இலங்கைத் தமிழர்கள் உயர்ந்தவர்கள். இயக்குனர்.விசய.டி.ராசேந்தர்


(மானுட நம்பிக்கை இதழுக்கு அளித்த நேர்க்காணல்)

மீண்டும் இலட்சிய தி.மு.க. தொடங்கியிருப்பதன் நோக்கம் பற்றி விளங்குவீர்களா?

சிறுசேமிப்பு தலைவர் அமைச்சர் இணையானது. செயலகத்தில் தனி அறை, சுழலும் மின்விளக்கோடு புத்தம் புதிய கார், வேலையாட்கள், அதிகாரிகள் இவை 6 மாத காலத்தில் துறந்தேன், இந்தியத் தமிழரையும் தான் காரணம்.பிற சிறிய நாடுகளின் சுதந்திரப் போராட்டம், சுய நிர்ணயஉரிமை என்றால், ஐ.நா.சபையில் வாய்கிழியப் பேசுவீர்கள்.

இந்திய அரசின் சார்பில் ஆதரிக்கவும் செய்வீர்கள். நமது அண்டை நாடான இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்க மாட்டீர்கள் என்றால் அது என்ன நியாயம்?இந்திரா அம்மையார் இரண்டு சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டபோது சீக்கியர்கள் சொல்லொணாத்துன்பம் அனுபவித்தார்கள். இப்போது அதே சீக்கிய பிரிவிலிருந்து ஒருவரை பிரதமராக உருவாக்கி காங்கிரசு அழகு பார்க்கவில்லையா? அதே போல முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் சில தமிழர்கள் தொடர்பிருப்பதாய் சொல்லப்பட்டதால் இன்றுவரை தமிழர்கள் சிறையில் வாட வேண்டுமா? இலங்கையில் தமிழ்மக்கள் நடத்தும் சுதந்திர தமிழீழ போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டுமா? அண்டை நாட்டில் இருக்கும் தமிழன் அவதிப்படுவதைப் பற்றிப் பேசுவது குற்றமெனில் அப்படிப் பேச என் பதவி அனுமதிக்காதெனில் எனக்குப் பதவி வேண்டாம் என்று தூக்கி எறிந்தேன்.

தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு இரங்கற்பா எழுதியதைக்கூட எதிர்த்த மத்திய அரசு அதற்கு தலை வணங்குகிற மாநில அரசு இரண்டுக்கும் எதிராகக் களம் காணவே மீண்டும் இலட்சிய தி.மு.க.வை தொடர்கிறேன்.

ஏன் இலட்சிய தி.மு.க. என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?

மயிலாடுதுறை பகுதியில் நான் மாணவனாய் இருந்த காலத்திலிருந்தே தி.மு.க.வில் செயல்பட்டேன். என் தாய்மாமன் தி.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்து வீரியமாக செயல்பட்டவர். மாணவர் அணியில் நான் இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி வீதியில் ஊர்வலமாக வந்தபோது தடியடியில் சிக்கினேன். தொடையில் மஞ்சள் பத்து போட்டார்கள். இந்திய எழுத்துக்களை தார்பூசி அழித்துவிட்டு வீட்டிற்கு தார்க்கறையோடு வந்த எனக்கு அடி விழுந்தது.மயிலாடுதுறை தேசிய மேநிலைப் பள்ளியில் படிக்கும்போதே தமிழ்மகன் என்பதற்காக என்னை நாடகத்தில் நடிக்க விடாமல் தடுத்தார்கள்.

பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசி, விளாசித் தள்ளும் எனக்கு ஒரு காவல்காரன் வேடமே கொடுத்தார்கள். அதில் நான் உள்ளேன் அய்யா" என்று கூட சொல்லமாட்டேன். இத்தனைக்கும் நன்றாகபடிக்கக் கூடிய கூடிய மாணவன்தான்.இப்படி தி.மு.க. மரபில் வந்ததால் தி.மு.க. காரனாகவே இருந்தேன். தி.மு.க.விலிருந்து வெளியேறிய போதுகூட தாயக மறுமலர்ச்சிக் கழகம்" என்று பெயரிட்டேன். தி.மு.க.வையே ‘தாயகம்’ என்று நினைத்தேன். ‘மறுமலர்ச்சி’ என்ற சொல்லை எனக்குப் பிறகுதான் வை.கோ. எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில் தி.மு.க. அதன் கொள்கைகளில் அலட்சியப் போக்கை கொண்டிருந்ததால் தான் இலட்சிய தி.மு.க." என்ற பெயர் தேவைப்பட்டது. நாத்திகனாய் இருந்தவரை சுயமரியாதைச்சுடர் தந்தை பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்தேன்.

பேரறிஞர் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற முழக்கத்தை ஏற்று கடவுள் நம்பிக்கை கொண்டபிறகு தி.மு.க. காரனானேன்.தி.மு.க.வில் தலைவர் பதவியை பெரியாருக்கு விட்டு அண்ணா பொதுக்செயலாளர் ஆனது போல நானும் தலைமைப் பதவியை கலைஞருக்கு விட்டு பொதுச் செயலாளர் ஆனேன்.

தி.மு.க.வுக்கும் வேலை செய்திருக்கிறீர்கள், அ.தி.மு.க.வுக்கும் வேலை செய்திருக்கிறீர்கள். பின்பு ஏன் புதிய கட்சியை துவக்கினீர்கள்?

தி.மு.க.வை விட்டு பிரிந்து வை.கோ. அவர்கள் ம.தி.மு.க. தொடங்கிய பிறகு நடந்த தேர்தலில் கலைஞர் என்னை அழைத்து கட்சிக்காக பணியாற்றச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பட்டி, தொட்டியெங்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். வென்று சட்ட மன்றம் சென்ற பிறகு என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதே போல தி.மு.க. ஏழு கட்சி கூட்டணியுடன் தேர்தல் களத்தில் நின்ற போது அ.தி.மு.க. தனியாக களம் கண்டது. அப்போது அந்த அம்மையார் என்னை அழைத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டேன். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வென்றோம்.எம்.ஜி.ஆர்-ருக்கு எதிராக என்னை நிறுத்தி செயல்பட வைத்தார் கலைஞர். பின்பு ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு வை.கோ. பிரிந்ததும் என்னை தி.மு.க.வின் கொ.ப. செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றவைத்து பயன்படுத்தினார்கள். சென்னையில் சட்டமன்ற உறுப்பினராக ஆனேன்.

கரைபடியாத கரமாக இருந்ததால் அண்ணா விருது வழங்கி கௌரவித்தார்கள். இறுதியாக 3 ரூபாய் கொடுத்து உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி கட்சியை விட்டு விலக்கினார்கள்.லஞ்சலாவண்யங்களுக்கு துணை போகவில்லை என்பதாலும், காசு கொடுத்து ஓட்டு கேட்கவில்லை என்பதாலும் தி.மு.க.காரர்களே எனக்கெதிராக வேலை செய்து தோற்கடித்தார்கள். 1500 ஓட்டு வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

உங்களது எதிர்கால திட்டம் என்ன?

தமிழ்நாட்டில் தமிழர்கள் நலமாய் வாழ வேண்டும். மக்களாட்சி உண்மையான மக்களாட்சியாய் இருக்க வேண்டும். நேர்மையான, ஊழலற்ற அரசு அமைய வேண்டும். சுயநலமற்ற கொள்ளை மறவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இந்த இரண்டு பெரும் கட்சிகளும் இனி எதையும் செய்யாது. செய்ய முடியாது. சினிமாவில் வாக்குறுதி அளிப்பவர்களெல்லாம் அரசியலில் எதையும் நிறைவேற்ற முடியாது. இளமையிலிருந்து கொள்கையும், பொது வாழ்வில் ஈடுபாடும் கொண்டிருப்பவர்களால் நல்ல மக்கள் தலைவர்களாய் பரிணமிக்க முடியும். எனவே தான் இளைஞர் பட்டாளத்தை அரசியப்படுத்த முயற்சி எடுக்கிறோம். தமிழர் நலன் காக்க அழைக்கப்படும் இடங்களிலெல்லாம் சென்று பேசி வருகிறேன்.

தமிழர்கள் மேம்பாடடையாமல் போனதற்குக் காரணம் என்ன? கட்சிக் கொள்கைகள் நீர்த்துப் போவதற்குக் காரணம் என்ன?

இங்கு எங்கும் எதிலும் கலப்படம். பொருளில் கலப்படம் போல உணர்வில் கலப்படம். இங்கே கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தங்கள் நலன்களுக்காக வாழ்கின்றனர். தமிழர்கள் பற்றிப் பேசினால் அவர்களுக்குப் பற்றிக் கொண்டு வருகிறது.காவிரியில் தண்ணீர்விட கர்நாடகாவும், முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர்விட கேரளம் மறுக்கிறது. பாலாற்றில் ஆந்திரம் அணைகட்டத் தொடங்கிவிட்டது.

என் மண்ணின் மைந்தர்கள் கண்ணீர்விடும் அவலம் பற்றி நான் பேசக்கூடாதா? என்ன பேசினாலும் உணர்ச்சியற்று உறக்கத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் தமிழர்கள்.தமிழர்களை சாதி ரீதியாகப் பிரித்து ஓரினமாய் ஒருங்கிணைத்து விட முடியாதபடி பார்ப்பனியம் பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. அதனை ஆளும் வர்கமும் ஆமோதிக்கிறது, சுரண்டுகிறது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடுகிறது, கூட்டணி அமைக்கிறது.இலங்கைத் தமிழர்கள் நம்மை விட எவ்வளவோ உயர்ந்திருக்கிறார்கள். இன உணர்வு அவர்களிடம் வேரோடிருக்கிறது.

தமிழ்மண்ணுக்காக, மரபுக்காக, பண்பாட்டுக்காக, அரசியலுக்காக அவர்கள் திரள்கிறார்கள், பேசுகிறார்கள், நிதி திரட்டுகிறார்கள், இயக்கம் கட்டுகிறார்கள், போராடுகிறார்கள்.மனிதநேயம், அரசியல் தெளிவு, பன்முக ஆற்றல், இலக்கிய அறிவு, உலகியப்பார்வை என அவர்கள் உன்னத் தமிழர்களாயிருக்கிறார்கள். அவர்களைப் போலவே இந்தியத் தமிழரும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை பெண்ணடிமை ஒழிய பாடுபட வேண்டும்.

உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நான் முதலும், இறுதியுமாக அடித்துச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சிகளில் சேராதீர்கள். கொள்கை பிடித்திருந்தால் சேருங்கள். பணிகள் பிடித்திருந்தால் செயல்படுங்கள்.நான் எந்த பொதுக்கூட்டத்திற்குப் போனாலும் தேர்தல் சமயத்தில் பேசும் போது எனக்கு ஓட்டு போடுங்கள் என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதில்லை. கட்சியின் கொள்கைகளைப் பாருங்கள், கட்சியின் வேட்பாளரைப் பாருங்கள், பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள் என்றே பேசுவேன்.

என் கட்சியில் நான் எந்த முன்னாள் மந்திரிகளையோ, மாவட்டச் செயலாளர்களையோ சேர்ப்பதில்லை. பலபேர் என்னிடம் வருவார்கள், பேசுவார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பையும், கணக்குகளையும் என்னால், என் கட்சியால் திருப்திப்படுத்த முடியாது.நேர்மையும், உண்மையும் உள்ள 5.5 லட்சம் பேரைக் கொண்ட கட்சியாக என் கட்சி வளர்ந்தது. 7 ஆண்டுகள் ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன். என் வீடு இடிக்கப்பட்டது. என் திரைப்படப்புலம் (ஸ்டுடியோ) நொறுக்கப்பட்டது.

பொதுவாழ்விற்காக பல கோடிகளை இழந்திருக்கிறேன். என்னைக் கொலை செய்ய முயன்றார்கள். என் பொதுக் கூட்டங்களில் கல்லெறி, கலவரம், வெட்டு, உடைப்பு போன்றவையெல்லாம் நடந்தன. இவையனைத்தும் என் கொள்கையை, நடைமுறையை மாற்றி விடவில்லை.

உங்கள் பேச்சு வீச்சோடு இருக்கக் காரணம் என்ன?

நான் ஒரு மாநகரில் ஆங்கிலப் பள்ளியில் படித்து வளர்ந்தவனல்ல. மயிலாடுதுறை அருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவன். படிப்பில் சிறந்தவனாக இருந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் வேட்டி, சட்டை அணிந்திருப்பேன். காலில் செருப்பிருக்காது. ஏன் பேண்ட் போடவில்லை? என்று கேட்டால் காலுக்குச் செருப்பில்லை என்றே சொல்லுவேன். பேண்ட் அழுக்கானால் திருப்பிப் போட முடியாது. ஆனால் வேட்டி ஒரு பக்கம் அழுக்கானால் இன்னொரு பக்கம் திருப்பிக் கட்டலாம் என்பேன்.பனியன் வாங்கக் காசிருக்காது.

பனியனில் ஓட்டைகளோடு கல்லூரிக்குப் போனால் கிண்டல் செய்வார்கள். பனியன் போடுவதை நிறுத்தினேன். பி.யூ.சி.படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். பரிந்துரைக் கடிதம் இல்லாததால் தேர்வு செய்யப்படவில்லை. கல்லூரியில் வரலாறு எடுத்துப் படித்து தங்க மெடல் பரிசாகப் பெற்றேன். தங்கை திருமணத்திற்காக அதை விற்றேன்.மயிலாடுதுறையில் எம்.ஏ. வரலாறு பிரிவு இல்லாததால் திருவாரூர் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.

மாதந்தோறும் பருவச்சீட்டெடுத்து (சீசன் டிக்கெட்டில்) தொடர்வண்டியில் பயணம் செய்வேன். இந்த சமயத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் மதிப்பெண் முன்னுரிமையில் இடம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலையிலிருந்தும் மேற்படிப்புக்கு அழைப்பு வந்தது. சென்னையில் தங்கிப் படிக்க வசதியின்மையால் அதனை நிராகரித்தேன். அண்ணாமலையில் விடுதிக்கட்டணம் செலுத்த முடியாததால் அந்த வாய்ப்பையும் தவிர்த்தேன். இறுதியாய் திருவாரூர் கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். ஏராளமான கனவுகளோடு இருந்த நான் எல்லா இயலாமைகளையும் பொறுத்துக் கொண்டேன்.

திருவாரூர் செல்ல மயிலாடுதுறையில் ரயில் ஏற வேண்டும். எங்கள் ஊரிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டும். விடியற்காலை எழுந்து சவரம் செய்ய வேண்டும். பிளேடு வாங்க காசிருக்காது. மின்சாரம் இல்லாத வீடு. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் பழைய பிளேடைக் கொண்டு மழித்த போது கன்னத்தைக் கிழித்துக் கொண்டேன். பாட்டி கத்தினார்.உனக்கு சவரம் ஒரு கேடா? எவள் உன்னை பார்க்கப்போறா?"அன்றிலிருந்து சவரம் செய்வதை நிறுத்தினேன். முகத்தை அழகை பார்ப்பவர் தேவையில்லை. அகத்தின் அழகை பார்ப்பவரே தேவை என்று முடிவு செய்தேன். நண்பர்கள் சொன்னார்கள் காரல் மார்க்ஸ் மழித்தாரா? தந்தை பெரியார் மழித்தாரா? இரவீந்திரநாத் தாகூர் மழித்தாரா? என்று கேட்டு ஆறுதல் சொன்னார்கள். ஆனால் மனதில் நினைத்துக் கொண்டேன். நாம் அவர்களைப் போல் அவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமென்பதில்லை. தமிழகம் பேசுகிற அளவில் ஒரு டி.ஆராக வாவது வரவேண்டும் என்று.

நான் யாருக்கும் தாளம் போட்டதில்லை. ஆனால் என் தாளம் எனக்கு சோறு போடுகிறது. குறித்துவைக்க பேப்பர் வாங்க முடியாததால் நான் யோசித்து வைத்த எல்லாவற்றையும் மனப்பாடம் செய்தேன். பாடல்கள், வசனங்கள், திரைக்கதை எல்லாமும் மனப்பாடம் தான் இன்று வரை. தனிமனித ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி, தொடர்ந்து பயிற்சி என்று வாழ்ந்து வருகிறேன். எத்தனையோ கேலி, கிண்டல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என் கொள்கைகளை மாற்றிக் கொண்டதில்லை.

உங்கள் திரையுலக நுழைவு பற்றி சொல்லுங்களேன்?

படிப்பில் கோட்டை விட்டு விடாமல் சினிமாவில் கவனம் செலுத்துவேன். தியேட்டருக்குள் சென்று சினிமா பார்க்க காசிருக்காது. வெளியே சாக்கடையருகில் நின்று பேசப்படும் வசனங்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டேயிருப்பேன்.அங்கே பெட்டிக்கடையருகில் தம் அடிப்பவர்கள் உன்னால் எப்படி சாக்கடை நாற்றத்தை தாங்க முடிகிறது என்று கிண்டலடிப்பார்கள். நான் சொல்லுவேன். இங்கு மூக்குக்கு வேலையில்லை, காதுக்கு மட்டுமே வேலை என்று.அன்று அங்கே தம்மடித்தவர்கள் இன்றும் அங்கேயே தம்மடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துன்பங்களைக் கண்டு துவளாத நான் இன்று இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.தமிழ் திரையுலகம் என்னை இருகரம் நீட்டி வா வா என்று வரவேற்கவில்லை. பார்ப்பனிய ஆதிக்கம் உள்ள திரையுலகம் என்னைப் போட்டு நசுக்கி பிழிந்தெடுத்தது. கிடைத்த வாய்ப்புக்களை தட்டிப் பறித்தது. எல்லாவற்றையும் கடுமையான முயற்சிகளால் தாண்டினேன்.இடையில் நான் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற கேள்வி வேறு வந்தது. ஒரு கலைஞன் என்ற முறையில் என் மேல் கட்சி முத்திரை விழ நான் விரும்பவில்லை. ஆனால் நெருக்கடி முற்றி எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்.

நான் பெரியாரின் வழி, அண்ணாவின் தொண்டன். அதேசமயம் கலைஞரின் வசனத்துக்கு விசிறி, உங்கள் நடிப்புக்கு ரசிகன் என்றேன். அவர் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் நான் என்ன கட்சி என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியில் நான் தி.மு.க. தான் என்று சொல்லி வெளியே வந்து பின்பு தி.மு.க.வில் உறுப்பினரானேன்.எனது திரையுலக வாழ்வில் 25 ஆண்டுகளில் 23 படங்கள் பண்ணியிருக்கிறேன். சில படங்களைத் தவிர எல்லாப் படங்களும் என் சொந்தத் தயாரிப்புகள் தான். பலவிதமான புதிய முயற்சிகளை திரைக்கதை, தொழில்நுட்பம், இசை இவற்றில் செய்து பார்த்தேன்.

பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.எனது கொள்கைகளின்படி அரசியல் வாழ்க்கையையும் எனது திறமை ஆற்றல்களின் படி திரையுலக வாழ்வையும் அமைத்துக் கொண்டேன். இரண்டையும் சேர்த்து நான் குழப்பிக் கொள்ளவில்லை.மனித நேயம், வறுமை, குடும்பவாழ்வு, சமூக வாழ்வு, காதல், மானம், வீரம் பற்றி என் திரைப்படங்கள் பேசின. மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போனதால் பெரும் வெற்றியடைந்தேன்.

தொடர்ந்து சுறுசுறுப்பாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட ஒலிப்பதிவுக்குப் போகிறேன்.ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?போராட்டமில்லாமல் வாழ்க்கையில்லை என்ற உண்மையை தமிழர்கள் உணர வேண்டும். அடிப்படை உரிமைகள் வாழ்வுரிமை இவைகளைப் பற்றிய தெளிவு வேண்டும். பொதுப் பிரச்சனைகளை நாம் ஒன்று சேர்ந்து போராடாமல் தீர்க்க முடியாது. நாம் புறநானூற்றுத் தமிழர்களாய் வாழ வேண்டும்.

படைபல கண்டு, தடை பல வென்று, தொடை நடுக்கமற்ற தோழர்களாய் நாம் தோள் சேர வேண்டும். புதிய வரலாறு படைக்க வேண்டும். எழுந்து வாசல் வரை வருகிறார். அனைத்தையும் சொல்லிமுடித்த நிறைவு அவரது முகத்தில். மானுட நம்பிக்கையின் வாழ்த்துக்களை கூறி விடைப்பெறுகிறோம்.

Comments