தென்னிலங்கை அரசியல் வியூகங்களும் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களும்

ஜெனரல் சரத் பொன்சேகா ஏன் கைது செய்யப்பட்டாரென்னும் விவாதங்கள், அவர் விடுதலை செய்யப்படும் வரை அல்லது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடையும் வரை நீடித்துச் செல்லும்.

அதற்குப் பின்னரும் அவரது சிறை வாழ்வு நீண்டு செல்லுமாயின் சரத் பொன்சேகா ஆசியாவின் இன்னுமொரு ஆங்சாங் சூகியாகி விடவும்கூடும். ஜனநாயகவாதியாகக் கருதப்படும் ஆங்சாங் சூகியை தடுப்புக் காவலில் வைத்துள்ளது மியன்மாரின் இராணுவ ஆட்சி. இலங்கையின் நிலைமையோ எதிர்மறை வடிவமாகக் காட்சியளிக்கிறது. முன்னாள் இராணுவத் தளபதி உள்ளே இருக்க, நாடாளுமன்ற அரசியல்வாதிகள் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக பொன்சேகா அரசியலில் குதித்தாலும் சீருடை இறுக்கிய ஆறு மாதக் கட்டுப்பாடு அவரை ஓர் இராணுவத் தரப்பாகவே இன்னமும் அடையாளம் காட்டுகிறது.

இராணுவத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமகனாக தேர்தலில் போட்டியிட்ட ஒரு நபரை மறுபடியும் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியுமாவென்பதுதான் இப்போது பரவலாக எழுந்துள்ள சட்ட வரைமுறை சார்ந்த கேள்வியாகவுள்ளது. ஆனாலும் இவற்றிற்கு அப்பால், ஒரு நிரந்தரமான அரசியல் சூட்சுமமொன்று இவ் விவகாரத்தில் இழையோடி இருப்பதனை புரிந்து கொள்ளலாம்.பொதுவாகவே ஆசிய நாடுகளில் ஆட்சி மாற்றமொன்று நிகழ்ந்தால் காவல்துறை மற்றும் இராணுவத்திலுள்ள உயர் நிலை அதிகாரிகள் மாற்றப்படுவது எழுதப்படாத சுய பாதுகாப்பு விதியாக அமைந்து விடுகிறது. ஆட்சியில் இருப்போர், அடுத்த தேர்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றினால் பாதுகாப்புத் துறையிலோ அல்லது அரச நிர்வாக உயர் கட்டமைப்பிலோ இடமாற்றங்கள் ஏற்படுவது அரிது.

தற்போதைய நிலைமை முற்றிலும் வித்தியாசமாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முன்னைய ஆட்சியில் இராணுவத்தின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, அதிபருக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்கிய விவகாரமே, பெரும் சிக்கல்களையும் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையீனங்களையும் உருவாக்கியது. ஆகவே, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான பாதுகாப்புத் துறையிலுள்ள மேல் நிலை அதிகாரிகளை அகற்றுவதன் ஊடாக தமது இருப்பையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாமென ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய சுத்தப்படுத்தல்கள் நிறைவுறும் வரை சரத் பொன்சேகாவின் அரசியல் மீள் பிரவேசம்சாத்தியப்படப் போவதில்லையென ஊகிக்கலாம். அத்தோடு ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினரின் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகளை நலிவடையச் செய்யவும், இக் கைது விவகாரம் துணை புரியுமென ஆளும் தரப்பினர் எண்ணுகின்றனர்.சரத்தின் கைது விடயம் உருவாக்கியுள்ள அனுதாப அலையை அரசியல் சக்தியாக மாற்றும் வல்லமையையும் தேர்தல் அறிவிப்பு பலவீனப்படுத்தியுள்ளது. ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாலும் யானையின் கழுத்தில் மணியைக் கட்ட முடியாதென ஜே.வி.பி.யும் அன்னப் பறவையில் அமர்ந்து எதிரணியினர் பயணம் மேற்கொள்ள வேண்டுமென சரத் தரப்பினரும் மோதிக் கொள்வதைக் காணலாம்.

இவை தவிர, பிரதமராக யாரை அறிவிப்பது என்கிற சிக்கலும் வேட்பாளர் தெரிவில் அதிகாரப் போட்டியும் பிரதேச குறுநில மன்னர்களுக்கிடையே எழும் குழுவாதப் பிரச்சினைகளும் எதிரணி மத்தியில் ஆழமாகக் காணப்படுகின்றன. ஆயினும் பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்காமல் அரசியல் வாரிசினை மையப்படுத்தி ஆளும் தரப்பினரின் தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறது. அதேவேளை ஜே. ஆரினால் 1978 இல் உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு, விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையைக் கொண்டிருப்பதனால் தனியான கட்சியொன்று அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத இக்கட்டான சூழலை இலங்கை அரசியலில் காணக் கூடியதாகவிருக்கிறது.

ஆகவே அரசியலில் மோதும் இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கு ஆதரவான ஏனைய கட்சிகளோடு கூட்டணியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதே போன்று தமிழர் தாயகத்தில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளும் தமக்கிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்கி வாக்குச் சிதறலை தவிர்க்கும் உத்திகளை பிரயோகிக்கும். ஆனாலும் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர்த்து ஏனைய கட்சிகள், தனித் தனியே போட்டியிடுவதை அவதானிக்கலாம். இதில் ரி.எம்.வி.பி., ஈழவர் ஜனநாயக முன்னணி, ஸ்ரீ ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி அல்லது ஸ்ரீதரன் அணி), ஈ.பி.டி.பி. என்பவற்றோடு பல சுயேச்சைக் குழுக்களும் களமிறங்குகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இக் கட்சிகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அதிக எண்ணிக்கையான கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை சிதறடிக்கும் நோக்கம் கொண்டவை என்பதையே பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். யாழ். மாநகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது சொந்தச் சின்னத்தில் இம்முறை தேர்தல் களத்தில் குதிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ரி.எம்.வி.பி.யும் தனித்தே போட்டியிடுகிறது. அதிகளவு தமிழ்க் கட்சிகள், தமிழர் தாயகத்தில் போட்டியிடுவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறிப்பாக தேசியப் பட்டியலில் கிடைக்கும் அங்கத்துவமும் குறைவடையும் நிலை உருவாகும். அதனால் வடக்கு, கிழக்கில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் தேசிய சக்திகளின் எண்ணிக்கை சிதறடிக்கப்படுவதையே பேரினவாத சக்திகளும் விரும்புகின்றன.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று அரச சார்பு தமிழ்க் கட்சிகளிடையே ஒரு வலுவான கூட்டமைப்பொன்று உருவாகவில்லை என்கிற விடயத்தையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கை கொண்டவர்கள், சுயேச்சைக் குழுக்களாக போட்டியிடுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் தலைவலியை உருவாக்கப் போகிறது. இவை தவிர புற அழுத்தங்களால் தேர்தலை எதிர்கொள்வதில் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் கூட்டமைப்பினர், அதன் கூட்டுக்குள்ளும் புதிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

கட்சிகள் சார்பான உறுப்பினர்களைத் தவிர்த்து ஏனைய சுயாதீன 12 நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாதென தெரியவருகிறது. இத்தகைய உள் முரண்பாடுகளால் உருவாகும் தாக்கங்கள், கூட்டமைப்பின் அரசியல் தளத்தினை சிதைத்து விடும். அதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிதாக உள்வாங்கப்படும் உறுப்பினர்களின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் மக்கள் கரிசனை கொள்வார்கள். உள், வெளி அழுத்தங்களையும் அதன் முரண்பாட்டு நிலைகளையும் சரியாக மதிப்பீடு செய்யும் அதேவேளை அடுத்த கட்ட அரசியல் நகர்விற்காக வேலைத் திட்டங்களை, மக்கள் முன் கூட்டமைப்பினர் தெளிவாக வைக்க வேண்டும்.

இலங்கையின் இன முரண்பாட்டு தாக்கங்களால் உருவான இரு துருவ அரசியலை ஒரு துருவ அரசியலாக்கும் பேரினவாதச் சக்திகளின் உத்திகளை எவ்வாறு கையாள்வது என்கிற விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டினை கூட்டமைப்பினர் மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது. இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தான், அடுத்த கட்ட அரசியல் போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமையும். இத்தனை அழிவுகளையும் கொடுமைகளையும் அனுபவித்த, இன்னமும் அதன் வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷையைப் பிரதிபலிக்கும் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டினை கூட்டமைப்பு எடுக்க வேண்டும். அத்தகைய அரசியல் நியாயப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் சர்வதேச பிராந்திய வல்லாதிக்க சக்திகள் நகர்ந்து வருவதை அவதானிக்கலாம்.

அரசியல், பொருளாதார இராஜதந்திரப் போரில் மூழ்கியுள்ள சில பிராந்திய சக்திகளுக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் நலன், சொந்த நலனை அடைவதற்கான நெம்புகோலாகவும் மாறலாம். 80 களின் ஆரம்பத்தில் மேற்குலகின் காய்கர்த்தல்களை முறியடிக்க தமிழர் தரப்பை நோக்கி வந்த அண்டைய நாட்டின் தந்திரோபாய நகர்வுகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆகவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் அரசியல் கோட்பாடுகள், நடைமுறை சார்ந்த வேலைத் திட்டங்கள் என்பன தமிழ் தேசிய இனத்தின் இறைமையை பேரினவாதத்திற்கு அடகு வைக்காத வகையில் ஆணித்தரமாக வலியுறுத்துமாவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-இதயச்சந்திரன்

நன்றி:வீரகேசரி

Comments