கண்ணீர்...: "அதன் வலி இப்போது புரிகிறதா"?

[anoma+ponseka.jpg]வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் சிந்துவது கண்ணீர் துளியா? அல்லது கண்ணீர்க் கடலா?

  • பொன்சேகாவின் இளைய மகள் அபர்ணா பொன்சேகா தனது வலைப்பதிவில் இறுதியாக எழுதியிருக்கும் பதிவில் இராணுவக் காவலில் தன் தகப்பனார் நலமாக இருப்பதாகவும், தனது தாயார் சென்று தந்தையை சந்தித்து வந்துள்ளதாகவும். குறிப்பிட்டிருக்கிறார். என் தந்தைக்காக பரிந்து பேசிய அனைவருக்குமே நன்றி என்றும் எழுதியிருக்கிறார். அபர்ணாவோ, அனோமா பொன்சேகாவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, அவர்கள் அவர்களுக்காகவும் அவர்களின் பிள்ளைகளுக்காகவுமே அழுகிறார்கள். அழித்தொழிக்கப்பட்டு நிராதரவாக கைவிடப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக யார் அழுவது... ஆமாம் யாருக்காக யார் அழுவது.

ஜெருசலேம் பெண்கள் அந்த மனிதரைச் சுற்றி நின்று கண்ணீர் விட்டனர்.

அவரோ 'எனக்காக நீங்கள் அழ வேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்' என்றார்.

கண்ணீரின் அர்த்தங்களை வலுப்படுத்தும் வார்த்தைகளைத் தேடிய போது விவிலியத்திலிருந்து கிடைத்த புகழ்பெற்ற மெசியாவின் வசனம் இது.

கடந்த சில நாட்களாகவே இந்திய, இலங்கை ஊடக நிறுவனங்கள் ஒரு பெண்ணின் கண்ணீர் வழியும் ஒளிப்படங்களை வெளியிட்டு வந்தன.

ஒரு கோடு போல வழிந்தோடும் அக்கண்ணீர் ஆழமான பல அர்த்தங்களை இன்று நமக்குள் உருவாக்குகிறது.

இப்படியான கண்ணீர் ஒரு பெண்ணின் கண்களில் இருந்து கசியும் போது மனம் சற்றே சஞ்சலப்பட்டுத்தான் போகிறது.

ஆனால் இந்த சஞ்சலத்திற்கும் நினைவுகளுக்குமிடையில் மே மாத நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை நினைக்கும் போது...

கண்ணீரின் வலி தெரியாதவர்களே அக்கண்ணீர் சிந்தும் தருணங்களுக்குள் தள்ள்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனைப்படுவதா? அல்லது அந்த கண்ணீருக்காகப் பேசுவதா? என்பது கூடத் தெரியவில்லை.

''நாற்பது வருடமாக தாய் நாட்டுக்காக உழைத்தார். பயத்தையும் வன்முறையையும் விதைத்துக் கொண்டிருந்த புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியவர் அவர்.

குடும்பத்திற்காக அவர் செலவிட்ட நேரத்தை விட யுத்த களத்தில் செலவிட்ட நேரம்தான் அதிகம். அதனாலேயே நாட்டு மக்களின் நன்மதிப்பைப் அவர் பெற்றார்.

நாட்டு மக்களிடம் மட்டுமல்ல உலகத்திலேயே தலை சிறந்த இராணுவத் தளபதியும் எங்கள் அப்பாதான். ஆனால் அவருக்கே இன்று இந்த நிலமை.

அவர் எந்த நாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டாரோ அந்த நாட்டில் இன்று ஜனநாயகம் இல்லை. இது பகைவனுக்குக் கூட நடக்கக்கூடாத ஒன்று.

அவர் எந்த இராணுவத்துக்குத் தளபதியாக இருந்தாரோ அந்த இராணுவமே அவரைக் கைது செய்துள்ளது.

இப்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எனக்கு என்னுடைய அப்பா வேண்டும்"

இது தந்தையைத் தொலைத்த விட்ட ஒரு மகளின் கதறல்.

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் இளைய மகள் அபர்ணா பொன்சேகா தனது தந்தை கைது செய்யப்பட்ட பிப்ரவரி 8 ஆம் தேதி துவங்கிய தனது வலைப்பூவின் முதல் பதிவில் இப்படி எழுதியிருக்கிறார்.

அபர்ணாவின் வேதனை புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

நாளை அவரது தந்தையை ஏதோ ஒரு வகையில் அவர் சந்தித்து விட முடியும்.

ஆனால் இந்த அபர்ணாக்கள் தீவின் வடக்கு கிழக்கு பகுதியில் தொலைந்து போன, அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனம் பற்றியும் அந்த அழித்தொழிப்புக்கு தனது தந்தை முதல் தர மனிதராக பங்காற்றியது பற்றியும் என்ன நினைக்கிறார்கள்?

இந்த கொடூரமான போரை பௌத்த சிங்களப் பேரினவாதமாக கட்டமைத்து அதையே அறுவடை செய்ய நினைத்ததில் தோற்றுப் போன ஒரு மனிதனின் தற்காலிக காணாமல் போதலின் பின்னுள்ள அதிகார வர்க்கங்களின் போட்டி குறித்தும் அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

இலங்கைத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே இந்தக் கைது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதியில் நடந்த முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் இனப்படுகொலை தொடர்பாக

''எனக்குத் தெரிந்ததை எல்லாம், எனக்கு என்ன சொல்லப்பட்டதோ, நான் என்ன கேள்விப்பட்டேனோ அவற்றை நான் நிச்சயம் வெளியிடுவேன்.

யார் யார் போர்க் குற்றங்களை இழைத்தார்களோ அவர்கள் அனைவருமே நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்'' என்று அறிவித்ததோடு, மகிந்தவின் தம்பி கோத்தாபய பற்றியும் சொல்வதற்கு நிறைய உண்டு என்று சொல்லி வைத்தார் பொன்சேகா.

சொல்லி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. எதிர்கட்சிகளோடு சேர்ந்து இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டார். அதிபர் ராஜபக்ச குடும்பத்தைக் கொல்ல திட்டமிட்டார் என்று அவரது கீழ் பணி செய்த இளநிலை [junior] அதிகாரிகளாலேயே இழுத்துச் செல்லப்பட்டார்.

இப்போது அவர் இராணுவச் சிறையில்.

எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்வேன் தவறு செய்தவர்கள் அனைவருமே நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என்று சொன்ன பொன்சேகாவுக்கு மகிந்த, கோத்தபய போன்ற இனவெறிப் பாசிஸ்டுகள் மீது ஏன் இப்போது கோபம் வருகிறது.

ஒரு வேளை தேர்தலில் வென்றிருந்தால் இப்படிப் பேசியிருப்பாரா?

பெரும்பான்மைவாத பாசிஸ்டுகளுக்குள் நேர்ந்துள்ள குழு மோதலில் தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இன்று முன்வைக்கப்படுகிறது.

இதற்கான பதிலைத் தேடுவதற்கு முன் பொன்சேகா, ராஜபக்ச போன்ற இனவெறிக் குற்றவாளிகளின் செயல்பாடுகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு அதை தொடர்ந்து நினைவில் வைத்திருப்பதன் மூலமே ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை ஓர் எதிர்ப்பியக்கமாக கட்டமைக்க முடியும்.

வன்னிப் போரின் முடிவுக்குப் பின்னர் முல்லைத்தீவிற்குச் சென்ற பொன்சேகா வன்னியில் நின்றபடி சொன்னார்.

'தமிழ் மக்களுக்கு தனித்த தீர்வு எதுவும் தேவை இல்லை. தென் பகுதி மக்கள் என்ன விதமான உரிமைகளோடு வாழ்கிறார்களோ அதே உரிமைகள் தமிழர்களுக்கும் உண்டு' என்றார்.

இதை ஒரு அரசியல்வாதியாகச் சொல்லவில்லை. இராணுவத்தில் இருந்து பதவி விலகுவதற்கு முன்னர் இராணுவச் சீருடையில் நின்று கொண்டே இதைச் சொன்னார்.

இலங்கையின் இராணுவ ஆட்சியைப் புரிந்துகொள்வதற்கான மிகச் சிறந்த உதாரணத்தை சரத்பொன்சேகாவின் நடவடிக்கைகளில் இருந்தே சொல்ல முடியும்.

போரின் முடிவில் ஒரு இனமே தண்டனைக்குள்ளாகி அழிவுக்குள்ளாகி அதைக் காட்டியே சிங்களர்களை உசார்படுத்திய பேரினவாதிகள் இயல்பாக எங்கு சென்று சேர்வார்களோ அங்குதான் வந்தடைந்திருக்கிறார்கள்.

அதிகார போதையின் இந்த வெற்றியின் சுகத்தை யார் சுகிப்பது என்கிற போட்டியில் இவர் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அவ்வளவுதான் இவரது வெற்றி பினதள்ளிப் போடப்பட்டுள்ளது.

இப்போது இராணுவச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஒருவேளை வென்று ஜனாதிபதியாகி இருந்தால் அவரும் இது போல ராஜபக்சவை வளைத்திருக்கக் கூடும்.

ஆக இன்று அனோமா பொன்சேகாகாவின் கண்ணீரையும் அபர்ணா பொன்சேகாவின் கண்ணீரையும் புரிந்து கொண்டுள்ள எத்தனை பேர் வடக்கு கிழக்கு மக்களின் கண்ணீரை புரிந்து கொண்டார்கள் என்கிற கேள்வியை மட்டுமே இந்தத் தருணம் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது ஸ்மித் மனவடு என்கிற இரண்டாம் நிலை இராணுவ அதிகாரி முல்லைத் தீவு பகுதியின் கட்டளைத் தளபதியாக இருந்தார்.

தவறான தகவல்களை வழங்கியதால் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் புலிப் போராளிகளிடம் சிக்கி பலியாக கடுப்பான சரத்பொன்சேகா ஸ்மித் மனவடுவை களத்தில் இருந்து அப்புறப்படுத்தி கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இடம் மாற்றி துறை ரீதியான தண்டனை கொடுத்தார்.

இம்மாதம் எட்டாம் தேதி எவ்வித சட்ட விதிகளும் இல்லாமல் சரத்தை தரதரவென இழுத்துச் சென்றது பொன்சேகாவால் தண்டனைக்குள்ளான அதே ஸ்மித் மனவடுதானாம்.

இப்போது இலங்கை விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஒரு பக்கமும் சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகள் இன்னொரு பக்கமுமாக பொன்சேகா விஷயத்தை வைத்து இலங்கையில் கபடியாடத் துவங்கி விட்டார்கள்.

அனேகமாக அவருக்கு சட்டத்தின் பெயரால் மரண தண்டனை வழங்கிட வேண்டும் என்பது ராஜபக்ச குடும்பத்தின் விருப்பம்.

ஆனால் எதிர்கட்சித் தலைவர்களோ இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளோடு தொடர்பு கொண்டு பொன்சேகாவைக் காப்பாற்றச் சொல்லி கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொன்சேகா விஷயத்தில் நினைத்த மாதிரி எதையும் செய்து விட முடியாது எனபதைத் தெரிந்து கொண்ட ராஜபக்ச குழுவினர். குறைந்த பட்சம் சில வருடங்களுக்காவது அவரைச் இராணுவச் சிறையில் வைத்து செயலிழக்கச் செய்து விட தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ இப்போது ராஜபக்சவைச் நேரில் சந்தித்து பொன்சேகாவை விடுவிக்கக் கோரியிருக்கிறார். அனோமா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

தென் பகுதி சிங்கள மக்களிடம் கொழுத்தப்பட்டுள்ள பெரும்பான்மைவாத நெருப்பு அணைவதற்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி வெற்றியடையத் தீர்மானித்திருக்கிறார் ராஜபக்ச.

ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல். எதிர்கட்சிகள் யாரை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள் என்ற கேள்விக்கு முன்னை விட மிகச் சிறந்த கருவியாக பெண் ஒருவர் வாய்த்திருக்கிறார்.

கணவர் சிறையில் இருக்கிறார் என்பதால் அனுதாப ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கலாம் என்பதால் எதிர்கட்சிகளின் பொது முகமாக அனோமா பொன்சேகாவை வைத்து அவர்கள் தேர்தலை எதிர்கொள்ளலாம்.

இந்த அரசியல் சதுரங்கங்களுக்கிடையில் போர் நடந்த பகுதிகள் தமிழ் மக்களின் தாயகப்பகுதிகள் என அவர்களுக்கான நிவாரணங்களைக் கூட முன்னெடுக்க முடியாத நிலை.

கொலையுண்ட தமிழ் மக்கள் ஒரு பக்கம் பௌத்த பாசிச பேரினவாதிகளின் அதிகார பங்கீட்டிற்கான பகடைக்காயாக பயன்படுத்தப்படும் அதே வேளை. நீண்ட காலத்திற்கு அவர்களை அச்சுறுத்தி நாடற்றவர்களாக வைத்திருப்பதன் மூலமே தெற்கில் கொழுத்திய பெரும்பான்மைவாத நெருப்பை அணையாமல் எடுத்துச் செல்ல முடியும்.

இதனைத் தெரிந்து கொண்ட பேரினவாதிகள் ஆதாயம் இல்லாத எதற்கும் உதவாத தமிழ் மக்களுக்கு எதையும் செய்து விடப் போவதில்லை. எதையும் விட்டுக் கொடுக்கப் போவதும் இல்லை.

நாற்பாதாயிரம் மக்கள் படுகொலை, காணிகளை, கால்நடைகளை, வீடுகளை, என எல்லாவற்றையும் இழந்ததோடு ஒட்டு மொத்த மனித வளம் அழிவுக்குள்ளாகி நிற்கிறது ஈழம்.

வடக்கிலும் கிழக்கிலும் சரியான எண்ணிக்கை எடுக்கப்பட்டால் ஒரு இலட்சம் விதவைகள், ஆயிரக்கணக்கானோரை காணவில்லை, அநாதைக் குழந்தைகள் என மிகப் பெரிய மௌனமும் துக்கமும் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் சிந்துவது கண்ணீர் துளியா? அல்லது கண்ணீர்க் கடலா?

பொன்சேகாவின் இளைய மகள் அபர்ணா பொன்சேகா தனது வலைப்பதிவில் இறுதியாக எழுதியிருக்கும் பதிவில் இராணுவக் காவலில் தன் தகப்பனார் நலமாக இருப்பதாகவும், தனது தாயார் சென்று தந்தையை சந்தித்து வந்துள்ளதாகவும். குறிப்பிட்டிருக்கிறார்.

என் தந்தைக்காக பரிந்து பேசிய அனைவருக்குமே நன்றி என்றும் எழுதியிருக்கிறார்.

அபர்ணாவோ, அனோமா பொன்சேகாவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, அவர்கள் அவர்களுக்காகவும் அவர்களின் பிள்ளைகளுக்காகவுமே அழுகிறார்கள்.

அழித்தொழிக்கப்பட்டு நிராதரவாக கைவிடப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக யார் அழுவது... ஆமாம் யாருக்காக யார் அழுவது.

ஒரு பண்டிகை நாளில் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வெளியில் எங்கும் வாண வேடிக்கைச் சத்தம்.

இரண்டாவது மாடியில் இருக்கும் அந்த வீட்டிற்ர்குள் நுழைந்து அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கேட்டது அந்த வாணவெடிச் சத்தம்.

அறைகுள்ளிருந்து அலறுகிறார் அந்தப் பெண்மணி ‘இங்கால வாங்கோ ஷெல்லடிக்கிறாங்கொ.. பிள்ளையளை எடுத்துக் கொண்டு ஓடு வாங்க’’ என்று கதறுகிறார்.

பெருமூச்சு விட்டபடி அந்த ஆண் சென்று தன் மனைவியை ஆரத் தழுவி ஆறுதல் படுத்துகிறார். பின்னர் தன்நிலை உணர்ந்து அப்பெண் கதறிக் கதறியழுகிறார்.

ஈழத்தின் ஒரு மாவட்டப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தவர். கொடூரமான வன்னி யுத்தம் அப்பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சி என்னும் நோயை பரிசளித்திருக்கிறது.

இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் இறுதிப் போரின் போது காணாமல் போய் விட்டார்கள். நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இடைவிடாமல் அந்தத் தாய் அழுது கொண்டிருக்கிறார். கனதியான அந்தக் கண்ணீருக்கான விடையை யார் கொடுக்க முடியும்?

தமிழ்நாட்டிலிருந்து டி. அருள் எழிலன்.

Comments