தமிழருக்கு மூட்டிய தீயில் வெந்து கருகும் சிங்களம்"!

“தமிழ்மக்களின்- உரிமைப் போராட்டத்தை நசுக்கி, அவர்களின் வாழ்வையும் வளங்களையும் அடியோடு பெயர்த்து, இல்லாமலே செய்து விட்ட மகிந்த ராஜபக்ஸவும், சரத் பொன்சேகாவும் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பதற்கான சூழல் நெருங்கி வருகிறது.” என தாய் நாடு ஏடு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

  • எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற முழக்கத்தோடு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், சமூக பண்பாட்டு விழுமியங்களை பேணி வெகுவிரைவில் அச்சுப்பதிப்பாய் வெளி வரவிருக்கும்,

தற்போது இணையம் ஊடாக மாதம் இருமுறை வெளிவரும் தாய் நாடு ஏடு 03 ல் வெளிவந்துள்ள செய்தி ஆய்வு வருமாறு

தமிழருக்கு மூட்டிய தீயில் வெந்து கருகும் சிங்களம்!

சரத் பொன்சேகாவைக் கைது செய்து சிறையில் அடைத்த பின்னர்- இலங்கை அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கிறார்.

புலிகளை அழித்த துட்டகெமுனுவாக சிங்கள மக்களால் போற்றப்பட்ட அவரை, அவர்களில் ஒரு பகுதியினரே தேசத்துரோகியாகப் பார்க்கின்றனர். இது அவருக்கு வந்திருக்கின்ற மிகப்பெரிய சோதனை.

மகிந்த ராஜபக்ஸவிடம் கிட்டத்தட்ட 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சரத் பொன்சேகா, தனது தோல்வியை ஒப்புக்
கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இது அவரது இன்றைய நிலைக்கு முக்கியமானதொரு காரணம். தனது தோல்வி அரசாங்கம் செய்த சதி என்று பிரசாரம் செய்து கொண்டிருந்த அவர், அடுத்த கட்டமாக அரசாங்கத்தை சர்வதேச ரீதியாக நெருக்கடிக்குள் தள்ளிவிடும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் முற்றுகையிடப்பட்டிருந்த சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு வெளிநாடுகளே இலங்கை அரசுக்கு அழுத்தம்
கொடுத்திருந்தன. வெளியே வந்த அவர் உடனடியாக வெளிநாட்டுக்குப் தப்பிச் செல்லப் போவதாக கூறினார். ஆனால் அது சாத்தியமல்ல என்று தெரிந்ததும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீர வசனங்களைப் பேசத் தொடங்கினார். அதுவே தனக்கென ஒரு அனுதாப அலையை- ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இதனால் தான் அவர் வெளிநாடு செல்லும் திட்டத்தைத் தானே கைவிட்டது போலக்காட்டிக் கொண்டு- எதையும் எதிர்க்கும் துணிவு தன்னிடம் இருப்பதாக பிதற்றத் தொடங்கினர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் சரத் பொன்சேகா ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்த போதும் அவரைக் கைது செய்வதைத்
தாமதித்தே வந்தது. சுமார் பத்து நாட்கள் வரை இப்படியே போன நிலையில் சரத் பொன்சேகாவுக்கு ஒரு துணிவு ஏற்பட்டிருந்தது.

தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கத்தினால் முடியாது என்று கருதத்தொடங்கினார். அதற்கு அரசாங்கம் அச்சப்படுவதாக அவர் நினைத்துக் கொண்டார். இதனால் அவர் அரசாங்கத்துக்கு தன்னைக் கைது செய்ய முடியுமா என்று சவால் விடவும் அவர் தயங்கவில்லை. இங்கே தான் அவர் தவறிழைக்க ஆரம்பித்தார்.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு எதிராக தான் எதையும் செய்யவில்லை என்ற நம்பிக்கையால் அவர் இப்படிக் கருதத் தொடங்கினாரா அல்லது மகிந்த ராஜபக்ஸ
வினால் எதையும் செய்ய முடியாது என்று கருதிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சினமன் லேக்சைட் விடுதியில் சிக்கிப் போயிருந்த போது உலக நாடுகள் சரத் பொன்சேகாவை வெளியே விடும்படி கோரின. அது இரகசியமாக கொடுக்கப்பட்ட அழுத்தம். அப்போது அவர் ஒரு ஜனாதிபதி வேட்பாளர். தேர்தல் முடிந்து ஒரு வாரம் கழிந்த பின்னர் அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதியாகி விட்டார். அப்போது அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பதால் கிடைத்த அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்காது போனது. இந்த நிலை தனக்கு வரும் என்று சரத் பொன்சேகா கவனத்தில் கொள்ளவில்லை.

சினமன் லேக்சைட் விடுதியில் சர்வதேச அழுத்தங்கள் தனக்கு சாதகமாக அமைந்துவிடுதலையைத்தேடித் தந்தது போலவே பின்னரும் பாதுகாப்பு அளிக்கும் என்று அவர் தவறாக எடை போட்டிருந்தார். ஆனால், மகிந்த ராஜபக்ஸவினால் தன்னை எதுவும் செய்ய முடியாத என்று போட்டது தப்புக்கணக்கு என்பது இப்போது தான்
அவருக்கே புரிந்திருக்கும். மகிந்த ராஜபக்ஸவுக்கு இன்னும் ஏழு வருடங்கள் ஆட்சியில் நிலைப்பதற்கான அங்கீகாரம் இருக்கிறது.

வரப்போகும் பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்து அதைக் கலைக்கும் அதிகாரம் கூட அவருக்கே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரைப் பகைத்துக் கொள்ளும் போது என்ன நடக்கும் என்றோஅப்படி நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும் என்றோ சரத் பொன்சேகா கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார். இதனால் தான் அவர் போர்க்குற்றங்கள் குறித்த தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடப் போவதாக திடீரென அறிவித்தார். அது அவர் செய்த முட்டாள்தனமான காரியம்.

சரத் பொன்சேகா முன்னர் கோத்தாபய ராஜபக்ஸவை போர்க்குற்றவாளியாகக் காண்பிக்க முனைந்தார். பின்னர் அதிலிருந்து விலகிக் கொண்டார். ஆனாலும் அவர் அவ்வப்போது இரகசியங்களை வெளியிடப் போவதாக அரசாங்கத்தை மிரட்டத் தவறவில்லை. போர்நியமங்கள் எதுவும் மீறப்படவில்லை ஒழுக்கத்துடனேயே படையினர் போரிட்டனர் என்று கூறிய அவரே, பின்னர் போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடப் போவதாக மிரட்டினார். முன்னுக்குப் பின் முரணான கதைகளை அவிழ்ப்பதில் சரத் பொன்சோகாவுக்கு நிகரான அரசியல்வாதி வேறெவரும் இருக்க முடியாது. இவரது இந்த எச்சரிக்கை அரசாங்கத்தைப் பெரிதும் சீற்றங் கொள்ள வைத்தது. அதன் விளைவாகவே அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டார்.

கைது நடைபெறப் போவதை அறிந்து தனது பாதுகாப்புக்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து வந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தபோதே பிடரியில் பிடித்து தர தரவென இழுத்துச் செல்லப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவோ, மங்கள சமரவீரவோ நாட்டில் இல்லாத வேளையில்- சரத் பொன்சேகாவுக்காகக் குரல் கொடுப்பதற்கு பலமான அரசியல் தலைமை இல்லாத நேரத்தில் தான் இந்தக் கைது நடந்தது. பாதுகாப்புக்காகப் போன சோமவன்ச, ஹக்கீம், மனோ கணேசன் போன்றோரால் இதை வேடிக்கை பார்க்கவே முடிந்தது.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டில் இல்லாத நேரத்தில் தான் இந்தக் கைது நடந்தது. இது ஒரு அரசியல் பழிவாங்கல் அல்ல இதற்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம். உண்மையில் சரத் பொன்சேகாவைக் கைது செய்வதற்கான முடிவு ஜனாதிபதி தேர்தலின் போதே எடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அரசாங்கம் அதை தாமதித்து வந்தது. தருணம் வரும் வரை காத்திருந்த பிடித்தது அவரை. சரத் பொன்சேகா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்திருப்பரேயானால் அல்லது அரசியலில் இருந்து வெளியேறி விடும் முடிவை எடுத்திருந்தால் நிச்சயமாக இப்படியொரு சிக்கல் அவரைத் தேடி வந்திருக்காது.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தமை, இராணுவ அதிகாரிகளிடத்தில் பிளவை ஏற்படுத்த முயன்றமை, ஆயத தளபாடக் கொள்வனவுகளில் ஊழல்செய்தது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இப்போது சுமத்தப்படுகின்றன. அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான ஒழுங்குகளே நடப்பதாகத் தெரிகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்ற பின்னரே அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கப் போகிறதாம். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கும் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது செய்த தவறுகளுக்காகவே இந்த நடவடிக்கை என்பதால் வெளிநாடுகளால் பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலை. சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு- சட்டத்தை மதிக்கும் வகையில் செயற்படுமாறு கோரியுள்ள வெளிநாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. இங்கே தான் அவர் பலவீனமான கட்டத்தில் இருக்கிறார். சரத் பொன்சேகாவின் மீது இராணுவ நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படுமானால் மரணதண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர். ஆனால் சரத் பொன்சேகாவை இராணுவ நிதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூறினாலும் அதற்கு வழியிருப்பதாகக் கூறுகிறது இராணுவத் தலைமை.

  • ஒரு இராணுவ அதிகாரி பதவியில் இருந்த ஓய்வுபெற்று ஆறு மாதங்களுக்குள் அவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு இராணுவச் சட்டத்தின் 57வது பிரிவு இடமளிக்கிறது . இதையெல்லாம் பார்க்கும் போது சரத் பொன்சேகாவை பிடியில் இருந்து விலக முடியதளவுக்கு அரசாங்கம் வியூகம் வகுத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி அவரிடம் இருந்து ஜெனரல் பட்டத்தை பறிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவையெல்லாம் சரத் பொன்சேகா என்ற தனிமனிதருக்கு எதிரான நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளினதும் எழுச்சியை முறியடிக்க அரசாங்கம் போடும் திட்டமே என்பதில் சந்தேகம் இல்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் அமைதியான சூழல் உருவாக்கும் என்று கணக்குப் போட்டிருந்த வெளிநாடுகளுக்கு அங்கு நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. குறிப்பாக இராணுவத் தலையீடுகள் அரசியலில் அதிகரிப்பது பற்றிய அச்சம், அரசாங்கத்தி;ன் எதேச்சாதிகாரப் போக்கு என்பன வெளிநாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சரத் பொன்சேகா விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைளுக்கு எதிரான அரசதரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைள் எல்லாமே ஜனநாயக்தில் இருந்த நாடு விலகிச் செல்வதையே புலப்படுத்துகிறது. இது சிங்கள அரசு போர்ச் சுழலில் இருந்து விடுபட்டு- அரசியல் சுழல் ஒன்றுக்குள் சிக்கிப் போயிருப்பதையே காண்பித்துள்ளது. இத்தகைய நிலையானது தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடிய பாவங்களின் விளைவு என்று தமிழ்மக்கள் பலரும் நிம்மதி கொள்கின்றனர்.

சரத் பொன்சேகா ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் அவலச் சாவுகளுக்குக் காரணமாக அமைந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதற்காக தமிழ்மக்கள் வருத்தப்பட வேண்டிய நிலையில் இல்லை என்பதே உண்மை. சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களுக்கு மூட்டிய தீயில் இப்போது தானே வெந்து கருகத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச ரீதியில் தமிழ்மக்களின் போராட்டம் பற்றிய புதிய செய்தியை சொல்லப் போகிறது. சரத் பொன்சேகா மீது மகிந்த ராஜபக்ஸ எடுக்கப் போகின்ற ஒவ்வொரு நடவடிக்கையுமே வெளியுலகை அதிருப்தி கொள்ள வைக்கப் போகிறது. அதுவே அவருக்கெதிரான விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்மக்களின்- விடுதலை கோரிய உரிமைப் போராட்டத்தை கொடிய போரின் மூலம் நசுக்கி, அவர்களின் வாழ்வையும் வளங்களையும் அடியோடு பெயர்த்து, இல்லாமலே செய்து விட்ட மகிந்த ராஜபக்ஸவும், சரத் பொன்சேகாவும் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பதற்கான சூழல் நெருங்கி வருகிறது. இதையே தான் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிந்திய இலங்கை நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

  • “தமிழ்மக்களின்- உரிமைப் போராட்டத்தை நசுக்கி, அவர்களின் வாழ்வையும் வளங்களையும் அடியோடு பெயர்த்து, இல்லாமலே செய்து விட்ட மகிந்த ராஜபக்ஸவும், சரத் பொன்சேகாவும் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பதற்கான சூழல் நெருங்கி வருகிறது.”

Comments