பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு சிறீலங்கா ஒரு தவறான வழிகாட்டி: த ரைம்ஸ்

சிறீலங்கா மீது பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க தவறினால், அது பொதுநலவாய நாடுகளின் முதன்மை கொள்கைகளின் தரத்தை குறைப்பதுடன், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தவறான வழிகாட்டல்களை ஏற்படுத்தும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

உலகின் நிகழ்வுகளில் பொதுநலவாய அமைப்பு முக்கிய பங்கை வகிப்பது மிகவும் அரிதானது. ஆனால் கடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் அதற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறீலங்காவில் நடைபெற்ற தேர்தலை கண்காணிப்பதற்கு அவதானிப்பாளர்களை அனுப்பிய பிரதான அனைத்துலக அமைப்பு அது மட்டுமே. மகிந்தா ராஜபக்சாவுக்கோ அல்லது ஜெனரல் பொன்சேகாவுக்கோ சார்புநிலை எடுக்காத அமைப்பு அது என கருதப்பட்டது.

தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்ட போதும் அவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை.

எனவே தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை பொதுநலவாய அமைப்பின் வசம் சென்றது. வேறு அனைத்துலக அமைப்புக்களோ, அல்லது அரசுகளோ தேர்தல் தொடர்பான நீதியையும், சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மீதான வன்முறைகளையும் வெளியில் தெரிவிப்பதில் பங்காளர் ஆகவில்லை.

முன்னாள் ஜமேக்கா வெளிவிவகார அமைச்சர் கே டி நைற் தலைமையில் பொதுநலவாய நாடுகளின் 5 கண்காணிப்பாளர்கள் அங்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இந்த மாதம் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

இறுதி முடிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல என்ற போதும், அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் ஏற்கனவே தமது முடிவுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரச ஊடகங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொன்சேகா வாக்களிக்கவில்லை, அவர் வாக்காளராக தன்னை பதிவுசெய்யவில்லை, வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பொன்சேகா தங்கியிருந்த விடுதி இராணுவத்தினரால் சுற்றிவழைக்கப்பட்டது இவை எல்லாவற்றையும் அவர்கள் கருத்தில் எடுத்துள்ளனர்.

பொன்சேகாவின் அலுவலகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல்களுக்கும், அவரின் பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டதற்கும், இரண்டு ஊடகங்கள் மூடப்பட்டதற்கும், பெருமளவான ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டதற்கும் அவர்கள் சாட்சி.

ஆனால் கேள்வி என்னவெனில் இது ஒரு அரசியல் முறைகேடு என அவர்கள் கண்டணங்களை முன்வைப்பார்களா? என்பது தான்.

இராணுவப்புரட்சி ஏற்படப்போவதாக தான் சந்தேகப்பட்டதாக அரசு தன்னை நியாயப்படுத்த முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதும், உறுதிப்படுத்துவதும் கடினமானது.

மகிந்தா அதனை பின்னர் சரிசெய்து கொள்ளலாம். ஆப்கானிஸ்த்தானில் நடைபெற்ற தேர்தலை முன்வைத்து அவர் மேற்குலக நாடுகளை பேசவிடாது செய்துவிடலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு சீனாவினதும், ரஸ்யாவினதும் ஆதரவுகள் தற்போதம் உண்டு என்பதை அவர் அறிவார். சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைகளை அவர்கள் தான் தடுத்தவர்கள்.

ஆனால் பொதுநலவாய அமைப்பு வேறுபட்டது.

அது 1971 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முன்மொழியப்பட்ட கொள்கைகளை கொண்டது. உறுப்பு நாடுகள் ஜனநாயக மற்றும் ஊடகச்சுதந்திர நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற 1991 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகளையும் உடையது.

இந்த இரண்டு பிரகடனங்களும் உறுப்பு நாடுகள் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற அதன் 60 ஆவது ஆண்டு விழாவில் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் உலகளாவிய ரீதியில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சுதந்திர, தகுதிவாய்ந்த, காத்திரமான ஊடகங்களின் ஊடாக தகவல்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதாகவும் அவர்கள் உடன்பட்டிருந்தனர்.

ஆனால் சிறீலங்கா அரசு இந்த விதிமுறைகளை முற்றாக மீறிவிட்டதாக கடுமையான கருத்துக்கள் எழுந்துள்ளன. அரச சொத்துக்கள் முறைகேடக பயன்படுத்தப்பட்டுள்ளன, எதிர்க்கட்சிகள் துன்புறுத்தப்பட்டுள்ளன, அவர்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக வழிகளிலும் அரசியல் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

தேர்தலுக்கு முன்னர் கூட சிறிலங்கா அரசு அனைத்துலக மனித உரிமை விதிகளை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை பெறுவதற்கு மனித உரிமைகளை நிலைநாட்டுதல் அவசியம்.

2006 ஆம் ஆண்டில் இருந்து 14 ஊடகவியலாளர்களும், பணியாளர்களும் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பெருமளவான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர்.

எனவே தான் 2011 ஆம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெற இருந்த பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களின் கூட்டத்தை பிரித்தானியா தடுத்துள்ளது. சிறீலங்கா மீதான மேலதிக நடவடிக்கைகள் கண்காணிப்பாளர்களின் அறிக்கையை பொறுத்தே அமையும்.

அதற்கான நடவடிக்கை பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கான நடவடிக்கை குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த குழு தமது ஜனநாயக கொள்கைகளில் எற்பட்ட முக்கியமான வன்முறைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும்.

1995 ஆம் ஆண்டு அரசியல் தலைவர் கென் சரோ-விவா கொல்லப்பட்டதை தொடர்ந்து நையீரியா பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஜெனரல் முஷ்ராஃப் இராணுவப்புரட்சி மூலம் பாகிஸ்த்தானில் பதவியை கைப்பற்றியபோது பாகிஸ்த்தான் அதில் இருந்து நீக்கப்பட்டது.

வேறுபட்ட காலப்பகுதிகளில் சிரோலியோன், சிம்பாபே, பிஜி ஆகிய நாடுகளும் நீக்கப்பட்டிருந்தன.

ஆனால் உண்மை என்னவெனில் சிறீலங்காவை நீக்குவது கடினமானது, ஏனெனில் சிறீலங்கா இராணுவப்புரட்சி என்ற காரணத்தை முன்வைத்துள்ளதுடன், மேலும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளுடன் விவாதிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்படுவதுண்டு.

சுழற்சிமுறையில் தெரிவுசெய்யப்படும் 9 நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று. எனினும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் வரையிலும் அவர்கள் கவலைகளை கூட வெளியிடவில்லை.

பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கான நடவடிக்கை குழுவில் தற்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேசம், கனா, ஜமேக்கா, மலைதீவு, நமீபியா, வனாடு, திரினிடாட், ரொபாகோ ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஆகவே கடந்த இரண்டு வருடங்களில் முதல் தடவையாக ஆசியாவின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாகயத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஜனநாயக விரோதங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பம் பொதுநலவாய அமைப்புக்கு கிடைத்துள்ளது.

பொதுநலவாய அமைப்பு நடவடிக்;கை எடுத்தால் அது சிறீலங்காவுக்கு வருத்தமானது. ஆனால் ஜனநாயக சீர்கேடுகளை கொண்டுள்ள ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கும் அது நெருக்கடிகளை கொடுக்கலாம்.

நடவடிக்கை எடுப்பதற்கு தவறினால், அது பொதுநலவாய நாடுகளின் முதன்மை கொள்கைகளின் தரம் குறைந்துள்ளதாக கொள்ளப்படுவதுடன், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் அது தவறான வழிகாட்டல்களை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - ஈழம் இ நியூஸ்

Comments