தனி ஈழம் ஏன்…? – மலேசிய பினாங்கு துணை முதலமைச்சர்

கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை…

உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் முடிந்த கசப்பான அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு கசப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. 2009-ம் ஆண்டு தமிழினத்தின் இருண்டு ஆண்டு என எடுத்துக்கொள்ளலாம்.

கசப்பான சம்பவங்கள் என்று எதை குறிப்பிடுகிறேன் என்றால், இன்று நாம் கூடியிருக்கும் தமிழகத்துக்கு மிக அருகில்
ஒரு தேசத்தில், தமிழினத்தின தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும்.

தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன்.

இனவாத வெறிப்பிடித்த சிங்கள அரசின் கொடுமைகளை எதிர்த்து போராடியது தான் அந்த பிரதேசத்தின் வாழ்ந்த தமிழன் செய்த ஒரே தவறு. தமிழன் என்றாலே அடியும், உதையும் வாங்கிக்கொண்டு அடிமையாகவே கிடக்க வேண்டும் என்று சிலர் நினைத்துவிட்ட காரணத்தால் தான்.

தமிழனத்திற்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் தட்டிக்கேட்ட ஒரு போராட்ட இயக்கத்தின் தேசியவாத போராட்டம் நசுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்ட இயக்கத்தின் கொள்கை போராட்டத்தை நசுக்கியதோடு மட்டுமல்லாமல், அந்த இயக்கம் எந்த மக்களுக்கு காவலரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு எதிரான பல்வேறான நடடவடிக்கைகள் இன்று அனைத்து விதமான முறையிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நான் இப்போது குறிப்பிட்ட அனைத்தும் தென் தமிழகத்தில் இருந்து சில கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழீழத்தை பற்றியதாகும். நான் குறிப்பிட்ட தேசிய இனம், ஈழத்தமிழினம். ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்து, உலகத் தமிழரையெல்லாம் தங்களது தேசியப் போராட்டத்தால் தலைநிமிர வைத்த அந்த போராட்ட இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

உலக வல்லரசுகள் பலவும் சேர்ந்து தமிழீழ தேசத்திற்கான அந்த போராட்டத்தை ஒடுக்கியதற்கு பிறகு, எந்த மக்களுக்கு அந்த விடுதலைப்புலிகள் இயக்கம் அரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான துன்பங்களைக் கண்டு இன்று உலகத் தமிழினம் வெதும்பி போயுள்ளது. அந்த வெதும்பலின் வெளிப்பாடே இன்றைய மாநாடு.

நமது சொந்தங்கள் அங்கே சொலிலடங்கா துன்பங்களை அனுபவத்துகொண்டிருக்கையில் இந்த மாநாடு இங்கே நடக்கிறது. ஆனால், இன்றைய மாநாட்டின் நோக்கமானது, வெறும் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையை மட்டும் விவாதிக்கும் மாநாடு இல்லாமல், உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பை பற்றி விவாதிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாகும்.

தமிழகம் தாய்த்தமிழகம் என்று உலகத்தமிழர்கள் எல்லாம் எப்போதும் போற்றும் இந்த தமிழகத்தால் கூட அந்த ஈழத்தமிழர்களின் துன்பத்தை துடைக்க முடியவில்லை என்பது தான் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.

ஆனால் சில அதிகார பதுமைகளுக்கு பணிந்து, ஈழத்தில் தமிழர்கள் அனைவரும் நலமாக வாழ்கின்றனர் என்று சான்றிதழ் கொடுத்ததுதான் மிச்சம். தமிழீழம் என்ற கேட்கக்கூடாது, தமிழன் என்பவன் தலைநிமிர்ந்து நடக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தமிழீழ போராட்டத்தை அடக்கி, ஒடுக்கிய கொடுங்கோலனுக்கு சால்வை சாத்தியதுதான் மிச்சம்.

தமிழ் இளைஞர்களின் உதிரத்தை கொடுத்து இந்துமகா சமுதத்திரத்தின் தாகத்தை தீருங்கள், தமிழ் யுவதிகளின் கற்பை களவாடி உங்கள் தாகத்தைத் தீர்த்துகொள்ளுங்கள் என்று சிங்கள ராணுவப்படை வீரர்களிடம் வசனம் பேசிய ஒரு சிங்கள இனவெறியனோடு கைகுலுக்கி விருந்துண்டதுதான் மிச்சம். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியென்பது போல இன்றுவரை வக்காலத்தும் வாங்கப்படுகிறது. இதுதான் உலகத்தமிழர்களின் தலைமையென்றால் இந்த பூமிப்பந்தில் இருந்து தமிழினமே அழிந்தாலும் ஆச்சரியமில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் பாரதிய பிரவாசி திவாஸ் என்ற மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டின் நோக்கம் என்னவெனில், புலம்பெயர் இந்தியர்களின் ஒன்றுகூடல் மாநாடாக அமைவதாகும். இந்த மாநாடு கடந்த ஆண்டு தமிழகத்தின் சென்னையில் நடைபெற்றது. அப்போது மலேசியாவின் மாற்று அரசியல்சக்தியாக உருவெடுத்துள்ள மக்கள் கூட்டணியின் பேராளர்களுக்கு தலைமை தாங்கி நான் வந்திருந்தேன்.

அப்போது ஈழத்தில் பல்வேறான கொடுமைகளும் அரங்கேறிக்கொண்டிருந்த காலம். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றி கரிசனையோடு பேசினார். ஆனால், சில கிலோ மீட்டருக்கு அப்பால் அரங்கேறிக்கொண்டிருந்த இன அழிப்புப்படலத்தை பற்றி ஒரு வார்த்தைக்கூட பாரத பிரதமர் உதிர்க்கவில்லை.

எந்த பாரதத்தில் இந்த தமிழகம் ஒரு அங்கமோ, அந்த பாரதம் தமிழினத்தின் வேதனைகளை புரிந்துகொள்ளவில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாரதத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிக்கு உலகத் தமிழினத்தின் அழுகுரல் கேட்கவில்லை. அந்த மாநாட்டில் எனக்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தில் அதைத்தொட்டு நான் கேள்விஎழுப்பினேன்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு புதுதில்லியில் நடந்த பரவாசி மாநாட்டுக்கு எனக்கும் அதிகாரபூர்வ அழைப்புவிடுக்கப்பட்டது. ஆடம்பர தங்கும் விடுதியில் அறை, முதல் வகுப்பு விமான டிக்கெட் ஆகியவையும் அந்த அழைப்பில் உள்ளடக்கப்பட்டது. இருந்தபோதும் அந்த மாநாட்டை புறக்கணித்தேன். என்னோடு சேர்ந்து மக்கள் கூட்டணையை சேர்ந்த சிலரும் புறக்கணித்தனர்.

நாங்கள் இந்த மாநாட்டை புறக்கணித்ததற்கு முழு காரணம், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு போரில் இந்திய அரசின் பங்கும், அங்கே நடந்த கொலைவெறி படலத்தை தட்டிக்கேட்காத இந்திய பேரசின் இயலாமையுமே ஆகும். மேற்குறிப்பிட்ட காரணத்தை இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சர் வயலார் ரவிக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

அதேதினத்தில் இன்றைய மாநாட்டுக்கு ஏற்பாட்டளாரான டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தேன். இம் மாநாட்டில் பங்கேற்க முழு சம்மதத்தையும் தெரிவித்தேன். அதையடுத்து மறுநாள் மலேசிய தமிழ் நாளிதழ்களில் முதல்பக்கத்தில் செய்தி வெளியானது. அதில் கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் ஈழத்தமிழ் மக்களின் சொல்லொன்னா துன்பங்களுக்கு காரணமாக அமைந்துவிட்ட இந்திய அரசின் ஏற்பாட்டிலாலான மானங்கெட்ட இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டான் என்றம், ஆகவே மானமுள்ள மலேசிய தமிழர்கள் பிரதிநிதிகளான நாங்கள் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டேன். கட்டப்பொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான். பிரபாகரன் பிறந்த மண்ணில் தான் கருணாவும் பிறந்தான். இதை எதற்காக கூறுகிறேன் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்த அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தால் இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைக்கு நானும் உடந்தையாக இருந்ததாகிவிடும் என்பது எனது கருத்து. அதற்குப்பிறகு பல்வேறு செய்திகளிலும், இன்று கோவையில் நடக்கும் உலகத் தமிழர்கள் மாநாட்டில் மானமுள்ள தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளேன்.

மலேசியாவில் இருந்து 80 பேராளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் 25 பேர் பினாங்கு மாநில பேராளர்கள். தமிழ் தேசியத்தின் குரல்வலையை நெரித்துபோராட்டத்தை ஒடுக்கிய எந்தவொரு சக்திக்கும் நாம் அடிபணிந்துவிடக்கூடாது என்பது தான் மலேசிய தமிழர்களின் வேட்கையாகும்.

தமிழினத்துக்கென்று தனியொரு நாடடில்லாமல் நாம்படும் அவலங்கள் பல. இருந்தபோதும் அந்த துன்பங்கள் தனியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில் உலகளவில் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினத்தின் பாதுகாப்பு அம்சங்களை கலந்தாலோசிக்க மாநாடு ஒன்றில் நாம் இணைந்துள்ளோம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலேசியா, சிங்கப்பூர், மவுரிசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அவரவர் வாழ்வுரிமை, மொழி ஆகியவற்றுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான விவகாரங்களையும் இம் மாநாட்டின் வழியாக விவாதிக்க வேண்டும். தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஒரு உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் முதல்படிதான் இன்றைய நமது மாநாடு. ஆகவே, வெறும் கூடிப்பேசி, கலையும் கூட்டமைக இல்லாமல், ஆக்ககரமான விவாதங்களின் வழி நமது நோக்கத்தை நாம் அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்போடு இன்றைய மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்துவைக்கின்றேன். நன்றி வணக்கம்..

Comments