பொதுத்தேர்தலுக்கு: புதிய வியூகத்தை வகுக்க வேண்டிய நிலையில் கட்சிகள்

“அடுத்து நடக்கப் போகும் பொதுத் தேர்தலில் இந்த முடிவு (ஜனாதிபதித் தேர்தல்) கனமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

  • கூட்டணிகள் அமைப்பதில் இருந்து கொள்கைகளை வரைவது வரைக்கும் இந்தத் தாக்கம் அமையலாம்.” இது கடந்த வாரம் இன்போ தமிழின் கொழும்பு நிலவரத்தின் இதே பத்தியில் குறிப்பிட்டிருந்த விடயம். ஜனாதிபதித் தேர்தல் பொதுவாக அனைத்துக் கட்சிகளுக்குமே பல விடயங்களைக் கற்றுக் கொடுத்திருந்தது.

அதாவது பொருந்தாத கூட்டணி என்று வாக்காளர்களால் அடையாளம் காணப்பட்டவற்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்யும் நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த வாரமே பல கட்சிகள் தமது முடிவுகளை மாற்றியமைத்துள்ளன.மேலும் பல கட்சிகள் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

முதலாவது ஐதேக- ஜேவிபி கூட்டணி.

அடுத்த பொதுத்தேர்தலின்போதும் இது நீடிக்கும் என்றே முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவரது அன்னப்பறவை சின்னத்தில் இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற ஆலோசனைகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கான அடிப்படைப் பேச்சுக்கள் கூட நடந்திருந்தன.ஆனால்; ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் அமைத்த கூட்டுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. முன்னதாக 2004இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜேவிபியும் இணைந்து கூட்டணி அமைத்த போது அதற்கு கணிசமான ஆதரவு கிடைத்தது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் அளவுக்கு அது வரவேற்பு நிறைந்தாக இருந்தது. ஆனால், ஐதேகவும் ஜேவிபியும் இணைந்து உருவாக்கிய கூட்டணிக்கு பலத்த அடி தான் விழுந்தது.

இரு கட்சிகளும் தனித்தனியாகப் பெறக்கூடிய வாக்குகளே சரிந்து போயிருந்தன. கடந்தமுறை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் மலையகக் கட்சிகளினது ஆதரவுடன் மட்டும் போட்டியிட்டபோது- கிடைத்த வாக்குகள் கூட இந்தக் கூட்டணிக்குக் கிடைக்கவில்லை.

அப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு 4,706,366 வாக்குகள் கிடைத்த போதும், கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்ததோ வெறும் 4,173,185 வாக்குகள் தான். ஜேவிபி, மங்கள சமரவீரவின் மகாஜன அணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- இவற்றையெல்லாம் விட ஜெனரல் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட செல்வாக்கு, அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு பலரும் வழங்கிய ஆதரவு எல்லாம் கிடைத்த போதும் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் குறைந்து போயுள்ளன.

ஜேவிபி தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை இழந்து போனதும், ஐதேவுக்குக்கும் இது சரிவுகளை ஏற்படுத்தியிருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது இதனடிப்படையில் இந்தக் கட்சிகள் தனித் தனியாகவே அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

அடிப்படைப் புரிந்துணர்வுகள் இருந்தாலும், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. அதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐதேகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த இரு கட்சிகளினதும் கூட்டணிக்கு ஆபத்து ஏற்படாது என்றே தெரிகிறது.
ஏனென்றால் இந்தக் கூட்டணிக்கு முஸ்லிம் மக்களிடத்தில் ஆதரவு கிடைத்துள்ளது.

மனோ கணேசனின் நிலையும் அதுவாகவே இருக்கும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் சரத் பொன்சேகாவை வெற்றி பெற வைத்த போதும், அதன் வேண்டுகோள் தமிழ்மக்களால் முற்றுமுழுதாக ஏற்கப்படவில்லை. எனவே பொதுத்தேர்தலில் தனித்துக் களமிறங்க முயற்சிக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருப்பினும் இணைந்து போட்டியிடும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் விளைவாக ஏற்பட்டிருக்கின்ற மற்றுமொரு முக்கிய மாற்றம் வடக்கில் ஈபி;டிபி தனித்துப் போட்டியிடப் போவதாக எடுத்துள்ள முடிவாகும்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள ஈபிடிபியை கடும் அழுத்தங்கள் கொடுத்து, யாழ்.மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணங்க வைத்தது அரசாங்கம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கி வேலை செய்வதற்கு அச்சத்துடன் இருந்த நேரம். அந்தத் தேர்தலில் ஆளும்கட்சி- ஈபிடிபி கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, அவரை வெற்றிபெற வைக்கும் முயற்சியில் ஈபிடிபிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இது ஈபிடிபிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது அடையாளம் பறிக்கப்பட்டு- மக்களிடத்தில் செல்வாக்கு இழந்து போய் விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீளவும் வீணைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக முடிவு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே இருக்கப் போவதாகவும், தேர்தலின் பின்னரே இணைந்து செயற்படப் போவதாகவும் கூறியிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இது ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவு.

தமக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திட்டம். அப்போது தான் தேசியக் கட்சி என்ற நிலை, அனைத்து மக்களிடத்திலும் செல்வாக்குள்ள கட்சி என்ற நிலை ஏற்படும்.
ஆனால் வெற்றிலையை நம்பி மோசம் போய் விடுவோமோ என்ற பயம் ஈபிடிபிக்கு.

இதேபோல கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பலத்த அடி விழுந்தது. அவர்களின் ஆதரவு பெற்ற மகிந்த ராஜபக்ஸவை விட சரத் பொன்சேகாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே அந்தக் கட்சியும் தமது முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலையில் உள்ளது.

பொதுவாக அனைத்துக் கட்சிகளுமே தமது கூட்டணி குறித்த நகர்வுகளில் மாற்றங்;களை செய்வதற்கே ஜனாதிபதித் தேர்தல் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. நிரந்தரமாகவோ- தற்காலிகமாகவோ தமது நண்பர்களை கைவிட்டு விட்டு தனிவழி நடப்பதற்கே ஜனாதிபதித் தேர்தல் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

- கபில்-

புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்ததும்:
கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது யார்?

Comments