சிங்களபேரினவாதிகளுக்கும் திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


முல்லிவாய்காளில் சிந்திய இரத்தத்துளிகளின் தொடர்ச்சி செங்கல்பட்டுவரை நீட்சி பெற்றிருக்கிறது. முல்லிவாய்காளில் சிங்களவன் தாகம்தீர்த்த தமிழினத்தின் குருதி மீண்டும் செங்கல்பட்டில் திராவிட ‘தேசியவாதிகளால்’ ருசிபார்க்கப்பட்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் சிங்கள காடையர்களால் அடித்தே கொல்லப்பட்டான், தமிழில் பேசியதற்காக மாணவன் தாக்கப்பட்டான், தமிழ் இளைஞனின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தொடர்ச்சியாக தமிழர்களின் செங்குருதியில் நினைந்து வழிகிறது ஈழத்தில் செய்திதாள்கள். ஒருவேளை சிங்களவர்களும் செம்மொழி மாநாட்டிற்கு தாயாராகிவிட்டார்களோ என்னவோ?

அடிமை நாய்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? என்று ஒரு தமிழனை பார்த்து ஒரு தமிழனே பார்த்து கேட்கும் அளவிற்கு இன உணர்வு தமிழகத்தில் வளர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. இந்தியாவில் அகதியாக இருக்கும் திபெத்தியர்கள் நிலையையும் ஈழத்தமிழர்களின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் தாயகதமிழர்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள் என்று புரிந்துவிடும். கடந்த நாற்பதாண்டுகளாக திராவிடத்தை பெயரில் தாங்கி இந்திய இறையாண்மை காத்திடவே ஆட்சி நடத்திய திராவிடகட்சியில் ஊட்டிய இன உணர்ச்சியின் வெளிப்பாடுகளை நாம் இன்று பார்த்து கொண்டிருக்கிறோம்.

பெரியார் பேசிய திராவிடம் என்பது இந்தியதேசியத்திற்கு எதிரானது. பொதுவாகவே பெரியார் தேசியவாதங்களுக்கு எதிரானவர். தான் வாழும் காலம் முழுவதும் இந்திய தேசியம் என்பது ஆரியதேசியமே என்று முழங்கிவந்தார். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழக்கங்கள் இட்டவர் பெரியார். ஆரியத்திடம் திராவிடம் அடிமையாகிவிடக்கூடாது என்று தொடர்ந்து போராடிய தலைவனின் பெயரை சொல்லி அரசியல் நடத்திய திராவிடவாதிகள். திராவிடம் என்பதை ஆரியத்தின் துணைதேசியமாக மாற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாதளவில் இறையாண்மையின் பூசாரிகளாக திராவிட கட்சிகள் இருந்துவருகிறார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட இயக்கம் கட்டியகாலங்களில் பெரியார் ‘பச்சை தமிழர்’ என்று யாரை அழைத்தாரோ அதே காமராசரை ‘கையாலாகதவர்’ என்றும் டெல்லி தலைமையை எதிர்த்து எதுவும் செய்ய இயலாதவராகவும் இருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர் திராவிடமுன்னேற்ற கழகத்தினர். இன்று வரலாறு மீண்டும் திரும்புகிறது படிக்காத மேதை ஏழைமக்களின் கல்விக்கண் திறந்த காமராசரை என்னவெல்லாம் சொல்லி இவர்கள் விமர்சனம் செய்தார்களோ அதனினும் கீழான நிலையில் இருக்கிறது இவர்களின் ஆட்சி. பதவி சுகத்திற்க்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் திராவிடதேசியவாதிகள்.

திராவிட அரசியல் கட்சிகள்தான் இப்படி என்றால் பெரியாரின் கொள்கை வாரிசாக நாம் கருதிய வீரமணி இவர்களைவிட மோசமான சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். பிழைப்புவாதத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். பெரியாரின் அசையும்சொத்து அசையாதசொத்துக்களோடு அறிவுசார் சொத்துக்களும் தனக்கே சொந்தம் என்று வாழ்ந்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த பொழுது வீரமணி அறிவாலயத்தில் பதுங்கி கொண்டதோடு தனக்கு தானே பெரியார் விருது வாங்குவதற்கான தேதி குறித்து கொண்டிருந்தார்.

ஈழத்தில் அத்தனை மக்கள் செத்துவிழுந்த பொழுதும் வாய்திறவாத வீரமணி கருணாநிதியின் இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகத்தின் பொழுது “தலைவனுக்கு ஏதாவது ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!” என்று ‘பஞ்ச்’ விட்டுக்கொண்டிருக்கிறார். உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு ஆறுதல்தரும் ஒரேஒரு தலைவராக கொளத்தூர் மணி அண்ணன் மாத்திரமே இருக்கிறார்.

தாயக தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் எதுவும் பெரியளவில் நடந்தவிடாமல் தடுத்து நிறுத்தியது தேசியவாதம் பேசத்துவங்கிய திராவிடமுன்னேற்ற கழகம். பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூறிய கருணாநிதி ஈழத்திற்காக போராடிய வழக்கறிங்கர்களை எந்தமுறையில் ஒடுக்கினார் என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினால் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமி மீது வீசிய முட்டைகளுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டுமா? என்று தனக்குத்தானே பதில் சொல்லி கொள்கிறார்.

சுப்பிரமணிசாமியை பார்த்தால் பம்மும் தமிழககாவல்துறை ஈழப்போராளிகளை கண்டால் எகிறி அடிக்கிறது. ஈழத்தமிழ் மக்களை அடித்தால் எவன் கேட்பான் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

திராவிட தேசியவாதிகளை நாம் திட்டினால் உடனே பெரியார் முன்வைத்த திராவிடத்தை எதிர்பதாக கூறி அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியை ரட்சிக்க திராவிடத்தின் பெயரால் பல பூசாரிகள் இன்று இருக்கிறார்கள்.

தமிழன் என்ற இனமோ, அவனுக்கென்று அடையாளமோ எதுவுமே இருக்கக்கூடாது என்று பிஞ்சுகள் என்று கூட பாராமல் குண்டு போட்டு கொன்று முடித்த சிங்கள பேரினவாதிகளுக்கும். பெயரளவில் தமிழ்நாடு என்று வைத்துவிட்டு தமிழையும் தமிழினத்தையும் அழிக்கும் அனைத்து செயல்களுக்கும் துணை போயி ஈழத்தமிழ் மக்களை வதைப்பதன் மூலம் காங்கிரசு கூட்டணியில் இடம்பெறலாம் என்று காய்நகர்த்தும் திராவிடதேசியவாதிகளுக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்கு தானே தமிழதலைவன் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் கருணாநிதிக்கு இன்னும் புகழுக்காக அலையும் மனம் மாறவில்லை. செம்மொழி மாநாடு என்ற பெயரில் தனது புகழ் பாடும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். வீரமணி சுபவீ என்று கருணாநிதிக்கு வால்பிடித்து பிழைப்புவாதத்தின் தொடர்ச்சியாக சில கருஞ்சட்டை பூசாரிகள் மாநாட்டிற்கு ஆள்பிடிக்க அலைகிறார்கள்.


இந்த இனத்திற்கு தலைவன் ஒருவன் தேவையில்லை. நம்மை நாமே காத்தால் மட்டுமே நமது மொழியையும் நம் இனத்தையும் இனிவரும் காலங்களில் காத்திடமுடியும் என்பதை மனதில் வைத்து உலகத்தமிழர்கள் ஒருங்கிணையவேண்டும்.

இந்திய தேசியத்திற்கும் இத்தாலி தேசியத்திற்கும் விலைபோய்விட்ட திராவிட தேசியத்தை நம்பி தமிழினத்தை நட்டாற்றில் விட்டது போதும். நமக்கு இப்போதைய தேவை தேசியமல்ல தமிழர் என்ற உணர்வு.

திராவிட தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களை கருவறுக்கும் போலி திராவிடவாதிகளை அம்பலப்படுத்துவோம். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைவோம்.

தமிழன்பன்

Comments