யார் வரவேண்டும்? என்ற தெரிவு கிடையாத நிலையில், யார் வரக்கூடாது? என்ற ஆதங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தீவின் தமிழர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்கள். சிங்களத்தை ஆளப்போவது இன்னொரு சிங்கள இனவாதி ஆகினும், தமது மத்தியில் ஊடுருவி, அத்தனை அவலங்களையும் நிகழ்த்தும் ஈ.பி.டி.பி., கருணா குழு, புளொட் போன்ற ஒட்டுக் குழுக்களிடமிருந்தாவது தற்காலிகமாக விடுபட்டுவிடலாம் என்ற நப்பாசையுடன் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தனர். இருப்பினும், தமிழ் மக்களின் விருப்பிற்கு மாறாக, இனவாத வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் மகிந்தவை நவீன துட்ட கைமுனுவாக ஏற்று, மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இந்தத் தொடர் துயரங்களினூடாகப் பயணித்தாவது ஒரு விடிவை அடைய மாட்டோமா? என்ற ஆதங்கம் மட்டுமே மீந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக்குரிய அந்தப் பாதையில் பயணிக்க வேண்டியகடமையும், ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
தமிழீழ மக்கள் இன அழிப்பு யுத்தப் பேரவலத்தின் பின்னரும், அச்சுறுத்தல், படுகொலைகள், காணாமல் ஆக்குதல் போன்றவற்றால் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக மௌனிக்க வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பை மையப்படுத்தி அரசியல் செய்யும் கூட்டமைப்பு உயிர் அச்சுறுத்தல்களுக்கும், இந்திய அழுத்தங்களுக்கும் இடையே நின்று திமிறுகின்றது. இந்த நிலையில், சிங்கள தேசத்தின் படை பலத்திற்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் உட்படாத பலம் பெற்ற சமூகமாக உள்ள புலம்பெயர் தமிழர்கள் தமக்கான பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிளவு படுத்துவதன் ஊடாக, இந்தத் தமிழர் பலத்தைச் சிதைக்க முயன்ற சிங்கள தேசத்தின் சதிகளும் ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டது என்றே நம்பத் தோன்றுகிறது. புலம்பெயர் தமிழர்களை இருநிலைப்படுத்தி, மோதல்களை உருவாக்க முணன்ற சக்திகளின் எல்லா முயற்சிகளையும் முறியடித்து, பிரித்தானிய தமிழர்களும் 'தமிழீழமே தாகம்' என்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்களிப்பை ஓரணியில் நின்று நிறைவேற்றியுள்ளார்கள். இதன் அதிர்வலைகள் கொழும்பிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று சிங்கள தேசத்தின் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' வரலாற்று அவமானம் என்று கூறும் தமிழின இரு துருவ நிலை வாதிகளது கூற்றுடன் ரம்புக்வெலவின் கூற்று ஒத்துப் போகின்றது.
சிங்கள தேசத்தின் இன மேலாதிக்க அரச பயங்கரவாதத்தின் விழைவாகத் தமிழர் தரப்பிலிருந்து பிறப்பெடுத்த 'விடுதலைப் புலிகள்' என்ற ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்ட அமைப்பின் விடுதலைப் போராட்டத்தை, அமெரிக்காவின் புதிய 'பயங்கரவாத' தத்துவக் கண்டுபிடிப்பினூடாகச் சிதைத்த சிங்கள அரசுக்குப் புலம்பெயர் தமிழர்களது ஜனநாயக முறைமைப் போராட்டம் பெரும் நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது. தற்போதைய உலக ஒழுங்கில், புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக முறைமைப் போராட்டங்களின் நியாயத் தன்மைகளை மேற்குலகம் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாது. இந்தப் போராட்டங்களின் வீச்சும் பெறுமானமும் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின் ஒன்றிணைவில் மட்டுமே சாத்தியமாகும் என்பதே நிதர்சனம்.
புலம்பெயர் தமிழர்கள் தமது போர்க் களத்தை விரிவாக்கம் செய்து தீவிரப்படுத்துவதன் ஊடாகவே ஈழத் தமிழர்களின் தொடர் அவலங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அதன் மூலமாகவே தமிழீழ மக்கள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் நடாத்தி முடித்த அத்தனை கொடுமைகளுக்கும் நீதி கோர முடியும். இதற்குக் காரணமான சிங்கள இனவாதிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். இதனைத் தடுப்பதற்காகவே, சிங்கள தேசத்தால் சிலர் ஊக்குவிக்கப்பட்டு, புலம்பெயர் தமிழர்களை இரு துருவப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதே வேளை, தற்போதும் ஈழத் தமிழர்களால் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தி நெறிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உண்டு. சிறிலங்காவினது அச்சுறுத்தல்களுக்கும், இந்தியாவின் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துத் திணறிக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் பலத்தினூடாக அதனைத் தகர்க்க முன்வர வேண்டும். இதற்கான திறந்த களங்கள் இரு தரப்பினராலும் உருவாக்கப்பட வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் அரசியல் விருப்புக்களைக் கணக்கில் எடுக்காமல் தனிப்பாதையில் பயணிப்பதை மூத்த தலைவரான சம்பந்தன் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
விடுதலைப் போர்க் களத்தில் புலம்பெயர் தமிழர்களது பங்களிப்பு எவ்வளவு காத்திரமாக இருந்ததோ, அவ்வாறே அரசியல் போர்க் களத்திலும் அவர்களது பங்களிப்பு அவசியமானது மட்டுமன்றி, புறக்கணிக்க முடியாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தின் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக்களையும், முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களின் அவாவாக உள்ளது.
தேசியத் தலைவர் அவர்களது சிந்தனைப்படி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் நோக்கத்திலிருந்து வெளியேறிச் செல்லத் தமிழீழ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற யதார்த்தத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். நடந்து முடிந்த யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல்களிலும் சரி, சிங்கள அதிபர் தேர்தல்களிலும் சரி ஈழத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்களையும் மீறிய சுயமான முடிவுகளைப் பெரும்பாலான தமிழீழ மக்கள் எடுத்திருந்ததை யாரும் மறந்துவிடக் கூடாது.
ஈழநாடு (பாரிஸ்)
சி.பாலச்சந்திரன்
Comments