உலக செம்மொழி மாநாடு நாள் குறைப்பாகிக்கொண்டிருக்கிறது. இன்னும் 137 நாட்களில் செம்மொழி மாநாடு கோவையிலே கழக குடிகளின் ஆராவாரத்தோடு அரங்கேற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக மிக வேகமாக ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடிய பலர் இம்மாநாட்டிலே பங்கேற்று தமது ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
கருத்தரங்கு ஆங்கிலம் மற்றும் தமிழிலே நடைபெற இருப்பதாக ஊடகங்கள் இயம்புகின்றன. நான்கு திசைகளிலும் ஆய்வரங்கம் என தமது செய்திகளால் அவை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இச்செம்மொழி மாநாடு தமிழர்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என விளங்கவில்லை. இச்செம்மொழி மாநாடு குறித்து நமது விமர்சனங்களை வைப்பதற்கு முன்னர் எந்த தமிழ் உலகம் முழுக்க மேலோங்கி இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உலகமெங்கும் பன்னெடும் காலமாக தமிழ் தலைச்சிறந்து வாழ்ந்து வந்திருக்கிறது என்பதை எடுத்தியம்பும் காலமாக இதை கருதிக் கொள்ளலாம்.
ஆனால் மொழி என்பது வெறும் உணர்வு அல்ல. அது உயிர். தமிழர்கள் வாழும்போது மட்டுமே தமிழ் மொழி உயிர் வாழ முடியும். தமிழர்கள் இல்லாத போது தமிழ் மொழி எப்படி வாழமுடியும் என்பதை நாம் சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு எடுத்துக் கொண்ட கால அவகாசம், அதற்கான வேகம் எப்படிப்பட்டாவது இதை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற ஆதங்கம் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகளை விடுவிப்பதில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஒரே நாளில் முள்ளிவாய்க்காலின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் உயிர்களை பலிக்கொண்ட கோத்தபய ராஜபக்சே மீண்டுமாய் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கின்றார். தமிழ் ஈழத்திலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவே உள்ளது. இன ஒடுக்குமுறையும், அடையாளமாக திகழ்ந்த இன அழிப்பின் உச்சமாய் வாழ்ந்த ராஜபக்சே கருணாநிதியைத்தான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கின்றார். ஆகவே தான் உலகமெங்கும் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என ராஜபக்சேவை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருக்கும்போது கருணாநிதி ராஜபக்சேவை சந்திக்க தமது தூதர்களை அனுப்பி ராஜபக்சேவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
ராஜபக்சேவின் கொலைவெறிக்கு பயந்து தப்பித்து பிழைத்து தாய் தமிழகத்திற்கு வந்தால் இங்கே அவர்களை குற்றவாளிகளாக்கி முள்வேலியிலே அடைத்து வைத்து ராஜபக்சேவின் பணியை தொடரும் மிக சிறப்பான செயலை தமிழினத்தலைவரின் அரசு தவறு ஏதும் இன்றி சிறப்பாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. ஈழத்தின் செய்திகளின் படி ராஜபக்சே அரசின் ராணுவம் கைது செய்த தமிழ் இளைஞர்கள் நாள்தோறும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்களாம். காணாமல் போன சில நாட்களில் அவர்கள் பிணங்களாக ஏதோ ஒரு இடத்தில் வீசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
சில நாட்களாக ஓய்வடைந்திருந்த இனப்படுகொலை மீண்டும் அரங்கேற தொடங்கியிருக்கின்றது. இந்த காணாமல் போதல் என்கின்ற இன அழிப்பு மிக வேகமாக தொடர்வதாக செய்திகள் சொல்கின்றன. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்கிற அடையாளத்தோடு மக்களிலிருந்து வேறுபிரிக்கும் இளைஞர்கள் சில நாட்களுக்குள் வெளியே தெரியாதவாறு கொல்லப்படுவதாக வரும் கவலைக்குரிய செய்திகள் வரலாற்று மட்டுமல்ல, தமது வாழ்வியலுக்கும் நல்லதல்ல. ஒரு காலத்தில் இப்படி ஒட்டுமொத்தமாய் அழிக்கப்படும் தமிழ் இளைஞர்களால் இச்சமுதாயம் தமிழ் வாழ்வதற்கான அடையாளத்தை இழந்து விடுமோ என்கிற அச்ச உணர்வு தமிழ் உணர்வு கொண்ட, தமிழ் மேல் தாகம் கொண்ட, தமிழனாய் வாழ்கின்ற எல்லோர் மனங்களிலும் வடுவாய் வரிவரியாய் வலியோடு இருக்கின்றது.
மேலும் வன்னிப்பகுதியில் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்கள் ஒட்டு மொத்தமாய் அழிவதற்கு முன்னால் தங்கள் குடும்பங்களிலிருக்கும் ஆண் துணைகளை தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிங்கள குடியிருப்புக்கு அருகிலுள்ள நெல்லுக்குளம் பகுதியில் ஒரு படுகொலையும், வவுனியாவில் உள்ள புளியங்குளம் பகுதியில் ஒரு பெண் உயிரிழப்பும் மிகச் சாதாரணமான செய்தியாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் கிளிநொச்சிப் பகுதியில் தமது உறவினரை காணச் சென்ற ஒரு இளைஞர் காணாமல் போயிருக்கிறார்.
பிறகு அவர் கிணற்றிலே சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரின் பெயர் வேலுப்பிள்ளை சசி ரூபன் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. சற்று இருக்கம் தணிந்திருந்த ராணுவத்தின் அடக்குமுறைகளும், அநியாயங்களும் இப்போது மீண்டுமாய் உயிர்பெற்றிருக்கிறது. சிங்கள பேரினவாதத்தின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிய தொடங்கியிருக்கிறது. அது தமிழர்களின் குருதிக்காய் தாகத்தோடு அலைகிறது. மேலும் யாழ்பாணத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் சிங்கள மாணாக்கரின் எண்ணிக்கை மிகக் கூடுதலாக தொடர்கிறது. இது புறம். அங்கே சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு தமிழர்கள் அச்சமுற்று அடங்கிக் கிடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
காரணம் இரண்டு இனத்திற்கான சிக்கல் அங்கே நீடித்திருப்பதால் பெரும்பாண்மையான ஒரு பேரினவாதம் இனஅடக்குமுறையை கட்டவிழ்ப்பதற்காக அல்லது ஒரு இனத்தை அழித்தொழிப்பதற்காக இப்படிப்பட்ட செயல்புரிவதென்பது இயல்பானது. இந்த வலிமை பொருந்திய 21ஆம் நூற்றாண்டின் மாந்த நேயம் உயர்த்திப் பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாவு தண்டனை என்பதே சரியானதல்ல என்று உலகமெல்லாம் மாந்த நேயச் சிந்தனையாளர்கள் தமது மரியாதைக்குரிய குரலை உயர்த்திக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இன அடக்குமுறையாளர்களிடம் சிறுமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் உறவுகள் உலகெங்கும் சிதறி ஓடி வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில்தான் தமிழகத்திற்கும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்தார்கள். மற்ற நாடுகளுக்கும் நமக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் வேறொரு மொழி பேசும் இன அடையாளம் கொண்ட நாட்டிற்கு ஏதிலிகளாய் அடைக்கலம் புகுந்தார்கள். ஆனால் தமிழ்நாடு அவர்களுக்கு அப்படியல்ல. அவர்களை உறவினர்களாக வரவேற்க வேண்டிய உளப்பாங்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு மனிதனாகவாவது அவர்களை பார்க்க வேண்டிய அடிப்படை மாந்தநேய மற்றவர்களாக நாம் மாறி விட்டோமோ என்று நினைக்கும் போது இதயம் வலிக்கிறது. ஆம்! செங்கல்பட்டு ஏதிலி முகாமில் ஓர் இரவில் பல சித்ரவதைகளை அனுபவித்து இன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம் தமிழ் உறவுகளை காப்பாற்ற கரம் உயர்த்த வக்கற்றவர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே என்கின்ற குற்ற உணர்ச்சி, கையாளாகா தனம் நம்மை வாட்டி வதைக்கிறது.
தமிழக காவல்துறை அவர்களுக்கே உரிய சாதி அடையாளத்தோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். இயல்பாக அவர்களுக்கென்று சுயசிந்தனை இல்லை என்பது பல்வேறு காலக்கட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பலத் தருணங்களில் அவர்களின் செயல்களை ஊடகங்களும், நீதிமன்றங்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றன. ஆனாலும்கூட இயல்பாக அவர்களுக்குள் அடித்து அச்சுறுத்தல் என்கின்ற ஒரு உளவியல் அதன் கட்டமைப்பிலிருந்து விடுபடுவதற்கு அவர்களால் முடியவில்லை.
தொடர்ந்து இதே தவறை அவர்கள் செய்திருந்தும்கூட பல தருணங்களில் கண்டிக்கப்பட்டிருந்தும் கூட தமது வழியிலிருந்து அவர்கள் விலகவில்லை. சந்தேகத்தின் பேரிலும் மேலும் குரோதம் காரணமாகவும் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழ மக்கள் சிறையிலிருந்து பிணையில் வெளி வந்தவுடன் அவர்களை செங்கல்பட்டிலுள்ள ஒரு கிளை சிறையில் அடைத்து காரணமின்றி அடைக்கப்பட்டதை அவர்கள் கேட்பதற்காக இவர்கள் கூறும் அதே அறவழியில் உண்ணா நிலை இருந்து தம்மை வருத்திக் கொண்டு தமக்கான நீதி கேட்டபோது பல காலக்கட்டத்தில் பொய் வாக்குறுதியால் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தப்போது காக்கிச் சட்டைகளின் காட்டுமிராண்டித்தனம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டிருக்கிறது.
சொந்த தமிழ் மக்களை அடித்து மிதித்து கொடும் காயம் விளைவித்து மீண்டுமாய் அவர்களை கொடுஞ்சிறையில் அடைத்திருக்கிறார்கள். பலமுறை உண்ணாநிலை போராட்டம் நடத்தியும் விடிவு கிடைக்காத காரணத்தினால் அவர்கள் மிக அமைதியான முறையிலேயே அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத காவல்துறையின் அதிகாரத்திமிர் அவர்களை அடித்து உதைத்ததோடு மட்டுமல்ல ஏளனமாகவும் எகத்தாளமாகவும் மிகக் கேவலமாகவும் திட்டியிருக்கிறார்கள். இப்போது நாம் செந்தமிழ் மாநாட்டிற்கு வருவோம்.
இந்த தமிழ்மக்கள் பேசும் மொழிதானே செந்தமிழ். செந்தமிழ் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்காகத்தானே அல்லது பெற்றதை கொண்டாடுவதற்காகத்தானே இந்த மாநாடு. அப்படியிருக்க ஒட்டுமொத்தமாய் இம்மக்கள் அழிக்கப்பட்ட பின்னர் வேறு யாருக்காக இந்த மொழி வாழவேண்டும். உயிரற்ற உடல் எதற்காக? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். எம் தமிழ் உறவுகள் அடைக்கலம் தேடி வந்த இடத்தில் அயல் உறவு சட்டத்தின்கீழ் அதாவது அயல் உறவு சட்டம் (3-2) படி பிணையில் வெளிவரமுடியாத அளவிற்கு அவர்களை அடைத்து வைத்த பிறகு யார் பேசுவதற்காக இச்செம்மொழி மாநாடு.
ஆகவே எம் தமிழ் உறவுகள் ஒருங்கிணைந்து அயல் உறவு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டுமென நாம் முழக்கம் எழுப்ப வேண்டும். இதுஒரு படி இருக்க, சமீபத்தில் கோவையிலே நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தேசியத் தலைவரின் புகைப்படங்கள், குறுந்தகடுகள் விற்பனை செய்யப்பட்டபோது அதை தடுத்து அக்குறுந்தகடுகளையும், புகைப்படங்களையும் பறிமுதல் செய்திருக்கின்றது தமிழக அரசின் காவல்துறை.
நமக்கு ஒன்று மட்டும் விளங்கவேயில்லை. இங்கு பிரபாகரனே வரவில்லை. அவரின் படங்களை பறிமுதல் செய்வதென்பது எந்த அடிப்படையில் என்பது விளங்க மறுக்கிறது. காரணம் நமக்கு பிடித்த ஒருவரை நாம் புகைப்படமாக இல்லங்களில் மாட்டி வைத்துக் கொள்வதும், தம்மிடத்தில் வைத்துக் கொள்வதும் தனிமனித உரிமையாகும்.
இத்தனிமனித உரிமைகளை பறித்தெடுக்க ஓர் குடியரசு முயலுமானால் இது எந்த விதத்தில் நியாயம் என்பதை அவர்களே விளக்கிச் சொல்லவேண்டும். தேசிய தலைவரின் படங்கள் இல்லங்களுக்கு வந்தால் இன உணர்ச்சி இவர்களுக்கும் எழுந்துவிடும் என்கிற அச்சமா? அல்லது பிரபாகரன் படமே உயிர்பெறும் என்கிற உணர்வா? நமக்குப் புரியவில்லை. இந்நிலையில்தான் இவர்கள் நடத்தும் செந்தமிழ் மாநாடு விரைவில் நடைபெற இருக்கிறது. இவர்கள் படங்களை பறிக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனங்களில் உள்ள அவர் முகத்தை என்னச் செய்யப்போகிறார்கள்.
-கண்மணி-
Comments