இவ்வளவு சாவுகள், அழிவுகள் எல்லாம் எதற்காகக் கொடுத்தோம்?” குமுறும் தமிழர்

'நியூ யோர்க் ரைம்ஸ்' பார்வை

விடுதலைப் புலிகளின் தியாக மரணங்களுக்கு பின் சுய ஆட்சி வேண்டிய தமிழர் குரல் அடக்கப்பட்டுவிட்டதா? - 'நியூ யோர்க் ரைம்ஸ்' பார்வை

யாழ்ப்பாணம் ஒர் அழிவடைந்த நகரம். எங்கும் காணப்படும் உடைந்த கட்டடங்களின் கற்குவியல்கள் வெறுமனே வெளித் தெரியும் சில அழிவுகள் மட்டுமே.

ஆனால், சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சந்தித்தது தான் பெரும் அழிவு. அந்த அழிவு சொல்வதெல்லாம் - சுயாட்சி நோக்கிய தமிழரின் எந்த ஒரு கோரிக்கைக்கும் விடுதலைப் புலிகள் வேண்டும் என்பது தான்.

26 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அரசு, கடந்த மே மாதத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சிங்களப் பெரும்பான்மையின் ஆதிக்கம் நிறைந்த அந்த நாட்டில் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு ஏற்ற நிலையில் தமிழர்கள் இல்லைப் போன்றே தோன்றுகிறது.

  • தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைச் சுற்றிச் செழிப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியம் கிட்டத்தட்ட முற்றிலும் இறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

இவ்வாறு New York Times ஏட்டில் எழுதியுள்ளார் Lydia Polgreen.

  • அதனை எமது செய்தித்தளமான புதினப்பலகை-க்காகத் தமிழாக்கம் செய்தவர் ரி. ரேணுபிறேம்.

    படங்களை எடுத்தவர் New York Times-இன் Lynsey Addario.

Lydia Polgreen

Lydia Polgreen தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

“இந்த ஆயுதப் போராட்டம், இவ்வளவு சாவுகள், அழிவுகள் எல்லாம் எதற்காகக் கொடுத்தோம்?” என்று கேட்கிறார் பொன்.பாலசுந்தரம்பிள்ளை. தமிழ் மக்களின் இதயபூமியான யாழ். நகரில் உள்ள ‘மக்கள் குழு’வின் தலைவர் அவர். யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட.

உடைத்து வீசப்பட்டுள்ள தமிழ் போராளிகளின் கல்லறைகள்...

“பொது வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் எங்கள் பங்கு பெருமளவில் குறைந்து விட்டது. பொருளாதார ரீதியாக நாங்கள் நலிந்து கிடக்கிறோம். அரசியல் ரீதியாகவும் பலவீனப்பட்டுள்ளோம்” என அவர் தொடர்கிறார்.

தமிழர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரமும் கடந்த குடியரசு அதிபர் தேர்தலின் பின் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக்கான போராட்டம் கடந்த மூன்று தசாப்த காலமாகச் சிறிலங்காவின் அரசியலை ஆட்டிப்படைத்தது. ஆனால், இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி - சிங்களப் பெரும்பான்மை இனத்தால் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்பில் - கடந்த தேர்தல் பரப்புரையின் போது மிகச் சிறிய அளவே கவனம் செலுத்தப்பட்டது.

பதிலாக - விடுதலைப் புலிகளை அழித்தொழித்த போர் வெற்றிக்காக உரிமை கோரும் இருவருக்கு இடையிலான - அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான - போட்டியாகவே தேர்தல் அமைந்தது.

பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியது.

பலவீனமான சிங்களக் கூட்டணியை வைத்திருந்த முன்னாள் தளபதியுடன் சேர்ந்து அதிக செல்வாக்குப் பெற்றிருந்த தற்போதைய குடியரசு அதிபரை ஆட்சியில் இருந்து அகற்ற அது முயன்றது.

தமிழர் கூட்டமைப்பு எடுத்த அந்த விசப் பரீட்சை தோல்வியில் முடிவடைந்தது. 17 விழுக்காடு வாக்குகள் அதிகம் பெற்று ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றார்.

இப்போது, என்றுமில்லாதவாறு அதிக அதிகாரம் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டை ஒற்றுமைப்படுத்துவது பற்றி ஒரு தெளிவற்ற வாக்குறுதியை வழங்கி உள்ளார். ஆனால், பேச்சு மேசையில் எது இருக்காது என்பதை அவர் மிகவும் தெளிவாக்கி விட்டார்.

சுய ஆட்சி அல்லது கூட்டாட்சி தமிழருக்குக் கிடையாது என்பதை அவர் தெளிவாக்கிவிட்டார். ஒவ்வொரு தமிழ்க் கட்சியினதும் தொடக்கப் புள்ளியாக இருந்த அந்த விடயம் ஏற்றுபுடையது அல்ல என அவர் கூறிவிட்டார். அத்துடன் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கும் அவர் விருப்பப்படவில்லை.

இருந்தாலும் - ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாகாண சபை முறைக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்பால் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை என்பது இங்கு கவனத்திற்குரியது.

இந்த நிலை - பரிதாபப்பட்ட தமது சமூகம் இனி என்ன தான் செய்ய முடியும் என்ற மனநிலையையே தமிழர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

பல தடவைகள் இடம் பெயர்ந்து ஓடிய பின்பு சொந்த வீட்டிற்குதத் திரும்பியுள்ள ஒரு தமிழ் குடும்பம்...

தமிழர்களின் பண்பாட்டு இதயமான யாழ்ப்பாணம், போர்க் காலத்தில், பல லட்சக்கணக்கானவர்களை இழந்துவிட்டது. சுமார் 100,000 பேர் இறந்து விட்டார்கள். அதிலும் பார்க்கப் பெரும் எண்ணிக்கையானவர்கள் தப்பி வெளியேறி விட்டார்கள்.

வானளாவிய மினுமினுக்கும் கட்டங்களைக் கொண்ட கொழும்பில் இருந்து மிகத் தொலைவில் உள்ள யாழ்ப்பாண நகரம் - நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பல தலைமுறைகள் பின்தங்கிக் காட்சி தருகிறது.

கைவிடப்பட்டுள்ள வீடுகள் ஒவ்வொன்றும் புதர் மண்டிக் கிடக்கின்றன. 1996-இல் தான் அங்கு கடைசியாகப் போர் நடைபெற்றது என்ற போதும், ஒவ்வொரு வீடுகளும் குண்டு துளைத்த காயங்களுடனேயே இன்னமும் நின்று கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே சிறந்தது எனப் பெயர் எடுத்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்போது உருக்குலைந்து கிடக்கிறது.

அதிர்ச்சி ஏற்படுத்தும் இந்தக் காட்சிகளில் இருந்து வேறுபட்டதாக, இன்னொரு வகைத் துயரக் கதையாக - யாழ்ப்பாணத்திற்குத் தெற்கே பல மைல்கள் தொலைவில் உள்ள தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் நிலை காணப்படுகிறது.

போர்க் கைதிகளை அடைத்து வைப்பவை போன்று தோற்றமளிக்கும் அந்த முகாம்களில் வாழும் 100,000 தமிழ் மக்கள், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

“தமிழர்களின் வேட்கை" [The Tamil Question] என இங்கு அறியப்பட்டிருக்கும் விடயத்திற்கான அரசியல் தீர்வு எப்போதும் ஒரு ‘மாயப் பொரு'ளாகவே இருக்கிறது.

உண்மையில் நொருங்கிப்போய் இருப்பது சுய ஆட்சி என்ற தமிழரின் வேட்கை தான்..

“வாக்குறுதிகள் மீறப்பட்டமைக்கான - வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டமைக்கான வரலாறு” சிறிலங்கா அரசியலில் அனேகம் காணப்படுவதாகப் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம் கூறுகிறார். யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையைச் சேர்ந்த அவர், மிகப் பெரிய தமிழ்க் கட்சியின் உறுப்பினருமாவார்.

சில தமிழ்த் தலைவர்களை மட்டுமே தான் போர் உயிருடன் விட்டுவைத்துள்ளது என்பதும் தமிழர் பிரச்சினையின் ஒரு பகுதி. திறமை வாய்ந்த, தகுதி மிக்க தமிழர்கள் பலர் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டார்கள்.

அரசுடன் கைகோர்த்துள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள், பெரும்பான்மையினரை எதிர்ப்பது சிக்கலானது என்ற பார்வையைக் கொண்டிருக்கின்றன.


டக்ளஸ் தேவானந்தாவின் செயலக வாசல்...

எதிர்த்து நின்று பெறும் சொற்பத்தைவிட அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்திருந்து அதிகமாகவே பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா. முன்னாள் போராளியான அவர், பின்னர் அரசுடன் சேர்ந்து அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டவர். இதுவரை அரசுடன் சேர்ந்திருந்து தமிழ் மக்களுக்காக எதைப் பெற்றெடுத்தீர்கள் என்று கேட்டதற்குப் பதில் சொல்ல, அந்த முன்னாள் ஆயுததாரியிடம் எதுவும் இல்லை.

“அதைச் சொல்வது கடினம்” என்று அவர் கூறினார். “நிறையப் பெறப்பட்டுள்ளது. மக்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்வார்கள்” என்கிறார்.

குடியரசுத் தேர்தலில் தற்போதைய அதிபரின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அதன் காரணமாக அரசிடம் இருந்து எதனையும் பெற்றுவிட முடியாத நிலையி்ல் தமிழர் இப்போது உள்ளார்கள் என்கிறார். இளம் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியும், கோபமும் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் அதிகாரம் இல்லாமல் போய்விட்டது” எனச் சொல்கிறார் எஸ்.அரிகன். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் சிறிலங்கா அரசை நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் என, வடக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்களைப் போலவே தானும் நம்புகிறார் என அவர் கூறினார்.

ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு யதார்த்தமற்றது என்பது அகிலன் கதிர்காமரின் கருத்து.

நாட்டில் காணப்படும் இனப் பிளவைச் சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ‘சிறிலங்கா ஜனநாயக மன்றத்தை’ (Sri Lanka Democracy Forum) சேர்ந்தவர் அவர்.
கடும் போக்குத் தேசியவாதிகள் “அனைத்துலக சமூகத்தின் தலையீட்டுக்காகக் காத்துக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் அது எதனையுமே தரப்போவதில்லை” என்கிறார் அவர்.

திட்டமிட்ட இனப்படுகொலைகள் மற்றும் இனத் துரத்தல்கள் நிகழ்ந்த 70கள், 80கள் காலகட்டங்களிலேயே 'தமிழ்த் தேசியவாதம்' என்ற கருத்தியல் உண்மையில் உருவானது. அதன் காரணமாக - அத்தகைய சூழலில் - சுதந்திர தனியரசுக்கான ஆயுதப் போராட்டம் ஒன்று தர்க்க ரீதியாச் சரியானது என ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுய ஆட்சி கோரிய தமிழினத்தின் எதிர்காலம் என்ன?...

ஆனால், போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நிலைமை வேறு மாதிரியானது. தமிழர்கள் பலர் போரின் பாதிப்புக்களில் இருந்து மீண்டு வருவது எவ்வாறு என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

“போரினால் மக்கள் நொருங்கிப் போய் உள்ளார்கள்; அதுதான் இங்கு அடிப்படைப் பிரச்சினை. மீள்குடியமர்வு, வேலை வாய்ப்பு போன்றவை தான் இப்போது அவர்களின் சிந்தனையில் உள்ள மிக முக்கியமான விடயங்கள்” என்கிறார் அகிலன் கதிர்காமர்.

“அதற்காக அரசியல் தீர்வு தொடர்பான அவர்களின் விருப்பங்கள் இல்லாமல் போய்விட்டன என்று பொருள் கொள்ள முடியாது. இன்றைய யாதார்த்தைக் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது” என அவர் மேலும் விளக்குகிறார்.

- இன்போ தமிழ் -

Comments

thamizham said…
அன்பு நண்பருக்கு வணக்கம்
உங்கள் வலைப்பூவைப் பார்க்க நேரிட்டது
அருமையான முயற்சி
தொடர்க
விரும்பினால் தமிழம்.வலை
பார்க்கவும்
அன்புடன்
தமிழ்க்கனல்
www.thamizham.net