உண்மையான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணைகள் பற்றி பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் மேலதிக விபரங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் இணைந்து அரசியல் வேலை செய்தல் சட்ட ஆலோசனை வழங்கல் என்பனவும் பயங்கரவாத நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்விசாரணைகளில் தமிழர் தரப்பில் வாதாடிய வி. உருத்திரகுமாரன் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் உண்மையான அமைப்பு எதுவென கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது செயற்குழுவொன்றை நிறுவி அவர்கள் செயற்படுவதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் இப்போது வெளிப்படையாக செயற்படமுடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வெவ்வேறு பெயர்களில் அறிக்கைகள் வெளிவந்துள்ளனவே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சரியான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்கள் தாமாகவே அணிதிரளுவார்கள் அப்போது உண்மையானது எதுவென நீங்களே அறிந்துகொள்வீர்கள் என பதிலளித்தார்.

Comments