விலைபோனவர்களை நிராகரித்து மக்கள் விடுதலைக்கு ஆதரவளிக்கும்படி தமிழ்புத்திஜீவிகள் வேண்டுகோள்

elatieionசகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற்படவேண்டுமென்று கூறுபவர்கள், புதிதாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்கிறார்கள் ஆகியோரை புறக்கணித்து அரசியல் துணிச்சல் மி்கவர்களை தெரிவு செய்வதற்கு தமிழ் வாக்காளர்கள் உறுதிபூணவேண்டும் எனத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவுகளிலிருந்தும், மீளமுடியாமல் தவிக்கும் தடுமாறும் தமிழ்ப்பேசும் சமூகத்தின் மீது கடந்த மாதத்திய ஜனாதிபதித் தேர்தலையடுத்து இப்போது பொதுத்தேர்தல் ஒன்றும் வல் வந்தமாகத் திணிக்கப்பட்டிருக்கின்றது.

கட்டுறுதியான அரசியல் கட்டமைப்பு ஒன்றையோ வலுவான அரசியல் தலைமைத்துவத்தையோ கொண்டிராத தமிழினத்தின் எதிர்காலம், இத் தேர்தல்களில் அவர்கள் வெளிப்படுத்தும் பிரதிபலிப்பை அணுகுமுறையை பொறுத்தே அமையப் போகின்றது என்பதை தமிழினத்தில் அக்கறைகொண்ட சமூகத் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் கடந்த ஆறு தசாப்தங் களாக முதல் மூன்று தசாப்தங்களில் அமைதி வழியிலும், அடுத்த மூன்று தசாப்தங்கள் அமைதி மற்றும் ஆயுத வழிகளிலும் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களும் பயன்தராமல் போயுள்ள இந்தச் சமயத்தில் போரினால் நலிவுற்று, அவலப்பட்டு, நொந்துபோயிருக்கும் தமிழ் மக்கள் தமது அடுத்த அரசியல் நகர்வு குறித்துத் திண்ணியமாகச் சிந்தித்துத் துணிவுடன் முடி வெடுத்து, ஐக்கியமாக அதனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

தமிழினத்துக்கும் பெரும் சவால்

போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்கள் தமது நீதி, நியாயமான அரசியல் அபிலாஷைகளை உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கத்தக்க வலிமை மிகுந்த அரசியல் தலைமைத்துவம் அற்ற வர்களாக இருக்கின்றார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
இந்நிலைமை ஒட்டுமொத்தமான தமி ழினத்துக்கும் பெரும் சவாலாகும். இத்தேர்தலை சரியாகத் தமிழர்கள் எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே இச்சவாலை வெற்றிகொள்ள முடியும்.

போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தமிழ்மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் எட்டப்படு வதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பைத் திருப்தி செய்யும் தீர்வை வழங்கும் எண்ணமே அதற்கு இல்லை என்பதும் வெளிப்படையானது. அதேசமயம், தனக்கு உகந்த உப்புச்சப்பற்ற ஒரு திட்டத்தைத் தீர்வு என்ற பெயரில் தமிழர்கள் மீது கட்டிவிடும் சூத்தி ரத்துடனேயே அது செயற்படத் தொடங் கியுள்ளது என்பதும் வெளியானது.

அரசியல் துணிச்சலுடன் குரல் எழுப்பும் தலைமை வேண்டும்

இச்சூழலில் இன்றைய சூழலுக்குத் தேவையான அரசியல் துணிச்சலுடன் தமி ழர்களுக்காகக் குரல் எழுப்பும் அரசியல் தலைமை ஒன்று இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு ஏதேனும் கொஞ்சநஞ்ச மீட்சி கிடைக்கும் என்பது தெளிவு. அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை அரசு புரிந்துகொள்வதற்கு வலியுறுத்தக்கூடிய வலுவான அரசியல் சக்திகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

அதன் காரணத்தினால்தான் சகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற்படவேண்டுமென்று கூறுபவர்கள், புதிதாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்கிறார்கள். தமிழ் மக்களின் நலன்களை நீண்டகால அடிப்படையில் நோக்குகையில் அவர்களின் இந்த நிலைப்பாடு விவேகமானதாக இல்லை. எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானிப்பதற்கு முன்னதாக இன்று இருக்கக்கூடிய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் பழைய குரோதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் பயனற்றுப்போய்விட்டன.

வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டியவர்கள்

தங்களுக்கான கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலைத் தமிழ்மக்கள் பயன்படுத்தியேயாகவேண்டும். அரசியல் ரீதியாகத் தமிழ்மக்கள் தங்களை முனைப்புறுத்துவதற்கு உறுதியான நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்குத் தற்போது வேறு மார்க்கமில்லை. ஏனைய சகல மார்க்கங்களும் அடைபட்டுப் போயிருக்கும் நிலையில் இதுவே ஒரே வழி.

அதனால் அடுத்த நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதிகள் வரலாற்றுக் கடமையொன்றை நிறைவேற்றவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கப்போகிறார்கள். அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கூடிய அரசியல் துணிச்சலும், நேர்மையும், கொள்கை உறுதிப்பாடும் விலைபோகாத குணாதிசயமும் கொண்ட கற்றறிந்த வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தும் அணியினரைத் தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழ்மக்களின் எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கான முதற்படியாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதென்பதே தமிழ்மக்கள் எதிர்நோக்கும் உடனடிச்சவாலாகும்.

- இவ்வாறு புத்திஜீவிகள் அடங்கிய தமிழர் நலன்காக்கும் சமூகப் பிரதிநிதிகள் தமிழ் ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்க ளுக்குச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

Comments