தமிழ் மக்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைகளை அடிப்படை கோரிக்கைகளாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியோடு செயற்படும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை யதார்த்த ரீதியாக தீர்ப்பதற்கு உரிய வழிகளில் அதனை முன்னெடுக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்தார்.
தற்போதுள்ள தாயக அரசியல் சம்பந்தமாக விளக்கமளிக்கும் முகமாக கனடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இரா. சம்பந்தர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடமளிக்கப்படக்கூடாது என்ற புலத்து ஊடகங்களின் கருத்து தொடர்பாக பதிலளித்த அவர், புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்தை வரவேற்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் எவருக்கும் வேட்பாளர் நியமிக்கப்படமாட்டாது என்றும் அதேவேளை வெற்றுக்கோசங்களை எழுப்பிவிட்டு செயற்படாமல் இருப்பவர்களுக்கும் வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் யார் யார் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பது பற்றி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளான தாயகம் தேசிய தன்னாட்சி என்ற அடிப்படையிலான கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துமா என கேட்கப்பட்டபோது, அவற்றுக்கான அத்தனை உள்ளடக்கங்களைதான் தாம் வலியுறுத்துவதாகவும், அதற்கான சொல்லாடல்களில் கவனம் செலுத்துவதை விட அவற்றின் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றும் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தில் செயற்படுவோம் என்றும் கூறினார்.
புதுடில்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் திறக்கப்படுவது தொடர்பாக கேட்டபோது, நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து புதுடில்லியில் மட்டுமல்ல கனடாவிலும் சிட்னியிலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அலுவலகங்கள் திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் மூலம் புலத்துமக்களின் இணைவு உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போதுள்ள கஜேந்திரனை மீளவும் வேட்பாளராக நியமிக்காமல் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகிறீர்கள் என்றும் புதுடில்லியில் அலுவலகத்தை திறப்பதன் மூலம் தமிழ் மக்களை அழித்தவர்களுடன் கைகோர்க்கிறீர்கள் என்றும் சுரேஸ் பிரேமசந்திரனின் மனைவி கேரளத்தை சேர்ந்தவர் என்றும் இவற்றின் ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்றும் நேயர் ஒருவர் கேட்டபோது கேள்விகள் கேட்டால் பதிலளிக்கலாம் ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை கூறுகிறீர்கள் என்று கூறிய சம்பந்தர் நேர்காணலை துண்டித்துக்கொண்டார்.
Comments