உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 2

தேசிய இனப்பிரச்சினைகள் அடிப்படையில் உள்நாட்டுப் பிரச்சனைகள் அல்ல, அவை சர்வதேசப் பிரச்சினைகளே’ என்ற கூற்று மிகுந்த அர்த்தம் பொதிந்தது.

தேசிய இனமுரண்பாடுகள் அனைத்துலகப் பரிமாணங்களைக் கொண்டவை என்ற அரத்தத்தில் மட்டுமல்ல, இவை நிலவி வரும் சர்வதேச ஒழுங்கினையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்ற அர்த்தத்திலும் இக் கூற்று நோக்கப்படவேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைகள் அரசுகளுக்குச் சவாலானவை. அரசற்ற தேசிய இனங்கள், அரசாளும் தேசிய இனத்தால் அல்லது இனங்களால் புறக்கணிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் போது தேசிய இனமுரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன.

பல நாடுகளில் தேசிய இனப்பிரச்சனையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்; காலனித்துவ ஆட்சிக்காலம் அடித்தளங்களைச் இட்டுச் சென்றுள்ளது.

காலனித்தவ ஆட்சியாளர், அரசும் ஆட்சியுரிமையும் கொண்டிருந்த பல தேசிய இனங்களின் ஆட்சியுரிமையை மட்டுமல்ல அரசுரிமையையும் பறித்தெடுத்தனர். பின்னர் தாம் வெளியேறும் போது தமக்கு வசதியான முறையில், தமது நலன்களுக்கு ஏற்ற வகையில் சில தேசிய இனங்களின் அரசுரிமையை நிரந்தரமாகவே வேறு தேசிய இனங்களின் கைகளில் ஒப்படைத்துச் சென்றனர். இலங்கைத்தீவிலும் இதுவே நடந்தது.

இலங்கையின் தேசிய இன முரண்பாடு என்பது அடிப்படையில் காலனித்துவ ஆட்சியின் குழந்தை.

தமிழீழத் தனியரசுக்கான போராட்டம் என்பது அக் குழந்தையை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்திய சிங்கள பௌத்த இனவாதம் திறந்து விட்ட பாதை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துலகப் பரிமாணங்களை நோக்கும் இவ் அங்கம் முதலில் ஒரு புதிய அரசு உலகில் உருவாகுவதற்கான அடிப்படை சூழ்நிலையை நோக்க முனைகிறது.

பொதுவாக ஏற்கனவே உருவாகியுள்ள அரசுகள், தமது அரசுகள் என்ற குழுவினுள் புதியவர்கள் உள்நுழைவதனை விரும்புவதில்லை.

இதேவேளை தமது நலன்களுடன் பின்னிப் பிணைந்திருந்தாலே புதிய அரசுகள் உருவாகுவதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அல்லது தமது தேவை கருதி புதிய அரசுகளை உருவாக்குவார்கள்.

உதாரணமாக, கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஸ் என்ற புதிய அரசை உருவாக்குவதற்கு இந்தியா வகித்த பாத்திரம் இந்திய நலன்களுடன் முற்றும் முழுவதும் தொடர்புபட்டது. மேற்கு, கிழக்கு என தனது இரு முனைகளிலும் இறக்கை விரித்திருந்த பாகிஸ்தானின் ஒரு இறக்கையை உடைத்த செயற்பாடுதான் அது.

சோவியத்யூனியன் சிதறிப்போய் புதிய பல நாடுகள் உருவானதும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் நலன்களுடன் இறுகப் பிணைந்தது.

கிழக்குத் தீமோரின் தோற்றமாக இருந்தாலும் சரி, பிந்திய கொசாவாவின் பிறப்பாக இருந்தாலும் சரி, இனிப் பிறக்கப் போகிற தென்சூடானாக இருந்தாலும் சரி, சக்தி வாய்ந்த அரசுகளின் நலன்களுடன் தொடர்புபட்டதாகவே உள்ளது.

இதே வேளை இங்கும் கூட, இப் புதிய அரசுகளின் உருவாக்கம் இறுதித் தெரிவாகவே இருந்துள்ளன.

அரசுகள் தமது நலனுக்காக உருவாக்கும் அரசுகளை விட வேறு அரசுகளே உருவாகவில்லையா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

சில வாய்ப்பான சூழல் அமைந்து விட்டால் அருமையாக இது நடக்கலாம். இதற்கு எரித்திரியா நல்ல உதாரணம்.

நீண்ட காலமாக எதியோப்பியாவினை எதிர்த்துப் போராடிய எரித்திரியாவுக்கு சோவியத்தின் வீழ்ச்சி விடுதலைக்கான கதவுகளைத் திறந்தது.

எதியோப்பியாவினைத் தாங்கி நின்ற சோவியத் 80 களின் நடுப்பகுதிகளிலிருந்து பலவீனமடையத் தொடங்க, எதியோப்பிய அரசும் பலவீனமடையத் தொடங்கியது. எரித்திரியப் போராளிகள் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினர்.

அதேவேளை, எதியோப்பியாவில் அரசினை எதிர்த்துப் போராடிய போராளிகளுடன் இணைந்தும் எரித்திரியப் போராளிகள் செயற்பட்டனர். ஆயிரக்கணக்கான எரித்திரியப் போராளிகள் எதியோப்பியாவில் நின்றும் போரிட்டனர்.

1991 ஆம் ஆண்டில் எரித்திரியாவினை போராளிகள் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகின்றனர். இதே காலகட்டத்தில் எதியோப்பிய அரசும் இவர்கள் கூட்டாளிகள் வசமாகிறது.

1991 இலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை தமது நாட்டைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தாது, எனைய அரசுகளின் அங்கீகாரத்துக்கான இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்கின்றனர். தனிநாடு குறித்த மக்கள் வாக்களிப்பின் ஊடாக எரித்திரியா தனிநாடாக அமைவதனை எதியோப்பியா உட்பட ஏனைய அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

1993 இல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தமது பிரதேசங்களை முழுமையாக விடுவித்து 2 வருடங்கள் வரை பொறுமையாகக் காத்திருந்து, 1993 இல் எரித்திரியா தனி அரசாகிக் கொள்கிறது.

ஒரு பேச்சுக்கு, எதியோப்பியாவினை அமெரிக்கா ஆதரித்து, எரித்திரியப் போராளிகளை சோவியத் ஆதரித்து வந்த நிலை 80 களின் இறுதிப்பகுதிகளில் இருந்தது என வைத்துக் கொள்வோம். சோவியத்தின் வீழ்ச்சி எரித்திரியாவின் வீழ்ச்சியாகவும் அமைந்து விடுவதற்கான வாய்ப்புக்களே கூடுதலாக இருந்திருக்கும்.

எனவே தான், உலகின் சக்தி மிகுந்த அரசுகளின் நலன்களும் பங்கும் அவற்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் புதிய அரசுகளின் உருவாக்கத்தில் தீர்க்கமான பாத்திரத்தினை வகிக்கின்றன என்பது கவனத்திற் கொள்ள வேண்டியது.

இங்கு சில கேள்விகள் எழுகின்றன. அரசுகளின் நலன்கள் எனக் கூறப்படுபவை எவை? அவை எல்லா அரசுகளுக்கும் ஒத்த தன்மை கொண்டவையா அல்லது வேறுபட்ட தன்மைகள் கொண்டவையா? அரசுகளில் நல்ல அரசுகள் கெட்ட அரசுகள் என்று பாகுபாடுகள் உள்ளனவா?

இக் கேள்விகள் அனைத்துலக உறவுகள் தொடர்பான வௌ;வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் பதிலளிக்கக் கூடியவை. அவற்றிற்குள் நுழையாமல் எல்லா அரசுகளும் பொதுவாக இறுகப் பிடித்திருக்கும் தமது நலன்கள், அதிகாரம் என கருதுபவை பற்றி சிறிது நோக்குவோம்.

அரசுகள் எல்லாம் தாம் தமது எல்லைகள் எனக் கருதும் பகுதி மீதும் அப் பகுதிக்குள் வாழும் மக்கள், வளங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவவை. இதனை தமது இறைமை எனவும் கூறிக்கொள்பவை.

அரசுகள் எல்லாம் வன்முறையைப் பிரயோகிக்கும் உரிமைக்கு ஏகபோகம் கோருபவை. அவ் உரிமையினை சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் ஏனையவர்களிடமிருந்து பறித்தெடுத்து தம்வசம் வைத்திருப்பவை.

அரசுகள் தமது நலன்கள் எனக் கருதும் விடயங்களுக்காக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவை. அரசுகளின் இந் நலன்களை ஆட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தமது நலன்களை அடைவதற்காக அரசுகள் மானம், ரோசம், வெட்கம் இவற்றையெல்லாம் தேவைக்கேற்றபடி புறந்தள்ளக்கூடியவை. நிர்வாணமாக நடந்துதான் ஒரு முக்கியமான நலனை அடைய வேண்டுமாயின் அரசுகள் இதற்குப் பின்நிற்கப் போவதில்லை.

ஆனால் நாகரீக வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் அரசுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றின் ஆசைகளில் அல்ல.

அரசுகள், தனித்தும் இணைந்தும் தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு எது சிறந்த வழி எனக் கருதுகின்றனவோ அவ்வழி சார்ந்து செயற்படும்.

அரசுகளில் பலவான், பலவீனன் இருப்பார்களேயன்றி நல்லவன், கெட்டவன் பொதுவாக இருப்பதில்லை. தமது நன்மை கருதி சில அரசுகள் வேறு சில அரசுகளை கெட்ட அரசுகள் (rough states) எனக் கூறிக் கொள்ளும்.

அரசுகளின் மேல் அரசாட்சி செலுத்தும் உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. தமக்கிடையிலான ஆட்சிமை முறைமையினை இவ் அரசுகளே உருவாக்கிக் கொள்கின்றன.

இதனையே நாம் சர்வதேச உறவு என (international relations) அழைக்கிறோம். சர்வதேச உறவுகள் என்பது அரசுகளுக்கிடையிலான உறவுகள் மட்டுமானவை என முன்னர் கருதப்பட்டது.

இந் நிலைப்பாடு பின்னர் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் (Old is gold) என்பது போல் பழைய கோட்பாடு இன்னும் செல்வாக்கு மிகுந்ததாகவே இருக்கிறது. நடைமுறையில் சர்வதேச உறவுகள் என்பதோ அல்லது சர்வதேச சமூகம் என்பதோ அரசுகள் எனும் கூட்டுமுறைமைக்கூடாகவே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது.

தற்போதய காலத்து உலகமயமாதலும் தேசங்களின் எல்லைகள் கடந்த உறவுநிலையும் (transnational relations) அரசுகளைக் கடந்த இயக்கப்பாடுகளுக்கு கூடுதல் வாய்ப்பளித்தாலும், பலரும் எதிர்பார்த்தவாறு அரசுகள் தமது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. உலக நிகழ்வுகளின் தீர்மானகரமான சக்திகளாக அரசுகளே இன்றும் விளங்குகின்றன.

அரசுகளுக்கிடையிலான உறவுமுறை ஏற்பாடுகளையே நாம் உலகஒழுங்கு எனக் கூறிக் கொள்கிறோம். காலங்கள் மாற மாற அரசுகளுக்கிடையிலான உறவுமுறைகளும் மாறிக்கொண்டு செல்கின்றன. இவற்றையே நாம் மாற்றமடைந்து செல்லும் உலக ஒழுங்கு என விளிக்கிறோம்.

நாம் இங்கு அரசுகள் எனப் பொதுவாகக் கூறினாலும் இவை தத்தமது பிராந்தியத்தில் கூடுதலான வலிமையைக் கொண்டிருக்கும். ஒரு சில முதன்மை அரசுகள் உலகமெல்லாம் தமது பிராந்தியமே எனக் கருதிக் கொள்ளும். தற்போதய காலகட்டத்தில், அமெரிக்கா உலகின் முதன்மை நாடாகத் தன்னை வரித்துக் கொண்டு உலகின் அனைத்துப் பகுதியினையும் தனது பிராந்தியமாகக் கருதிக் கொள்கிறது.

இத்தகைய புவிசார் அம்சங்கள் அரசுகளின் நலன்களுடனும் உறவுகளுடனும் தொடர்புபடும் போது புவிசார் அரசியல் பிறக்கிறது. தமிழீழத்தின் புவிசார் அரசியலை நாம் இக் கட்டுரைத் தொடரில் பின்னர் நோக்க உள்ளோம்..

இவ்விடத்தில் அரசுகள் தொடர்பான குறிப்புகளை நிறுத்தி நாம் இன்னுமொரு கேள்விக்குப் போவோம்

அரசுகள் அங்கீகரிக்காவிட்டால் புதிய அரசுகள் உருவாகமுடியாதா?

இங்கு சட்டமுறை அரசு (De jure state) நடைமுறை அரசு (De facto state) எனும் இரு எண்ணக்கருக்கள் கவனத்திற்கெடுக்கப்பட வேண்டும். புதிய அரசுகள் சட்டமுறை அரசாக விளங்க வேண்டுமாயின் அவை, அரசுகளினதும் அரசுகளின் முறைமைக்குள்ளும் அங்கீகாரம் பெற வேண்டும். இவ் அங்கீகாரம் கிடைக்குமாயின் புதிய அரசுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ளும்.

அரசுகளால் அங்கீகரிக்கப்படாது, நடைமுறையில் அரசாக இயங்கும் பொறிமுறையை நடைமுறை அரசு எனக் கூறுகிறோம். இந் நடைமுறை அரசுகள் தாம் தமது எல்லைகளாகக் கருதும் பகுதி மீது முழுமையானதாகவோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலோ தமது அரசாள்கையினைக் கொண்டிருக்கும்.

1991 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த 19 ஆண்டுகளாக உலகின் எந்த ஒரு நாட்டின் அங்கீகாரமும் பெறாத நடைமுறை அரசுக்கு உதாரணமாக சோமாலிலாந்து உள்ளது. தமிழீழப்பிரதேசத்தின் ஒருபகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மே 2009 ஆம் ஆண்டுப்பகுதிக்கு முன்னர் நடத்தி வந்த அரசும் நடைமுறை அரசுக்கு ஓர் உதாரணமே.

இன்று உலகில் முழுமையான சட்டமுறை அரசுகளாகவும் நடைமுறை அரசுகளாகவும் கருதப்படுபவற்றினைத் தவிர, சில நாடுகளின் அங்கீகாரம் பெற்று இயங்கும் அரசுகளும் உள்ளன. இதற்குத் தாய்வான் நல்லதோர் உதாரணம்.

தாய்வானும் சீனாவும் ஒன்றை ஒன்று அரசுகளாக அங்கீகரிக்கவில்லை. சீனாவினால் அரசாக அங்கீகரிக்படாத தாய்வானை, 22 நாடுகள்தான் அங்கீகரித்துள்ளன. இருந்தும் அமெரிக்காவின் துணையுடன் தாய்வான் இது வரை சீனாவின் ஆக்கிரமிப்புக்குட்படாது தனி அரசாக இருந்து வருகிறது.

நடைமுறை அரசுகள், சட்டமுறை அரசாக வளர்ச்சியடைவதும் அல்லது தோற்கடிக்கப்பட்டு அரசாள்கையை இழப்பதுவும் நடைமுறை அரசுகள் ஏனைய சட்டமுறை அரசுகளுடனும் அரச முறைமையுடனும் கொண்டிருக்கும் நட்புறவுடன் தொடர்புபட்டிருக்கும்.

இப் பின்னணிகளுடன் உலகப்பந்தில் தமிழீழம் ஒரு தனி அரசாக வருவதனை உலக அரசுகள் விரும்பினார்களா என்ற கேள்வியினை எழுப்பிப் பார்ப்போம்.

இல்லை என்பதே இதற்குரிய தெளிவான விடை.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தமிழீழம் என்ற புதிய அரசு உருவாகுவதனை உலக அரச ஒழுங்கு விரும்பவில்லை. மாறாக தமிழீழம் உருவாவது தமது நலன்களுக்கு எதிரானது என்று, தமிழீழம் குறித்த உலக ஒழுங்கைத் தீர்மானிக்கக்கூடிய அரசுகள் நினைத்தன.

உலக ஒழுங்குகள் மாறிக் கொண்டு சென்றாலும் தமிழீழம் குறித்த இந்த அரசுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனால் உலக வரலாற்றில் மிகக் கடினமான விடுதலைப்போராட்டங்களில் ஒன்றாகத் தமிழீழ விடுதலைப்போராட்டம் வரலாற்றில் தன்னைப் பதிவு செய்ய வேண்டிய நிலை உருவாகிற்று.

தொடரும்…

- தாமரை காருண்யன்
உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 1
உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 1
பதிந்தவர்_ரமணன் on March 5, 2010
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்

‘நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்’ 1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தில்தான் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தது.

நாம் செய்யும் தியாகங்கள் எமக்குச் சேவை செய்ய வேண்டும். அவை அந்நிய சக்திகளின் நலன்களுக்கு சேவை செய்பவையாக அமைந்து விடக்கூடாது என இம் முன்னுரை சுட்டி நின்றது.

எமது தியாகங்கள் எமக்குரிய சேவையினைப் புரிந்தவாறு ஏனையோருக்கும் சேவை புரியுமாயின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த மனப்பான்மையுடன் இதனை ஏற்றுக் கொள்ளும் பண்பு தமிழர் சமூகத்திடம் உண்டு.

ஆனால் எமது அளப்பரிய தியாகங்கள் ஏனைய சக்திகளின் நலன்கள் என்ற பூதத்தினால் விழுங்கப்படுமாயின் அதனை எவ்வாறுதான் சகித்துக் கொள்ள முடியும்?

இதேசமயம், பூதம் விழுங்குவதற்கு வாய்ப்புக்களைக் கொடுத்து விட்டு, விழுங்கிய பூதத்தின் வாய்க்குள்ளோ, வயிற்றுக்குள்ளோ நின்று ‘ஐயோ! எம்மைப் பூதம் விழுங்கி விட்டதே’ என்று அவலக்குரல் எழுப்புவதோ அல்லது ஆத்திரத்துடன் உறுமுவதோ என்ன பயனைத்தான் தந்து விட முடியும்?

தனது குஞ்சுகளைக் கொத்திச் செல்ல முயலும் பருந்திடமிருந்து அவற்றைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி; போலத்தான் வல்லரசுப் பருந்துகளையும் வல்லூறுகளையும் எதிர்த்துப் போராடும் சிறிய தேசங்களின் நிலையும் இருக்கும்.

இப் போராட்டத்தில் குஞ்சுகளைப் பாதுகாப்பதுதான் தாய்க்கோழியின் முதற்குறி. பருந்துக்கு ஏற்படுத்தும் சேதம் அல்ல. பல வேளைகளில் ஒரிரு குஞ்சுகளைப் பறிகொடுத்த போதும் ஏனைய குஞ்சுகளைத் தாய்க்கோழி எவ்வாறாயினும் பாதுகாத்து விடும். ஆர்ப்பரித்தெழுந்து போராடி, தனது இறக்கைகளால் குஞ்சுகளைப் பாதுகாத்து, பெரும் குரல் எழுப்பி மனிதர்களைத் துணைக்கழைத்து, பருந்தினைத் துரத்தி விடத் தாய்க்கோழி போராடும் விதம் இருக்கிறதே – இது சிறிய தேசங்களுக்கு தாய்க்கோழி கற்றுத் தரும் ஒரு இராணுவ, அரசியல், இராஜதந்திரப் பாடம்.

பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்த்ததை நிஜவாழ்வில் நாம் பார்த்ததில்லை. ஆனால் சர்வதேச அரசியலில் பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்ப்பதும் நடக்கும்.

தமிழீழத் தேசத்தின் சர்வதேசப் பரிமாணம் ஒரு வகையில் தாய்க்கோழியின் நிலைதான்.

தமது நலன்களுக்காக எமது நலன்களைப் பறித்துக் கொள்ள முயன்ற அனைத்துலகச் சக்திகளுடன்தான் தனது நலன்களுக்காக தமிழீழ தேசம் மோத வேண்டியிருந்தது. அதே சமயம் உறவும் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் எமக்கு விழுந்த அடி, சிங்கம் அடித்த அடி மட்டுமல்ல. உலகப்பூதம் அடித்த அடியும் கூட.

சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் உலகை எவ்வாறு தன்வசப்படுத்த முடிந்தது? நாம் ஏன் தனித்து விடப்பட்டோம்?

உலகமெங்கும் வாழும் 80 மில்லியன் தமிழர்களை விட, 18 மில்லியன் சிங்களவர்கள் ஏன் உலகுக்கு முக்கியமாய்ப் போனார்கள்?

ஏன் எம்மால் நாம் கட்டி வளர்த்த நடைமுறை அரசைப் பாதுகாக்க முடியாமல் போனது? எமது விடுதலை இயக்கம் ஏன் முள்ளிவாய்க்காலில் மூச்சிழந்து போனது?

இதற்கெல்லாம் விரிந்த பரிமாணத்தில் உலகப்பந்தைப் புரட்டியும்தான் பதில் தேட வேண்டியுள்ளது. இதற்கு உலகப்பந்தில் தமிழீழத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதி கிட்டு, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் உள்ளடங்கலான விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைக் குழுவினர் இந்திய இராணுவ விமானத்தில் பலாலி விமானத்தளத்தை வந்தடைகிறார்கள்.

இவ்வாறு வந்தடையும் இவர்களை களத்தில் விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

இந்த நிகழ்வு சுதுமலையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் நடுப்பகுதியில் சுதுமலையில் வைத்துத்தான், இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில் இவர்களை இந்தியாவின் வானூர்தி ஏற்றிச் சென்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளால், பிரபாகரன் புதுடில்லியில் அசோகா விடுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவலும் பரவியிருந்தது.

இச் சமயம், ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்திய இராணுவம் அமைதிகாக்கும் படையாக வந்திறங்கத் தொடங்கியிருந்தது.

தலைவர் திரும்பி வரும்வரை இந்திய இராணுவத்துடன் ஒத்துழைக்க மாத்தையா மறுத்து விட்டார்.

‘எங்கு வைத்து ஏற்றிச் சென்றீர்களோ அந்த இடத்தில் வைத்தே தலைவரை எம்மிடம் ஒப்படையுங்கள். அதன் பிறகு பேசுவோம்’ எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரதித் தலைவர் எனும் பொறுப்பு முன்னர் இருக்கவில்லை. இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, தமிழீழ மண்ணை விட்டுப் புறப்படும் போதே பிரபாகரன் மாத்தையாவை பிரதித்தலைவராக நியமிக்கிறார்.

சில வேளைகளில் திரும்பிவர முடியாமல் போகலாம் என அவரது உள்ளுணர்வு கூறிக் கொண்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இரகசியமாகப் படகு மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன் தமிழீழம் வந்திருந்தார். ஆனால் இந்தியா இவரை விடவில்லை.

தனது யுத்த விமானங்கள் மூலம் உணவு வீசும் ‘ஒப்பிறேசன் பூமாலை’ எனும் மென் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைப் பணிய வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா தீர்மானித்தது. ஈழத் தமிழரின் முதன்மை விடுதலை இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளுக்கு அதனைத் தெரிவித்து இவ்வொப்பந்தத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்த முனைந்தது. இதற்காகப் பிரபாகரன் ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்றுச் சென்றால் தன்மீது மிகப் பெரிய அழுத்தம் வரும் என்பதும், போகாவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். விடுதலைப்புலிகள் இந்தியாவை நிராகரிப்பதை என்ன காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தமிழ் மக்கள் அப்போது இருக்கவில்லை. களநிலையும் சாதகமாக அமையவில்லை.

‘ஒப்பிறேசன் லிபரேசன்’ எனும் பெயரில் வடமராட்சி ஆக்கிரமிப்பினை சிறிலங்காப்படைகள் மேற்கொண்டிருந்தன. நெல்லியடி இராணுவ முகாம் மீதான மில்லரின் தற்கொலைத் தாக்குதலுடன் கூடிய எதிர்த்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருந்தாலும்கூட சிறிலங்காவின் இராணுவபலம் மேலோங்கியிருந்த நிலை. இச் சூழலில், இந்தியாவின் கோபத்திற்கு ஆளாவதனைத் தவிர்க்க, இந்தியாவின் அழைப்பை ஏற்பதென்ற முடிவைப் பிரபாகரன் எடுக்கிறார். மாத்தையாவினைப் பிரதித் தலைவராக அறிவிக்கிறார்.

இந்தியாவில் நடந்த பேரங்களும் மாத்தையாவின் இறுக்கமான நிலைப்பாடும் இணைந்து தொழிற்பட பிரபாகரனை மீண்டும் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கும் முடிவை இந்தியா எடுக்கிறது. இப் பின்னணியிலேயே இவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் பலாலிப் படைத்தளத்திற்கு வந்திறங்குகின்றனர்.

சுதுமலையில் பிரபாகரன்

பலாலித் தளத்திலிருந்து பிரபாகரன் சுதுமலைக்கு வந்து சேரும் பாதையின் இரு மருங்கும் விடுதலைப் புலிப் போராளிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றனர். இப் பாதைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவும் விடுதலைப் புலிகளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுதிப்பத்திரமின்றி போராளிகள் உட்பட எவரும் நடமாட முடியாது. பொட்டம்மான் கூட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்படுகிறார். இப்படி ஏற்பாடுகள் இறுக்கமாக இருந்தன.

பிரபாகரனின் பாதுகாப்புக்காகவே இந்த எற்பாடுகள் என்று கூறப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் முன்னெச்சரிக்கையை, போராளிகள் பலத்தை இந்திய இராணுவத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்புக் கவச வாகனங்களுக்குள் பிரபாகரனையும் ஏனையோரையும் உள்ளிருத்திக் கொண்டுவந்து சுதுமலையில் வைத்து புலிகளிடம் ஒப்படைத்தது இந்திய இராணுவம்.

தளம் திரும்பிய பிரபாகரன் அன்று மாலை முக்கியமான பொறுப்பாளர்களையும் போராளிகளையும் சந்திக்கிறார். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுக்களையும் அங்கு நடைபெற்ற விடயங்களையும் சுருக்கமாக எடுத்துக்கூறுகிறார்.

‘எனக்கு முன்னால் இருக்கும் தெரிவு வளைவதா அல்லது முறிவதா என்பதே. நான் வளைவது என்ற முடிவை எடுத்துள்ளேன்’.

என இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் இணைந்து போக தான் எடுத்திருந்த முடிவைக் கூறுகிறார்.

பல போராளிகளால் இம்முடிவினை ஜீரணிக்க முடியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம்தான் தற்போது பேசப்படும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படை. இது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்த வகையிலும் எட்ட முடியாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் முக்கியமாக இவ்வொப்பந்தத்தின்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களைக் கையளித்து, சிறிலங்கா வழங்கும் பொதுமன்னிப்பை ஏற்று அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் பிரபாகரன் ஒப்புக் கொண்டார்.

சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் ’இந்த ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைத்து எமது ஆயுதங்களைக் கையளிக்கிறோம்’ என 1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் நாள் பிரகடனப்படுத்தியபோது கூடியிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஓகஸ்ட் 5ம் திகதி ஆயுதங்களும் பலாலித் தளத்தில் வைத்து கையளிக்கப்படுகின்றன. ஜே. ஆரின் பொதுமன்னிப்புப் பட்டயத்தை யோகி பெற்றுக் கொள்கிறார்.

இம்முடிவை ஜீரணிக்க முடியாத மூத்த போராளி ஒருவர் பிரபாகரனிடம் செல்கிறார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இந்த முடிவோடு தன்னால் ஒத்துப் போக முடியவில்லை எனக் கூறுகிறார். அரசியல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

பிரபாகரன் பொறுமையாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ‘அப்ப என்ன செய்யலாம்? நீ சொல்லு’ என உரிமையுடன் சொல்கிறார்.

‘எனக்கு வழி தெரியேலை. ஆனால் இந்த ஒப்பந்தத்தோடை சேந்து போக என்ரை மனம் இடம் தரேலை’ என அந்த மூத்த போராளி சொல்ல பிரபாகரன் சொல்கிறார்.

‘நீ இதை என்னிட்டை சொல்லலாம். நான் உதை மக்களிட்டை சொல்லேலாது. நான் ஒரு முடிவை எடுக்க வேணும்’.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம், தமிழீழவிடுதலைப் போராட்டம் புவிசார் பிராந்திய அரசியல் அழுத்தங்களை உச்சமாகச் சந்தித்த காலகட்டம்.

இவ் அங்கத்தின் நோக்கம் இக்காலகட்ட நிகழ்வுகளை விபரிப்பதல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துலகப் பரிமாணங்களை, இப் பரிமாணங்கள் இப் போராட்டத்திற்கு வழங்கிய சவால்களை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்படுவதற்கு இப் பரிமாணங்கள் வழங்கிய பங்களிப்பை, இப் பரிமாணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடாமல் பாதுகாப்பதில் நாம் அடைந்த தோல்வியை பற்றி ஆராய்வதே இவ் அங்கத்தின் நோக்கம்.

பிரபாகரன் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி இலக்கில் உறுதியாக இருந்தமையால் அனைத்துலமும் சேர்ந்து அழித்து விட்டது எனக் கூறுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாக இருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது பல போராளிகளின் அதிர்ப்தியையும் மீறி பிரபாகரனால் வளைந்து போக முடிந்திருக்கிறது. பின்னர் கடந்து போகவும் முடிந்திருக்கிறது.

ஒரு போராட்டத் தலைவன், போராட்ட இயக்கம் வளைந்து போவதற்கும் பின்னர் கடந்து போவதற்கும் அதற்குரிய அகப்புறச் சூழலும், வெளியும் (space) இருக்க வேண்டும். அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வளைந்து போக முடிந்த பிரபாகரனால் பின்னர் முடியாமல் போனது ஏன்?

தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போராட்டத்தின் போக்கை, அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டை எவ்வாறு பாதித்தன?

இவ்வுலக ஒழுங்கில் எமது போராட்டத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் எம்மைத் தடுத்தவை எவை?

இவை எல்லாம் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

தொடரும்…

- தாமரை காருண்யன்

Comments