'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும்

வட்டுக்கோட்டை தீர்மானத்தை வரவேற்கிறார்  உருத்திரகுமார் – ஈழநாடு
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாக உள்ளது. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முழுமையான ஒரு இரவுத் தூக்கம் கிடைத்தது. தவித்துப் பேதலித்த மனதின் ஏக்கங்களுக்கு நேற்றைய முன்னிரவில் கிடைத்த விடை மனதை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாங்கள் தோற்றுப் போகமாட்டோம் என்ற நம்பிக்கை புதிதாக என்னைப் பிறக்க வைத்தது.

நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு விசுவநாதன் உருத்திரகுமார் அவர்களுடனான மனம் திறந்த உரையாடல் மனதை அழுத்திய பல கேள்விகளுக்கு விடையைக் கொடுத்திருந்தது. புலம்பெயர் தமிழர்களை இரு துருவப்படுத்தும் சில சுயநலமிகளின் முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தேசியத் தலைவர் அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமான திரு. உருத்திரகுமார் அவர்கள் தெளிவான சிந்தனை கொண்டவர். அவரது எண்ணங்களில் எப்போதுமே சுயநலம் கலந்திருந்ததில்லை. நான் மதிக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.

ஆனால், காலம் அவருக்கு மிகப் பெரிய தேசியப் பணியைக் கையளித்திருந்த நிலையில், அவர் சார்ந்த சிலரது பேச்சுக்களும், அறிக்கைகளும், புலம்பெயர் தமிழர்களை இரு துருவப்படுத்தும் முயற்சிகளும் அவர் மீதான சேறடிப்புக்களாகவே மாற்றம் பெற்றன. பரிசுத்தமான அவரது அரசியல் பயணத்தின் இலக்கே திசை மாறும் அளவிற்கு அவரை மீறிப் பல சம்பவங்கள் பல நாடுகளிலும் அரங்கேற்றம் பெற்றன. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பால் வார்ப்பதைக் குறியாகக் கொண்டவர்களும், வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்று அவமானம் என்று புதிய தத்துவம் பேசுபவர்களும் ஒதுங்கும் இடமாக 'நாடு கடந்த தமிழீழ அரசு' கருதப்படும் அளவுக்கு சமூக முரண்பாட்டாளர்கள் உள் நுழைந்திருந்தார்கள்.

விடுதலைப் போருக்கான பேராயுதங்களாகத் திகழ வேண்டியவர்களது குறி, தமிழீழ உணர்வாளர்கள் மீது திருப்பப்பட்டது. 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற தமிழ்த் தேசிய சிந்தனை, புலம்பெயர் தேசங்களின் போர்க் களங்களில் உருவாக்கம் பெற்ற 'மக்கள் பேரவை'களுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள் வாக்கெடுப்பை காழ்ப்புணர்வுடன் விமர்சித்ததால், அதில் பங்கெடுத்து ஆதரவு தெரிவித்த மக்களால் 'நாடு கடந்த தமிழீழ அரசு' விமர்சனங்களுக்குள்ளாக்கப்படும் அபாயமும் உருவாகியது. தமிழீழ உணர்வாளர்கள் கலங்கி நின்றார்கள்.

கள நிலமைகளை நன்றாக உணர்ந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் இறுதியாக நிகழ்த்திய மாவீரர் உரையின்போது, தமிழீழ மண்ணை மீட்கும் பொறுப்பை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஒப்படைத்திருந்தார். புலம்பெயர் தமிழர்களும் தமது வலிமைகளை ஒன்றாகத் திரட்டிப் போராடவும் செய்தார்கள். போராடியும் வருகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிளவுகள் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது.

இந்த வேளையில்தான், திரு உருத்திரகுமார் அவர்கள் நிலைமையின் விபரீதங்களைப் புரிந்து கொண்டு, மக்கள் பேரவைகளுடன் கருத்துரையாடல்களை மேற்கொண்டார். இந்த ஆரோக்கியமான கருத்துரையாடல்கள் பல பிரச்சினைகளுக்குத் தீர்வை உருவாக்கியுள்ளது. திரு. உருத்திரகுமாரன் அவர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், 'மக்கள் பேரவை'யும் தமிழீழ மண்ணை மீட்க எதிரிகளைக் குறி வைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயற்படும் என்ற தன்னுடைய கருத்தை உறுதிபடத் தெரிவித்துள்ளார். அவரது தெளிந்த கருத்தியலாடல் புலம்பெயர் தமிழர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் போர்க் களத்தில் பல்வேறு படை அணிகளை வைத்திருந்தார். அத்தனை படையணிகளும் எதிரிகளைக் குறி வைத்தனரே அல்லாமல், தங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அது போலவே, தேசியத் தலைவர் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாகவும் உள்ளன. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு' சார்பாக சிலரால் மேற்கொள்ளப்படும் 'மக்கள் பேரவை'கள் மீதான நாகரிகமற்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு திரு உருத்திரகுமாரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார். தனது கவனத்திற்கு வராமலே 'நாடு கடந்த தமிழீழ அரசின்' இலட்சியத்திற்கு முரணான அத்தனை விடயங்களும் தடுக்கப்படும் என திரு. உருத்திரகுமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்களிப்பை 'வரலாற்று அவமானம்' என்று இழிவாகக் கருத்துரைத்த இணையத் தளம் நாடுகடந்த தமிழீழ அரசின் அதிகாரபூர்வ இணைத்தளம் அல்ல என்று மறுத்துரைத்த அவர், மக்கள் பேரவையுடன் திறந்த பல கருத்தாடல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஏப்ரல் மாதத்தில் 'நாடு கடந்த தமிழீழ அரசு'க்கான பிரதிநிதிகள் தெரிவில் மக்கள் பேரவையினரும் பங்குபற்ற வேண்டும் என்றும், அந்தத் தேர்தல்களை மக்கள் பேரவையுடன் இணைந்து நடாத்தவும் விரும்புவதாகவும் திரு. உருத்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழ மக்களைத் தாக்கிய சுனாமி போல, தமிழீழ மக்கள் எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் அவலங்கள் போல, சிங்கள தேசத்தின் சூழ்ச்சி புலம்பெயர் தமிழர்களையும் பிளவு படுத்தி ஈழத் தமிழர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விடுமோ என்ற அச்சம் காரிருளாகக் கவ்வியிருந்த வேளையில் திரு. உருத்திரகுமார் அவர்கள் மேற்கொண்ட துணிகரமான முடிவுகள் ஈழத் தமிழர்கள் வயிற்றில் பாலாகப் பாய்ந்துள்ளது. கண்முன்னே தமிழீழம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தப் படைகளின் பயணம் மாவீரர்களின் கனவுகளை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது.

சி.பாலச்சந்திரன்

ஆசிரியர்
ஈழநாடு (பாரிஸ்)

Comments