பிளவுபட்டு நிற்கும் தமிழ்த்தேசியவாதிகள்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், வரலாற்றுக் கடமை, வரலாற்றுத் தவறு, வரலாற்றுத் துரோகம் போன்ற சொல்லாடல்கள் நிரம்பி வழியப் போகின்றன.

22 மாவட்டங்களில், வட கிழக்கு பிரதேசங்களிலேயே அதிகமான கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் மிதந்த அன்னம், வெற்றிக்கிண்ணமாக உருமாறியுள்ளது. அக்கிண்ணம் வெற்றியைப் பெற்றுத்தருமா என்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பார்கள். அதே வேளை போட்டியிடும் கட்சிகளின் கூட்டமைப்புகளின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது, ஊடகவியலாளர்களு க்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். ஜனநாயகம், தேசியம், விடுதலை, ஐக்கியம், மக்கள், சுதந்திரம் போன்ற சொற்களை, விரும்பியவாறு இணைத்து, ஒரு கூட்டமைப்பை வெற்றி இலகுவில் உருவாக்கி விடலாம்.


சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் உருவாக்கிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, இதற்கொரு பொருத்தமான சான்று. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியும், ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இத்தகைய சொல் மாற்றத் தலைப்புகளின் வெளிப்பாடுகளாகும். அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில், ஒருவகையான பாரதப் போர் நிகழக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதை அவதானிக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற, செல்வராஜா, கஜேந்திரனிற்கும், பத்மினி சிதம்பரநாதனுக்கும் இம்முறை நியமனம் வழங்கப் படாததால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இணைந்து அவர்கள் போட்டியிடுகின்றார்கள்.

இரு தேசங்கள் தமிழ்த் தேசிய இறைமை என்கிற அடிப்படையான அரசியல் கோட்பாடுகளிலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வதாக இத் தரப்பினர் எதிர்வாதம் புரிகின்றார்கள். ஆனாலும் கஜேந்திரனுக்கும், பத்மினிக்கும் கூட்டமைப்பில் நியமனம் வழங்கியிருந்தால், இத்தகைய கோட்பாட்டு வாதங்களை இவர்கள் முன்வைத்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது முதுமொழி யாழ். குடாவை மையப்படுத்தியே இந்த நியமன மோதல்கள் உருவாகியுள்ளதை அவதானிக்கலாம்.

அத்தோடு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்ட விவகாரத்தையும் கவனிக்க வேண்டும்.
இவை தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது முன் வைக்கப்படும். காட்டமான விமர்சனங்கள் குறித்துப் பார்க்க வேண்டும். கூட்டமைப்பின் கிளை ஒன்று புது டில்லியில் திறக்கப்பட உள்ளதாக வெளிவந்த செய்தியே இதில் முதன்மையானது. இந்திய தேசத்தின் அடிவருடியாகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப கூட்டமைப்பு தொழிற்படுவதாகவும், இக் குற்றச்சாட்டு அமைந்திருந்தது.
கனடா வானொலிக்கு அளித்த நேர்காணலில் இது குறித்து விளக்கமளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், "இந்தியா எம் மீது திணிக்கும் தீர்வுத்திட்டத்தையோ அல்லது சிங்கள ஆட்சியாளர்கள் ஊடாக எம் மீது சுமத்த முற்படும் தீர்வினையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று கூறியிருந்தார்.

ஆகவே, இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய மாகாணசபைத் தீர்வினையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நம்பலாம். ஆனாலும் இதே கனேடிய வானொலிக்கு, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய செவ்வி, பலத்த அதிர்வுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் தோற்றுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் கூட்டமைப்பு செயல்படவில்லை என்று கூறும் அதே வேளை இந்தியாவை உதாசீனம் செய்ய முடியாதென்று அவர் விளக்கமளிக்கிறார். இந்தியா இல்லாமல், தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை, தாயகப் பிரதேச ஒருமைப்பாடு, இறைமையுள்ள ஆட்சி அதிகாரம் சாத்தியப்படாதென நம்பிக்கை கொள்ளும் இரா.சம்பந்தன், இவற்றை வழங்குமாறு சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்திய அரசு அழுத்தம் கொடுக்கும் என்பதனை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்தோடு இந்தியா மீதான நம்பகத்தன்மை தமிழ் மக்களிடம் மிகக் குறைவாக காணப்படும் இவ்வேளையில், சம்பந்தனின் நம்பிக்கையும், உறுதி மொழிகளும், மந்தகதியிலேயே மக்களை சென்றடையும். மூதூர் கிழக்கில் அனல் மின்நிலையம் அமைப்பதை நிறுத்தி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஏறத்தாழ 45 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியமர்த்த ஆவன செய்யுமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்து அதனை நிறைவேற்றினால் குறைந்தபட்ச நம்பிக்கையாவது இந்தியா மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இன அழிப்பு கொடூரங்களை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்கிற ஆதங்கமும் அப்போருக்கு இந்தியா வழங்கியதாக கருதப்படும் ஆதரவினால் உருவான கோபமும் தமிழ் மக்கள் மத்தியில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. ஆகவே, தமிழ் தேசியத்தை காப்பாற்ற அல்லது மக்களின் இறைமையை வென்றெடுக்க இந்தியா உதவுமா என்கிற நீண்ட சந்தேகங்களிலும் ஒரு வகையான நியாயப்பாடு உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

புதிய ஆசியப் பிராந்திய ஒழுங்கு நிலை மாறுதல்களில், இந்தியாவின் வகிபாகம், மேற்குலகின் அனுசரணைகளிலேயே நிலைநிறுத்தப்படுகின்றன. அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட விவகாரமும் இந்திய நகர்வோடு பின்னிப்பிணைந்திருப்பதாகக் கருதலாம். பொதுவாகவே ஒரு தேசிய பிரச்சினையில்தான் ஆளும், எதிர்த் தரப்பினர் ஒன்றுகூடுவார்கள். இவை தவிர வெளியுறவுக் கொள்கை குறித்து ஒரு பொதுவான நிலைப்பாட்டினை அடைவதற்கும் ஒன்றுசேர்வார்கள். ஆனாலும் எந்த அணியினருடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள் ளாத ஒரு பலமான வாக்கு வங்கியை கொண்ட இனக்குழுமத் தை தம்வசப்படுத்த ஒரே மேடையில் இவர்கள் காட்சியளிப்பார்கள்.

ஆகவே, இந்த வருட நடுப்பகுதியில் நடைபெறவிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலும் ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் வல்லாதிக்க சக்திகளின் போட்டிகளும் பிரித்தானிய ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினரை உலகத் தமிழர் பேரவையின் மேடைக்கு இழுத்து வந்துள்ளதென்றும் கூறலாம். ஆனாலும், இந்தியாவின் பிராந்திய நலனை மீறி மேற்குலகானது எதுவித நகர்வுகளையும் மேற்கொள்ளாது என்பதனையும் புலம்பெயர் தமிழ் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடித்த சிங்கள தேசத்திற்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த தென்னாபிரிக்க அரசின் நாடாளுமன்ற பிரதிநிதியும் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அதேவேளை இலங்கையின் அனைத்து மக்களும் எவ்வாறானதொரு தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென்பதனை தீர்மானிக்க வேண்டும் என பழைய சர்வதேச பாடலையும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பாடியுள்ளார்.

தமிழ் தலைமைகள் முன்வைத்த தீர்வுத் திட்ட ஒப்பந்தங்கள் சிங்களத்தால் கிழித்தெறியப்பட்டதாலேயே வட்டுக்கோட்டை தீர்மானங்களும் ஆயுதப்போராட்டங்களும் நிகழ்ந்தேறின. நியாயபூர்வமான தீர்வொன்றிற்கு சிங்கள தேசம் உடன்படாது என்பதால்தான் நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்தியப் பலத்தோடு திம்புவில் மாநாடும் நடத்தப்பட்டது. ஆகவே, சிங்கள தேசத்தோடு பேசி பொதுவான தீர்வொன்றினை ஏற்படுத்துங்கள் என்று மிலிபாண்ட் கூறுவது, ஆசிய அரசியலில் மேற்குலகின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா.வின் பாதுகாப்பு சபையிலும் மனித உரிமை பேரவையிலும் மேற்குலகால் மறைமுகமாகவும் நேரடியாகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை சிங்கள ஆட்சியாளர்கள் தமது இராஜதந்திர சாணக்கியத்தால் மிக இலகுவாகத் தோற்கடித்தனர்.

ஆதலால் மேற்குலகம் முன்னெடுக்கும் இலங்கை மீதான அழுத்தங்கள் இந்திய நகர்வுகளுடன் ஒரு நேர்கோட்டில் பயணப்படும் என்பதே யதார்த்த நிலையாகும். இது குறித்து ஆழமான புரிதலை சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவினர் (ஐஇஎ) அண்மையில் விடுத்த அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ளலாம். இவை தவிர, தற்போது நடை பெறும் தேர்தல் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சுற்றி பாரிய வியூகம் ஒன்று அமைக்கப்படுகின்றது. ஏராளமான அரச சார்பு கட்சிகளும், தென் இலங்கை எதிர்க்கட்சிகளும், பல சுயேச்சைக் குழுக்களும் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளன.
இவை தவிர கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்களும் அதற்கெதிரான தளத்தில் போட்டி போடுகின்றனர்.

இதில் தீவிர தமிழ் தேசிய வாதிகளும், மிதவாத தமிழ் தேசிய வாதிகளும் மோதிக்கொள்வது போன்றதொரு பிரமை உருவாக்கப்படுகிறது. இம் மோதலில் பயன் பெறுவது, பேரினவாதத் தரப்பாகவே இருக்கப் போகின்றது. வாக்குகள் சிதறி, கையளவு உறுப்பினர்களையே ஒவ்வொரு அணியினரும் பெறப்போகின்றனர். ஆனாலும், இச் சிதறல்கள் வெளிப்பாடானது, இன்னுமொரு அபாயகரமான அரசியல் சூழ்நிலையையும் உருவாக்கலாம். அதாவது, அரச சார்பான கட்சிகளை ஒரு கூட்டமைப்பினுள் இணைத்து, புதிய தமிழ் பேசும் கூட்டமைப்பு ஒன்றை சிங்களம் உருவாக்கும் ஏதுநிலை ஒன்று காணப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்தவுடன் தம்மோடு பேசவரும் தமிழ் தலைமையுடன் தீர்வு குறித்து பேசுவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய விடயம், இதற்கான சாத்தியப்பாடுகளையே உணர்த்துகின்றது.

-இதயச்சந்திரன்-

Comments