கெதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த அழகிய தீவு சூறையாடப்படுகிறது.மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கிறது.

சரத் பொன்சேகவின் துணைவியர் அனோமா தனது கணவரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருப்பதின் மூலம் இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் பாசிசத்தன்மை வெளிப்படுவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அவரை விடுதலை செய்வதற்கு ராஜபக்சேவிடம் முறையிட முடியாது. எனது உறவுகளே நீங்கள் கடவுளிடம் மன்றாடுங்கள் என மிக உருக்கமாக திருமதி பொன்சேக கூறியிருப்பதின் மூலம் நமக்கு ஒரு முடிவான நிலைபாடு உறுதியாகுகிறது. ஆம் அது பேரினவாத பாசிச வெறி. பேரினவாதத்தின் கோரமுகம் அடக்குமுறையின் செயல், ஒடுக்குமுறையின் அடையாளம் இதுதான் இன்று இலங்கையிலே ஆட்சி அதிகாரமாய் ஆவேசமாய் அடங்காப்பிடாரி தனமாய் சூறாவளியாய் சுழன்று சுழன்று வீசுகிறது.

ஒரு முன்னாள் ராணுவத் தளபதியை அந்த நாட்டின் குடிமகனை அந்த நாட்டு அரசியல் சட்டத்திலிருந்து மீட்க முடியாத அவல நிலை அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்த நாட்டின் சனநாயகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஒரு சாதாரண மனிதன்கூட எளிதாய் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் நாம் நமது நாட்டின் வரலாற்றின் தேவையின் அடிப்படையில் தமிழீழத்தை முன்னிருத்தி கடந்த 60 ஆண்டு காலமாக அமைதி வழியிலும், கருவி வழியிலும் நடத்தி வந்த கடுஞ்சமர் இப்பொழுது மீண்டுமாய் புது வடிவம் பெறும் காலத்திற்கு வந்திருக்கிறது.

இந்த புவி பந்தில் ஈழத் தமிழினம் ஒரு சிறு அமைப்பாக இருந்தாலும் அந்த இனத்திற்கென்று ஒரு தனித்தன்மை, சிறப்பு வாய்ந்த கலாச்சார பின்னணி, மொழி அடையாளம், வாழ்வியல் முறைகள் என பல்வேறு கூறுகள் உலகிற்கெல்லாம் அந்த இனத்தை அடையாளம் காட்டுவதற்கு உறுதுணை புரிகிறது. பெருமைமிக்க இப்படிப்பட்ட ஒரு இனம் தமது அருமை பெருமைகளை எல்லாம் அழித்து இன்று ஏதிலிகளாய் எல்லோரையும் எதிர்பார்த்து கரம் ஏந்தி நிற்கக்கூடிய கடின நிலைக்கு தள்ளப்பட யாரெல்லாம் காரணம் என்பதை நாம் விவாதிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். 2008ஆம் ஆண்டு மாவீரர் தினத்திலே உரையாற்றியபோது தேசிய தலைவர் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனது முழு படைபலத்தையும், ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி தனது முழு தேசிய பலத்தையும் ஒன்று குவித்து சிங்கள தேசம் எம்மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரப்பு போரை எதிர்த்து எமது விடுதலை வீரர்கள் விடுதலை வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.உலகின் பல்வேறு நாடுகளின் தமிழ் இன அழிப்பு போருக்கு முண்டு கொடுத்து நிற்க நாம் தனித்து நின்று எமது மக்களின் தார்மீக பலத்தில் நின்று எமது மக்களின் முடிவிற்காக போராடி வருகிறோம்" என்று குறிப்பிட்டதை நாம் சற்று ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தோமென்றால் பன்னாடுகளில் படைகுவிப்பு அங்கே நிற்கும் என்பதை தேசிய தலைவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

அவர்களெல்லாம் சேர்ந்து ஒரு இனத்தை அழிப்பதற்கான அடிப்படை நகர்வுகளை நடத்தி செல்வார்கள் என்பதை அவர் திட்டவட்டமாக புரிந்திருந்தார். ஆகவே அவர் இந்த வரியிலே கடைசியாக குறிப்பிட்டதை போல தமது மக்களின் விடிவு ஒன்றே அவரின் லட்சியமாக இருந்தது. தமது மக்களின் வாழ்வு சுமை ஒன்றே அவர்களின் எண்ணமாக இருந்தது. தம் மக்களின் விடுதலை ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. எத்தனை கடினமான நெருக்கடிகளை அவர்கள் சந்தித்தபோதும் கூட தமது வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை ஒருநொடி கூட நிறுத்தியதுகிடையாது. இந்த உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப் பெரும் சவால்களை விடுதலை புலிகள் இயக்கம் சந்தித்தது. எத்தனை சரிவுகள், எத்தனை இறக்கங்கள், எத்தனை பலிகள் அத்தனையும் கடந்து அவர்கள் சூரியனை போல் சுடர் விட்டு எரிந்தார்கள்.

தேசிய தலைவர் குறிப்பிடுவதை போல எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளை எல்லாம் நாம் எதிர் கொண்டு இருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மையாக அக்களத்திலே நாம் காணமுடிந்தது.ஆகவேதான் இப்பொழுது மிகவும் இழப்பான நேரம், இதோடு இப்போர் நிறைவேறிவிட்டது, தமிழர்கள் அமைதியாகிவிட்டார்கள், இனி அவர்களுக்கான விடுதலை போர் என்பது சாத்தியமில்லை என்றெல்லாம் சில சந்தர்ப்பவாத கூட்டம் உளறித்திரிகிறது. ஆனால் கடந்தகால சமர்களை ஒப்பிடுகையில் இப்போது ஏற்பட்டிருக்கும் சவால் ஒன்றும் புதிதல்ல. இதை தேசிய தலைவரின் வார்த்தைகளில் சொல்வதானால், நாம் எமது மக்களின் ஒன்று திரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம் என்பதுதான். ஆக அவர் ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருந்தார். ஒரு தலைவனுக்குரிய அடிப்படை தன்மைகளை அவர் தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தினால் தமது போராட்ட வாழ்வு என்பது மக்களுக்கானது.

அந்த மக்களின் ஆற்றலும், அந்த மக்களின் தேவையும் இந்த போராட்டத்தின் ஒவ்வொரு அசைவிலும் பிண்ணி பிணைந்திருக்கிறது. இது மக்களுக்கான போராட்டம். ஆகவே மக்கள் திரள் ஒன்றாலே தான் வெற்றி பெற முடியும் என்கின்ற ஒரு உயரிய சிந்தனை நமது தேசிய தலைவரிடம் புதைந்து போயிருந்தது.ஒரு தலைவனுக்குரிய அடிப்படை தன்மைகளின் தமது மக்களை நேசிப்பதை போலவே தமது மண்ணையும் நேகிக்கும் நிர்பந்தம் அல்லது ஒரு தேவை ஒவ்வொரு தலைவருக்கும் உள்ளே எரிதழலாய் கொழுந்துவிட்டு அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

2008ஆம் ஆண்டு ஏறக்குறைய சிங்கள பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது வான்வழியாகவும், கடல் வழியாகவும், தரை வழியாகவும் கடும் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதும்கூட சற்றும் தளர்ந்துபோகாமல் உறுதியான லட்சியத்தோடு தமது விடுதலை வேட்கையின் சுடரோடு தேசிய தலைவர் கூறுகிறார், சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ள துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்கு சொந்தமான மண். பழந்தமிழர் நாகரிகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதி மன்னர்கள் இராஜ்யங்களும் ராஜதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இனவேர் ஆழ வோரோடில் உள்ள இந்த மண்ணிலே நாம் நிம்மதியாக, கவுரவமாக அந்நியரின் ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கில காலனி ஆதிக்கம் அகன்று சிங்கள ஆதிக்கம் எம் மண் மீது கவிந்த நாள் முதல் நாம் எமது மீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்" என்று. ஆக ஒரு மண்ணை மீட்பதென்பது ஏதோ ஒரு பொருளை மீட்டெடுப்பதல்ல. அது ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுப்பது. பண்பாட்டை மீட்டெடுப்பது, கலை இலக்கியங்களை மீட்டெடுப்பது, கண்கவர் பண்புகளை மீட்டெடுப்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உணர்ச்சிகளை மீட்டெடுப்பது, உவகை கொஞ்சி விளையாடிய நமது பாரம்பரியங்களை மீட்டெடுப்பது, அந்த மண்ணிலே புதைந்து போயுள்ள நமது வரலாற்றை மீட்டெடுப்பது, அந்த வரலாற்றின் பதிவுகளிலிருக்கும் நமது வாழ்க்கை மீட்டெடுப்பது.

ஆகவேதான் நமது தேசிய தலைவர் சொல்கிறார் எந்த விலை கொடுத்தேனும் நாம் இதை அடைந்தே தீருவோம் என. போராட்டம் என்பது போராடும் வரை போராடுவதல்ல. அது நமது லட்சியத்தை அடையும் வரை போராடுவது.ஏதோ ஒரு வாய்ப்புக்காக இயக்கம் நடத்துவது நிலம் மீட்புக்கான இயக்கமாக இருக்காது. காரணம் அந்த நிலம் என்பது நமது உயிராதாரம். அந்த நிலம் என்பது நமது உயிர் காற்று. அந்த நிலம் என்பது நமது வாழ்வு. ஆக இந்த போராட்டம் என்பதே வாழ்வை பெறுவதற்கான போராட்டம். இந்த போராட்டம் என்பது இத்தலைமுறையோடு முடிவு கட்டப்படும் ஒரு முற்றுபெரும் நிகழ்வல்ல. அது ஒரு இயக்கம்.

நம்முடைய மூதாதையரின் வரலாற்றை நாம் வாசிப்பதுபோல நம்முடைய எதிர்கால சந்ததியர் நமது வரலாற்றை வாசிப்பதற்கான ஒரு தளம். நம் களத்திலே கண்ட தோல்வி, வெற்றி இவைகள் நம்முடைய சந்ததியினரின் வாழ்வை சிறப்புடையதாக்கும். ஆகவே தான் நம்முடைய இழப்புகளை குறித்து எவ்வித அச்சமுமின்றி நாம் அடுத்த கட்ட வாய்ப்பை நோக்கியே இந்த போராட்டம் நகர்த்தப்படுகிறது. நமக்கென்று வாழ்வு வேண்டும் என்பதல்ல, தேசிய தலைவர் கூறுகிறார் இந்த போராட்டத்தை இந்த விடுதலைக்கான இயக்கத்தை எமது காலத்திலேயே நிறைவு செய்து விட வேண்டும்" என்று. இந்த பொருள் என்னதென்றால் நமது வருங்கால சந்ததி குருதியை குறித்து கவலைத் தோய்ந்ததாக இருக்கக்கூடாது.

நமது எதிர்கால சந்ததி ஏற்றத்தை மட்டுமே எண்ணி வாழ வேண்டும். நம்முடைய சந்ததிக்கு எந்த காலத்திலும் துயரோ, துன்பமோ ஒருதுளியும் நேர்ந்துவிட கூடாது. துயரத்தையும், துன்பத்தையும் இப்போதே ஒட்டு மொத்தமாய் தமது தோளில் சுமந்து அதை மகிழ்ச்சியான களத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதிலே எமது தேசிய தலைவர் உறுதியாக இருந்தார். ஆகவே தான் ஆயிரக்கணக்கான வீர வித்துக்களை இழந்தபோது கூட அதிலிருந்து முளைத்தெழும் மகிழ்ச்சிக்காக அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆகவே இந்த காலத்திலே அவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம்.

நம் கண் முன்னால் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அச்சமற்ற எழுச்சி கொண்ட எதையும் முறியடிக்கும் ஆற்றல் உள்ள முனைப்புடன் களத்தில் நிற்கக்கூடிய முன்னேறிச் செல்லும் ஒரு புலி நிகர் படையை நாம் பெற்றிருக்கின்றோமே இதுதான் எம் தமிழினத்தின் அடையாளம்.புறநானூறு வாசித்து பூரித்துப் போயிருந்த நமக்கு புதிய புறநானூறை நம்முன்னே படைத்தளித்த அந்த மாபெரும் படைப்பாற்றல் நம் தேசத்தின், நம் மொழியின், நம் இனத்தின் உயிர் நாடியாய் இன்றும் நம்மோடு உலாவிக் கொண்டிருக்கும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தேசிய தலைவரின் லட்சியங்களை நாம் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த வரலாற்று சுருளையும் தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தால், எந்த கோடியில் வளர்ந்தாலும் எமது தேசிய விடுதலைக்கு உறுதியாக குரல் எழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்கிற தேசிய தலைவரின் வார்த்தைகள் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் ஆன்மாக்களை தட்டி எழுப்ப வேண்டிய தருணம் இது. இன்றுமுதல் இந்த நொடி முதல் நாம் செயல்பட தொடங்க வேண்டும். நமக்கான விடுதலை இதோ நம் கையருகே இருக்கிறது. நமக்கான விடுதலை உணர்வு வானத்தைவிட உயரமானது. நம்மை யாராலும் தகர்க்க முடியாது. இந்த உலகம் நம்மை தவிர்த்து இயங்கவும் முடியாது. ஆகவே நாம் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இறுதியாக தேசிய தலைவரின் வார்த்தைகளை பதிவு செய்கிறோம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொண்ட எம் மக்களை எந்த தடைகளாலும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆகாயத்திலிருந்து விழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்து விட முடியாது. எம் மக்கள் துன்ப சிலுவையை சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புகளையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது லட்சிய உறுதி மேலும் உரமாகி இருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது".

-கண்மணி.

Comments