சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் - 2010: திருகோணமலையும் தமிழர் பிரதிநித்துவமும்


திருகோணமலை மாவட்டம் பாரம்பரியமாக தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு மாவட்டம்.

பின்பு சிங்கள மக்களின் குடியேற்றத்தின் காரணமாக அங்கு இன விகிதாச்சாரம் மாற்றியமைந்து கொண்டிருந்த போதிலும் தமிழ் மக்கள் சாத்தியமான அளவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை இரண்டு பேரை கொண்டதாக தக்க வைப்பதற்கு மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் போராடியிருக்கிறார்கள்.

2004 ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் கூட தமிழீழ விடுதலை புலிகள் இருந்த கால கட்டத்தில் அவர்கள் மிக முழு மூச்சாக இந்த தேர்தலின் பின் நின்று அந்த இரண்டு தொகுதிகளை காப்பாற்ற வேண்டுமென்பதில் வாக்காளர்களை மிக உற்சாகமாக ஊக்குவித்திருந்தார்கள்.

எனவே இங்கு ஆகக் கூடிய வாக்குகளை தமிழ் மக்கள் சார்ந்த கட்சி பெற வேண்டும் என்பது தான் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் மக்களின் மிகத் தெளிவான நிலைப்பாடாகும்.

இலங்கைத் தீவின் வரலாற்று மூலங்களுக்கு ஊடாகப் பெறப்பட்ட மக்கட் தொகை தொடர்பான பதிவுகள் யாவும் அப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிகப்படியான பெரும்பான்மையினை உறுதிப்படுத்துகின்றன.

பிற்காலத்தில் முஸ்லீம் மக்களும் தமிழ் பேசும் மக்களாக பெருகிய போதும் திரகோணமலை மாவட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் மாவட்டமாகவே இருந்தது.

கடந்த 60 வருடங்களாக சிங்களத் தேசியவாதிகளின் ஆளுமையினால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சிறீலங்காவின் அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டமிட்ட தமிழின விரோத செயற்றிட்டங்கள் காரணமாக தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பலம் குறுக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டது.

தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட இனச் சமநிலை தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்களின் சனத் தொகைப் பலத்தினை சமனிலைக்கு கொண்டுவந்துள்ளது. எனினும் இச்சமனிலை மிக ஆபத்தான அறிகுறியாகவே அமைந்துள்ளது.

* திருகோணமலையில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தினாலும் அதன் நிர்வாகக் கட்டமைப்புக்களாலும் சிங்களத் தேசிய உணர்வு கொண்ட தனியார் துறையினராலும் வழங்கப்படும் வெளிப்படையானதும் மறைமுகமானதும் தந்திரோபாய ரீதியானதுமான ஆதரவும் வளமும் பின் பலமும் அவர்களின் எண்ணிக்கையினை விரைவில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
* இயல்பாகவே முஸ்லீம் சமூகத்திடம் காணப்படும் சனத் தொகை வளர்ச்சி வீதமும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் அச் சமூகத்தினை சனநாயக பலத்தினை தக்கவைக்கும் வலுவாக கவசங்களாக உள்ளது.
* தமிழ் சமூகத்தினுள் வளர்ந்து வரும் சனத் தொகைக் கட்டுப்பாட்டு நடைமுறையும் பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் நகரங்களினையும் வேறு வளர்ச்சி மையங்களினை நோக்கி குடிபெயரும் செயற்பாடும் தேசிய அடையாளத்துடன் கூடிய அவர்களின் சமூக இருப்பினையும் அரசியல் பங்கேற்பு வலுவினையும் அபாயத்தின் எல்லை நோக்கி சறுக்கச் செய்கின்றது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்கு முன்னிருந்த தேர்தல் முறையில் திருகோணமலை-மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவே அடையாளங் காணப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது அரசியல் ஆளுமையினை அம் மாவட்டத்தில் நிலைநிறுத்தியதோடு முஸ்லீம் பிரதிநிதிகளும் தமிழரசுக் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர்.

முஸ்லீம் மக்கள் ஆளும் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் தனியான முஸ்லிம் அடையாளங்களுடன் தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் கூட இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளினை மூதூரிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் தமிழ் மக்கள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர்.

தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் நாடாளுமன்ற ஆசனங்களுக்கான போட்டி உச்சமாக இருந்தாலும் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் வாக்குப் பலத்தில் சார்ந்திருந்தது மிக அரிதாகவே இருந்தது.

திருகோணமலை தேர்தல் மாவட்டம் மூன்று தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மூதூர், சேருவில. தேர்தல் தொகுதிகளின் பிரிப்பும் எல்லை வரையறைகளும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பிற்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களே.

திருகோணமலை - மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி 1976 இல் புதிதாக கந்தளாயினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சேருவில தொகுதியினால் சிங்கள மக்களுக்குச் சார்பாக மாற்றப்பட்டது.

1976 ற்குப் பின்னான தேர்தல்களின் போது கூடிய பிரதிநிதித்துவ ஆசனங்களினைத் கைப்பற்றுவதற்கான போட்டி தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் ஏற்படும் போது சிங்கள மக்களின் சார்பான வாக்குகள் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணியும், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கிடையில் சிதறியது. எனினும் ஒரு ஆசனத்தினைப் பெறுவதில் சிங்கள மக்கள் சிரமப்படவில்லை.

02.

சிறீலங்காவின் தேர்தல் முறையும் திருகோணமலையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும்:

சிறீலங்காவில் தற்போது நடத்தப்படும் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையாகும்.

நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் குடியரசு அதிபர் முறையினை 1978ல் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே.

1977 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்றிருந்தும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழர்களின் அரசியல் தலைவரான திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொறுப்பேற்றதனைப் பொறுக்காமல் தேடிய மாற்று வழி முறையே இத் தேர்தல் முறையாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டதாக நாடாளுமன்ற ஆசனங்களினைக் கைப்பற்ற முடியாது.

அத்துடன் சிங்கள மக்களினைச் சாராத கட்சிகள் எதிர்க் கட்சியாக வரும் அளவுக்கு தங்களின் ஆசனங்களின் எண்ணிக்கையினை குவிக்கவும் முடியாது.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனி நபர்கள் போட்டியாளராக முடியாது.

ஒரு கட்சியின் பட்டியலில் அங்கத்தவராகவோ அல்லது தனி நபர்களால் ஒன்றிணைக்கப்பட்ட சுயேச்சைக் குழுவின் அங்கத்தவராகவோ மட்டுமே போட்டியிட முடியும்.

மக்கள் தங்கள் வாக்குகளினைப் பிரயோகிக்கும் போது இரண்டு விடயங்களினைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

முதலில் தங்களுக்கு விருப்பமான கட்சியின் சின்னத்திற்கு எதிரே புள்ளடி அடையாளத்தினை இடவேண்டும்.

பின்பு அக் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தமக்கு விருப்பமானவரின் இலக்கத்திற்கு எதிரே மற்றுமொரு புள்ளடி அடயாளத்தினையும் இடவேண்டும். இது கட்டாயமானதாக இருக்காது.

வாக்குகள் எண்ணப்படும் போது முதலில் கட்சிகளின் அடையாளங்களின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட சீட்டுக்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும்.

கணக்கெடுக்கப்பட்ட வாக்குகளில் ஒவ்வோர் கட்சியும் அல்லது குழுவும் பெற்றவாக்குகளின் எண்ணிக்கை தான் அக் குறிப்பிட கட்சி அல்லது குழு அத் தேர்தல் மாவட்டததில் கொண்டிருக்கக்கூடிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி அல்லது குழு ஆகக் கூடிய வாக்குகளினைப் பெறுகின்றதோ அக் கட்சிக்கு வெகுமானமாக முதலில் ஒரு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும்.

பின்பு அம்மாவட்டத்தின் மொத்த பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் ஒன்றினை [ஏற்கனவே உபகாரமாக ஒதுக்கப்பட்டது தவிர்த்து] கழித்த பின்பு வருகின்ற எண்ணிக்கை போட்டியில் ஈடுபட்ட சகல கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பங்கிடப்படும்.

ஒரு அங்கத்துவ ஆசனத்திற்கான விகித வாக்குகளினை முழுமையாக ஒரு கட்சியோ குழுவோ கொண்டிருக்காவிட்டால் அவர்கள் கொண்டிருக்கும் வாக்குகளில் ஆகக்கூடிய வாக்குகளினை எஞ்சிய வாக்குகளாகக் கொண்டிருப்பவர்களுக்கு எஞ்சிய ஆசனம் ஒதுக்கப்படும்.

ஒரு சிறிய உதாரணம்:

ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் 300,000 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இருப்பதாகவும் அத்தொகுதி 4 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு உரித்துடையது எனவும் எடுத்துக்கொள்வோம்.

எதிர்வரும் தேர்தலில் அக் குறிப்பிட்ட மாவட்டத்தில் மூன்று கட்சிகள் போட்டியிடுவதாக கொள்வோம்.

தேர்தலில் 'அ' என்ற கட்சி 90,000 வாக்குகளினையும் 'இ' என்ற கட்சி 89,000 வாக்களினையும் 'உ' என்ற கட்சி 49,000 வாக்குகளினையும் பெற்றுள்ளது.

எவ்வாறு அத்தேர்தல் மாவட்டத்திற்கான 4 ஆசனங்களினைப் பகிர்வது?.

முதற்கட்டமாக மூன்று கட்சிகளுக்குள்ளும் கட்சி 'அ' 90,000 வாக்குகளினைப் பெற்று முன்னிலையில் நிற்பதால் அக்கட்சிக்கு வெகுமானமாக ஒரு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும்.
எண்ணிக்கை கணிப்பிடப்படும்.

இதற்காக வாக்களிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையினை [228,000] மாவட்டத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையினால் [4] வகுக்கப்பட்டு ஒரு ஆசனத்திற்கு தேவையான வாக்குகளின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்.

[228000/4 = 57,000].

'அ' கட்சி கொண்டிருக்கும் 90,000 வாக்குகளில் 57,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்பு அவர்களின் மிகுதிவாக்குகள் (90000-57000 = 33000) அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தற்போது 'இ' கட்சியின் கணக்கில் 89,000 வாக்குகளும் 'உ' கட்சியிடம் 49,000 வாக்குகளும் 'அ' கட்சியின் கணக்கில் 33, 000 வாக்குகளும் உண்டு.

அதே வேளை இரண்டு எஞ்சிய ஆசனங்கள் பிரிக்கப்பட வேண்டும்.

'இ' கட்சி 89,000 வாக்குகளினை வைத்திருப்பதனால் அவர்களுக்கு ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டு அதற்குரிய வாக்காளர் எண்ணிக்கை அவர்கள் கணக்கிலிருந்து [89000-57000 = 32000] கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை அவர்களுக்கு வரவு வைக்கப்படும்.

தற்போது எஞசியதாக ஒரு ஆசனமும் 'உ' கட்சியிடம் 49,000 வாக்குகளும் 'அ' கட்சியிடம் 33,000 வாக்குகளும் 'இ' கட்சியிடம் 32,000 வாக்குகளும் இருக்கும்.

இந்நிலையில் ஆகக் கூடிய வாக்குகளினை [49,000] 'உ' கட்சி கொண்டிருக்கும் படியால் எஞ்சிய ஒரு ஆசன பிரதிநிதித்துவம் 'உ'கட்சிக்கு வழங்கப்படும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 90,000 வாக்குகள் பெற்ற 'அ' கட்சி 1+1 என இரண்டு பிரதிநிதித்துவத்தினையும், 89,000 வாக்குகளினைப் பெற்ற 'இ'கட்சியும், 49,000 வாக்குகள் பெற்ற 'உ' கட்சியும் தலா ஒரு பிரதிநிதித்துவத்தினையும் பெறும்.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் 'இ' கட்சி பெற்ற வாக்குகளினைவிட ஒரு ஆயிரம் வாக்குகளினை மேலதிகமாகப் பெற்ற காரணத்தினால் 'அ' கட்சி இரண்டு ஆசனங்களினைப் பெறுகின்றது.

மறுவகையில் 'இ' கட்சி சில வாக்குகள் வித்தியாசத்தில் அது ஒற்றை இலக்க எண்ணிக்கை வாக்குகளாககூட இருக்கலாம், முதன்நிலையினை இழக்கும் போது ஒரு பிரதிநிதித்துவ ஆசனத்தினையே இழக்க வேண்டியுள்ளது.

அதே போல் 89,000 வாக்குகள் பெற்ற 'இ' கட்சிக்கு சமமாக 49,000 வாக்குகளினைப் பெற்ற 'உ' கட்சியும் ஒற்றை ஆசனத்தினை உரித்தாக்கி கொண்டுள்ளது.

03.

2000ம் ஆண்டு தேர்தலின் முடிவுகள் சொல்லும் பாடம்:

2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு 68995 வாக்குகளினைப் பெற்றது.

அதே வேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்ககளினையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.

விகிதாசார முறையின் கீழ் ஆகக் கூடிய வாக்குகளினைப் பெற்ற தமிழரசுக் கட்சி வெகுமானமாக ஒதுக்கப்படும் ஆசனத்தினை பெற்றுக்கொண்டதன் மூலம் தமிழ் மக்களுக்கான இரண்டு பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக் காப்பாற்றியது.

2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு 62930 வாக்குகளினையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 56121 வாக்ககளினையும், பொதுசன ஐக்கிய முன்னணி 32997, வாக்குகளினையும் மக்கள் விடுதலை முன்னணி 6095 வாக்குகளினையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1470 வாக்குகளினையும் பெற்றுக்கொண்டது.

அத் தேர்தலில் ஆகக் கூடிய வாக்குகளினை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு பெற்றமையினால் அக் கட்சிக்கு வெகுமான ஒதுக்கு உட்பட இரண்டு பிரதிநிதித்துவமும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒன்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஒரு பிரதிநிதித்துவத்தினையும் பெற்றன.

ஆனால் 2000ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலைத் தமிழர்கள் பலத்த அதிர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆளாக்கப்பட்டனர்.

அத் தேர்தலில் போட்டியிட்ட பொதுசன ஐக்கிய முன்னணி 53860 வாக்குகளினைப் பெற்று 3 ஆசனங்களினையும் ஐக்கிய தேசியக் கட்சி 46700 வாக்குகளினைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொள்ளும் போது தமிழர் விடுதலைக் கூட்டணி வெறுமனே 14090 வாக்குகளினைப் பெற்று தமிழ் மக்கள் சார்பாக ஒரு பிரதிநிதித்துவத்தினைக் கூடத் தக்க வைக்க முடியாத நிலைக்கு பலவீனப்படுத்தப்பட்டது.

இத் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பிரதிநிதித்துவத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற வேண்டின் அக் கட்சி ஆகக் குறைந்தது 20579 வாக்குகளினைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அக் கட்சி பெற்றிருந்ததோ 14090 வாக்குகள். அதாவது 6489 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது.

இதற்கு காரணமாக அமைந்தது சிங்களக் கட்சிகளோ முஸ்லீம் மக்களின் கட்சிகளோ அல்ல. தமிழ்க் கட்சிகள் தான்.

2000ம் ஆண்டு தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி 4564 வாக்குகளினையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 3748 வாக்குகளினையும் தம் பங்குக்கு பிரித்துக் கொண்டன.

இவ் வாக்குகளும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்குகளுடன் இணைந்திருந்தால் நிச்சயம் அத் தேர்தலில் தமிழர்களின் வாக்குப் பலம் 22362 ஆக அதிகரித்திருக்கும். தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அன்று காப்பாற்றப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களின் தேசிய அடையாளத்தினைப் பேணுவதிலும் அதனைத் தக்கவைப்பதிலும் திருகோணமலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தினை விட கட்சிக்கான குறுங் கால நன்மைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதும், திருகோணமலையிலிருந்து தமிழர்களினை அந்நியப்படுத்துவதில் பௌத்த சிங்கள தேசியவாதிகள் கொண்டிருக்கும் திட்டத்தினை தெளிவாகப் புரிந்து கொள்ள மறுப்பதும், தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தூர நோக்கற்ற தன்மையுமே அன்றைய தோல்விக்கு காரணமாகும்.

04.

2010ம் ஆண்டுத் தேர்தல் பற்றி நோக்கும் போது சில விடயங்களினை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

திருகோணமலையில் யார் இந்த இரண்டு அல்லது எந்த கட்சி அல்லது எந்த சமூகம் இந்த இரண்டு பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற விடயத்தில் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் தான் போட்டி நிலவுகின்றது.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் எப்பொழுதும் அந்த வாக்குகளை மற்றொருவருக்குப் பிரிப்பதில் போட்டி நிகழவில்லை. தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கும் வழங்குவது தான் சாதாரணமான வழக்கம்.

ஆனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மக்களுக்குள் பிரிந்து கொண்டு போவதும் தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்குள் பிரிந்து கொண்டு போவதும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் எபோதும் பலவீனப்படுத்தும் விடயமாக இருந்துள்ளது.

கடந்த தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் போட்டி மிக வலுவாக இருந்திருக்கின்றது.

சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 65955 வாக்குகளை பெற்றிருந்த போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 65157 வாக்குகளை பெற்றிருந்தது.

எனவே இந்த போட்டி எப்போதும் மிக இறுக்கமாக இருந்தது. ஒரு சில ஆயிரம் வாக்குகள் தான் இந்த ஆகக் கூடிய வாக்குகளை எந்த கட்சி பெறும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய விடயமாக தமிழ் அரசியல் கட்சிக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிக்கும் இடையில் இருந்திருக்கின்றது.

இம் முறை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை அடைந்துள்ளார்கள்.

எனவே இது வெறும் ஏனையோரின் வாக்குகளை பிரிப்பது சம்பந்தமாக எந்த வித அக்கறையும் அல்லது முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய சமூகத்தின் வாக்குகளை அல்லது தங்கள் இனத்தின் வாக்குகளை தங்கள் கட்சிக்காக குவிப்பதில் மிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலைமையில் இம்முறை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் தனித்துப் போட்டியிடும் போது தன்னுடைய வேட்பாளர் பட்டியலுக்குள் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளர் ஆக இருந்திருந்த வேட்பாளர் மக்ருப் அவர்களை தன்னுடைய கட்சி பட்டியலுக்குள் சேர்த்துள்ளது.

எனவே கடந்த முறை திரு மக்ருப் அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய அத்துணை வாக்குகளும் இந்த முறை இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு போகும்.

கடந்த முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 15693 வாக்குகளை பெற்றிருந்தது.

அந்த நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள வாக்குகளை கணித்தால் குறைந்தது 2000 அல்லது 4000 வாக்குகளாவது நிச்சயமாக மக்ருப்பினுடைய தனிப்பட்ட செல்வாக்கை அடிப்படையாக கொண்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளாக இருக்கும்.

இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு பலத்தை இன்னும் மேலதிகமாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்பாக இருக்கும்.

2004ம் ஆண்டு வாக்காளர் தொகைக்கும் 2010ம் ஆண்டு வாக்காளர் தொகைக்கும் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை.

2004ம் ஆண்டில் 74869 ஆக காணப்பட்ட மூதூர்தொகுதியின் பதியப்பட்ட வாக்காளர் தொகை 2010ம் ஆண்டில் 85401 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று 2004ம் ஆண்டில் 63161 ஆக காணப்பட்ட சேருவில தொகுதியின் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 2010இல் 69047 ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை 2004ல் 86277 ஆகக் காணப்பட்ட பதியப்பட்ட வாக்காளர் தொகை 2010ல் 86685ஆக காணப்படுகின்றது.

முஸ்லீம் மக்களினை பெரும்பான்மையாக கொண்ட மூதூர் தொகுதியில் ஆறு வருடங்களில் சுமார் 10000 வாக்குகள் அதிகரிப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. இம்மாற்றம் முஸ்லீம் மக்களுக்கு மிகச் சாதகமானது.

சிங்கள மக்களினைப் பெரும்பான்மையாக கொண்ட சேருவில தொகுதியிலும் வாக்காளர் எண்ணிக்கையில் காணப்பட்டுள்ள சுமார் 6000 அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளப்படலாம்.
அது சிங்கள மக்களுக்கும் சாதகமானது.

ஆனால் 86000 பதியப்பட்ட வாக்காளரினை 2004ம் ஆண்டில் கொண்டிருந்த தமிழ் மக்களினைப் பெரும்பான்மையாக கொண்ட திருகோணமலைத் தொகுதியில் எல்வாறு அதிகரிப்பு வெறுமனே 400 வாக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இங்கு குறைந்தது 12000 வாக்குகளால் அதிகரிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். எங்கோ பாரதூரமான தவறு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மூதூர் தொகுதியின் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 2004ம் ஆண்டின் பின் பாரிய இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் எனினும் முஸ்லீம் மக்கள் சிரமங்கள் மத்தியில் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளனர்.

ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தினால் முடக்கப்பட்டிருப்பதனால் கணிசமான மக்கள் திருகோணமலைக்கு வெளியே குறிப்பாக மட்டக்களப்பில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்.

இதுவும் திருகோணமலையினதும் மூதூர் தொகுதியினதும் தமிழ் மக்கள் சார்பான வாக்குப் பலத்தினைப் பாதிக்கும் காரணிகளாகும்.

இத்தகைய பின்னணியில் 2010ம் ஆண்டுத் தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரினதும் வாக்குகள் ஒரு கூடைக்குள் சேகரிக்கப்பட வேண்டும்.

ஒற்றை வாக்கினைக் கூட இழப்பதற்கோ சிதறவிடுவதற்கோ சோம்பலில் முடங்கிக் கிடப்பதற்கோ தமிழினம் அனுமதிக்குமானால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாகவும் வரலாற்றுத் தவறாகவுமே இருக்கும்.

-திருமலை நடராசன்-

Comments