
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையின தமிழீழம் நோக்கி என்னும் தலைப்பில் இவ்வாண்டுக்காக முதலாவது மக்கள் ஒன்றுகூடல் பாரிஸ் நகரில் 07.02.10. ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 16.30 மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழீழ தேச விடுதலைக்காக அக்கினித்தீயில் தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட முத்துக்குமாரன் முதல் முருகதாஸ் வரையிலான மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு தமிழீழ தேசிய விடுதலைக்காக உயிர் ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும், சிறிலங்கா, இந்திய படையினராலும், ஆயுதக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்காகவும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமையுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் சத்தியதாசன் அவர்கள் ஆற்றினார். அவர் தனதுரையில் இப்பேரவையின் உருவாக்கலும், எந்த காலத்தில், எந்த தேவையின் அடிப்படையில் உருவாக்கம் கண்டது என்பதை தெரிவித்திருந்தார். தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் தமிழீழ மக்கள் பேரவைக்கு இங்குள்ள தமிழ்சங்கங்களின் பங்களிப்பு பற்றியும், திரு. மோகன் மக்கள் ஒருமித்து செய்யப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் அதனைத் தொடர்ந்து நிதிப்பொறுப்பாளர் திரு. பிரதீப் அவர்களும், பேரவையின் செயலாளர் செல்வி சாலினி பிரெஞ்சு மொழியிலும், தமிழிலும் உரையாற்றினார்.
பேரவை உருவாக்கம் கண்டு இதுவரை செய்யப்பட்ட பணிகள் பற்றியும், எதிர்காலத்தில் செய்யப்படப்போகின்ற பணிகள் பற்றியும் தெரியப்படுத்தியிருந்தார். அதில் முக்கிய செயற்பாடாக அமைந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீள்வாக்களிப்பு கருத்துக்கணிப்பு தேர்தல் பற்றியும், அந்த தேர்தல் வெற்றிக்கு எமது மக்களின் பெரும் பங்களிப்போடு பிரெஞ்சு நாட்டு மக்களினதும், அரசியற்கட்சிகளின் பங்களிப்பும் இருந்திருந்தது. அந்த வகையில் பேரவையுடன் பணியாற்றியவரும், பேரவையின் ஆலோசகர்களில் ஒருவருமாகிய பிரெஞ்சுப் பெண்மணியான Mme Marie Geneviéve Guesdon அவர்களும், மற்றும் செவரோன் பிரதேச மாநகர முதல்வரின் சார்பாக Mr Rodrigo அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
அவர்கள் தமதுரைகளில் எமது இனம் மற்றைய இனங்களுடன், அவர்களின் அமைப்புகளுடனும், நல்லுறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதையும், பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழ்ந்து இந்நாட்டின் பிரசைகளாக உரிமை பெற்றிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாயகத்தில் வாழும் எங்கள் இனத்திற்கும், அவர்கள் மேற்கொண்டிருக்கும் தனிசுதந்திரமான வாழ்வுக்கு அரசியல் ரீதியாக போராடி வலிமைசேர்க்க வேண்டும் என்பதையும் அதற்கு வழிவகையேற்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் மாநில, மாவட்ட, பாராளமன்றத்தேர்தல்களில் போட்டியிடவேண்டும் என்பதையும் தெரிவிந்தார்கள்.
எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெறவுள்ள மாநிலத்தேர்தலில் பச்சைக்கட்சியின் சார்பில் தேர்தலில் நிற்பவரும் தமிழீழ மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு சிறீலங்கா தூதரகத்தினதும், அவர்களுக்கு துணைபோகும் எம்மவர்களின் சிலரின் எதிர்ப்புகளுக்கும், நெருக்குதலுக்கும் மத்தியில் துணிந்து முன்னின்று எமது நியாயத்தை பிரெஞ்சு அரச மட்டத்திற்கு எடுத்துச்சென்றவரும், பேரவையின் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் இருந்து வரும் Stephane GATIGNON அவர்களுக்கும் அவர்சார்ந்த பச்சைக்கட்சிக்கும் சார்பாக பேரவையின் செயலாளர் செல்வி.சாலினி சக்திதாசன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதையும் தெரியப்படுத்தப்பட்டது.
கருத்துக்கணிப்புத்தேர்தல் பற்றிய முழுமையான வாக்கு பதிவுகள் தெரியப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து இளையவர்கள் சிலர் ஒன்றிணைந்து விடுதலை வேண்டியும், அதில் புலம் பெயர்ந்த இளையோர்கள், அவர்களின் பங்களிப்பு என்ன என்ற பாடல் உருவாக்கியிருந்தனர். அந்த பாடலும் அதற்கான அபிநயமும் வழங்கியிருந்தனர்.
தாயகத்தில் சிறீலங்கா அரசினாலும், இந்திய அமைதிப்படைக்காலங்களிலும், நடைபெற்ற தமிழினப்படுகொலைகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் வகையில் எமது மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் அவர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகளையும், தகவல்களையும், ஆதரவற்று பெற்றோர்களை இழந்த எமது சந்ததிகளின் வாழ்வுக்கு உதவுகின்ற புனிதப்பணிக்கும் எவ்வாறு எமது புலம்பெயர்ந்த பிரான்சு வாழ்மக்கள் பங்களிக்கலாம் என்பதை போர் குற்றம் வெளிக்கொண்டரும் அமைப்பின் பிரான்சின் பொறுப்பாளரும் சட்டக்கல்லூரி மாணவியுமாகிய செல்வி. கிறிஸ்தா அவர்கள் படங்களுடன் விளக்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர்கள் சனநாயக ரீதியில் மக்களால் வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளதையும், அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குரிய தகுதிகள், தகமைகள் பற்றியும் வாக்களிப்பவர்கள், வாக்களிக்கும் முறைகள் அதற்கான காலம் என்பனவும் தெரிவிக்கப்பட்டன. ( திகதி பின்னர் அறிவிக்கப்படும்)
இதன் பிற்பாடு மக்களின் கேள்வியும், அதற்கான பதில்களும் இடம்பெற்றன. அதற்கான பதில்களை பேரவையின் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் வழங்கியிருந்தனர். மக்களின் கேள்விகள் பேரவையின் உருவாக்கம் ஏன்? அதன் கொள்கைகள், எதிர்கால செயற்பாடுகள், இதுவரை நீண்டகாலமாக செயற்பட்ட அமைப்புக்களின் நிலைப்பாடுகள், அதனுடன் பேரவைக்கு உள்ள உறவுநிலை நாடுகடந்த தமிழீழ அரசுக்கும், தாயகத்தில் உள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைக்கும் உள்ள நிலைப்பாடுகள் பற்றியும் கேட்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் இளையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த பொறுப்பாளர் முதலில் தமிழர்கள் நாம் ஒரு தேசிய இனமாக நின்று உலகமுன்றலில் நின்று பேசவேண்டும் என்ற பேரவாவை எல்லா தமிழ்மக்களும் மனதில் ஏற்றவேண்டும் என்றும், தமிழர்களாகிய எங்களுக்கு ஒருநாடும், அரசும் இருந்தது என்றும், இன்று உலக புவியல் அரசியலில் அகப்பட்டு எமது நாடு அழிக்கப்பட்டிருக்கின்றது. எமது மக்களின் உரிமைகள் அழிக்கப்பட்டு, அடிப்படை உரிமையற்றே வாழ்கின்றார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இன்று நாடுள்ளவர்கள் நாம் என்பதையும், ஒரு தேசிய இனம் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும். பிரான்சிலும், தமிழ்மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாம் தமிழீழ செயலகங்களை அமைக்க வேண்டும். ஒரு தேசிய இனமாக இருந்து சமமாக சர்வதேசத்துடன் பேச வேண்டும். அரசியல் ரீதியில் எமது இலட்சியத்தை அடையவும், துன்பப்படும் எமது மக்களுக்கும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், தர்மத்திற்காகவும், தம்மை உறுத்தியவர்கள் உலகம் எவராலும் மனிதநேய, மனிதஉரிமை பேணும் அமைப்புகளாலும் கூட கவனிக்க முடியாத, உதவ முடியாத நிலையில் அவர்களும், அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி சிதறிப்போயுள்ளதும் அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு தமிழ்மக்கள் பேரவை தான்னாலான அர்ப்பணிப்பை செய்யும் அதற்கு எல்லா மக்களும் கைகொடுப்பார்கள் என்கின்ற நம்பிக்கை கொள்கின்றேன் எனக்கூறினார்.
தமிழீழ மக்கள் பேரவையில் முக்கியமான பொறுப்புக்களில் இருப்பவர்கள் இளையவர்களாக இருக்கின்ற அதே நேரத்தில் நீண்ட கால அரசியல் அனுபவசாலிகளும், அர்ப்பணிபாளர்களும், ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர் என்பதை திரு. பிரதீப் அவர்கள் தெரிவித்திருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து மக்களும் தமது கைகளை தட்டி வரவேற்றிருந்தனர். 200 வரையிலான எமது மக்கள் இதில் கலந்து கொண்டு தமது பங்கையும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியோருக்கும், மற்றும் அனைவருக்கும் நன்றியோடு கரங்களை பற்றிக்கொள்வதாகவும் கூறி இக்கூட்டம் இரவு 20.15 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திர ஒலியுடன் நிறைவு கண்டது.



Comments