ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் மட்டும் கரையேறுவது சாத்தியமாகாது!

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இரண்டாவது அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஒரு முனைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியமும் இப்போது பலத்த சிதைவினை எதிர் கொள்ள வேண்டிய நிலையை அடைந்துள்ளது.

தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்படக் கூடாது என்று கருதுபவர்களும் முடிவெடுக்க முடியாத நிலையில் திக்கு முக்காடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்ட அமைப்புக்கெதிராக ஒட்டுக் குழுக்களே போட்டியிட்டன என்பதற்கு மாறாகத் தற்போது, தமிழீழ அரசியல் களம் பலமாகச் சிதறிக் கிடக்கின்றது.

சிங்கள தேசத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சிலரைப் பிரித்தெடுக்க முடிந்திருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார பீடத்தினர் மேலும் சிலரை வெளியே அனுப்பிச் சிதைவுகளைத் தாமாகவே உருவாக்கியும் உள்ளார்கள். சிங்கள தேசத்தால் வாங்கப்பட முடிந்த சிவானந்தன் கிஷோரும், கே. தங்கேஸ்வரியும் அரச தரப்பு வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள். அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆபத்துக்களும் சேதங்களும் அதிகம் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன், பத்மினி, இறுதியாக வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பல் போன்றவர்களது தனிப்பட்ட செல்வாக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் பெரும் சேதத்தை உருவாக்கலாம்.

இவர்களில், சிவாஜிலிங்கமும், சிறிகாந்தாவும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், கஜேந்திரன், பத்மினி ஆகியோரது வெளியேற்றத்திற்கான காரணங்கள் உண்மைத் தன்மை இல்லாததாகவே தெரிகின்றது. இந்த இருவருக்கும் எதிரான கூட்டமைப்புத் தலைமையின் பிடிவாதம் காரணமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த வெளியேற்றமும், வெளியேறலும் கூட்டமைப்பால் நியாயப்படுத்த முடியாமல் போனால், கூட்டமைப்புக் குறித்த நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகப் போய்விடும். தீவிர தமிழ்த் தேசியவாதிகளான கஜேந்திரனும், பத்மினியும் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாகிப் போய்விடும்.

கடந்த காலத்தில், தமிழ் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி ஒரே அணிக்கு வாக்களிப்பதையே தமது பலமாகக் கருதியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறாக எடை போட்டு விட்டதாகவே கருதத் தோன்றுகிறது. அந்த மக்களது ஒற்றுமைக்கு ஏற்ற படியான சரியான நெறிப்படுத்தப்பட்ட கொள்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. ஒற்றுமையின் பெயரால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களின் இலட்சியப் பாதையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் வேடமேற்றுக் காமடி அரசியல் நடாத்தியமையும் தமிழீழ மக்கள் மறந்துவிடவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியை தனது சொத்தாக மாற்றி, கொழும்பில் கோலோச்ச நினைத்த ஆனந்தசங்கரிக்கு நேர்ந்த அவலத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. இலட்சியம் தொலைக்கப்பட்ட அணிக்கு ஒற்றுமையின் பெயரால் அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது டக்கிளசிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

தற்போது ஒற்றுமை என்பதை விடவும் இலட்சியம் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீதையாக மாறித் தனது  தூய்மையை நிரூபிக்காவிட்டாலும், தமிழ் மக்களிடம் எழுந்துள்ள கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கொடுத்தே ஆகவேண்டும்.

1) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முள்வேலி முகாமுக்குள் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களையும் சென்று பார்ப்பதற்கே சிங்கள அரசு மறுத்த போது, அந்த மக்களுக்காக போராடத் தவறியது ஏன்?

2) இறுதி யுத்த காலத்தில் போர்க் குற்றம் புரிந்ததாக மனச்சாட்சியுள்ள நாடுகளாலும், அமைப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மகிந்த சகோதரர்களோடும், சரத் பொன்சேகாவோடும் ஜனாதிபதித் தேர்தலின்போது சமரசம் காண முற்பட்டதும், சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்கியதும் எதற்காக?

3) விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியத்திற்கான பலமான சக்தியாக எழுந்து நிற்கும் புலம்கெயர் தமிழ் அமைப்புக்களது அழைப்புக்களை உதாசீனம் செய்தது எதற்காக?

4) தமிழின அழிப்புப் போரை பின்நின்று நடாத்தியதோடல்லாமல், அதை நெறிப்படுத்திய இந்தியா தமிழீழ மக்களை இறுதி யுத்தத்தின்போது காப்பாற்ற முனைந்த மேற்குலகையும் தடுத்து நிறுத்தியது. அத்துடன் நிறுத்திவிடாமல், மனச்சாட்சியே இல்லாமல் மேற்குலகால் ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர முற்பட்ட சிறிலங்கா அரசுக்கெதிரான குற்றப் பிரேரணையையும் முறியடித்தது. அந்த இந்திய அரசின் நெறிப்படுத்தலுடனான உங்களது அரசியல் பயணம் தமிழீழ மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது?

5) கஜேந்திரன், பத்மினி போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு இந்தத் தேர்தலில் இடம் கொடுக்காமல் மறுத்தது இந்திய நிர்ப்பந்தத்தினால் என்ற குற்றச்சாட்டை எவ்வாறு நிராகரிக்கப் போகின்றீர்கள்?

6) முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான இன்று வரையான காலப் பகுதியில் அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கான உங்களது நகர்வு போதுமானது என்று எண்ணுகிறீர்களா?

இப்படி எத்தனையோ கேள்விகள் தமிழீழ மக்கள் மனங்களில் உள்ளன. அதற்குச் சரியான பதில்களைக் கொடுக்கத் தவறினால் ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் நீங்கள் கரையேறுவது சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது.

- ஈழநாடு (பாரிஸ்)

Comments