வல்லரசுகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்ட ஈழத்தமிழின விடுதலைப்போராட்டம்

http://puliveeram.files.wordpress.com/2008/09/ehlthalai_285729.jpgவிடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.

இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல.

இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி.

அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும்.

வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது?

இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம்.

‘எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்’.
‘எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை’.

அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் ‘இல்மனைட்’ கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம்.

விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக ‘பெரியண்ணன்’ இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் ‘அசோகா விடுதியில்’ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார்.

”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது….”

2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.

இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம்”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்.”

என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான்.

இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் ‘இராஜதந்திரம்’ என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள்.

இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின.

இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது.

உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. ‘மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும்.

இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்ச்சியாக இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்’ இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு ‘வாராது போல்வந்த மாமணி’ச் சூழ்நிலை இது.

”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது’ என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும்.

இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை.

சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது.

சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம்.

சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது.

உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார்.

இதில் ‘தங்களின் நலன்’ என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது.

இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது.

2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது.

இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான்.

ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை

”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே”
”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது”
”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை”
”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு”

மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது.

நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும்.

அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா?

அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் ‘உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ’ என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா?

அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது.

இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம்.

இறுதியில் யார் யாருடைய நலன்களிற்காக அழிக்கப்படுவதும், பயன்படுத்தப்படுவதுமான ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் ஆகிப் போனார்கள்.

மு.புஷ்பராஜன்

Comments