தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை இந்திய நீதிமன்றம் மே மாத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை 1வது தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் இந்த வழக்கை விசாரிக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், வழக்கறிஞர் ஆகியோர் நீதிபதி பி.ராமலிங்கத்திடம் அறிக்கை கொடுத்தனர்.
இந்த வழக்கை நீதிபதி வரும் மே மாதத்துக்கு தள்ளி வைத்தார். தமிழீழத் தேசியத் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா கூறிவருகின்றது. எனினும் அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பின்னடித்து வருகின்றது. இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆதாரங்களை சிறிலங்கா வழங்கிவிட்டதாக அறிவித்திருந்த நிலையில், அதனை சி.பி.ஐ மறுத்திருந்தது.
அத்துடன், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ தேசியத் தலைவரின் மரணம் குறித்து உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் சி.பி.ஐ கோரியிரும் இருந்தது.
எனினும், இதுவரை அவ்வாறான உறுதியான ஆதாரங்கள் எதனையும் சிறிலங்கா வழங்கவில்லை எனத் தெரியவருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் இருவரும் தலைமறைவாக இருப்பதாக கருதப்பட்டு வழக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Comments