ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காயும் கொலைஞர்

தமிழ் மக்கள் அனைவரினாலும் செல்லமாக அழைக்கப்படும் கலைஞர் என்கின்ற முத்துவேல் கருணாநிதி அரசியலுக்குள் நுழைய முன்னரே சிறந்த நாடகம் ஒன்றில் பங்காற்றி அதாவது தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாதுரையினால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞரும் தனது பதினான்காம் வயதில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையையும் வைத்து தானும்

ஒரு தமிழ்ப் போராளி எனக் காண்பித்து பெரியார் மற்றும் அண்ணாதுரையின் அமோக ஆதரவைப் பெற்று படிப்படியாக உயர்ந்து பெரியார் உருவாக்கிய திராவிடக் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியை தொடங்க கலைஞரும் அக்கட்சியில் இணைந்து பின்னர் அண்ணாதுரையின் மரணத்தைத் தொடர்ந்து அக்கட்சியைத் தனது குடும்பக் கட்சியாக கட்டியெழுப்பி தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை நிலைநாட்டி அதிலும் வெற்றி கண்டு தொடந்தும் தனது சாகசங்களை தொடர்ந்தார்.

குறிப்பாக ஒன்றுமறியா தமிழ் நாட்டு மக்களையும் தன் வசப்படுத்தி ஏன் பல இந்திய முக்கிய அரசியல் வாதிகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து தென்னிந்தியாவின் ஒரு மிகப்பெரிய முடிசூடா மன்னனாக இப்பொழுதும் இருந்து கொண்டுள்ளார் என்றால் அது ஒன்றும் மிகைப்படுத்தப்படாத கூற்று. ஆனால் பாவம் ஈழத்தமிழர். அவர்கள் பல சொல்லொணாத் துயரங்களை சந்தித்தவேளை பல நாடகங்களை நடாத்தி தானும் மானத்தமிழரில் ஒருவன் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் தானே உலகத்தமிழரின் ஏகோபித்த தலைவன் என்ற மமதையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றிலும் வெற்றி கண்டு உலகத்தமிழரையும் தனது நாடகத்தினால் ஏமாற்றிக்கொண்டுள்ளார்.

அவரின் நாடகங்கள் பல பரிமாணங்களாக அவதரித்து விரிவுபடுத்தப்பட்டு 1980 ஆம் ஆண்டுப்பகுதிகளில் இருந்தே அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருக்கின்றது. கலைஞரின் நாடகங்கள் பல அவதாரம் அவருடைய நாடகங்களில் முக்கிய சம்பவங்கள் சில:

அடையாள உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்; பேருந்து மற்றும் புகையிரதப் போக்குவரத்தைத் தடுக்க சாலை மறியல் போராட்டங்கள்; அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்கள்இ மனித சங்கிலிப் போராட்டங்கள், இரங்கல் மாநாடுகள், மத்திய அரசை வற்புறுத்தித் தீர்மானம் கொண்டுவரும் மாநாடுகள்; ஊர்வலங்கள்; கட்சிப் பொதுக்குழுக் கூட்டங்கள்; அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற அங்கத்துவப் பதவிகளைத் துறப்பது மற்றும் அவர் தன் கட்சி சார் உறுப்பினர்கள் பதவி விலகுவதாக கடிதம் கொடுப்பது. இப்படிப் பல நாடகப் பாணியிலான கதைகள் தயார்படுத்தப்பட்டு ஒத்திகையும் நடாத்தி தமது செல்வாக்கை குறிப்பாகத் தாம் மற்றவர்களிலும் விட ஈழத் தமிழர் பால் அதிக அக்கறை வைத்திருப்பதாகக் காட்டி தமது அரசியல் பிரச்சாரத்தை ஈழத் தமிழரின் அவல ஓலத்தில் அதாவது ஓர் சாவீட்டில் தமது செல்வாக்கைப் பெற அவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக வந்து பின்னர் அவ்வீட்டில் தமது அரசியல் பிரச்சாரத்தை பந்தல் போட்டு நடாத்திக் கொண்டுள்ளார் கலைஞர்.

அதில் இனி வரும் காலங்களில் நடைபெறப் போகும் சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டு. வர இருக்கும் நிகழ்சிகளுக்கான கதை வசனம் ஏற்கனவே கலைஞரினால் தயாரிக்கப்பட்டுவிட்டது. அவற்றில் சில: வரும் 20 ஆம் நாள் நடைபெற இருக்கும் தனது கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ஈழத் தமிழரின் நிலைமையைப் பற்றி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி தனது கட்சியின் ஆதரவுடன் இயங்கும் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளை வழங்குமாறு இலங்கை அரசை நிர்ப்பந்தித்து மகிந்த தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்த கலைஞர் தனது வாரிசுகளை முன்னிறுத்தி மத்திய அரசை வற்புறுத்தி சில பிரச்சாரங்களை மேற்கொண்டு சொல்லொணாத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழரின் வாழ்வியலை சிதைக்க அடுத்த கட்ட சூழ்ச்சி அரசியலை மேற்கொள்வது மற்றும் தமிழ் நாடு அரசினால்

அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை இந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் மேற்கொண்டு தனது கட்சியையும் வாரிசுகளையும் அந்த மாநாட்டின் ஊடாக தனது மகன் ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக மறைமுகமாக பிரகடனப்படுத்துவதோடு மற்றும் தனது மகனான அழகிரி மற்றும் மகளான கனிமொழியை தமிழ் நாட்டின் புது டெல்லிக்கான பிரதிநிதிகள் அவர்களே என்று நேரடியாக இந்தியப் பிரதமர் மற்றும் பல வட இந்திய அரசியல்வாதிகளின் முன் அவர்களின் இருப்பை அங்கீகரித்து எதிர்காலத்தில் குறிப்பாக கருணாநிதி இல்லாத ஒரு காலத்தில் அரசியலில் இவர்களின் நிரந்தர இருப்பை நிலைநிறுத்த இந்த மாநாடு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பது தான் கலைஞரின் கதை அம்சம். பல காலகட்டங்களில் கலைஞரின் கதை வசனங்கள் வழி தடுமாறியதோ அல்லது தோல்வி கண்டதென்பது மிக அரிது.

ஏமாறும் மக்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டேயிருப்பர் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் ஏமாளிகளாக இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேயிருப்பர். இந்த வர்க்கத்தை சேர்ந்த தன்னை மிகச் சிறந்த புத்திசாலியாக மார்தட்டிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் கலைஞர். தமிழ் நாட்டு மக்களின் நாடித் துடிப்பை நன்கறிந்து தனது வெளித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார். குறிப்பாக இவர் கொண்டு வந்த சாதியொழிப்பு என்ற சட்டம் கூட நூறு அளவு கூட தமிழ் நாட்டில் சாத்தியமில்லாமல் இருக்கின்றது. பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்க்கும் போது என்ன சாதி மதம் என்று குறிப்பிட வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்றும் பல நிறுவனங்களில் சாதி மத பேதங்களினால் சங்கங்களும் வணிக நிறுவனங்களும் இயங்கிக்கொண்டுள்ளன.

ஆக இவரினால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இன்றளவும் நூறு வீதம் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு மறைந்த தமிழ் நாட்டின் தானத் தலைவன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டமான அதாவது மனிதர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை வண்டியில் அமரவைத்து இழுக்கக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்து அதிலும் வெற்றியும் கண்டார். குறிப்பாக இந்த வழக்கம் அன்றே அடியோடு ஒழிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியோ தனது அரசியல் செல்வாக்கினூடாக தனது குடும்ப வளர்ச்சியையே முன்னிறுத்த போராடியிருக்கின்றார்.

இவர் பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆட்சி புரிந்தும் இவரினால் தமிழ் நாடு பல துறைகளில் வெற்றி கண்டதென்பதை விடப் பல துறைகளில் வீழ்ச்சிகண்டதென்பது தான் மறுக்க முடியாத உண்மை. ராமச்சந்திரன் அவர்களின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வழி நடாத்திக் கொண்டிருக்கும் ஜெ. ஜெயலலிதா அவர்கள் நேரடியாக பல ஊழல்களை செய்தாரானால் கருணாநிதியோ தனது நிர்வாக சாமர்த்தியத்தின் ஊடாக மறைமுகமாக பல கோடி ஊழல்களை செய்தார் என்றால் எவராலும் மறுக்க முடியாது. இருப்பினும் அவருக்கு எதிரான எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு குறிப்பாக எப்படி பல கோடி சொத்துக்களை தன் வசம் சேர்த்தார் என்று கேட்டால் தனது சாணக்கிய எளிய தமிழில் அவர் கூறுவது என்னவென்றால் தான் ஒரு படத்தை அதாவது பராசக்தி படத்தை 1952 ஆம் ஆண்டில் கதை வசனம் எழுதிக் கொடுத்து சம்பாதித்தேன் என்று கூறுவார்.

ஆனால் இன்றோ அவரிடன் பல கதைகள் உள்ளன. அதாவது பல ஊடகங்களை தன் வசப்படுத்தி அதன் மூலமாக பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கின்றார். ஆக அவரின் இக்கதைகளில் இருந்தே அவரின் நாடக பாணியிலான நடவடிக்கைகளை ஒரு சாமானிய மனிதனாலேயும் அறிய முடியும். எப்படி ஈழத் தமிழருக்கு அதிகாரங்களை பெற்று தர முடியும்? கலைஞரின் மிக சமீபமான வசனம் என்னவென்றால் அதாவது தான் எப்படியும் ஈழத் தமிழருக்கு அதிகாரங்களை பெற்றுத்தரப் போராடப் போவதாக கூறி வருகின்றார். ஆனால் ஈழத் தமிழ் அரசியல் நோக்கர்களின் கணிப்பில் கலைஞர் மீண்டும் தனது அரசியல் நாடகத்திற்கான ஒத்திகை நடாத்துவதற்காக தான் இந்த மாதம் 20 ஆம் திகதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொது குழு கூட்டங்கள்.

கலைஞர் அறிக்கை வாயிலாக கூறியிருப்பது என்னவென்றால் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வரவேண்டுமென வலியுறுத்தியும், அதற்கு ஆவண செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தருவதாக காஞ்சிபுரம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது... ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எதனையும் அறிவித்துவிடமாட்டோம்... சோனியா காந்திக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன் என்று நான் கூறியதாக நினைவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை...

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வந்து என்னைச் சந்தித்தபோது, கடற்கரைப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும், இலங்கை ராணுவமும் தொடர்ந்து தாக்குவது பற்றி கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்தேன். இலங்கையில் விரைவில் தமிழர்களுக்கு உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் அரசியல் திருத்தம் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்."

விசித்திரம் என்னவென்றால் கடந்த முப்பதாண்டு காலத்திற்கு மேலான ஆயுத வழிப் போராடங்களினாலும் அதற்கு முன்னைய ஏறத்தாழ முப்பதாண்டுகள் அறவழி போராட்டங்களினாலும் பெற முடியாமல் போன தீர்வை குறிப்பாக கருணாநிதி இந்த காலகட்டங்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் இருந்தும் ஏன் அவரின் கட்சியின் ஆதரவோடு இருந்த மத்திய அரசினால் ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் சொற்களினால் சொல்லப்பட முடியாதவை. இவரின் ஆட்சியில் ஈழத்தமிழருக்கு கிடைத்த நற்பலன் என்னவென்றால் இவரின் கட்சியின் ஆதரவோடு இயங்கிய ஜனதா கட்சி தலைமயிலான வி. பி. சிங் அரசாங்கம் 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியினால் அனுப்பபட்ட இந்திய இராணுவத்தை 1990 ஆம் ஆண்டு ஈழத்தை விட்டு விலக்கி மீண்டும் இந்தியா கொண்டு வந்தது தான்.

அதிலும் கலைஞரின் வார்த்தைகளை அதாவது சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கிய இந்திய இராணுவத்தை வரவழைக்கப் போகாமல் புறக்கணித்தது தான். அவர் கூறிய காரணம் என்னவென்றால் தன் தமிழ் சாதியை அழித்த இராணுவத்தை எந்த முகத்தை கொண்டு போய் வரவழைப்பதென்பது தான். ஈழத் தமிழரை இந்த வார்த்தை மெய்சிலிர்க்கவத்தது என்றால் மிகையாகாது. இந்தியா ஈழத் தமிழர் மீது பல அடக்குமுறைச் சட்டங்களையும் நடவடிக்கைகளையும் தனது நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் மேற்கொண்டு ஈழத் தமிழரின் போராட்டத்தினை நசுக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்திய பின்னர் இதே கலைஞர் கூறினார் தான் இந்திய இராணுவத்தை வரவழைக்கப் போகவில்லை காரணம் எப்படியொரு தோல்வியை தழுவிக்கொண்டு நாடு திரும்பிய இராணுவத்தை வரவழைக்கப் போவதென்று. ஆக கலைஞர் மீண்டும் தனது சுய நலத்தைக் குறிப்பாக தனது அரசியல் வாழ்வை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தனது வாய்மையையே நாடகமாக்கினார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் 30,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இன்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, உள்ளுரிலேயே இடம் பெயர்ந்த மக்கள் என்ற பெயரில் தமது உறவினர் வீடுகளிலும் மற்றும் பொது நிலங்களிலும் கொட்டில் போட்டு சுகாதாரமின்றி, மனிதர்கள் வாழவே முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையிலிருந்து தப்பி பல நாடுகளில் தஞ்சம் அடைந்து ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில், இந்த தமிழர்கள் வாழும் காலகட்டத்தில் கலைஞரோ அவர்களின் மீது ஏதோ பற்று வைத்திருப்பதாகக் காட்டி தனது அரசியல் சாணக்கியத்தை காட்ட முனைகின்றார்.

தனது வார்த்தைகளின் மீது அதீத மதிப்பு வைத்திருக்கும் மத்திய அரசின் தலைவர்கள் குறிப்பாக சோனியா காந்தி, மன் மோகன் சிங் போன்றவர்களும் நாராயணன் மற்றும் மேனன் போன்ற அதிகாரிகளும் நிச்சயம் கலைஞரின் வார்த்தையைத் தட்டி உதாசீனப்படுத்தி இருக்க சந்தர்ப்பமே இருந்திருக்காது கலைஞர் இதய சுத்தியுடன் ஈழத் தமிழரின் பிரச்சினையை கையாண்டிருப்பராயின். ஆனால் இன்றோ ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு ஒரு முடிவு கட்டிவிட்டு ஏதோ தான் ஒரு சனநாயகத் தலைவர் என்ற ஒரு மாயையை உலகத்திற்குக் காட்ட செயல் கூட்டங்களும் பொதுக் குழுக்களின் கூட்டங்களை தவிர ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான செயல்பாடுகளே அல்ல.

மகிந்த போன்ற சிங்களத் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி காலத்தைக் கடத்த கருணாநிதி என்ன அவ்வளவு ஒரு முட்டாளா. மகிந்தவின் வயதே கருணாநிதியின் அரசியல் அனுபவம் என்றால் அது ஒன்றும் சொல்லுக்காக அல்ல. இது நிஜமான உண்மை. அப்படியிருக்கும் போது கருணாநிதிக்கு தெரியாதா மகிந்த அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுத்து ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை அடக்குவாரென்று. இதற்கு கருணாநிதி மறைமுகமாக உதவியாக இருக்கின்றார் என்றால் அதில் ஒன்றும் ஐயமில்லை.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக மகிந்த ஆட்சி கட்டில் ஏறியவுடன் அதாவது 2005 ஆண்டுக்கு பின்னர் தமிழர் பகுதிகளின் மீது படையெடுத்து பல தமிழ் அரசியல், பத்திரிகை, கல்வியாளர்களை மற்றும் விடுதலைக்காக போராடிய போராளிகளையும் அவர் தம் மக்களையும் சூறையாடி வெற்றி மமதையில் சிங்களம் வலம் வந்த போது இந்திய வல்லாதிக்கம் உறுதுணையாக இருந்தது என்பது தான் உண்மை. ஆக கருணாநிதிக்கும் அதில் மிகப்பெரிய பங்குண்டு. இதை மூடி மறைத்து தமிழ்ச் சமூகத்துடன் நற்பெயரை ஏற்படுத்த எடுக்கும் நாடகம் தான் ஈழத் தமிழர் மீது கரிசனை கொண்டுள்ளதகாக் கூறுவதும் மகிந்த அரசை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக் கோருவதும்.

-அடுத்த வாரம் தொடரும்-

அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments