செங்கல்பட்டு அகதிகள் மீது தாக்குதல்! இளந்தமிழர் இயக்கம் கண்டனம்!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த, ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று(2.2.2009) இரவு தொடங்கி இன்று(3.2.2009) காலை வரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. மூன்று அகதிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னிரெண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வீடிழந்து, நாடிழந்து, உறவுகளை இழந்து நம்மை நாடி வரும் தமிழீழ அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினர் நடத்திய இத்தாக்குதலை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

செங்கல்பட்டு சிறை முகாம், அடக்குமுறைகளின் கொட்டடியாகவே காலங்காலமாக திகழ்ந்து வந்துள்ளது. அகதிகளை இவ்வாறான தனித்த முகாம்களில் சிறைவைத்து, அவர்களது குடும்பங்களிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருப்பது, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள அகதிகள் பிரகடனங்களை மீறுகின்ற செயலாகும். இந்நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது மிகக் கடுமையான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடவுச்சீட்டு இல்லாமை, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லுதல் போன்ற சிறு சிறுக் குற்றச்சாட்டுகளின் படி கைது செய்யப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் பலர் இம்முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகின்றது. ஆனால், இவர்களில் பலர் வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், வழக்கு நடத்தப்பட்டு தண்டனை அனுபவித்து முடித்தப்பின்னரும் கூட, இங்கு சட்ட விரோதமாக மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இவ்வாறு சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள், தமது விடுதலையைக் கோரியும், உரிமைகளைப் பெறவும் சனநாயக முறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினால் அதற்கு காவல்துறையினரின் தடியடியின் மூலம் தான் தமிழக அரசு பதில் சொல்லுமா என கேள்விகள் எழுகின்றன.

தமிழுக்கு மாநாடு நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் இருக்கட்டும். நம்மை நாடி வந்த ஈழத்தமிழ் மக்களை வாழ வைக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அவர்களை துன்புறுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா? இதைக் கூட செய்யாதா தமிழக அரசு?

எனவே, ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில், அரசே நடத்துகின்ற சட்டவிரோதமான சிறைக் கொட்டடிகள் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். காயம்பட்டுள்ள அகதிகளுக்கு தகுந்த சிகிச்சையளிக்கப்பட்ட பின் அவர்களை மீண்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை வைக்காமல், அவர்களது குடும்பங்களுடன் அவர்களை இணைத்து வைக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

இடம் : சென்னை-17.
நாள் : 03.02.2010

Comments