தேசிய தலைவரின் தீர்க்கதரிசனம்

ஒரு படைத்தலைவன் நுண்ணிய பகுப்பாய்வோடு செயல்பட வேண்டும். மந்த புத்தியுடைய படை வெற்றியடைய முடியாது. ஒரு படைத்தலைவனுக்குரிய ஆளுமை, ஆண்மை, அச்சமற்ற தன்மை, நெஞ்சுறுதி இவற்றையெல்லாம் தாண்டி முடிவெடுக்கும் திறனென்பது அடிப்படை பண்பாகும். எந்த நிலையிலும் தோல்வியென்பது படைத்தலைவனுக்கு தயக்கத்தை தரக்கூடாது.

அதேபோன்று வெற்றியென்பது மயக்கத்தையும் தரக்கூடாது. தோல்வியை பகுத்தாய்ந்து அதன் குறைகளை புரிந்துகொள்ளும் திறனும் வெற்றியை உள்வாங்கி அடுத்த நகர்வுக்கு அதை மாற்றியமைக்கும் அறிவும், படைத்தலைவர்களின் உளவியல் தன்மையாகும். வீழ்ந்தோம் என்பதை விட, நாம் வீழ்ந்தே கிடக்கவில்லை மீண்டும் எழுந்தோம் என்கிற உள்மனச் செய்தி படைத் தலைவனுக்கு உள்ளிருந்து இயக்கும் ஆற்றலாயிருக்கும். அப்போதுதான் அவன் தன்னுடைய எதிர் நலனையும், கடந்த நிகழ்வுகளையும் சமன் செய்து தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அதைப்போன்றே ஒரு படைத்தலைவனின் மனநிலையானது ஏற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும். ஒரு இழப்பை ஏற்றுக் கொள்ளும்போதுதான் புலம்பலிலிருந்து வெளிவர முடியும். இல்லையெனில் இழந்தோம் இழந்தோமென வருந்திக் கொண்டிருக்கிற மனநிலையால் தமது படையை தோல்வி நிலைக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடும்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ போராட்ட வரலற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மேற்கூறிய அனைத்து பண்புகளும், நமது தேசிய தலைவரிடம் குவிந்து கிடப்பதை காணமுடியும். தமிழீழ போராட்டத்திற்கு முதல் களபலியான சங்கர் தொடங்கி தொடர்ந்து 30,000 மாவீரர்களை பலியாக்கிய பின்னும், தமிழீழ கனவிலிருந்து அவர் ஒரு துளியளவு கூட தமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் பிறகுதான் ஒரு வல்லாதிக்க நாட்டிடம் இருப்பதைவிட மிகுந்த ஆற்றலும், லட்சியமும் நிறைந்த படையணிகளைக் கட்டியமைத்தார். லெப் சார்லஸ் அந்தோணி சிறப்புப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள் மேஜர் சோதியா படையணி, இரண்டாம் லெப் மாலதி படையணி, லெப் கேனல் குட்டிசிறி படையணி, கேப்டன் ஜெயந்தன் படையணி, பொதுப்போராளிகள் தமிழ்தேசிய துணைப்படை லெப் கேனல் விக்ரம் படையணி, கரும்புலிகள் அணி, இப்படி நீண்டு கொண்டே போகிறது அவர் கட்டியமைத்த படையணிகள். இப்படைப் பிரிவில் பங்காற்றிய புலிகள் நமது தேசிய தலைவரின் மனங்களுக்கு ஒத்திருந்தார்.

இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தார். கரும்புலிகளில் உயிர்கொடையாளர்கள் தமக்கான ஒரு நாடுகிடைக்க தமது உயிரை இன்முகத்தோடு அர்ப்பணித்தார்கள். உயிரிழப்பிற்கான தயக்கவுணர்வோ, உயிர் வாழ்வதற்கான விருப்பமோ, அவர்களுக்கு இருந்தது கிடையாது. இட்லரின் அடக்குமுறையில் சிக்கி சிறையிலே சித்ரவதைப்பட்டு தூக்குமேடையேறிய ஜூலியஸ் பூஸிக் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
""அடக்குமுறை இல்லாத விடுதலையுடன் கூடிய ஒரு நாட்டை நாங்கள் காணமாட்டோம் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் கூட எங்கள் இன்னுயிரை நாங்கள் தருவதற்கு தயாராய் இருப்பதற்கு காரணம் எங்கள் எதிர்கால சந்ததியர் மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதற்காகத்தான்.'' ஆக இந்தக் குறியீட்டின்படியே தமது உயிரை பணயமாக தருவதற்கு காரணம் எதிர்காலத்தில் எமது இனத்திற்கான ஒரு நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதைவிட மேலாக அப்படிப்பட்ட ஒரு நாடு தேவையென அந்த உயிர் கொடையாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த உணர்விற்கு உரமிட்டவர் நமது தேசிய தலைவர். தமது எதிர்காலம் குறித்த தன்னலம் சாராத இனநலனுக்கான அர்ப்பணிப்பு என்பது அவசியத்தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தால் இப்படிப்பட்ட தீரம் நிறைந்த உயிர் கொடையாளர் படையைக் கட்டியமைத்தார்.

தமிழீழ மண்ணெங்கும் மாவீரர் துயிலும் இடத்தை மிக நேர்த்தியாகக் கட்டியமைத்தார். அந்த வீர வித்துக்களுக்கு அவர் செலுத்திய மரியாதை என்பதைவிட அந்த வித்துக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பை இது வெளிக்காட்டுகிறது. அந்த மாவீரர்களின் கல்லறைக்கருகே மெதுவாக உங்கள் பாதங்களை வையுங்கள். இங்கே மாவீரர்கள் துயில்கிறார்கள் என்ற வார்த்தையின் மூலம் தமிழீழத்தைக் கட்டியமைக்கும் மூலைக்கல்லாய் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள் எமது போராளிகள் என அவர் அறிவித்ததின் ஆழத்தை நாம் கூர்ந்துப் பார்த்தால் அந்த மண்ணையும் மக்களையும் எந்த அளவிற்கு தேசிய தலைவர் நேசித்தாம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில்தான் ஒரு தலைவன் தமது படையணியை நடத்திய நிலை தெளிவாக்கப்படுகிறது. மார்க்சிய ஆசான் தோழர் மா.ஓ.சொல்வதைப் போல மந்தயுத்தியுடைய படை வெற்றி பெறாது என்பதை எமது தலைவர் உணர்ந்திருந்த காரணத்தினால் தான் வெறும் போராளிகளாக மட்டும் புலிகளைப் படைத்தளிக்காமல் அவர்களை அறிவாளிகளாக வடிவமைத்தார். ஆகையால்தான் உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தமது அறிவாயுதங்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எதிர்கால திட்டம் குறித்து அவர் மிக கவனமாக சீர்தூக்கிப் பார்த்தார். இப்போது இலங்கையிலே நடைபெற்று முடிந்த தேர்தல் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என பல அரசியல் ஆய்வார்களும், ஊடகவியல் வல்லுனர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நமது தேசியத் தலைவர் இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பினார். அவர் சொல்கிறார், ""எமது பிரச்சனைக்குத் தீர்வு காண ஆளுங்கட்சி தீர்மானிப்பதும், எதிர்கட்சி எதிர்ப்பதும், பின்பு எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும், அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக அதே பணியில் கடந்த 50 வருடங்களாக மேடையேறி வருகிறது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிப் பீடமேறும் இரு பெறும் சிங்கள அரசியல் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இவைதான் நாடகத்தின் கதாநாயகர்கள். காலத்திற்கு காலம் மாறியபோதும், கதையில் கரு மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.'' சிந்தித்துப்பாருங்கள். இன்று ஊடகங்களில் வரும் செய்திகள் நம்மை எல்லையில்லா வியப்பிற்கே அழைத்துச் செல்கிறது. சரத் பொன்சேகா ஒரு காலத்தில் ராஜபக்சேவின் கைத்தடியாக செயல்பட்டவர். இன்று வரும் செய்திகளில் சரத்பொன்சேகா ராஜபக்சேவை கொலை செய்ய முயற்சித்ததாகவும், குடும்பத்தோடு அழிக்க முற்பட்டதாகவும் புதுப்புது குற்றச்சாட்டுகள் ராஜபக்சேவின் கூடாரத்திலிருந்து வெளிவருகிறது.

சரத்பொன்சேகாவோ, தம்மை கைது செய்வதற்கு ராஜபக்சே திட்டமிடுவதாகவும், 1000 ராணுவ வீரர்களை வைத்து தம்மை முடக்குவதாகவும், தமிழர்களைக் கருவறுத்த அந்த பாரிய சமரில் நடந்த உண்மைகளை சொல்லப் போவதாகவும், தமது ஆதரவாளர்களை மிரட்டி கைது செய்வதாகவும் உலறலோடு கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரங்கோர்த்து தமிழர்களை கருவறுத்த இந்த சண்டாளர்கள் இன்று எதிரெதிர் முகாம்களில் நீங்கள் மீண்டும் நமது தேசிய தலைவர் கூறியதை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். இலங்கையின் கேவலமான அரசியலை எத்துணை தீர்க்கத்தரிசனமாய் எடுத்துக் கூறியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்.

அப்படிப்பட்ட தலைவர் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தமது பன்னாட்டுக் கூட்டாளிகளோடு இணைந்து நெருங்குகிறது என்று தெரிந்தவுடன் ஒரே நாளில் கிளிநொச்சி நகரத்தையே துடைத்தெடுத்துச் சென்ற அவருக்கு முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்படுவோமென்பது தெரியாதா? இந்த அப்பாவி மக்களைக் கொன்ற வெற்றியை இயக்கத்திற்கெதிரான வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே போன்றோருக்கு விளக்கிச் சொல்லும் தருணம் இப்போது வந்திருக்கிறது. எமது தலைமையின் தீர்க்கத் தரிசனத்தை சிங்கள இனவெறி கூட்டத்திற்கு புரிய வைக்கும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. இது செயலாற்றும் நேரம்.

முன்னைக் காட்டிலும் வேகமாக, விவேகமாக, நமது நகர்வு அமைய வேண்டும் முதற்கட்டமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழீழ தனியரசுதான் என்கிற தமது நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இது வெற்றிக்கான நகர்வின் முதல்கட்டம் நமது தலைவரின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தது எனவும், கிடைக்கவில்லை எனவும் சிதம்பரம் கூட்டம் மாறி மாறிச் சொல்கிறதே, இது அடுத்த வெற்றி. தமிழீழ அரசு அமைவதற்கான அனைத்து அடிப்படைக்கும், தெளிவாகிவிட்டது. இதை நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தீர்க்கதரிசனமாய் உணர்ந்திருந்தார்.

-கண்மணி.

Comments