தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது!

tna-sam-editedமுள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் எல்லமே தலைகீழாக மாறி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத கட்டுமானம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளும், தளபதிகளும் பலி கொள்ளப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பிய விடுதலைப் புலிகள் கல்லெறிந்து கலைக்கப்பட்ட குளவிகள் போல மீண்டும் ஒரு கூடு தேடி உலகெங்கும் பறந்து திரிகின்றனர். தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களுக்காகப் போராடவேண்டிய தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாகச் செயற்படவேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களது 'இந்தியாவுடன் யுத்தச் சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம்' என்ற அவரது கூற்று இதனை உறுதிப்படுத்துகின்றது. இந்தியாவின் விருப்பங்களுக்கான அரசியல் நகர்வையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்பதிலான சந்தேகங்கள் தற்போது தெளிவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த இறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்குள் தமிழீழ மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் காய் நகர்த்தல்களுக்கூடாகத் தமிழீழ மக்கள் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளவில்லை என்று கருத முடியாது. தமிழினம் சந்தித்த மிகப் பெரிய இழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் பின்னால் இந்திய கரங்களே உள்ளது என்பதை சாதாரண ஒவ்வொரு தமிழனும் புரிந்தே வைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய சார்பு அரசியல் நகர்வு ஊடாகத் தமது சுயலாப அரசியல் வியாபாரத்தை மேற்கொள்வதாகவே சந்தேகிக்க முடிகின்றது.

இதற்கு இடையூறு விளைவிக்கக்கூடியவர்கள் என்று கருதப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ஆலோசனைப்படி ஓரங்கட்டும் நடவடிக்கைகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், என். சிறீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிர்காமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி ஆகியோருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. திரு. என். சிறிகாந்தா அவர்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு விரோதமாக சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கினார் என்பதை விட, யுத்த களத்தில் ஈழத் தமிழர்கள் தோற்றடிக்கப்பட்டு, முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பின்னர் யுத்த சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதுடன், அவரது பேச்சாளர் போன்று யுத்த அவலங்களை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு, தமிழீழ மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளார்.

திரு. சிவானந்தன் கிஷோர் அவர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் குளிர்விட்டுப்போன அரசியல்வாதியாக சிங்கள ஆட்சியாளர்களை வலம் வந்தவர். யாருமே துணியாத வகையில் கொடூர அரசுத் தலைவரான ராஜபக்ஷ அவர்களைக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு கருணாவாகத் தன்னை அடையாளம் காட்டியவர்.

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சிங்கள அரசுத் தலைவர் தேர்தல் காலத்தில் விடுவிக்கப்பட்ட திரு. கனகரட்ணம் அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் பல்டி அடித்து, அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தவர். திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நாடு திரும்ப முடியாத உயிரச்சம் காரணமாக வெகு காலமாக இங்கிலாந்தில் தங்கியுள்ளார். ஏனையவர்கள்மீது வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் எனபதே இவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

ஈழத் தமிழர்களின் அவலம் மிகுந்த காலகட்டத்தில், அவர்களது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் தலைமையினை மேற்கொள்ள வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நகர்வுகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் பலம் சிதைக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கான போராடும் சக்தியாக உள்ள புலம்பெயர் தமிழர்களது முக்கியத்துவம் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்படுவது ஈழத் தமிழர்களை மீண்டும் அடிமை நிலையில் வைத்திருக்க எண்ணும் சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர்களைத் தனது பிராந்திய வல்லாதிக்க நிலைப்பாட்டிற்கான பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய அரசுக்கும் பெரும் வாய்ப்பாக உள்ளது.
புலம்பெயர் தேசங்களின் தமிழ் அமைப்புக்களுடன் உறவுகளைப் பேணி, அதன் மூலம் புலம்பெயர் தமிழீழ மக்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து செயலாற்ற வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்றுவரை அதற்கான எந்த நகர்வினையும் மேற்கொள்ளாதது அதன் அரசியல் இலக்குக் குறித்த சந்தேகத்தை புலம்பெயர் தமிழ் மக்களிடம் உருவாக்கியுள்ளது.

ஈழத் தமிழர்களது தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில், அவர்களை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தூர வைக்க முயலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் உள் நோக்கம் கொண்டவையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.

சிங்கள அரசின் அச்சுறுத்தல்களுக்கும், இந்திய அரசின் அழுத்தங்களுக்கும் உட்படாத தமிழ்ச் சமூகம் ஒன்று புலம்பெயர் நாடுகளில் பலம் பெற்று வருவது உள்ளூர் அரசியலைத் தமக்கானதாக வைத்துக்கொள்ள விரும்பும் தமிழ்த் தலைமைகளுக்கு அச்சத்தைக் கொடுப்பதாகவே உள்ளது.

பொருளாதார பலமும், கல்வியறிவும் மிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம் என்ற அச்சமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த அச்சத்திற்குக் காரணமாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடமிருந்து வெகு நாட்கள் அப்படி விலகி இருக்க வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளே.

அவர்கள் அனைவரும் தமிழீழத்தில் வாழும் தமது உறவுகளைக் கட்டுப்படுத்தும் பலம் கொண்டவர்கள் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டால், தமிழீழத்தில் புதியதொரு அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய வெற்றிடம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

Comments