தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும்,

என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

மிகவும் அபாயகரமான இந்த முன் முயற்சி, தனி மனித கருத்துச் சுதந்திரம் என்பதற்கும் அப்பால், பாரியதொரு நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய பகுதியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் கொண்ட மேற்குலகில் வாழும் அனைவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லுவதையும், எழுதுவதையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு எதிர்க் கருத்து வருவதையும் தவிர்க்க முடியாது. இந்த நிலையில், தனக்குப் பிடிக்காத கருத்தை ஒருவர் வைத்துவிட்டால், அவரை இனக் குழுமத்துடனோ, பிராந்திய கண்ணோட்டத்துடனோ விமர்சிப்பது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியாது.

தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில், அத்தனை கட்சிகளும், அணிகளும், அதன் வேட்பாளர்களும் பல்வேறுபட்ட விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர் கொள்ளவும், அதற்குத் தெளிவான பதில்களைக் கொடுக்கவும், தம்மீதான சந்தேகங்களைப் போக்கவும் கடமைப்பாடுடையவர்களாகவே உள்ளார்கள். இதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. 25 வருடங்களுக்கும் மேலாகத் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, தமிழ்த் தேசத்தை மீட்கும் போர்க்களத்தில் தளபதியாக நின்ற கருணாவின் துரோகத்தைப் பார்த்த தமிழீழ மக்கள் தமக்கானவர்கள் என்று தீர்மானிப்பதற்கு முன்னதாகக் கேள்விகள் கேட்கவே செய்வார்கள்.

இயல்பாக மக்கள் மனதில் எழும், எழுப்பப்படும் அத்தனை கேள்விகளையும் பிராந்திய வாதங்களை உருவாக்கித் தவிர்த்துக் கொள்வதும், தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் மிகவும் கேவலமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் தமிழ்த் தேசியத்தின்மீது தொடுக்கப்படும் மிகக் கொடூரமான தாக்குதலாகவே இதனைக் கருத முடியும். தமிழீழத்தில் பிரதேச வாதத்தை உருவாக்கி, அதன் மூலம் தனது துரோகத்தை மறைக்க முயன்ற கருணாவினால் நடந்து முடிந்தவை போதும். புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்கள் மத்தியில் புதிய கருணாக்கள் பிராந்திய பிரிவினையை உருவாக்கி, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலத்தைச் சிதைக்க முற்படுவதை யாரும் அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழீழ மக்களுக்கேயான அரசியல் சக்தி தடுமாற்றம் கொள்ளக் கூடாது. தவறாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால், அது ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மீண்டும் புதை குழிக்குள் சென்றுவிடும் என்ற தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களின் அவாவை யாரும் அர்த்தமற்றது என்று புறந்தள்ளிவிட முடியாது. கடந்த கால ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தனி மனிதர்களாகவும், குழுக்களாகவும் அரசியல்வாதிகள் செய்த தவறுகளின் தண்டனையையே இன்று தமிழீழம் அனுபவித்து வருகின்றது. கடந்தகால படிப்பினைகயோடு தமக்கான அரசியலாளர்களைப் புடம்போட்டு அங்கீகரிப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முயற்சி செய்வான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில், ஒற்றுமையின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற அரசியல் அமைப்பை வெற்றியடையச் செய்வதற்காக ஈழத் தமிழர்கள் ‘சுயாட்சிக் கழகத்தின்’ இலட்சியப் பாதையைக் கூட நிராகரித்து, திரு. வி. நவரட்ணம் என்ற அன்னைய தமிழீழத் தேசிய சிற்பியையும் தோற்கடித்தார்கள். அப்போதுஇ அந்த ஒற்றுமையின் பெயரால் நாடாளுமன்றம் சென்ற திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டதுடன், தமக்குத் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையையும்தூக்கி எறிந்துவிட்டது என்பதெல்லாம் எங்களது வரலாற்றுப் படிப்பினை.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயருக்காக தமிழீழ தேசம் ஒன்றுபட வேண்டுமாயின், அந்த அமைப்பும் அதன் தலைமைகளும் தமிழ் மக்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் முகம் கொடுத்து அவற்றைத் தெளிவு படுத்த வேண்டும். அதனை எதிர்கொண்டு நிவர்த்தி செய்யத் தவறினால், அவர்களது குறிக்கோள் கேள்விக்குரியதாகவே இருக்கும். அவற்றைப் பிராந்தியவாதம் பேசுவதன் மூலம் மறைத்துவிட முயற்சிப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, அதுவே மிகப் பெரிய தமிழினத் துரோகமுமாகும்.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பெரும்பாலும் முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் சம்பந்தனையே குற்றவாளியாக்கி அவரை பதவி விலக வேண்டும் என கோருவது அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற காரணமாகவும் இருக்கலாம்’ என்ற ஊடகவியலாளர் இரா துரைரட்ணம் அவர்களது கருத்து ஏற்புடையதாக இல்லை. இங்கே பிராந்தியவாதம் எங்கே வருகின்றது. திரு. சம்பந்தன் அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளதால், அங்கு நடந்த, நடைபெறும் அத்தனை தவறுகளுக்கும் அவரே பொறுப்பாளராகக் கருதப்பட வேண்டியவராக இருக்கிறார். அதனால், இந்தக் கருத்துக்களை முன் வைப்பவர்களின் நோக்கத்தைப் பிராந்திய வாதம் கொண்டு மறைக்க முற்படுவது ஒரு நேர்மையான ஊடகவியலாளரின் செயலாக அமையாது.

அத்துடன், இப்பொழுது புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதாகும். சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மட்டக்களப்பு லேடி மனிங் வீதியைச் சேர்ந்தவர். சிலவேளை இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் நாராயணனின் உறவினர்கள் என புதிதாக கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களை துரோகிகள் என கூறுவதற்கு இவர்கள் எதையும் கண்டுபிடிப்பார்கள்.’ என்று திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் கூறுவது தமிழ்த் தேசியத்திற்கு நஞ்சூட்டும் செயலாகவே இருக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை, பொய்களுக்கு அப்பால், ஒரு ஈழத் தமிழன் தனக்குத் தெரிந்த ஒரு அரசியல் கருத்தைக் கூறுவது என்பது அவரது தனி உரிமை. அதில்இ தவறு இருந்தால் அவர் மட்டுமே கேள்வி கேட்கப்பட வேண்டியவர். குற்றம் இருந்தால், அவர் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்காக, பிராந்தியவாதத்தைக் கிளப்பி வட தமிழீழ மக்களுக்கும், தென் தமிழீழ மக்களுக்கும் இடையே பிரிவினை வாதத்தை உருவாக்க முயற்சிப்பது, சிங்கள தேசியவாதத்தின் சூழ்ச்சிக்குத் துணைபோகும் சதியின் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

‘பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார்.’ என்ற இரா. துரைரட்ணம் அவர்களது கூற்று ‘ஊடகவியலாளர்’ என்ற அவரது பாத்திரத்திற்கு ஏற்புடையதல்ல. நண்பர் ஒருவர் சொன்னார் என்று மிகப் பெரியதொரு குற்றச்சாட்டை ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் முன் வைப்பது எந்த ஊடகத் தர்மமோ தெரியவில்லை. ‘சம்பந்தனை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்ற வாக்கியம் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய மிகத் தவறான கொலை அச்சுறுத்தல். இதனை யார் விடுத்திருந்தாலும் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ஆதாரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும். திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அதில், யாரும் அவ்வாறு கூறியதாக நான் உணரவில்லை.

புலம்பெயர் தமிழர்கள் குறித்து திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும் ஏற்புடையவை அல்ல. ‘அண்மையில் சுவிஷ் நாட்டிற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கென்றி மகேந்திரன் ஆகியோரை நான் சந்தித்து கேட்ட போது ஒரு விடயத்தை சொன்னார்கள். தாங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் தரப்புடன் உறவுகளை பேணுவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதாக கூறிய அதேவேளை இங்கே பல பிரிவுகளாக இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்’ என்ற அவரது கூற்று முழுமையானது அல்ல.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பை நிகழ்த்திய ‘தமிழர் பேரவை’, திரு. விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையிலான ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஆகிய இரு அமைப்புக்களும் உயர் மட்டத்தில் தெளிவான சிந்தனைகளுடனும், ஒற்றுமையுணர்வுடனுமே செயற்பட்டு வருகின்றார்கள். ‘ஒரு அமைப்புடன் பேச்சு நடாத்துவதை மற்ற அமைப்பு விரும்பாது’ என்பது கற்பனை வாதமே. அரசியல் நிகழ்ச்சி நிரலில், மகிந்த ராஜபக்ஷவுடனும், சரத் பொன்சேகாவுடனும், ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்கள் நடாத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தேச அமைப்புக்களுடன் பேசுவதற்கு இப்படியான காரணங்கள் கற்பிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே நோக்கப்படுகின்றது.

இந்தியா குறித்த திரு. இரா. துரைரட்ணம் அவர்களது பார்வை, அவரது சொந்தக் கருத்து. ஆனாலும், திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி ஆகியோரது வெளியேற்றத்திற்கான காரணங்களாக திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் முன்வைத்திருக்கும் கருத்து இதுவரை திரு. இரா. சம்பந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இதன் பின்னணியிலுள்ள இந்திய நிகழ்ச்சி நிரல் குறித்த சந்தேகம் இதன் மூலமும் தீர்க்கப்படவில்லை என்பதே பலமான எதிர் வினைகள் உருவாகப் போதியதாக உள்ளது.

‘தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் கஜேந்திரன் பத்மினி போன்றவர்கள் இந்தியாவை விட மிக மோசமாக தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?’ என்ற திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ‘சிறிலங்காவை விட, இந்தியா குறைவான தமிழர்களையே கொன்று குவித்தது. ஆகவே, இந்திய நிகழ்ச்சி நிரலுடன் பயணிப்பதே தமிழ் மக்களின் இறப்புக்களைக் குறைக்க உதவும்’ என்று சொல்ல வருவதன் அர்த்தம் புரியவில்லை.

சி. பாலச்சந்திரன்

Comments