மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு...



உயிர்தந்து எமைக்காத்த உத்தமர் புகழ்பாடி எம் நினைவுப்பதிவுகளை நெஞ்சினில் நிறுத்தி........

யாழ் மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்

’முருகதாசன் வருணகுலசிங்கம்’ என்னும் தீக்குளித்த இளைஞரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும், விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது. என்பதே எமது வேணவாவாகும்

என்றும் அவன் நிணைவுடன்........

எங்களுக்காய் உயிர்தந்த உத்தமனே எங்கள் நெஞ்சமெலாம்

விடுதலைத் தீ மூட்டிய வடிவே ,வீதிக்கு வந்து சந்ததிகளெல்லாம்

சங்கநாதம் முழங்கவைத்த, முருகதாஸ் எனும் முன்னவனே..

உனை, மறத்தலென்பது.. முடியாது.? உனை நினைத்தலென்பது,

அழியாது,

ஜ்யனே.. ஆழிசூழ் உலகு உள்ளவரை அன்னை மண் உனை

மறவாது.

மாசிலாத்தலைவன் புகழ் உள்ளவரை உன்புகழும் அழியாது

எங்களுக்காய் எரிந்த நெருப்பே நீ மூட்டிய பெருநெருப்பால்

பேரலைபோல் புலம்பெயர் தேச்மெங்கும்,

புலிமறவர் சேனையென புறப்பட்டார் தமிழிளைஞர்

போய் வருக என உனக்கு விடை கொடுத்து

புதிய வரலாறு எழுதப் புறப்பட்டார்

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போனது என்று

எண்ணும் போது , இல்லை?

அது தொடக்கம் என தமிழீழத் தனியரசை நிறுவுகின்ற

தன்னாட்சி உரிமைக்காய்

தந்தை செல்வா சொன்னவற்றை தலைவன் வழி தொடர்ந்து

தமிழீழப் பணி முடிப்போம் எனும் வேள்வியை

மூட்டிய முருகதாசா.....

நீயும் எங்கள் கல்லறையின் காவிய நாயகனே

என்றும் எங்கள் இதயத்துள் நீ.....

நீ மூட்டிய தீயின் நினைவாய்...

1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.

நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு செய்கிறது ஒரு வெளிநாட்டு ஊடகம். அவன் மரணத்தின் பின்னால் உள்ள செய்தி என்ன ஆராய்ந்து சொல்கிறது பார்வையாளனுக்கு.

அவனது நினைவில் தொடங்கித் தொடர்கிறது சுவிஸ் அரச இத்தாலிய மொழித் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ' Falo ' நிகழ்ச்சியில் கடந்த 07ந் திகதி இரவு ஒளிபரப்பான 'Era un giovane Tamil ' எனும் விவரணம். இந்த தியாக மரணத்தின் செய்தியறிந்து துயரமுறும் மற்றுமொரு தமிழ் இளைஞி நிதிலாவின் மன உணர்வுகளின் வழி தொடர்ந்து தொகுக்கப்டும் விவரணத்தில், முருகதாசனின் மறைவுச்செய்தி, அவர்கள் பெற்றோர், நண்பர்களின் , உளக்குறிப்புக்கள், ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர்களைப் பறிகொடுத்த புலம்பெயர் உறவுகளின் சாட்சியங்கள், புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்கள், மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் எனப் பல குறிப்புக்களுடன் ஈழத்தமிழர் பிரச்சனை ஆராயப்படுகிறது.

ஒரு செய்தியாளனுக்கேகுரிய ஆய்வு, தகவல், உண்மை, என்னும் வகைகளில், நிறைவாகத் தொடர்கிறது விவரணம். செய்தியாளர் Dinorah Cervini யின் நேர்த்தியான தொகுப்பு, சுமார் ஒரு இலட்சத்துக்குமதிகமான இந்நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு, ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.

இனி,

உயிர்தந்து எமைக்காத்த உத்தமன் புகழ்பாடி எம் நினைவுப்பதிவுகளை நெஞ்சினில் நிறுத்தி........

பதிவு 1

ஈழத்தமிழரின் அறப் போராட்டம் அவசியம் உடன் தொடங்கப்பட வேண்டும் !

நமக்குள் உள்ள முரண்பாடுகளால் ஒருவருக்கு ஒருவர் அறிக்கைகள் விட்டும் வாதப் பிரதி வாதங்களிலும் காலத்தை வீணடிக்கிறோம். அதனால் சிங்களத்துக்குத் தேவையான கால இழுத்தடிப்புகளுக்கும் குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கவும் வசதி கொடுத்து வருகிறோம். சிங்களமும் தனது தமிழ் இன அழிப்பைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும், ஈழ மண் பறிப்பு மற்றும் தமிழ் மக்களை இராணுவ அழுத்தங்களால் கொத்தடிமைகளாக்கி வருகிறது.

  • அண்மையில் அல் ஜசீரா தொலைக் காட்சியில் முல்லைத் தீவுப் பகுதிகளில் புதிதாகக் கட்டப் பட்ட ஓடுகளால் கூரையிடப் பட்ட கல் வீடுகளில் சிங்கள மக்கள் குதூகலமாக உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதைக் காண்பிக்கப் பட்டது. இரண்டு அறைகள் பெரிய ஹால் சமையலறை கழிப்பறை வசதிகள் அவர்களுக்கு. அவற்றை அரசு தமக்கு இலவசமாகத் தந்துள்ளது என்றனர் அங்கு வாழ்ந்து வரும் சிங்கள மக்கள்.

அதே சமயம் அவர்களே அந்ந இடம் முன்னர் தமிழர்களுடையது இப்போ தமிழர்களுக்கு பிரதான வீதிகளுக்கு அப்பால் அரசால் இடம் கொடுக்கப் பட்டுள்ளது எனக் காணொளி நிருபர்களுக்குக் கூறினார்கள்.

மறு புறத்தே போரினால் விரட்டியடிக்கப்பட்டு முட்கம்பி முகாமிலிருந்து மீளக்குடியமர்த்தப் பட்;ட எமது தமிழ் மக்கள் போரினால் இடிபட்டுச் சேதமடைந்த வீடு ஒன்றினுள் 3 அல்லது 4 குடும்பங்களைச் சேர்ந்த 26 தமிழர்கள் ஒன்றாக வாழ வைக்கப் பட்டுள்ளனர். இதனை அல் ஜசீரா காண்பித்ததுடன் அங்கு வாழ்ந்த பெண்களே நேரடியாக முனம் தெரியத் தொலைக் காட்சியில் கூறியுள்ளனர்.

இப்போது கிளிநொச்சியில் மீள் குடியேற்றப் பட்ட இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் போடப் பட்டுள்ள செய்தியும் அந்தச் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்ட செய்தியும் எமக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கொல்லப் பட்டு அடையாளம் காணப்பட்ட அந்த இரு பெண்களும் தொலைக் காட்சியில் முகம்காட்டி தமது அவலத்தை வெளி உலகுக்குச் சொன்ன பெண்களே என்பதே அந்தச் சந்தேகம். பொது மக்களால் அந்ந இருவருக்கும் நேர்ந்த கதி அறியப்பட வேண்டும் என்பதற்காகவே அந்ந இரு சடலங்களும் கிணற்றில் போடப்பட்டு பின்னர் இராணுவத்தால் எங்கோ புதைப்பதற்கு எடுத்துச் செல்லப் பட்டன. இதன் மூலம் மீளக் குடியமர்த்தப் பட்டவர்களுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கையும் தேவையற்றுப் பயமின்றி வாயைத் திறப்பவர்களுக்கு ஏற்படும் கதி என்ன என்ற சேதியும் சொல்லப் பட்டுள்ளது. இத்தயை பின்னணியில் தமிழர் தேசியக் கூட்டணியோ அல்லது அதன் தலைவர் சம்பந்தனோ மரண பயத்தில் மட்டுமே செயற்பட முடியும் அப்படித்தான் செயற் பட்டார்கள் செயற் படுகிறார்கள் செயற் படவும் முடியும்.

இன்று சிங்கள இராணுவத் தளபதியாக இருந்து போரில் வெற்றி பெற்றுக் கொடுத்த சரத் பொன்சேகாவே மரண தண்டனைக் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார் என்றால் மற்றவர் நிலை எப்படி யிருக்கும்? எனவேதான் புலத்தில் தமிழரால் நடத்தப்பட வேண்டிய அறப் போராட்டத்தில் கூட இலங்கை அரசியற் கட்சிகள் வெளிப்படையாக ஆதரிக்கவோ ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடவோ முடியாதுள்ள நிலையை புலத்தில் உள்ள நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • சிங்களக் குடியேற்றம் வன்னிப் பகுதிகளுக்கு மட்டும் உரிய ஒன்றாகக் கணக்கெடுக்க கூடாது. வடபகுதிகளில் உள்ள அனைத்து கட்டுமான ஒப்பந்தங்கள் அத்தனையும் சீனா இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தமிழர் யாரும் வேண்டுமானால் நிதி முதலீடு செய்யலாமே அல்லாது முகாமைத்துவம் செலுத்த இடம் அளிக்கப்பட மாட்டார்கள்.

அப்படியானால் எல்லாப் பணிகளிலும் தமிழரின் நிலை கூலித் தொழிலாளர் என்பதற்கு அப்பால் எதுவும் இருக்காது. தமிழரின் விவசாய மற்றும் மீன்பிடி கடல் வளங்களும் நிலங்களும் அதி உயர் பாதுகாப்பு வலையங்களால் அபகரிக்கப் பட்டுவிட்டன. இந்நிலையில் எமது உறவுகளை நாம் கையேந்திப் பிச்சை பெறும் ஏதிலிகளாக மட்டுமே பார்க்க முடியும். வேண்டுமானால் நம்மால் பணத்தை மட்டுமே அனுப்ப முடியும் அந்தப் பணமும் அரசின் மூலமாக அதன் பணபலத்தை வலுவூட்ட வேண்டும். அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

ஆனால் நாம் அனுப்பும் ஒவ்வொரு சதமும் எம்மக்களை சிங்கள மேலாதிக்க முதலாளித்துவ அடிமை வாழ்வில் பிச்சைக்காரர்களாக வைத்திருக்கவே உதவும். அதே நேரத்தில் எமது பணத்தைக் கொண்டே சிங்களத்தின் பொருளாதாரம் வலுப் படுத்தப் பெறும். அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச் சலுகையும் அதைப் பெறுவதற்கான மனித உரிமைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய தேவையும் இருக்காது.

போர் முடிந்து விட்ட நிலையிலும் ரஷியாவிடமிருந்து 300 கோடிக்கு ஆயுதங்களும் இராணுவ உதவிகளும் இராணுவ பயிற்சிகளும் பெற வேண்டிய தேவை என்ன? மகிந்தர் பேசுவது சகேதரத்துவம் சமத்துவம் அண்ணன் தம்பிகள் ஒரு தாய் மக்கள் என்ற கொச்சைத் தமிழ்ப் பசப்பு வார்த்தைகள் ஆனால் செய்வது அத்தனையும் அப்பட்டமான அராஜகம்.

  • அங்கே அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தமிழ் மக்களைத் தற் கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு அதிகரித்து வரும் வேளையில் புலத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானமா நாடுகடந்ந அரசா எனப் பட்டிமன்றம் நடத்திக் காலத்தை வீணடிக்கிறோம். தமிழீழப் போராட்டத்துக்கு ஆதாரமான பண பலம் அத்தனையும் மே 2009 முதல் மாயமாகி விட்ட நிலையில் இயக்கத்தின் அமைப்பாளர்களும் அவர்களின் செயற் பாடுகளும் காணாமல் போயுள்ளன.

முக்கியமான இராஜதந்திர மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு சில தன்னார்வ அமைப்புகளும் தனி நபர்களும் பண வசதி இன்மையால் முழுமையான அளவில் செயற்பட முடியாது தவிக்கின்றனர். இத்தனைக்கும் கோவில்களில் வழமைபோல் ஆடம்பர விழாக்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவற்றால் வரும் வருவாய்கள் எமது இனம் சார்ந்த அமைதிவழி அரசியல் செயற்பாடுகளுக்கு உதவாது இருக்கும் நிலையே தெரிகிறது.

இவற்றின் செலவுகள் தமிழ் மக்களின் தலைகளில் கட்டிவிடும் அதே வேளையில் அவற்றால் கிடைக்கும் வருவாய் தமிழரின் அரசியல் அமைதி வழிச் செயற்பாடுகளுக்குக் கிடைப்பதில்லை. இதற்கிடையில் உலக நடைமுறை உண்மைகளை உணராது தலைவர் மீண்டும் வந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் பெற்றுத் தருவார் என ஆரூடம் கூறும் அறிவாளிகளையும் காண முடிகிறது. இப்படிக் கூறுபவர்கள் அரசின் கையாட்கள் ஆகவும் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்குள் எழாது இருப்பதே எமது ஒற்றை வழிச் சிந்தனையின் வெளிப்பாடுதான்.

இத்தகைய பின்னணியில்; இந்திய மத்திய மாநில அரசுகளின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் சென்னையில் 07.06.2009ல் இடம் பெற்ற பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய மூன்றாவது தமிழ் மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைச் சட்ட அமெரிக்க மேதைகளான ப்றூஸ் ஃபெயின் மற்றும் ப்ஃறான்சிஸ் பொயில் நிகழ்த்திய உரைகளில் வழங்கிய பெறுமதிமிக்க சட்ட ஆலோசனைகளை வெறும் கைதட்டல்களோடு தமிழினம் மறந்து விட்ட பரிதாபம் தெரிகிறது.

பொயில் அவர்கள் பொஸ்னியாவில் கொசோவோ மக்களின் இன அழிப்புக் குற்றங்களை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வாதாடி நீதிபெற்று கொசோவோ தனிநாடாக உருவாக உதவியவர். இலங்கை இந்திய அரசுகள் ஈழத் தமிழருக்கு இறையாண்மையும் சுய நிர்ணய உரிமையும் கிடையாது என வாய்க்கு வாய் பேசக் கேட்டுக் காதுகள் சலித்து விட்ட நிலையில் நம்மில் பலர் அதுவே உண்மை என நம்பியும் பிறரை நம்ப வைத்தும் வருகின்றனர்.

இதோ பொயிலின் பேச்சிலிருந்து சில வரிகள் தமிழில் தரப்படுகின்றன,

“நான் இங்கே இரண்டு அடிப்படைக் கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்: முதலாவது ஸ்ரீலங்காவில் வாழுகின்ற தமிழர்கள் இன அழிப்புக்கு பலியாக்கப் பட்டுள்ளனர். இரண்டாவது, சர்வதேசச் சட்டங்களின் படியும்; அவற்றின் நடைமுறைக்கு ஒப்பவும் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பினால் தனியாகத் தனி அரசு அமைத்துக் கொள்ளும் உரிமை உட்பட சுய நிர்ணய உரிமை உள்ளது. அவர்கள் இன அழிப்புக்கு உள்ளாகி இருக்கும் உண்மையானது அவர்கள் விரும்பும் பட்சத்தில் தனி அரசு அமைப்பது உட்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான அவர்களின் உரிமையை மேலும் வலுப் படுத்துகிறது.”

மேலும் அவரது பேச்சில் இந்தியாவின் நிலைபற்றிய வாதத்துக:கு இப்படிக் கூறுகிறார்-

  • “ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும் தனி அரசு உரிமையையும் இந்திய அரசு அங்கீகரித்தால், தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழரும் அதே உரிமைகளின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்து விடுவர் என்பதை ஆதாரமாகக் கொண்டு வாதிட்டு வருகிறது. சர்வதேசச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் இது ஒரு தப்பான இரட்டைவாதம் என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஸ்ரீலங்காவில் உள்ள தமிழரைப் பாதுகாக்கும் விடையத்தில் இந்திய அரசின் செயலற்ற தன்மைக்கு இதனை ஒரு காரணமாகப் பயன் படுத்தக் கூடாது”.

பொயில் தமது உரையை இப்படி முடித்துள்ளார்-

  • “அதீத எச்சரிக்கை உணர்வால் இந்தியா இந்த நேரத்தில் அந்த அளவுக்குப் போகத் தயாரில்லை என்றாலும் கூட அது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்பதாலும் சர்வதேசச் சட்டங்கள் சம்பிரதாயங்களின் படி இந்தியாவுக்கு உள்ள உரிமைகள் கடப்பாடுகளின் அடிப்படையில் , ஆகக் குறைந்ந பட்சம் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரின் பிதுராஜிய கடமையை நிறை வேற்ற வேண்டும். ஆகவேதான் இந்தியா ஸ்ரீலங்கா அரசை ஹேக்கில் உள்ள சரவதேச நீதி மன்றில் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரை இன அழிப்பு செய்யும் குற்ற விசாரணைக்கான வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அத்தகைய வழக்கில் ஸ்ரீலங்கா அரசை ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர் மீதான எல்லா வகையான இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் தொடர்ந்து செய்வதைத் தவிர்க்கவும் தற்காலிகத் தடை உத்தரவு வழங்க இந்தியா கோர வேண்டும். டக்அவ், அவுஸ்விச், கம்போடியா, சப்ரா- சட்டில்லா, ஸிறபிறெனிக்கா, றுவண்டா, கொசோவோ இப்பொழுது வன்னியில் தவிக்கும் ஆவிகளுக்கு இதைவிடக் குறைவான வேறு எவையும் போதாது.”

இப்படிப் பேசி 6 மாதங்களுக்கு மேலாகியும் எவரும் எதுவும் செய்ய வில்ல என்பது மிக வேதனையான விடையம். இந்திய மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இம் மகாநாடு பெருமளவில் அறியப்படாமலும் தமிழக அரசியல்வாதிகளின் கவனத்தைப் பெறாமலும் போய்விட்டது.

தமிழக அரசியல் கட்சிகள் , தமிழ் உணர்வாளர்கள் மற்றும் உலகத் தமிழ் அமைப்புகளும் இந்திய மத்திய மாநில அரசுகளையும் அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இலங்கை அரசை இந்திய அரசு சர்வ தேச நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் சார்பான வழக்கைத் தாக்கல் செய்ய வைக்க வேண்டும்.

எமது துன்ப துயரங்கள் எல்லாம் வெறும் பட்டியலிடவும் பட்டிமன்ற விவாதமும் செய்யவும் பயன்படுத்தும் நிலை மாற்றம் பெற வேண்டும். இனியாவது எமது தமிழர் பேரவைகள் போன்ற அமைப்புகள் உலக நீதி மன்றில் எமது மக்களுக்காள நீதியும் நிவாரணமும் கோரும் வகையில் தாமும் செயற்பட்டுத் தமிழக அமைப்புகளையும் செயற்பட வைப்பார்களா? இனிமேலும் ஊர்வலம் ஆர்ப்பாட்டங்களால் பயனில்லை ஆனால் ஆக்க ப+ர்வமான செயற்பாடுகளே எமக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்ற உண்மையை உணர்வார்களாக.

பதிவு 2

தேவை இரண்டாவது எழுச்சி

வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.

இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.

அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.

எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.

சிறி லங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.

ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

எமது கவலையைப் பற்றிப் பேசியவாறு எமது கடமையை மறந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? இது தகுமா?

வானம் பார்த்த பூமியைப்; போன்று, ~எம் உறவுகள் எமக்கு வாழ்வு தேடித் தருவார்கள்| என்ற எதிர்பார்ப்புடன் எமது மக்கள் எம்மைப் பார்த்து நிற்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு நாம் கூறப்போகும் பதில் என்ன?

  • மறுபுறம், ~புலி எதிர்ப்பு| என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் வவுனியா வதைமுகாம்களைப் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.

எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற - முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத - கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் - மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் - குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.

இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.

போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது| என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.

  • உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய ~நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!| எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.

  • மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.

நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.

- இன்போ தமிழ் குழுமம் -

Comments