மே 2 ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இது தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி இன்று வெளியிடுகிறது.

இம் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் பெயரில் உள்ள தமிழீழம், அரசாங்கம் ஆகிய இருபதங்களுக்குப் பதிலாக ஈழத் தமிழர், பேரவை போன்ற பதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. (உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பெயர்களில் ஒன்று: நாடு கடந்த ஈழத்தமிழர் பேரவை - Transnational Assembly of Eelam Tamils). தமிழீழம், அரசாங்கம் என்ற பதங்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும் என்பதுவும் மரபுசார் அர்த்தத்தில் இவை நிலப்பரப்பினை ஆட்சி செய்யும் தகமையினைக் குறித்துநிற்கும் என்பதுவும் இது சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களாகும்.

இவற்றை ஆய்வு செய்த மதியுரைக்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரினையே தொடர்ந்து பேணுவது என முடிவு செய்துள்ளது. ’தமிழீழம்’ எனும் பதம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாகவும், உருவாக்கப்படும் அமைப்பின் செயற்பாட்டு இலக்காகவும் இருப்பதனால் அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனவும் ஆட்சி (governence) தொடர்பாக அரசுகளின் பாத்திரத்தைக் கடந்த புதிய அரசியற் கோட்பாட்டை உருவாக்கவும் ’அரசாங்கம்’ என்ற பதம் பேணப்படுவது துணைபுரியும் எனவும் மதியுரைக்குழு கருதுகிறது. மேலும், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்கான மூலோபாயங்களையும் தந்திரோயாயங்களையும் இப் பதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாத வகையில் சிந்திப்பதே சிறந்தது எனவும் மதியுரைக்குழு கருதுகிறது.

2. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதலாவது அமர்வை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைப்பதனூடாக உருவாக்கப்பபட்டு, அதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்ளும் என மக்கள் கருத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நடைமுறைக்கு மாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே யாப்பு உருவாக்கப்பட்டு இவ் யாப்பின் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

மதியுரைக்குழு இவ்விரண்டு நடைமுறைகளிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மீளாய்வுக்கு உட்படுத்தியது. மதியுரைக்குழு ஆய்வுக்கெடுத்துக்கொண்ட பல்வேறு விடயங்களில் இதுவே
மிக முக்கியமானதாகவும் இருந்தது. இம் மீளாய்வின் அடிப்படையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் யாப்பு உருவாக்கப்படுதலே ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதாகவும் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் கூடுதல் ஏற்புடமை கொண்டதாகவும் அமையும் என்பதனால் அந்நடைமுறையினையைப் பின்பற்றுதலே மீளமைக்கப்பட்ட அறிக்கையிலும் பரிந்துரைக்கப்படுகிறது.

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனிஅரசினை அமைத்தல் இலக்காக இருக்கும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் இலக்கினை அடைவதற்கான மூலோபாயமாக தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளுக்கு முதலில் அங்கீகாரம் பெற்று – பின்னர் அவ் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகித்து இறைமையினை வென்றெடுத்தல் அமையும் எனும் அர்த்தத்தில் ’படிப்படி அணுகுமுறை’ பின்பற்றப்படுதல் குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இப் பதப்பிரயோகம் வெவ்வேறு வகையான வியாக்கியானங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதனால் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் ’படிப்படி அணுகுமுறை’ என்பது நீக்கப்படுகிறது.

4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நோக்கு வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களுக்கும், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் முன்கூட்டியே தெளிவாக வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகப்பண்பின் அடிப்படையில் அவசியமாக உணரப்பட்டமையாலேயே மதியுரைக்குழுவின் அறிக்கையில் வழிகாட்டிக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

5. ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை என்பது இம் முறையின் குறைபாடாகவும் கருதப்படுகிறது. இதனால் இதனை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறை குறித்த சிந்தனையும் நடைமுறையும் தற்போது கவனத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை பிரதிநிதித்துவத்திலிருந்து மக்கள் ’மீளப்பெறும்’ நடைமுறை கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறித்தும் அவர்கள் வழி தவறி நடக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களை மீளப்பெறும் அதாவது பிரதிநிதித்துவத் தகமையிலிருந்து விடுவிக்கும் பொறிமுறையொன்றும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு என்பது இணைப்பாளரின் ஒருங்கிணைப்பில் மதியுரைக்குழு, நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றினைக் கொண்ட கூட்டுத்தொகுதியாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு செயற்குழுவில் மேலதிகப் பிரதிநிதிகளை இணைப்பது என்பதற்குப் பதிலாகவே இப் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இச் செயற்குழுக் கட்டமைப்புக்களதும் இணைப்பாளரதும் பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் நிர்வாகக் கட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் போது முடிவுக்கு வரும். அவை குறித்து மீளமைக்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

7. ஒரு இனம் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாகிறது என நிரூபிக்கப்படும் பொழுது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளான தற்பாதுகாப்பு (Self defence), தற்காப்பு (Self preservation) ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ள சூழலில் எமது இனம் இனப்படுகொலைக்கு உட்பட்ட இனம் என நிரூபிப்பதன் ஊடாக சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்கும் அணுகுமுறை தொடர்பாகவும் மீளமைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வரும் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முடிவு செய்தலே கூடுதல் பொருத்தமானது என்று மதியுரைக்குழு கருதுகிறது. இது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக முன்வைக்கப்பட்ட பல்வேறு மக்கள் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கை மீளமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இவ் அறிக்கையின் தமிழ் வடிவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.03) வெளியிடப்படும்.

இம் மீளளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும். இம் மீளமைக்கப்பட்டஅறிக்கை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்களை மதியுரைக்குழு மேலதிக ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளாது. இக் கருத்துக்கள் செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கவனத்திற்குரியவையாகவே இனி கொண்டு வரப்படும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2 ஆம் திகதி அனைத்து நாடுகளிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, மே 17 – 19 க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டலாம் என எண்ணியுள்ளோம். இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக்குழுக்கள் இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம் மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும்.

இத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம்.

இத் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கோருகிறோம்.

திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடாத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் தமிழ் பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

ஒப்பம் வி.ருத்ரகுமாரன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

Comments